Sunday, December 18, 2011

அமர்நீதி நாயனார் - 4

புத்தாடை பொன்னாடைகளால்
ஈடாகாத் தட்டில் தன்
பொன் பொருள் செல்வங்களை எல்லாம்
இட அனுமதி வேண்டி நின்றார் அமர்நீதியார்;

மனதுள் புன்னகைத்து
மறுப்பேதும் சொல்லாது
'எம்மாடைக்கு ஈடாய்
உம்சொத்து எதுவேண்டுமானாலும்
இடுவாய்,
ஈடானதும் அவை அத்தனையும்
எமக்குத் தருவாய்'
என்றார் அடியார்;

இரத்தினம் வந்தது,
பொன் வந்தது,
வெள்ளி, வெண்கலம் இன்னும் பல உலோகங்கள் வந்தது,
எடுத்து வந்ததெல்லாம்
ஏறி இருக்கும் தட்டில் இட, இட,
எந்த ஒரு அசைவும் இன்றி அந்தத் தராசு கிடந்தது;

இதற்குள் ஊர் மக்கள் ஒன்று கூடினர்,
நடக்கும் நாடகத்தைக் கண்டு அதிசயித்தனர்;

‘என்னுடையதெல்லாம்
எடுத்து வைத்து விட்டேன்;
எஞ்சி இருப்பது
என் மனைவி, மகன் மற்றும் நான்;
எங்களையும் இத்தட்டிலிட
அனுமதி வேண்டுகிறேன்’
அமர்நீதியார் கேட்டார்.
சிவனடியார் சம்மதித்தார்;

     இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய்யடிமை
     பிழைத்திலோமெனிற் பெருந்துலை நேர் நிற்க வென்று
     மழைத்தடம் பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
     தழைத்த அஞ்செழுத்தோதினார் ஏறினார் தட்டில்

'அன்போடு இதுகாறும் திருநல்லூர் இறைவ,
உம்மைத் தொழுதேன்;
திருநீறு அணிந்தேன்;
அடியவற்குதவி செய்தேன்;
எனக்குத் தெரிந்த வரை
எந்த ஒரு தவறும் செய்தேனில்லை;
இவையாவும் உண்மையெனில், இறைவா,
நாங்கள் ஏறி நிற்க இத் தராசு
ஈடாக வேண்டும், நமசிவாய' எனச் சொல்லி
தராசில் ஏறினார்
தன் மனைவி மகனோடு;

அக்கணமே தராசின் தட்டுக்கள்
இணையாக நிற்க,
இதுவரை அங்கு சிவனடியாரை நின்றிருந்தவர்
மறைந்தார்;
பார்வதியோடு பரமேஸ்வரன் தன்
பக்தருக்குக் காட்சி தந்தார்;
தேவர்கள் பூ மாறிப் பொழிந்தனர்;

அந்தத் தராசே
அமர்நீதியாருக்கும்
அவர் குடும்பத்தாருக்கும்
விமானமாகி இறைவன் திருவடியை அடைய,
சிவபதம் அருளி இறைவன் தன் பக்தனை
ஆட்கொண்டார்;

                              ஓம் நமசிவாய

Saturday, December 17, 2011

அமர்நீதி நாயனார் - 3

'அமர்நீதியாரே,
ஏன் இந்த நாடகமாடுகிறீர் ?
என் ஆடையின் சக்தியை
எப்படியோத் தெரிந்து கொண்டு, அதை
எடுத்துக் கொண்டு,
கலங்கியக் கண்ணோடு,
காணாமற் போய் விட்டதெனச் சொன்னால்
யாம் நம்ப வேண்டுமோ ?'

'ஐயனே,
எப்படியோ மறைந்து விட்டது
தங்கள் பொருள், அதற்கு ஈடாக
என்னால் முயன்ற
எதை வேண்டுமானாலும் கேளுங்கள்,
பொன் பொருள் பட்டாடை எல்லாம் தருகிறேன்;
எவ்வளவு வேண்டுமானாலும்
எடுத்துத் தருகிறேன்;
என் பிழை பொறுத்து,
என்னை மன்னித்து அருள வேண்டும்'

     பணியும் அன்பரை நோக்கி அப்பரம்பொருளானார்
     தணியும் உள்ளத்தராயினர் போன்று நீர் தந்த
     மணியும் பொன்னும் நல்லாடையும் மற்று மென்செய்ய
     அணியுங் கோவணம் நேர்தர அமையும் என்றருள

அணிய என் ஆடை வேண்டும் எனக்கு;
தாங்கள் தரும் பொன் பொருள் பட்டாடை எதற்கு ?
என் ஒராடைக்கு இணையாய் ஏதேனும் தர முடியுமா உம்மால் ?
என்று சொல்லி தன் கோவணத்தை தட்டில் வைத்து
'இதற்கு ஈடாய் என்ன இருக்கு உம்மிடம்' என்று கேட்டார் அடியார்;

அமர்நீதியாரும்
அவர் சொல்லுக்கு இணங்கி,
அளக்கும் தராசு ஒன்று கொணர்ந்தார்;
அடியவரின் கோவணத்தை ஒரு தட்டில் வைத்தார்;
அதற்கு அடுத்தத் தட்டில் தான் கொணர்ந்த கோவணத்தையும் வைத்தார்;

ஆண்டவனின் பொருளுக்கு ஈடு
ஆரிடம் இருக்கு ?

ஆடியவர் கோவணமிருந்த தட்டு கீழிறங்க
அமர்நீதியார் கொணர்ந்த கோவணம் மேலேற,
தன் வீட்டில் வைத்திருந்த மேலும் சில /பல
துணிகளை அள்ளி எடுத்து வந்து வைக்க,
அப்பொழுதும் அத்தராசு சமமாகாது மேலேறிக் கிடக்க,

ஆண்டவனின் திருவிளையாடலை
அறிந்து கொள்ள முடியாது
அமர்நீதியார் திகைத்து நின்றார்;
ஒரு கோவணத்திற்கு இணையாய்
இத்தனை ஆடைகள் வைத்தும்
இரண்டும் சமமாகாது
இருப்பதேனோ ? என்று வியந்து நின்றார்;

                                                                        ( தொடரும் )

Friday, December 16, 2011

அமர்நீதி நாயனார் - 2

வந்தவர் யாரெனத் தெரியாதே
வரவேற்றார் அமர்நீதியார்.

'ஆண்டவனுக்குச் சேவை என்றெண்ணியே,
அடியவர்கட்கு சேவை செய்கிறேன்
அடியேன், இன்றெம் வீட்டில்
அமுதுண்ண வேண்டும்,
அருள் செய்ய வேண்டும்' என்று சொல்லி
அனைத்து ஏற்பாடுகளையும்
அமர்நீதியார் செய்தார்.

'ஆகட்டும்,
நான் காவிரியில் நீராடி
வருகிறேன்,
அதுவரை என் துணியை
மழையில் நனையாது
பாதுகாத்து வரவும், நான்
கேட்டவுடன் திருப்பித் தரவும்’;

'அப்படியேச் செய்கிறேன்' என
அமர்நீதியார் சொல்ல,
அடியார் அங்கிருந்து அகன்றார் காவிரியில் நீராட.

     ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறுமக்கே
     ஈங்கு நான்சொல்லவேண்டுவதில்லை நீரிதனை
     வாங்கி நான் வருமளவும் உம்மிடத்திகழாதே
     ஆங்கு வைத்து நீர்தாரும் என்றவர் கையிற் கொடுத்தார்.

பிரம்மச்சரியன் வேடத்தில் வந்த
பரமேஸ்வரன்
பரம ரகசியமாய்த்
தான் தந்த ஆடையை மறையச் செய்தார்;
சிறிது நேரம் கழித்து
குளித்து முடித்துத் திரும்பி வந்தார்;

'என் உடை ஈரமாயிருக்கிறது,
நான் தந்த மாற்று உடை
தருவீரா ?' எனக் கேட்க,
அவர் தந்த உடை வைத்த இடத்தில்
அமர்நீதியார் பார்க்க,
அங்கே மாற்று உடை இல்லாததும்
அதிர்ச்சி அடைந்தார்;

எங்கு தேடியும் இல்லாது,
என்ன செய்வதென்று தெரியாது
திகைத்து நின்றார்.
மாற்று ஏற்பாடாக
புதியத் துணி
வேதியர் அணிய எடுத்து வந்தார்;

'புனிதமானவரே,
தாங்கள் தந்த ஆடை
வைத்த இடத்திலில்லை;
எப்படியோ எங்கோ மறைந்துவிட்டது;
அதிசயமாய் இருக்கிறது,
ஆனால் உண்மை;
தயை செய்து
தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்;
இந்த மாற்றாடையை உடுத்த வேண்டும்;
தயாராய் உணவிருக்கு, உண்ண வேண்டும்’;

அமர்நீதியார் வேண்டிநின்றார்;
சிவனடியார் ஆத்திரம் கொண்டார்;

                                                                        ( தொடரும் )

Thursday, December 15, 2011

அமர்நீதி நாயனார் - 1

காவிரி பாயும் சோழ நாட்டின்
ஒரு பகுதி,
வளம் நிறைந்தப் பகுதி,
மலர்கள் மலர்ந்து
சோலைகள் நிறைந்தப் பகுதி,
வண்டுகள் மலர்களில்
மது அருந்தி ரீங்காரமிட்டு
மகிழ்ந்துக் கிடக்கும் பகுதி;
அப்பகுதியின் பெயர்
பழையாறை.

அந்தப் பழையாறையில்
பிழையேதும் செய்யாது
பிழைப்பு நடத்தி,
வியாபாரம் செய்து வந்தார்
அமர்நீதியார்.

நல்லவர்,
நீதி நேர்மை வழுவாது வாழ்பவர்.
பண்புள்ளம் கொண்டவர்.
பணமிருந்தும்
பணத்தாசை இல்லாது
பணி செய்துவந்தார்.

ஆண்டவன் பாதம் தொழுது,
அவனடியவர்கட்குத் தொண்டு செய்து,
அல்லல் படுவோர் துயர் துடைத்து,
சிவபெருமான் வீற்றியருளும்
திருநல்லூர் எனும்
திருத்தலத்தில் ஒரு மடம் அமைத்து,
தினம் அன்னதானம்
திறம்பட நடக்க ஏற்பாடு செய்தார்;

     மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்த்
     திருவிழாவணி சேவித்துத் திருமடத் தடியார்
     பெருகும் இன்பமோடமுது செய்திட அருள் பேணி
     உருகு சிந்தையின் மகிழ்ந்துறை நாளிடை ஒருநாள்

அடியார்கட்கு
உடுக்க உடை தந்து,
இருக்க இடம் தந்து,
வாழ்ந்து வந்த
அமர்நீதியாரை
அந்த ஆண்டவன் சோதித்து
அருள் செய்ய எண்ணினார்.
அக்கணமே ஒரு பிரம்மச்சரியனாய்
அவதாரமெடுத்து
அமர்நீதியார் இருக்கும் ஊருக்கு வந்தார்.

                                                                        ( தொடரும் )

Wednesday, December 14, 2011

வள்ளித் திருமணம் - 11

கிழவனை மணக்க
சம்மதம் சொன்னதை எண்ணி
கன்னி வள்ளி கலங்கினாள்,
புலம்பினாள்;

வேலனே,
உன்னை விவாகம் செய்ய
வேண்டி இருந்தேனே,
தாடி மீசை நரைத்தக் கிழவனைத் தொட்டு,
சத்தியம் செய்து விட்டேனே,
ஐயகோ, நான் இனி வாழ்வது வீணே;

வள்ளி
வருந்திக் கிடக்கையில்
வடிவேலன் தன்
பன்னிரண்டு கரங்களோடு
தரிசனம் தந்தான்.

'தினைபுனத்து வள்ளியே, என் நெஞ்சைக்
திருடியக் கள்ளியே,
முன் வேடனாய் வந்தவனும் நானே,
முடி நரைத்தக் கிழவனாய் வந்தவனும் நானே,
உன்னிடம் சத்தியம் பெற்றவனும் நானே,
நீ கலங்குவது வீணே,
இனி என்னோடு தான் உன் வாழ்வே';


     முருகா ! முருகா ! முருகா ! - முத்துக்
     குமரா வருக முருகா !
     மயில் ஏறி வந்தாயோ முருகா - ஏன்
     மகளைக் காண வந்தாயோ முருகா,
     வள்ளியை மணக்க வந்தாயோ, எங்களை
     வாழ்த்தி அருள்புரிய வந்தாயோ,
     முருகா ! முருகா ! முருகா ! - நாங்கள்
     உன்னடி பணிந்தோம் குமரா !!!


வள்ளி, ஆறுமுகன் பாதத்தில்
விழுந்து வணங்க,
நம்பிராஜனும் அவர் புதல்வர்களும்
அருள்புரிய வேண்டி நிற்க,
நாரதர் வர,
நல்லாசி தர,
முப்பத்து முக்கோடி தேவர்களும்
பூ மழைப் பொழிய,
சுபமாய் நடந்தேறியது
சுப்பிரமணியன் வள்ளி திருமணம்.


வள்ளி முருகன் திருமணத்தை
வாசிக்கும் எல்லோருக்கும்
வளமான / நலமான வாழ்வு கிட்ட
வழி செய்வான்
வடிவேலன்;

          வாழ்க வளமுடன் !

Tuesday, December 13, 2011

வள்ளித் திருமணம் - 10

'ஆனை என்றால்
அம்மணிக்கு பயமோ'

'ஆம்'

'சரி வா அந்தப் பக்கம் சென்றுவிடுவோம்'

இருவரும் வேறிடம் செல்லத் தொடங்கினர்;

மனதிற்குள்
மகிழ்ந்தான்
முருகன்; தனக்கு
மூத்தவனை ஆனைமுகனை
மனதால் எண்ணினான்; தன்
முன் தோன்றப் பண்ணினான்;

தம்பியின்
துயர் தீர்க்கத்
துணை புரிந்தான்
தும்பிக்கையான்;

ஆனை வந்தது;
அலறினாள் வள்ளி;
கிழவன் பின்னே ஓடினாள்;
காப்பாற்றக் கெஞ்சினாள்;


'என்னைத் தொடாதே, தள்ளிப் போ' - கிழவன் கத்தினான்;

'ஆபத்துக் காலத்தில்
உதவுவது தானே மரபு' - வள்ளி கெஞ்சினாள்

'ஆனாலும் நான் கிழவனன்றோ'

'ஆண் அன்றோ'

'அதுசரி, ஆனையைத் திருப்பி
அனுப்புகிறேன், என்னை நீ
கல்யாணம் செய்துக் கொள்வாயா'

'ஆனையைத் துரத்திவிடு, நீ
சொல்வதெல்லாம் செய்கிறேன்'

கிழவன் வேண்ட,
காட்டு யானை திரும்பிச் செல்ல,

வள்ளி - 'தாத்தா உன்னை ஏமாற்றிவிட்டேன்' எனச் சொல்ல,
கிழவன் மீண்டும் வேண்ட,
ஆனை மீண்டும் வர,
வள்ளி மீண்டும் கத்த,

'கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று
சத்தியம் செய்து கொடு'

கிழவர் கேட்க,
வள்ளி சத்தியம் செய்ய,
யானையும், கிழவரும் அங்கிருந்து மறைந்தனர்;

                                                                        ( இன்னும் வருவாள் )

Monday, December 12, 2011

வள்ளித் திருமணம் - 9

நம்பிராஜன் வள்ளியிடம்
அம்முதியவருக்கு
எல்லா உதவியும்
செய்யச் சொல்லி தன் வழி சென்றான்;

வாருங்கள் தாத்தா, அமருங்கள்;
நீயும் அருகில் அமர்வாய் குழந்தாய்;
நீண்ட வெள்ளைத் தாடி, கஷ்டமாய் இருக்கோ
தாடி என்றாலும் கஷ்டம், வாடி என்றாலும் கஷ்டம், போடிப் பெண்ணே;
கோபிக்காதே தாத்தா, என்ன வேண்டும் சொல்;
பசிக்கிறதே, தின்ன என்ன இருக்கு;
தினைமாவும் தேனும் இருக்கு, தின்னு பசியாறு;

கிழவர் தினைமாவு தின்கையில், விக்கலெடுக்க

'தண்ணீர் தா, என்
தாகம் தீர்,
தாகம் தீர்க்க
நீர் தா, அதை
நீ தா'
எனக் காத்த,
வள்ளி தண்ணீர் தர,

'பசி தீர்ந்தது,
தாகம் அடங்கியது,
மோகம் தொடங்கியது;
வாடி பெண்ணே, அருகில் வா,
அணைத்துக்கொள்ள வா, அணைத்துக்கொள் வா'

'தாடி நரைத்தக் கிழம் என்னை
வாடி எனச் சொல்வது முறையோ'

'தாடியில் ஒரு முத்தம் தந்திடு போதும்'

'உளறித் தொலைக்காதீர், ஓடிப் போய்விடும்'

'வள்ளிக்கொடி, எனை அள்ளிக்கோ டி'

'கிழமே, நீ போய்த் தொலையேன்'

'சரி சரி பெண்ணே, கோபம் கொள்ளாதே,
நாம் இங்கு இருப்பது நல்லதன்று,
கொடிய மிருகங்கள் ஏதும் வரலாம்,
வந்துவிடு அந்தப்புரம், அந்தப் புறம்'

'மிருகம் என்றால் பயமோ உமக்கு ?'

'என், நீ பயப்பட மாட்டியோ ?'

'ஒரு மிருகம் தவிர வேறெதுக்கும் அஞ்ச மாட்டேன் நான்'

'அப்படியா, சரி அதை விடு,
வரும் வழியில் யானை ஒன்றைக் கண்டேன்,
அதைக் கண்ட முதல் கலவரமடைந்தேன்,
அதுவே என் கவலை'

'ஆ ! ஆனையா, ஐயோ'

                                                                        ( இன்னும் வருவாள் )

Sunday, December 11, 2011

வள்ளித் திருமணம் - 8

குடும்பத்தார்
வள்ளியின் நலம்
விசாரித்தனர்; பின்
வந்த வழியேத் திரும்பிச்
சென்றனர்;

வேங்கை மரமாய் நின்ற
வேலவன்,
வேடனாய் மீண்டும் உருவெடுத்தான்;

'என் தந்தையைக் கண்டு பயந்தவரே,
உம் வழி பார்த்துச் செல்லும்';
வள்ளி சொன்னாள்;

வள்ளியை வழிக்குக் கொண்டு வருவது
எப்படி என்று யோசிக்கலானான்
வேலவன்;

                                    கிழ வேடத்தில் இள முருகன்

இள வேடன் உருவில்
ஏதும் செய்ய முடியாது,
கிழ வேடமெடுத்தான்
கந்தன்;
தலையில் வெள்ளை முடி;
நடையில் தள்ளாட்டம்;
கையில் ஒரு கோல்;
கண்ணில் மங்கியப் பார்வை;

மெதுவாய்த் தள்ளாடி
நம்பிராஜன் இருக்குமிடமடைந்தார்;
தாங்கள் யார்,
இந்த வழி செல்வதெங்கே
வினவினான் மர நிழலில் இருந்த மன்னன்;
விடை தந்தான் கிழ வேடத்தில் இருந்த முருகன்;

அப்பா நான்
காசியிலிருந்து
கன்னியாக்குமரிக்குச் செல்ல வேண்டும்;
இடையில் எங்கேயோ
வழி மாறி
வந்து விட்டேன்;
பசி தாகம் என்னை
வாட்டுகிறது;

கவலை வேண்டாம் சுவாமி;
அருகிலிருக்கு என் காடு;
காட்டுக்குக் காவலிருப்பவள்
என் மகள்;
அவளிடம் உம்மை
அழைத்துச் செல்கிறேன்;
அவளுமக்கு உண்ண உணவும்,
அருந்த நீரும்
அளிப்பாள் எனச் சொல்லி
அவரை அழைத்துச் சென்றான்
அரசன்;

                                                                        ( இன்னும் வருவாள் )

Saturday, December 10, 2011

வள்ளித் திருமணம் - 7

'கானகத்திலிருக்கும் காரிகையே,
புல் மேயாத மான், புள்ளி மான்,
நல்ல ஜாதி மான்,
சாயாத கொம்பிரண்டிருந்தாலும்
தலை நிமிர்ந்துப் பாயாத மான்,
அம்மனைத் தேடி வந்தேன் பெண் மானே'

'உம் மொழியும் சரியில்லை,
முழியும் சரியில்லை
வேட்டைக்கேற்ற மான் மலையில்,
இந்த மான் நம்பி தந்த மான்,
தைரிய மான்,
உமது வலைக்கு அகப்படா மான்,
இவ்விடம் விட்டுச் சென்று விடும்'

'ஏ ! பெண்ணே, உனைக் கண்டதும்
என்னுள் மாற்றங்கள்,
ஏகப்பட்ட உணர்ச்சிகள்'

பூங்குயிலே,
உன் மேல் மோகம் வந்ததடி,
வேகமாய் உன்முன் வந்தேனடி,
தினமும் உன் நினைவில் உருகி வாடுகிறேனடி,
மன்மதனின் கணைகள் எனைப் பாடாய்ப் படுத்துதடி

எந்நாளும் உன்னை மறவேன்,
உத்தமியே உனைவிட்டு விலகேன்,
உறுதியாகச் சொல்வேன்,
என்னோடு வந்திடு,
என் வேதனைக்கு
மருந்திடு’;

'பித்து பிடித்தவனே,
புறம் சென்றுவிடு;
என் அண்ணன்மார்கள் உன்னை
இரண்டாகப் பிளந்து
நரி பருந்து இவற்றிற்கு
உணவாக்கி விடுவார்கள் உன்னை
ஜாக்கிரதை'


'என்னோடு சரசமாட வா'
'வீண்மொழி பேசாதே போ'
'உன் பருவம் வீணாகலாமா'
'சீச்சி தகாத வார்த்தைகள் பேசாது, தள்ளிப்போ'

'பெண்ணே உனக்குத் துணையிருப்பேன்,
நீ இட்ட வேலைகள் செய்வேன்,
பறவைகளைத் துரத்துவேன்,
வேறென்ன வேண்டும் உனக்கு,
சொல் செய்கிறேன்'

அந்தச் சமயம் வள்ளியின்
தந்தையும்,
தமையரும் வரவே,
தன் வீரம் காட்டத்
தக்கத் தருணம் பின்வரும் என்று,
வேங்கை மரமாய் உருமாறி
மறைந்து நின்றான்
வேலவன்;

                                                                        ( இன்னும் வருவாள் )

Friday, December 9, 2011

வள்ளித் திருமணம் - 6

                                    கந்தனும் கலகப் பிரியனும்

கந்தா,
காலை வேளை
தங்கள் வேலை முடித்து வர விரைந்தேன்;
கண்டேன் குறத்தி மகளை, இந்தக்
குமரன் மனம் கவர்ந்தவளை;
அடையர்க்கறியக் கனி அவள்;
ஆறுமுகனுக்கேற்றவள்;

என் சொல் ஏதும் எடுபடவில்லை
ஏந்திழையாளிடம்;
எம்பெருமான் செல்ல வேண்டும்;
அவளை வெல்ல வேண்டும்;
வள்ளி முருகனாய்
விரைந்திங்கு வர வேண்டும்;

‘நாரதரின் சொல் எடுபடாதுபோனதா ?’
வினவினான் வேலன்;
‘பொல்லாப் பெண் அவள்;
யாரும் எளிதில் நெருங்க முடியாதவள்;’
விளக்கினார் நாரதர்;
முருகன் கிளம்பினான்; தான்
முன் தந்த வாக்கை
நிறைவேற்ற விரும்பினான்;

                                    முருகனும் வள்ளியும்

முருகன்
வள்ளியின் இருப்பிடம்
வந்தடைந்தார்;
வேடவப் பெண்ணைப்
பார்க்க செல்கையில்
வேடவனாய்த் தன்
உருவத்தை மாற்றிக்கொண்டார்;

'வேடவப் பெண்ணே,
வேல் போன்ற கண்ணே'

'அதென்னையா, கண்ணே என்று
அழைக்கிறீர்'

'சரி, வேல் போன்ற கண் கொண்டப் பெண்ணே'

'என்ன வேண்டுமுமக்கு ? யார் நீர் ?'

'பாதை மாறி வந்ததே மான்,
என் மான்,
துள்ளித் துள்ளி வந்தப்
புள்ளி மான்,
பார்த்தாயா பாவையே'

'மானைத் தேடித் தேடியே ஸ்ரீமான்
பெருமான் தன் மட* மானைத் தொலைத்தார்;
நீ எம்மாத்திரம்; எப்படியிருக்கும் உம்மான் ?'

தான் தேடி வந்த
மானைப் பற்றிப்
பெண் மானிடம் சொன்னார்
முருகப் பெருமான்.
____________________________________________________
*மட - வீடு

                                                                        ( இன்னும் வருவாள் )

Thursday, December 8, 2011

வள்ளித் திருமணம் - 5

                                    நாரதர் கலகம்

'மங்கையே உனக்கு இன்னும்
மணமாகவில்லை போலிருக்கிறதே'

'சுவாமி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
எனைப் பெற்றோர்';

காலாகாலத்தில்
கல்யாணம் பண்ண வேண்டுமே'

'கட்டிக்கொள்ளத் தகுதியுடையவர்
கண் முன் தென்பட்டால்
காலம் தாழ்த்தாது
காரியம் நிறைவேறுமே'

‘நீ சரி என்று சொல்,
நடக்கவேண்டியதை
நான் நடத்துகிறேன்;
இந்த வெயிலில்
தனியாக வாடுவதை விடுத்து
என்னோடு கழுகுமாமலை வந்தால்
வளமாய் வாழ
வழி செய்கிறேன்;
வள்ளி, நீ என்ன சொல்கிறாய் ?'

'துறவி போல் வந்தவர்
தூதாகி நிற்கிறாரா ? இல்லை
தூது,
துறவி வேடத்தில் வந்திருக்கிறதா ?
தங்களுக்கு எதற்கு இந்தச் சிரமம்; எனது
தமையர், தாய், தந்தையர்
காலம் பார்த்துக் காரியம் புரிவர்; நீர்
கவனம் சிதறாதுத் தவம் புரிவீர்';

இதனைத் தொடர்ந்துக்
கந்தன் பெருமை சொன்னார்;
கன்னி அசையாது நின்றாள்;

'சொல்லும் வார்த்தை கேளம்மா, என்
சொல்லைத் தட்டாதேம்மா'

'வேண்டாம் வாதம் தவச்சீலரே, உடனே
எம்மிடம் விட்டுச் செல்வீரே'

'பட்ட அவஸ்தை போதுமம்மா, அந்தப்
பழனி ஆண்டவனை மணந்து கொள்ளம்மா'

'கூட்டிக் கொடுப்பதும்குலத் தொழிலோ,
தனியாய்ப் பெண்ணிடம் பேசும் முறை இதுவோ ?'

'ஞானமில்லாக் குறத்திப் பெண்ணே, நான்
சொல்வதைக் கேட்டால் நலம் உண்டாகும்'

'எம் நலம் விடும்; நீர்
உம் நலம் பார்த்து வந்த வழி செல்லும்'

'அந்தக் கந்தனே
உனக்கேற்றவன்;
அவனையே உனக்கு
மணமுடிப்பேன்;
அதை என் கண்ணால்
கண்டு களிப்பேன்;
ஆறுமுகனே
உன் மணாளன்;
என்றுரைத்தவரே
அங்கிருந்து நகர்ந்தார் நாரதர்'

                                                                        ( இன்னும் வருவாள் )

Wednesday, December 7, 2011

வள்ளித் திருமணம் - 4

வேலவன் விரைந்தழைத்தான்
நாரதனை,
கலகப் பிரியனை, தன்
காதல் சொல்லி வள்ளியைக்
கவர எண்ணி,
தூது போக
துணைக்கழைத்தான்
தம்புராவை மீட்டித்
திரிபவனை;

நாரதர் வந்தார்;
தினைப்புனம் நோக்கிச் செல்ல,
வள்ளியைக் காண, கந்தனின் காதல் சொல்லக்
கிளம்பினார் கலகப் பிரியர்;

                                    நாரதரும் வள்ளியும்

இனிய என் யாழிசையைவிட
இனிமையாகப் பாடும்
இக் குரல் யாருடையது ?
இவள் யார் ? என்று எண்ணியவரே
வள்ளி இருக்கும் தினைப்புனம் நோக்கி
வந்தார் நாரதர்;
தன் அறிவையெல்லாம்
தரணியில் வாழ்வோர்க்குத்
தந்துதவும் பிரம்மனின் புத்திரர்;

'முனியே வருக,
சுவாமி வருக,
தாங்கள் இங்கு எழுந்தருள
நாங்கள் என்ன தவம் செய்தோம்,
வருக,
வந்திங்கு அமர்க' என்று
வரவேற்றாள் வள்ளி நாரதரை;

'பெண்ணே நீ அழகு,
மான் போல் நீ துள்ளிக் குதித்து ஓடுவது அழகு,
பறவைகளைச் சோ...சோ... என நீ துரத்துவது அழகு,
கானகத்திற்கு நீ காவல் புரிவது
அழகோ அழகு;
பிள்ளாய், உன்
பூர்வீகக் கதை
கொஞ்சம் சொல்லாய்';

வினவினார் நாரதர்;
விளக்கம் தந்தாள் நம்பிராஜன் மகள்;

'குரு முனியே,
குறவர் குலத்தில் பிறந்த
குழந்தை நான்,
வள்ளி என்றழைப்பர் எனை;
தந்தை நம்பிராஜன்,
தாய் மோகினி,
ஊர் வழக்கப்படி
வயல் காவல் காக்க
வந்தேன்;
வந்ததால் தங்களைக் கண்டேன்;
வணங்கி நிற்கிறேன்,
வாழ்த்துங்கள்';

கலக்கம் செய்யத்
தக்கத் தருணம்
பார்த்து நின்றார் நாரதர்;

                                                                        ( இன்னும் வருவாள் )

Tuesday, December 6, 2011

வள்ளித் திருமணம் - 3

                                    தினைப்புனத்தில் வள்ளி

வள்ளியை அழைத்தான் நம்பிராஜன்.
தினைப்புனக் காவலுக்கு
அவள் செல்ல வேண்டுமென்றுத் தெரிவித்தான்;


      காட்டுக்குச் செல்ல வேண்டும் நீ,
      காவலுக்குச் செல்ல வேண்டும் நீ,
      தினைப்புனத்தைக் காவல் காக்க வேண்டும் நீ,
      காக்கை கிளி மைனா போன்ற பறவைகளை
      கவண்கல் கொண்டு எரிந்திடவேண்டும்,
      அவைகளைத் துரத்திடவேண்டும்,
      வள்ளி நீ காக்க வேண்டும்,
      கவனமோடிருக்க வேண்டும்,
      காவல் புரிய வேண்டும்,
      தினைப்புனம் செல்ல வேண்டும்;


“துணைக்கு என் தோழிமார் வேண்டும்,
கூப்பிடு தூரத்தில் அண்ணன்கள் வேண்டும்,
இவை போதுமே, வேறென்ன வேண்டும்;
காவலுக்குச் செல்கிறேன்,
தந்தையே, தங்கள் ஆணை வேண்டும்” என்று
சிரம் தாழ்த்தி நின்றாள்
வள்ளி;

அண்ணன்மார் வள்ளியையும்
அவள் தோழிகளையும்
தினைபுனத்திற்கு அழைத்து வந்தனர்;
அவர்கள் அமர, பறவைகளைத் துரத்த
இடமைத்துத் தந்தனர்;
கவண்கல் எறியப் பயிற்றுவித்தனர்;
வேறேதேனும் தேவைப்பட்டால்
ஒருகுரல் தந்தால்
ஓடோடி வருவோம் எனச்சொல்லித்
தம் வழி சென்றனர்;

புதிய இடம் பரவசம் தந்தது,
புதிய வேலை சுறுசுறுப்புத் தந்தது;
வயல் வெளி, காற்று ஆனந்தம் தந்தது;
ஆடினார்கள், பாடினார்கள்,
ஆவலில் கூத்தாடினார்கள் வள்ளியும் அவள் தோழியரும்;
பறவை அண்டினால் போதும், அதைப்
பாடாய்ப் படுத்தினார்கள்;

வள்ளியை,
தன் நெஞ்சம் கொள்ளைக் கொண்டக்
கள்ளியை,
அவள் தினைப்புனம் காவல் காக்கும்
அழகை, தன்
மனக்கண்ணால் கண்டு ரசித்தான் முருகன்,
முன்னொருகாலம் தன்னை
மணந்துகொள்ளக் கெஞ்சியவளை
வேடவப் பெண்ணாகப் பிறந்துவருவாய் *,
அப்பொழுது உன்னை மணக்க நான் வருவேன் என்று
வாக்குத் தந்த
வடிவேலன்;

                                                                        ( இன்னும் வருவாள் )
____________________________________________
* refer link

Monday, December 5, 2011

வள்ளித் திருமணம் - 2

வேட்டை நடந்தது;
சிங்கத்தைக் கொன்றனர்; இன்னும்
சில மிருகங்களைக் கொன்றனர்;

                                    குழந்தை வள்ளி

அருகே ஒரு இடத்தில்
அநேகம் பேர் ஏதோ குரலெழுப்ப
அரசனும்
அவன் பிள்ளைகளும்
அங்கே ஓடிச் சென்றனர்;
அழகான பெண் குழந்தை ஒன்று
அங்கிருக்கக் கண்டனர்;
அதிசயித்தனர்;
அரசனிடம் ஒப்படைத்தனர்;
அனேக நாட்களாய்
அவனுக்குப் பெண் பிள்ளை இல்லை என்ற குறை இருக்க,
அதைத் தீர்க்கவே
ஆறுமுகன் இந்தப் பெண்ணை
அனுப்பியிருக்கிறான் என்று எண்ணினான்;
அக்குழந்தையை அவன்
அரசியிடம் தந்தான்;

வள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட
வயலில் கிடைத்தப் பிள்ளைக்கு
'வள்ளிக்கொடி' என்றுப் பெயரிட்டான்;
வாஞ்சையோடு வளர்த்துவந்தான்;


பிறிதொரு சமயம்;

பறவை இனங்கள் கிளி,மைனா,புறா
போன்றவை நன்றாய் விளைந்தப்
பயிர்களைச் சேதப்படுத்தின;
தினைப்புனத்தைக் காவல் காக்க
ஆர் செல்வதென
ஆலோசனைச் செய்தனர்,
நம்பிராஜனும் அவனை
நம்பி வாழும் ஊர்ப்பெரியவர்களும்;

அக்கம் பக்கத்து வயல்களுக்குப்
பெண்களே காவலிருப்பதால்
தினைப்புனக் காவலுக்கு
வள்ளியை அனுப்பலாமென்று
முடிவுசெய்தனர்;

                                                                        ( இன்னும் வருவாள் )

Sunday, December 4, 2011

வள்ளித் திருமணம் - 1


      பானைவயிரோனுக்கு இளையவனே,
      பார்வதி சங்கரன் புதல்வனே,
      பன்னிரண்டு கையுடையவனே,
      ‘ஓம்’ என்ற சொல்லுக்குப்
      பொருளுரைத்து பெயரெடுத்தவனே,
      முருகா ! பணிகிறேன் உன்னடி,
      காத்திடு இனி நீ;


முன்னுரை – என்னுரை

முருகன் வள்ளித் திருமணத்தை
முத்தமிழில் வசனக் கவிதையில் சொல்லிட
முயல்கிறேன்;
பிழை இருக்கும், பொருத்தருள வேண்டும்;



நம்பிராஜன்

நாடு சித்தூர், இடம் கழுகுமாமலை
நாடாளும் அரசன்
நம்பிராஜன்.
வேல்முருகனைக் குல தெய்வமாய்க்
கொண்டு வாழும் குலம்,
வேடர் குலம்,
அவன் குலம்.

கந்தனை வழிபட்டு,
கடமையாற்றிக்கொண்டிருக்கையில் ஒருநாள்,
வேடவர்கள் வந்தனர்;
வேந்தனிடம் சொன்னனர்
துட்ட மிருகங்கள்
துரத்துது, துன்புருத்துது,
பயிர்களை மெல்லுது, சில
உயிர்களைக் கொல்லுது, துரத்திப்
பிடிக்குமுன் ஓடிச் செல்லுது;

தலைவா நீ
தயவு செய்து, எங்கள்
துன்பம் போக்க
துணை புரியவேண்டும்;

வேடவர்
வேண்டினர்;
வேந்தன் கிளம்பினான்
விலங்குகளை
வேட்டையாட;
வேந்தனுடன்
வந்தனர் அவன்
விழுதுகள்;


      வில்லை எடுத்து வாடா தம்பி,
      வேலையும் எடுத்து வாடா,
      நீ என்னோடு வாடா,
      வாடா தம்பி வாடா நீ
      விரைந்து வாடா;

      வாட்டம் தரும் விலங்கினங்களைக்
      கொல்வோம் வாடா,
      புல்லையும் நெல்லையும் அழிக்குதடா,
      வாடா, அம்மிருகங்களை அழித்திடுவோமடா;
      வாடா தம்பி வாடா நீ
      விரைந்து வாடா;

      பிள்ளைகளுக்குத் தொல்லைகள் தருதுடா,
      அவ் விலங்குகளை இல்லை என்றாக்கிடுவோமடா;
      வாடா தம்பி வாடா நீ
      விரைந்து வாடா;


                                                                        ( இன்னும் வருவாள் )

Saturday, December 3, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 4


      வேதனை யெய்தி வீழ்ந்த
        வேந்தரால் விலக்கப் பட்ட
      தாதனாந் தத்தன் தானும்
        தலையினால் வணங்கித் தாங்கி
      யாதுநான் செய்கே னென்ன
        எம்பிரா னடியார் போக
      மீதிடை விலக்கா வண்ணம்
        கொண்டுபோய் விடுநீ யென்றார்.


'சிவனடியார் வேடத்தில் வந்தவர்க்கு
சிரமம் ஏதும் நேராது,
எல்லை கடக்கும் வரை
எந்தத் தடையும் வராது காத்து,
அழைத்துச் செல்' என்று
ஆணையிட்டார்;

தத்தன் பகைவனை அழைத்துக்கொண்டு
சென்றான்; அவன்
திரும்பி வரும்வரை
மன்னன் காத்திருந்தான்;
எத்தடையும் இல்லாது
எதிரி சென்றுவிட்டான்
என்று சொன்னான் தத்தன்,
மகிழ்ந்தான் மன்னன்;

ஆண்டவனின் அடியவன் என்ற
அவதாரத்தில் வந்த கொடியவனுக்கும்
அன்போடு கருணை காட்டிய மெய்ப்பொருளாரை
அந்தச் சிவன் ஆட்கொண்டு,
என்றும் தன் திருவடியில் இருக்கும்படி
அருள் செய்தார்;


      தொண்டனார்க் கிமையப் பாவை
        துணைவனார் அவர்முன் தம்மைக்
      கண்டவா றெதிரே நின்று
        காட்சிதந் தருளி மிக்க
      அண்டவா னவர்கட் கெட்டா
        அருட்கழல் நீழல் சேரக்
      கொண்டவா றிடைய றாமல்
        கும்பிடுங் கொள்கை ஈந்தார்.


                                                                  ஓம் நமசிவாய

Friday, December 2, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 3

'இமாலயத்திலிருந்து நான்
இங்கே வந்திருக்கிறேன்;
இப்பொழுதே காண வேண்டும்
இந்நாட்டு அரசனை' எனச்
சொல்லி, தத்தன்
சொல்லைச் செவியில் கொள்ளாது
தொடர்ந்து சென்றான் கொடியவன்;

அடியவர் உள்ளே வர
அரசியார் தன் மன்னவனை எழுப்ப,
அரசன் கோபம் ஏதும் கொள்ளாது
அடியவரைத் தொழுது
அமரச் செய்தான்;
வந்த விஷயம் சொல்ல வேண்டினான்;

சிவனடியார் வேடத்தில் வந்தவன்
'சிவன் முன்னம் அருளிய பூசை வழிமுறைகள்
சிலவற்றைச் சொல்ல வந்திருக்கிறேன்,
தனிமையில் சொல்ல விரும்புகிறேன்' என்றான்.


      பேறெனக் கிதன்மேல் உண்டோ
        பிரானருள் செய்த இந்த
      மாறில்ஆ கமத்தை வாசித்
        தருள்செய வேண்டு மென்ன
      நாறுபூங் கோதை மாதுந்
        தவிரவே நானும் நீயும்
      வேறிடத் திருத்தல் வேண்டும்
        என்றவன் விளம்ப வேந்தன்.


அரசி அங்கிருந்து சொல்ல,
அரசன் கை கூப்பி
அருகில் நிற்க,
அச்சமயம் முத்தநாதன்
அவன்திட்டப்படி கத்தியை எடுத்தான்;
அரசன் நெஞ்சில் குத்தினான்;
அடியவன் வேடத்தில் வந்த
அந்தக் கொடியவன் செயலை எதிர்க்காது,
அசையாது நின்றார்,
அப்படியேத் தரையில் சாய்ந்தார்;

வந்தவர் மேல் சந்தேகக்கண் வைத்து,
வாசலில் காவலுக்கு நின்றிருந்தத் தத்தன்
சத்தம் கேட்டு உள்ளே வந்தான்;
குருதியினிடையே அரசன் கிடப்பதைக்
கண்டான்; தன் வாள் உருவினான்;
அடியவர் வேடத்தில் வந்தக்
கயவனைக் கொல்லப் பாய்ந்தான்;
'தத்தா நில்' அரசன் ஆணையிட்டான்,
'அவன் நம்மில் ஒருவன், நம்மைப் போல் ஒருவன்,
அந்தச் சிவனின் அடியவர்களில் ஒருவன்,
சிவனடியார் வேடத்தில் இருப்பவனைச்
சிரச் சேதம் செய்வது கொடியப் பாவச்
செயலாகும்' என்று சொன்னார்;

                                                                        ( தொடரும் )

Thursday, December 1, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 2

சிவனடியார் வேடம் பூண்டால்
அவனடி பணிந்து நிற்பான்
அரசன் என்று அறிந்தவன் முத்தநாதன்;
அதனால் அவ்வேடமே அணிந்து,
அரசன் அருகில் சென்று,
கொன்று விட எண்ணினான்
கோழை முத்தநாதன்;


      மெய்யெலாம் நீறு பூசி
        வேணிகள் முடித்துக் கட்டிக்
      கையினிற் படைக ரந்த
        புத்தகக் கவளி யேந்தி
      மைபொதி விளக்கே யென்ன
        மனத்தினுட் கறுப்பு வைத்துப்
      பொய்தவ வேடங் கொண்டு
        புகுந்தனன் முத்த நாதன்.


அந்த நாளும் வந்தது;
தன் உடலெங்கும் சாம்பல்
தடவிக்கொண்டு,
தலை முடியைச் சுருட்டி
சடாமுடி அணிந்துக் கொண்டு,
திருநீறு பூசிக் கொண்டு,
தன் ஆடையில் ஒரு ஆயுதத்தை
மறைத்துக் கொண்டு,
மெய்ப்பொருளார் அரண்மனை நோக்கி
பொழுது சாய்ந்த பிறகு
புறப்பட்டான்;

வாயில் ஓம் நமசிவாய மந்திரம்
உரைத்துக்கொண்டு
வந்தவனை எந்த
வாயிற்காப்பாளனும்
வழிமறிக்கவில்லை, அவனை
வணங்கி
வரவேற்றனர்;
தடையின்றி உள்ளே செல்ல
தயக்கமின்றி அனுமதித்தனர்;

மெய்ப்பொருளாரின்
மெய்க்காப்பாளன் தத்தன்;
அரசனைக் காப்பதே
அவன் தன் கடமை என்று
அனுதினமும் எண்ணிச் செயலாற்றினான்;

அரசன் உறங்கச் சென்றபின்,
அரண்மனைக்குள் புகுந்தவனை
அந்தப்புரத்தில் நுழையமுடியாது
தடுத்தான் தத்தன்;
காவலன்
கண்ணுறங்கச் சென்ற வேளையில்
காண வந்தக் காலனைக் கொஞ்ச நேரம்
காத்திருக்கச் சொன்னான்;

                                                                        ( தொடரும் )

Wednesday, November 30, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 1

அழகான சேதி நாடு;
அந்நாட்டின் தலைநகரமாம் திருக்கோவலூர் என்ற ஒரு ஊர்;
அந்தகாசுரன் என்ற
அரக்கனைச் சிவன்
அழித்த ஊர்
அந்த ஊர்;
அதனாலேயே சிவபக்தி
அளவுக்கதிகமாய் நிரம்பி வழிந்த ஊர்
திருக்கோவலூர்.

மக்கள் சேவையே அந்த
மகேசன் சேவை என்று எண்ணி
மண் ஆண்டு வந்தான்
மன்னன் மெய்ப்பொருளார்.


      அரசியல் நெறியின் வந்த
        அறநெறி வழாமல் காத்து
      வரைநெடுந் தோளால் வென்று
        மாற்றலர் முனைகள் மாற்றி
      உரைதிறம் பாத நீதி
        ஓங்குநீர் மையினின் மிக்கார்
      திரைசெய்நீர்ச் சடையான் அன்பர்
        வேடமே சிந்தை செய்வார்.


செயலில் தவறேதும் இல்லாது, சொல்லில்
சினம் கொள்ளாது, நெஞ்சில்
சிவனைக் கொண்டு,
சிவனடியார்களைக் காத்து, அவர்கட்கு
சேவை செய்து,
செங்கோல் வழுவாது ஆட்சிசெய்து வந்தான்;

எதிரியையும் நண்பனாய் எண்ணினான்;
அண்டவர்கெல்லாம்
அடைக்கலம் தந்தான்;
அப்படியிருந்தும்
அவருக்கெதிராய்
முத்தநாதன் என்ற மூடன்
முணுமுணுத்து வந்தான்; போரில்
மெய்ப்பொறுளாரை வெல்லமுடியாதென அறிந்த
முத்தநாதன் பொய் சூழ்ச்சி செய்து காரியம்
முடித்து விட எண்ணினான்;
மெய்ப்பொறுளாரைக் கொன்று
நாட்டைத் தன் வசமாக்கிக் கொள்ள
நினைத்தான்
நயவஞ்சகன்;

                                                                        ( தொடரும் )

Friday, November 25, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 6

இன்னும் சோதிக்க
இறைவன் எண்ணினார்;
இன்னொரு கண்ணிலிருந்து
இரத்தம் வரவழைத்தார்;

பார்த்தான் திண்ணன்;
பதறாது நின்றான்;

உதிரம் நிற்கும்
உபாயம்
உணர்ந்தவனன்றோ அவன்;

இன்னொரு கண் இருக்க
கவலை
எதற்கு எனக்கு என்று
எண்ணினான்;

இன்னொரு கண்ணைத் தருவேன்,
இரத்தம் வருவதைத் தடுப்பேன்
என்றுரைத்தவாறு தன்
இன்னொரு கண்ணைப் பிடுங்க
எண்ணினான்;
அப்பொழுது தான் ஒரு உண்மை
உணர்ந்தான்;
என் இன்னொரு கண்ணையும்
எடுத்து விட்டால்,
எப்படி வைப்பேன்
எம்பெருமானுக்குச் சரியான இடத்தில்
கண்ணை ?
இடது கண்
இருக்கும் இடம்
எனக்கு எப்படித் தெரியும்
என்று சிந்திக்கத் தொடங்கினான்;

இடக் கண்
இருக்கும் இடத்தில் தன்
கால் விரல் பதித்துக் கொண்டான்;
கண்ணை நோண்ட
கணை எடுத்தான்;

அப்பொழுதே ஒரு குரல்,
அங்குக் கேட்டது;
'கண்ணப்பா நில்,
கடவுள் உனக்கு எதிரில்;
காயம் இல்லை,
கவலை கொள்ளத் தேவை இல்லை;
உன்
அன்பை
அனைவருக்கும்
அறிவிக்க யாம்
ஆடிய ஆட்டமிது';

சிவன் வந்தான்;
தனக்குக் கண் தந்த
திண்ணப்பனுக்குக் 'கண்ணப்பன்' என்றுத்
திருநாமம் தந்தான்;
தூய அன்பைத்
துணை கொண்டுத் தொழுவோர்
துயர் துடைக்கப் பரமன்
துணை செய்வான் என்றறிவித்தான்;

கண்ணப்பன் என்ற திண்ணப்பனின்
கதை படிப்போருக்கெல்லாம்
கைலாய மலை வாழும் ஈஸ்வரன்
கிருபை கிடைக்குமென்பது நம்பிக்கை;

                                                                           ஓம் நமசிவாய

Thursday, November 24, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 5

அனுதினமும் எம்பிரானுக்குப்
ஆத்மார்த்த பூசை செய்யும் பூசாரி
ஆலயம் அசுத்தம்
அடைவது எங்கனம் என்று
அறிய, தனக்குத் தெரிவிக்க
அந்தப் பரமசிவனை வேண்டினார்;
ஆண்டவனும்
அவர் கனவில் தோன்றினார்;
'அஞ்ச வேண்டாம், என்மேல்
அளவில்லாத அன்பு கொண்டவன் செயல் தான்
இது;
என் சிந்தனையே
எப்பொழுதும் கொள்வதால் நேர்ந்தது அது;
அவன் அன்பை
விரும்புது என் மனது;
நாளை ஒரு தினம்
அவன் காட்டும் அன்பை
அருகிலிருந்து,
ஆனால்
அவன் காணாதவாறு மறைந்திருந்துக் காணவும்’
கனவில் சிவன் சொல்ல, அதற்குக்
கட்டுப்பட்டுக் காரியம் செய்தார் பூசாரி;

ஆண்டவன் மேல்
அன்பு கொண்டு
அவன் அங்கேயே இருப்பதில்
அன்று ஏழாவது நாள்.
அரிய பொருட்களையெல்லாம்
அள்ளி எடுத்துவந்து
ஆசைப்பட பூசை செய்ய
ஓடோடி வந்தான் திண்ணன்.

பூசாரி மறைந்திருந்துப் பார்க்கப்
பூசை செய்தான் திண்ணன்;
அவன் அன்பைச் சோதிக்க
ஆசைப் பட்டான்
அர்த்தநாரீஸ்வரன்;

திண்ணன்
உள்ளே நுழைகையில் தன்
வலது கண்ணிலிருந்து ரத்தம்
வரவழைத்தான்
உமா மகேஸ்வரன்;
பார்த்தான்,
பதறினான்,
செய்வதறியாது
திகைத்து நின்றான்
திண்ணன்;
ஏதாவது மிருகம்
எங்கிருந்தாவது வந்திருக்குமோ
என்று இங்கும் அங்கும் தேடினான், ஓடினான்;
ஏதும் தவறு நேர்ந்திருக்குமோ
என்று நினைத்து அழுதான்;
காட்டிலிருந்து மூலிகைகள்
கொண்டு வந்தான், சிவனின்
கண்ணில் பிழிந்து பார்த்தான்;
ரத்தம் நிற்கவில்லை;
நிஜமாய் நேர்ந்திருந்தால் தானே
நிற்பதற்கு,
பொய்யாய்ப் பொங்கிய ரத்தம்
எங்கிருந்து நிற்கும் ?

யாரோ என்றோ சொன்ன
'கண்ணுக்குக் கண், கைக்குக் கை'
என்ற சொற்றொடர் நினைவுக்கு
வந்தது;
துள்ளி எழுந்தான்
திண்ணன்;
தன் வலது கண்ணை
அம்பு கொண்டு நெம்பி, கிழித்து
வெளியிலெடுத்தான்; சிவனின்
வலக் கண் மேல்
வைத்தான்; ரத்தம்
வருவதும் நின்றது; திண்ணனின்
வருத்தமும் நின்றது;

இன்னும் சோதிக்க
இறைவன் எண்ணினார்;
இன்னொரு கண்ணிலிருந்து
இரத்தம் வரவழைத்தார்;


                                                                        ( கதை தொடரும் )

Friday, November 18, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 4

எப்பிறவியில்
என்ன தவம் செய்தானோ திண்ணன்
இப்பிறவியில்
சிவன் மேல் ஆர்வம் வர
சிவவயப்பட்டான்;

சிவபெருமானைக் கண்டான்;
கண்ணீர் மல்கச் சேவித்தான்;
தன் வசம் இழந்து நின்றான்;
இந்த அடர்ந்த வனத்தில்
காவலுக்கு எவரும் இல்லாது
இருப்பது முறையா என்று வினவினான்
உலகையே கட்டிக் காப்பவனை;

திண்ணா, யாரோ பூஜை செய்த மலர் சிவன்
திரு மேனியில் இருக்கிறதே பார் என்றான்
திண்ணனுடன் கூட வந்தவன்;
தினமும் பூஜை மட்டும் செய்து விட்டுத்
திரும்பிவிடுகிறார் அவர் என்று
தெரிந்துக் கொண்டான் திண்ணன்;

பூசை முடிந்தது,
புசிக்க உணவு தர வேண்டாமா என்று சொன்னான்;
உடனே ஓடினான்,
நண்பன் சமைத்து வைத்த
பன்றிக் கறியில்
பக்குவமாய் வெந்த
பாகத்தைத் தான் தின்றுப்
பரிசோதித்து
ஒரு இலையில் வைத்துக்கொண்டு
ஓடி வந்தான் மீண்டும்;

உண்ணச் சொல்லி,
தள்ளி நின்றான்;
நண்பர்கள் வந்தனர்;
பைத்தியமா நீ என்று
அதட்டினர்; நாகனை
அழைத்து வருவோம் என்று
தம் வழி சென்றனர்;

திண்ணன் சிவனை விட்டு
அசையாது நின்றான்;
காவல் புரிந்தான்;
தினமும் சேவை செய்தான்;

தன் தலையில் பூவைச் சொருகி,
வாயில் நீரை நிரப்பி வந்து,
தன்
பாதத்தாலே
பழைய பூ மாலை மாமிசங்களை
விலக்கி,
வாயிலிருக்கும் நீரை
சிவன் தலையில் துப்பி,
தன் தலையிலிருக்கும் பூவைச்
சிவன் தலையில் சூட்டுவான்;
மிருகங்களை வேட்டையாடி
மாமிசம் கொண்டு வந்து,
வாயில் வைத்து உண்ணும் வரை
விலகி நிற்பான்;

ஒவ்வொரு முறையும்
திண்ணம் இப்படி
பூசை செய்வான்;
பின் சிவபெருமானின்
பசியாற்ற மான், பன்றி, முயல் என்று
பார்த்துப் பார்த்து வேட்டையாடித்
தான் உண்டு, சுவையானதை மட்டும்
விருந்தாய்ப் படைப்பான் ;

வேட்டையாட இவன் செல்ல,
சிவலிங்கத்திருக்கு தினம்
பூசை செய்யும் பூசாரி வர,
மாமிசத் துண்டு அங்கு சிதறிக் கிடக்க,
அதைக் கண்டு அவர் முகம் சுளிக்க
தினம் இக்கூத்து
தொடர்ந்து நடந்தது;

அழகான சுத்தமானக் கோவிலை இப்படி
அசுத்தம் செய்வது
ஆரெனத் தெரியாது
அவதியுற்றார்;
ஆத்திரப்பட்டார்;

பூசாரி கோவிலைச் சுத்தம் செய்து
பூசை செய்து
புறப்பட, அவரைத் தொடர்ந்து
திண்ணம் நுழைந்து
தன் ஆசைப்படி பூசை செய்ய,
தினம்
தொடர்ந்தது இத்
திருவிளையாடல்;

                                                                        ( கதை தொடரும் )

Thursday, November 17, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 3

மிருகங்களின் தோல்
மற்றும் இதர பாகங்களைக் கொண்டே
சீராக அலங்கரிக்கப்பட்டான்
சிறுவன் திண்ணன்;
காட்டுப் பன்றிகளையும்
காட்டு நாய்களையும்
ஓடிப் பிடித்து
விளையாடி மகிழ்ந்தான்;
வில் வித்தையும் மற்ற கலைகளையும்
விவரித்தான் கற்றுத்தந்தான்
திண்ணனுக்கு அவன் அப்பன்;

கலையாவும் கற்றத் திண்ணன்
காவலாய் நின்றான் அவன் குலத்திற்கு;

நாலு திசைகளிலும் பறை அறிவித்தான்
நாகன்,
திண்ணனே
தனக்கடுத்து நாடாளும்
தலைவன் என்று; அதனை நிரூபித்தான்
திண்ணனும் பல மிருகங்களைக் கொன்று;

விலங்குகளின் தொல்லை மிகும்
வேளைகளிலெல்லாம்
வேட்டைக்குக் கிளம்புவதே
வீரன் திண்ணனின் வேலை;

ஒருநாள் அதுபோல்
ஒருசில வேடவரோடு
வேட்டையாடப் புறப்பட்டான்
திண்ணன்;
வேடவர்களின்
மன்னன்;

காட்டு மிருகங்கள்
கரடி புலி
காட்டுப் பன்றி எனக்
கண்ணில் கண்டவற்றையெல்லாம்
கொன்று குவித்தனர்;
அம்புகளிலிருந்துத் தப்பிப் பிழைக்க
அனைத்து மிருகங்களும்
ஓடி ஒளிந்தன;

ஒரு காட்டுப் பன்றி,
ஓடியது ஓடியது ஒளிந்து ஒளிந்து ஓடியது;
திண்ணனும் வேறு இருவரும்
துரத்தினர் துரத்தினர் விடாது துரத்தினர்;

திண்ணன் துரத்த
பன்றி ஓடிய அந்த இடம்
காலஹஸ்தி மலை ஆகும்.
மலையில் ஒரு மரத்தின் கீழ்
அந்தப் பன்றி வந்து நின்றது;
அம்பு விட்டான்;
அந்தப் பன்றியைக் கொன்றான்;
அகோர பசி ஏற்பட்டதால்
அந்தப் பன்றியைச் சமைக்க
ஆணையிட்டான்; மலையின்
அடுத்தப் பக்கத்தில் பொன்முகலி
ஆற்றில் நீர் எடுத்து வர திண்ணனும்
அவனோடு இன்னொருவனும் வந்தனர்;

நீர் எடுக்க வந்தவன்
விழியில் விழுந்தது, மலையில்
உச்சியில் இருந்த
குடுமித்தேவர் ஆலயம்;
குடுமித்தேவன் என்ற பெயரில் அங்கு
குடிகொண்டவன் அந்தப் பரமசிவன்;

ஏதோ ஒரு உணர்வு
எங்கிருந்தோ உந்த
எழுந்து நடந்தான் திண்ணன்,
சிவாலயம் இருந்த திசை நோக்கி,
எம்பெருமான் சிவனை தரிசிக்க வேண்டி;

                                                                        ( கதை தொடரும் )

Wednesday, November 16, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 2

போதப்பி நாடு;
மலைகளும் அடர்ந்த காடுகளும்
நிறைந்த நிலப்பரப்பு;
பச்சை பசெலேன வயல்கள்;
துள்ளிக் குதித்து விளையாடும்
புள்ளி மான்கள்;
ஆடுகள், மாடுகள்; இன்னும்
யானைகள்;

பயம் கருணை இரண்டும் இல்லா
இவ் வேடவர் குலத்திற்குத்
தலைவன்
நாகன் என்பவன்.
குற்றம் செய்வதைத் தன் குலத்
தொழிலாய்க் கொண்டவன்;
வன மிருகங்களைத் தன்
விருப்பம் போல்
வதைத்து வந்தான்;
தத்தை என்பவள் நாகனுக்குத்
தாரமானவள். எப்பொழுதும்
புலிகளின் நகத்தையும்,
பாம்புகளின் தோலையும்
ஆபரணமாய்
அணிந்திருப்பாள்;

வன விலங்குகள் நிறைந்த
வனத்தில் வேட்டையாடி
வாழ்ந்து வந்த நாகன்
தத்தை தம்பதியருக்குப்
பிள்ளை இல்லை என்ற
பெருங் கவலை இருந்தது;
விலங்குகளை
வேட்டையாடிக் கொன்ற
வேந்தனை இக்கவலை
வேட்டையாடாது கொன்றது;
அவர்கள்
மகிழ்வைத் தின்றது;

தன்னால் முடியவில்லை என்று
தெரிந்த பின் ஆண்டவனை எண்ணத்
தொடங்கியது மனித மூளை;


அழகாய் ஒரு
ஆண் மகவு வேண்டி
அந்த
ஆறுமுகனைத் துதித்தான்
அரசன்;

தத்தை கர்ப்பமானாள்; பிள்ளையின்
தந்தை மகிழ்ந்துபோனான்;

மகவு பிறந்தது;
மகிழ்ச்சி பொங்கியது;

வலியவனாய்ப் பிள்ளை; அதனால்
வைத்தான் தந்தை 'திண்ணன்'
என்னும் பெயரை;

                                                                        ( கதை தொடரும் )

Tuesday, November 15, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 1

                                    கண்ணப்ப நாயனார்

ஓம் நமசிவாய

வேடன்,
வேட்டையாடி மிருகங்களைக் கொல்வதேத் தன்
குலத் தொழிலாய் கொண்டு வளர்ந்தவன்;
வேட்டையாடுவதைத் தவிர
வேறொன்றும் அறியாதவன்;
பாவம் பார்க்காது வாயில்லாப்
பறவைகளையும் மிருகங்களையும்
கொன்று குவித்து வாழ்பவன்;
அவன்தான் திண்ணப்பன் என்பவன்;
அந்தச் சிவனால் கண்ணப்பன் என்று
அழைக்கப்பட்டவன்;
அவன் கதை ...



                                                                        ( கதை தொடரும் )

Friday, November 11, 2011

உத்தவ கீதை - 8

கொல்லன்,
தன் பட்டறையில்
தன் வேலையில்,
கண்ணும் கருத்துமாக,
வேறு சிந்தனை
ஏதுமின்றி,
எப்படி உழைக்கிறானோ
அப்படி இறைவன் மேல்
எப்பொழுதும்
கவனம் கொண்டு செயல்பட்டால்
கவலை இல்லாது
கரையேறலாம் என்று
கொல்லன் எனக்குக் கற்பித்தான்;

பாம்பு,
தனியாய் வசிக்கும்;
ஆள் ஆரவாரம் கேட்டால்
அக்கணமே அங்கிருந்து ஓடிவிடும்;
அதுபோல் தனியே
அதிகம் பேசாது
அடக்கமாக வாழ்.
பாம்பு சொல்லித் தந்தப்
பாடம் இது;

பட்டுப் பூச்சி
பட்டு நூல்களை உற்பத்தி செய்து வலை
பின்னுகிறது,
பின்னொரு நாளில்
பின்னிய வலையைத் தானே தின்னுகிறது;
படைக்கும் பொருள் அனைத்தையும்
பிரளயக் காலத்தில்
பரம்பொருளே அழிக்கிறார்;
பட்டுப் பூச்சி கற்றுத் தந்தப்
பாடமிது;

குளவி, தன் கூட்டில்
புழுவை அடைத்து
அதைச் சுற்றி ஒலி எழுப்பும்;
குளவியின் ஒலி கேட்டு
வளரும் புழு குளவியாகவே
உருவெடுக்கும்;
அதுபோல்
ஆண்டவனை எண்ணியே
அனுதினமும் இருப்போர்
ஆண்டவனாகவே வாழ்வர் என்பது
குளவி எனக்குக்
குருவாய் இருந்துக்
கற்பித்தப் பாடம்;

இவ்வாறு
இந்த
இருபத்தி நான்கு குருக்களிடமிருந்து
இருக்கையில் எப்படி
இருப்பது என்று கற்றுக்கொண்டேன் என
இனிய அவதூதர் சொல்லி முடித்தார்;
இன்னொன்றையும் தொடர்ந்து சொன்னார்;
இந்தச் சரீரம் நமக்கு
இன்ப துன்பத்தை அளிக்கிறது;
இறப்பு பிறப்பு இதில் பிணைந்து
இருக்கிறது;
இதனால் விவேகம், வைராக்கியம் கிடைப்பதனாலே
இவ் உடலும் எனக்கு ஒரு குரு ஆனது;

துவாரகை மன்னன்
ஸ்ரீ கிருஷ்ணன்
தன் நண்பன்
உத்தவனுக்கு
உரைத்த இந்த
அறிவுரைகளே
உத்தவ கீதை எனப்படும்;

                                                                        ( கீதை முடிந்தது )

Thursday, November 10, 2011

உத்தவ கீதை - 7

மீன்,
தூண்டில் புழுவை
உண்ண விரும்பி
வாய் திறக்கும்;
தூண்டிலில் சிக்கி
இறக்கும்;
வாயினைக் கட்டுப்படுத்தாது போனால்
வருந்திச் சாக நேரிடும் என்றெனக்குச்
சொல்லித் தந்தது மீன்;

பிங்களா எனும் விலை மாது,
பெரிய விலை கேட்பாள்; தன்
உடல் விருந்து வைப்பாள்;
நாள்பட நாள்பட
அவள் கெட்ட பணம் தர
ஆருக்கும் மனமில்லை;
அங்ஙனம் மனமிருப்போரிடம்
பணமில்லை;
உறங்காது உடல் விற்று
உயிர் வாழ்வதைத் துறந்து,
மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து
அவர் பக்தையாகிப் போனாள்;
கெட்ட வழி துறந்து
நல்ல வழியில் செல்வதே
நல்லது என்பது
பிங்களா எனக்குச் சொல்லித் தந்தப்
பாடம்;

'குரரம்' எனும்
குருவி,
மாமிசம் ஒன்றைக் கண்டு
கவ்விப் பறந்தது;
மாமிசத்தின் மீது
மையல் கொண்ட பருந்துகள்
குருவியைத் துரத்தின;
ஆசைபட்டப் பொருளை
அப்படியே தூர வீசிவிட்டு
அங்கிருந்து பறந்தது குருவி;
அதனாலே உயிர் தப்பியது;
ஆசை கொண்டு ஒரு பொருளை
அணைத்துக் கிடந்தாள்
அதனால் இன்பம் கிட்டாது,
துன்பமே கிட்டும் என்று
'குரரம்' என்ற அந்தக் குருவி
குருவாய் இருந்து எனக்குச் சொல்லித் தந்தது;

சிறுவன்,
சிறுக் கவலை கூட இல்லாது,
ஆடிப் பாடி ஓடி விளையாடுகிறான்;
பொறாமை, வெறுப்பு, சூழ்ச்சி போன்ற
எந்தத் தீயக் குணமும் மனதில் கொள்ளான்;
எப்பொழுதும் நல்லவனாய் மகிழ்ச்சியாய்
இருக்கிறான்; அதுபோல்
இருப்பார்க்கு அனவிரதமும்
இன்பம் கிட்டும் என்பதைச்
சிறுவனிடம் நான் கற்றப் பாடம்;


தன்னை
மணம் பேச வந்தவர்க்கு
உணவு சமைக்க
நெல் குத்தினாள் பெண் ஒருத்தி;
கையில் இருந்த வளையல்கலெல்லாம்
கலகல என ஒலியெழுப்ப,
ஒன்று ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு
மற்றெல்லாவற்றையும் கழற்றிவைத்து விட்டாள்;
இதிலிருந்து,
ஒன்றாய் எல்லாரும் உரைக்க
சண்டை மூளும்;
ஒன்று மட்டும் தனித்திருந்தால்
அமைதி தரும் என்று
கன்னி எனக்குக்
கற்பித்தாள் பாடம்;


                                                                        ( கீதை தொடரும் )

Wednesday, November 9, 2011

உத்தவ கீதை - 6

விட்டில் பூச்சி,
விளக்கின் ஒளி
விரைந்தழைக்க அதனோடு
விளையாடித் தன்
வாழ்வை இழக்கும்; அதுபோல் மக்கள்
பிறபொருட்கள் மேல்
பற்று கொண்டால்
அழிவர் என்பது
விட்டில் பூச்சி எனக்கு
வழங்கியப் பாடம்;

தேனீ, மலர் தோறும் பறந்து
தேன் சேகரிக்க ஒருநாள் வேடன் அத்
தேனை அபகரித்துக்கொள்கிறான்;
தேனைச் சேகரித்தத் தேனீ
தேனைப் பருகாமலேயே அதை இழப்பது போல்,
தேவைக்கதிகமாய்
தேடிப் பொருளீட்டி வைத்தால் இழக்க நேரிடுமேன்பதைத்
தேனீ எனக்குச் சொல்லித் தந்தது;

யானை,
வலிமையுடன்
வனத்தில் இருந்தாலும்,
ஆண் ஆனைக்கு பெண்
ஆனை மேல்
ஆலாதிப் பிரியம்.
ஆனையைப் பிடிக்க எண்ணுவோர்
ஆண் ஆனை வரும் பாதையில் பெண்
ஆனையை நிற்கவைத்து இடையில்
அகண்ட பள்ளம் தோண்டி யானையை
அகப்பட வைப்பார்;
அதுபோல் பெண் பின் சுற்றுபவர் துயரில்
அகப்பட்டு வருந்த நேரிடுமென்ற பாடம்
ஆனை எனக்கு
அறிவுறுத்தியது;

வேடன், தேனடைகளை
வேட்டையாடி வருமானமீட்டி
வாழ்வான்;
தேவைகதிகமாய்த்
தேடி வைத்த பொருளைத் தேனீ
வேடனிடம் இழப்பதுபோல்,
தான் அனுபவிக்காது உலோபி
ஈட்டி வைக்கும் பொருளை யாரோ
எடுத்துக்கொள்வர்;
வேடனிடம்
சீடனாய் இருந்து
கற்றப் பாடம்;

இனிய இசை ஒலிக்கும் திக்கு நோக்கித் தன்
இரு காதுகளையும் நீட்டி மெய் மறந்து நிற்கும் மான்.
இதுவே தக்க தருணமென்று
இமை மூடும் நேரத்தில் வலை வீசிப் பிடிப்பர் ஆண்.
இறைவனின் சிந்தை
இல்லா வேறெதிலும் எண்ணம் செலுத்தினால்
இதுபோல் அவதி நேருமென்று
சொல்லித் தந்தது மான்;
கற்றுக் கொண்டது நான்;


அவதூதர்
அரசன் யதுவிற்கு
அறிவித்ததை துவாரகையின்
அரசன் கண்ணன் தன்
அன்பிற்குப் பாத்திரமான உத்தவருக்கு
அறிவுருத்தினான்;

                                                                        ( கீதை தொடரும் )

Tuesday, November 8, 2011

உத்தவ கீதை - 5

அக்னி, தன்னை
அண்டியோரையெல்லாம்
எரித்துச் சாம்பலாக்கும்;
அதனதன் வடிவேடுத்தே
அக்னி அவைகளைக் கரிக்கும்;
அதுபோல் ஆன்மாவும்
ஆக்கையின் வடிவமே கொள்கிறது;
அவரவர் எண்ணம் போல் வளர்ந்து
அந்தியில் அழிக்கிறது;
அக்னி எனக்கு அளித்த பாடமிது;

சந்திரன்
சில காலம் வளர்கிறது,
சில காலம் தேய்கிறது,
இது
நிலவு காரணமில்லாமல்
நிகழும் மாற்றம்;
சூரியஒளி படும்அளவே கொண்டே
அந்த நிலவின் தோற்றம்;
அதுபோல் ஒளிர்வது, மறைவதெல்லாம்
ஆக்கையின் குணங்களே அன்றி
ஆன்மாவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை
இது
நிலவு எனக்கு
சொல்லித் தந்தப் பாடம்;

சூரியன் நீரைச்
சுட்டு மேகமாய் மாற்றுகிறது;
பின் அதைக் குளிர்வித்து
மழையாய்ப் பெய்கிறது;
அதுபோல் ஞானியர்
கல்வி கற்று, ஞானம் பெற்று
மற்றவர்க்கு மழை போல் வழங்க வேண்டும்;
சூரியன் எனக்குச்
சொல்லித் தந்தது;

பந்த பாசத்தில் ஒட்டாது
பழகி விலக வேண்டுமென்பது,
பந்த பாசத்தால் ஒட்டி உறவாடி
உயிரிழந்த புறா ஒன்று எனக்கு
உணர்த்தியப் பாடம்;

உணவு தேடித் தான் செல்லாது,
கிட்டிய உணவை உண்டு வாழும்
மலைப் பாம்பு;
உணவு கிட்டாது போனால்
உண்ணாது வாழும்;
அதுபோல் கிடைத்ததைக் கொண்டு,
கிட்டாதது பின் செல்லாதிருக்கும் ஞானம்
மலைப் பாம்பு சொல்லித் தந்தது;

கடல்,
பரந்து விரிந்து உள்ளது;
மழைக் காலத்தில் ஆறுகள்
கலப்பதினால் அளவு நீள்வதில்லை;
வெயில்காலத்தில் ஆறுகள்
காய்வதினால் அளவு குறைவதில்லை;
அதுபோல் ஞானியர்
இன்பம் வருகையில் துள்ளாது,
துன்பம் வருகையில் துயலாது,
இருக்கவேண்டுமென்பது
கடல் தந்த பாடம்.

இன்னும் சொன்னது ...

                                                                        ( கீதை தொடரும் )

Monday, November 7, 2011

உத்தவ கீதை - 4

'அரசே,
அநேக பேர்கள் எனக்குக் குருவாகி
ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்;
அவர்களிடம் கற்ற ஞானத்தை
அரசர் தங்களுக்கு
அடியேன் கற்பிக்கிறேன்;

மனிதம் மிருகம் எல்லோராலும்
மிதிபடுகிறது;
தோண்டத் தோண்டத் துன்பம்
சகித்துக் கொள்கிறது;
மற்றவர்களுக்குத் தேவையான
எல்லாவற்றையும் தருகிறது இந்த
மண் என்ற பூமி;
இதுவே எனது முதல் குரு;
மக்கள் வருத்தியதை
மண்மாதா மறக்கிறாள்;
மாறாக நெல் கனி பல தருகிறாள்;
துன்பம் தருவோருக்கு
இன்பம் தரவேண்டுமென்பது
இப்பூமியிடமிருந்து நான் கற்ற பாடம்;
உபத்திரவம் செய்வோர்க்கும்
உபயோகமாய் இருப்பதே இதன்
உள்ளர்த்தம்;

வாயு, உடலென்ற நாம்
வாழ உறுதுணையாயிருக்கிறது;
உடல் இன்ப துன்பத்தில்
சிக்குண்டாலும், பணம் பொருள் மேல்
பற்றுகொண்டாலும் வாயு என்ற ஆத்மா
இதிலெல்லாம் அகப்படாமல்
தனித்திருக்கிறது;
அதுபோல் ஞானம் வேண்டுபவன்
தேவையில்லாத பொருட்கள் மேல்
சிந்தை கொள்ளது
தனித்திருக்கவேண்டுமேன்பது
வாயு எனக்கு
வழங்கியப் பாடம்.

ஆகாயம் எங்கும் நிறைந்துள்ளது;
அளவிட முடியாதது;
எதனோடும்
எள்ளளவும் தொடர்பு இல்லாதது;
அதுபோல் ஆன்மாவும்
தனித்து ஒரே நிலையில் இருக்கவேண்டுமேன்மது
ஆகாயம் எனக்கு
அறிவித்த பாடம்.

தண்ணீர்
தனக்கென்று ஓர் நிறமற்றது;
தன்னை நாடி வந்தோர்க்கு
தன்னலம் பாராது நலம் செய்வது போல்,
ஆத்மா ஞானியர்
அண்டுவோர் பாவங்களைப்
போக்க வல்லவர்;
இதனை எனக்கு உணர்த்திய
தண்ணீரும் எனக்கு ஒரு குரு;

இன்னும் சொன்னது ...

                                                                        ( கீதை தொடரும் )

Sunday, November 6, 2011

உத்தவ கீதை - 3

'உத்தவரே,
உறவு மக்கள் என எதன்மீதும்
பாசம் கொள்ளாது,
என்னையே எந்நேரமும்
தியானத்தில் கொள்ளவும்;
என்னைத் தவிர
எல்லாம் மாயை
என்பதை உணரவும்;
மனதை அடக்கு, இந்த
உலகமே நான், இதை அறி;
தொல்லை இல்லை உமக்கு';

'பரந்தாமா, எல்லாவற்றையும்
படைத்தவனே நீ தான்; எதன்மீதும்
பற்று கொள்ளாது துறந்திருக்கப்
பறைபவனும் நீ தான்;
அப்படிப் பற்று கொள்ளாதிருப்பது
எப்படி என்று உபதேசிக்க வேண்டும்,
எந்த தோசமும் இல்லாதவரே,
காலத்தால் அளவிடமுடியாதவரே,
எல்லாம் அறிந்தவரே,
என்றும் அழியாது நிலைத்திருக்கும்
வைகுண்டத்தில்
வசிப்பவரே, நர
நாராயணராக அவதரித்தவரே,
உம்மைச் சரணடைந்தேன்;
எம்மைக் கரையேற்றும்;'

உலகளந்தவன்
உத்தவருக்கு
விளக்கினான்
யது என்ற அரசனுக்கும்,
அவதூதர் என்பவருக்கும்
இடையே நடந்த
வரலாற்றை;

அந்த வரலாறு ...

ஒருமுறை
அரசன் யது
ஆத்மா ஞானம் வேண்டி
அவதூதரை
அணுகினான்;
'அவதூதரே, எல்லாம் அறிந்தும்
ஏதும் தெரியாச் சிறுவன் போல்
இருக்கிறீரே,
அழகிய சரீரம் கொண்டவர்,
அழகாகப் பேசுகிறவர், இருந்தும்
எதன் மீது பற்றிலாது
இருக்கிறீரே,
அறிவிருந்தும் பைத்தியம் போல்
திறிகிரீரே;
காமம் பேராசை போன்றவைகளால்
மக்கள் துன்புற, நீர் மட்டும்
கங்கையில் குளிக்கும் யானை போல்
சஞ்சலமன்றி
இருக்கிறீரே,
இத்தனை ஞானம்
கிடைத்தததெப்படி உமக்கு, அதை
இயம்ப வேண்டும் எமக்கு;'

அவதூதர்
அவருக்கு
அறிவுறுத்தியது ...

                                                                        ( கீதை தொடரும் )

Saturday, November 5, 2011

உத்தவ கீதை - 2

துவாரகா நகரத்தில்
கெட்ட சகுனங்கள் பல
நிகழ்ந்தது;
அது
ஊர்ப் பெரியவர்களை
வருத்தத்தில்
ஆழ்த்தியது;
கிருஷ்ணனிடம்
சென்றனர்;
தமக்கு
வழி காட்ட
வினவினர்;

'நல்லோர் சாபம்
நமை வாட்டுகிறது;
துவாரகை விட்டுச்
செல்வோம்,
பிரபாச தீர்த்தம் நோக்கிச்
செல்வோம்;
அவ்வாறு சென்றால்
உயிர் பிழைப்போம்;
அன்னதானம் செய்வோம்;
நல்ல வழியில் வாழ்வோம்;
நாம் பெற்ற சாபத்தால்
வரும் சங்கடத்தைத் தடுக்க
அதுவே வழியாகும்;'

பரந்தாமன் உரைத்தான்;
அவன் சொல்லுக்குப் பணிந்து
மக்கள் புறப்பட்டனர்
பிரபாச தீர்த்தம் நோக்கி;
வருங்காலத்தில் விழையப்போகும்
இன்னல்களை மனதில் தேக்கி;


பகவான் பேசுவதை எல்லாம்
பொறுமையுடன் கேட்டார் உத்தவர்;
பின் பேசினார்;
'பரந்தாமா, தேவாதி தேவா,
எல்லோரின் இன்னல்களையும் தீர்க்கும்
எசொதை மைந்தா,
தங்களைப் பிரிந்து
எப்படி இருப்பேன் நான் ?
தங்களோடு வைகுண்டம்
வரவேணும் நான்,
இதற்கு அருள் புரிய வேண்டும் நீர்;'


உத்தவரின் தூய
உள்ளத்தையும் அதில்
விளைந்த எண்ணத்தையும் கேட்ட
கிருஷ்ணன் பின்வருமாறு
உரைத்தான்;

'உத்தவரே,
உத்தமரே,
உயர்ந்தவரே,
நாளை
நடக்கப்போதை
நானுமக்குச் சொல்கிறேன்;
கேளும்;
பிரம்மன் கேட்டுக்கொண்ட
பணிகலெல்லாம்
பழுதேதுமின்றி நிறைவேற்றிவிட்டேன்;
பெற்ற சாபத்தால்
யாதவ குலம்
தன்னோடே சண்டையிட்டு
அழிந்துபோகும்;
இன்றிலிருந்து ஏழாவது நாள்
இந்த நிலத்தை
நீர் விழுங்கும்;
என்று நான் இவ்வுலகத்தை விட்டுச்
செல்கிறேனோ,
அன்று முதல் இவ்வுலகத்தை
கலிபுருடன் பிடித்துக்கொள்வான்;
இவ்வுலகம் மங்களம் இழந்து
மாசுபட்டுப் போகும்;
மக்கள் மாக்கள் ஆவார்கள்;
அதர்மத்தையேச் செய்வார்கள்;'

இதனைத் தொடர்ந்து
இன்னும் சொன்னான் கிருஷ்ணன்;
அவை ...


                                                                        ( கீதை தொடரும் )

Thursday, November 3, 2011

உத்தவ கீதை - 1



பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணன்
பூலோகத்தில் தன்
பணியெல்லாம் முடிந்த பின்
வைகுந்தம் திரும்புமுன் மந்திரி
உத்தவருக்கு
உபதேசித்ததே இந்த
உத்தவ கீதை;


பிரம்மனும் மற்ற தேவர்களும்
பரந்தாமனைப் பார்க்க
துவாரகை வந்தார்கள்;
வணங்கினார்கள்;
'கிருஷ்ணா,
கோவிந்தா,
இன்னல் செய்தவர்களையெல்லாம்
இல்லாது செய்தவனே,
மக்கள் துயர் தீர்த்த
மாதவா,
வையம் விட்டு
வைகுந்தம் வா;
எங்களோடு வர வேண்டும் தேவ லோகம்,
எங்கட்கும் வேண்டும் உங்களோடு இருக்கும் யோகம்;'
என்றனர்;
'யாவரையும் படைக்கும் பிரம்மா தேவா,
யாதவர்களின் அழிவு
ஆரம்பமாகிவிட்டது, அறியாயா ?
ஆணவத்தால்
அழியப் போகின்றனர் யாதவர்கள்;
அவர்கள் அழிந்தபின்
அடியேன் வருவேன் மேலோகம்,
அதுவரை இருப்பேன் பூலோகம்' என்றுரைத்தான்;
பிரம்மனையும் மற்றவர்களையும்
அனுப்பி வைத்தான்;
கண்ணன் பேசுவதைக்
கேட்ட உத்தமர்
கலவரமடைந்தார்;
கண் கலங்கினார்;
செய்வதென்னவென்று தெரியாது
திகைத்து நின்றார்;

                                                                        ( கீதை தொடரும் )

Tuesday, November 1, 2011

நாச்சியார் திருமொழி 13

கண்ணனெனும் கருந்தெய்வம்
      
கரு நீலக்
கண்ணனோடு
களிப்போடிருக்கவே இந்த
அவனியில் நான்
அவதரித்தேன்;
என் கண்ணனையும்
எனையும் பிரிக்க
எண்ணுவது
புண்ணில்
புளியைப்
பிழிவது
போன்றது;

கண்ணன் இல்லாது
நான் வாழ்வதேது;
கண்ணனைத் தவிர
வேறு நினைவேது;

என் மேல் இரக்கம் கொள்ளாது
எங்கோ இருந்து கொண்டு
எனைக் கொல்கிறான்;
விரக தாபத்தில் எனை
வதைக்கிறான்;

அவன் திருமேனியில் அணிந்த
ஆடை தாருங்கள்;
அதை விசிறி
அந்தக் காற்றே,
மாதவனைப் பிரிந்து தவிக்கும்
எனக்கு மருந்து;


பாலா லிலையில்
      
பாலகனாய்
ஆலிலையில் துயில் கொண்டவனே
என் துணையாகக் கனவு கண்டேன்;
அவனிடம் நான் என்
மனதைப் பறிகொடுத்தேன்;

ஆயர்பாடியில்
இடையர்களின்
இடையில் பிறந்தவன்,
ஆதிசேசன் மேல்
பள்ளி கொண்டவன்,
அந்தக் கண்ணனிடம் சென்று
இந்தக் கோதை விரக தாபத்தில்
தவிப்பதைச் சொல்லி,
அவன் கழுத்தில் இருக்கும்
குளிர்ந்த துளசி மாலையைக்
கொண்டு வந்து, என்
குழலில் சூட்டுங்கள்;
மாதவனின் அந்த மாலையே எனக்கு
மருந்து;

Monday, October 31, 2011

அருணகிரிநாதர் திருப்புகழ் - 13

                                    சந்ததம் பந்தத் ...

துயரத்தில் சோர்ந்து போகாது,
பாசத்தோடு எல்லாரோடும் பழகி,
முருகா உன்னை என்றும்
மறவாது துதித்து
மனக்கண்ணால் கண்டு,
நான் அன்பு கொள்ள வேண்டும்.
தேவயானியின் மணாளனே,
சங்கரன் பார்வதியின் புதல்வனே,
திருச்செந்துரிலும் கண்டியிலும்
ஒளி கொண்ட வேலோடு
ஒளிர்பவனே,
திருவருள் தருபவனே,
திருப்பரங்குன்றத்தில் அமர்ந்திருக்கும்
பெருமானே !!!

Thursday, October 20, 2011

தீபாவளி

                                    தீபாவளி

தித்திக்கும்
தீபாவளித்
திருநாள்;
திக்கெட்டும்
கொண்டாடிக்
குதுகளிக்கும்
பெருநாள்;

தேக்கி வைத்தப் பணம்
தீக்கு இரையாவதைப் பார்த்துத்
திணராது சிரித்து மகிழ்வது இத்
திருநாளில் மட்டும் தான்;

விடிகாலை விழித்து
வெந்நீரில் குளித்துப்
புத்தாடை உடுத்திக்
கொண்டாடி மகிழ்வோம்;

பெற்றோரை வணங்கி,
பெரியோரை மதித்து,
சிறியோரை வாழ்த்தி,
பரிசுகள் பரிமாறிச்
சிறப்பாய்க் கொண்டாடுவோம்;

இனிப்பு உண்போம்,
இல்லாதாற்குக் கொடுத்து மகிழ்வோம்;

நம் பழைய உடைகள்
பலருக்குப் புதிய உடைகளாகும்
உண்மையை உணர்வோம்;

சுத்தமான தீபாவளி
சத்தமில்லாத தீபாவளியே எனச்
சத்தமாகச் சொல்வோம்;
புகை சூழ்வதை விடப்
புன்னகை சொல்வதே
நன்று என்று உணர்வோம்;

   

கேப் வெடிக்கட்டும்,
குழந்தைகள் கை தட்டிச்
சிரிக்கட்டும்;
சங்கு சக்கரம்
சுற்றட்டும்,
சண்டை சச்சரவுகள்
ஒழியட்டும்;

கொஞ்சமாய்ப்
பாம்பு மாத்திரைகள் எரியட்டும்;
கொஞ்சம் கூட மிச்சமில்லாது
பாவ காரியங்கள் ஒழியட்டும்;

தீபாவளியில் மட்டும்
அணுகுண்டுகள் வெடிக்கட்டும்
(சத்தமில்லாது);
தீபாவளிக்காக மட்டுமே
துப்பாக்கி விற்பனை;
திசை மாறிப்பாயும் ராக்கெட் இத்
திருநாளில் மட்டுமே;

வான வேடிக்கையின்
விற்பனையை விட
வாழ்த்து அட்டைகளின்
விற்பனை அதிகரிக்கட்டும்;

தொலைக்காட்சியில்
தொலைந்து போகாது
தோழர் தோழியரைத்
தொடர்பு கொண்டு
தொல்லை தருவோம்
தவறில்லை;

தீய வழி ஒழியட்டும்,
தீபாவளி வாழட்டும்.

வாழ்த்துக்கள் !
வாழ்க பல்லாண்டு !

Wednesday, October 19, 2011

சுதாமா சரித்திரம் - 6

                                    சுதாமாவிற்கு அருள்

ஒருவழியாய் வயிற்றுப் பசி அடங்கியது,
உடல் சோர்வு கிளம்பியது;
கண்கள் உறங்கக் கெஞ்சியது;
வெளியே செல்ல முற்பட்டார்; எங்காவது
கொஞ்சம் உறங்கக் கிளம்பினார்;

கண்ணனோ சுதாமாவைத்
தன் அறைக்கு இழுத்துச் சென்றான்;
நறுமணம் நிறைந்த அறை;
சுத்தமானப் பஞ்சில் மெத்தை;
குளுகுளு காற்று வசதி;
அழகிய மணிகள்
அசைந்தாட இன்னிசை;
தயங்கியப்படியே தள்ளி நின்றார் சுதாமா; அவரை
அமுக்கிக் கட்டிலில் அமர வைத்தான் பரமாத்மா;
கால் பிடித்து விட்டான்; சுதாமா
கண்ணனின் அன்பைப் பார்த்து
கண் கலங்கினார்;
கவலை எதற்கு,
யாமிருக்க ? கண்ணன் கேட்டான்;

எல்லாம் சரி,
எனக்காக என்ன கொண்டு வந்தாய் சுதாமா ?
என்று கேட்டான் கண்ணன்,
எல்லாம் தெரிந்தவன்,
எதுவும் தெரியாதவன் போல் இருப்பவன்;

இத்தனை வித
அமுதம் படைத்தவனுக்கு, வறண்ட இந்த
அவலை அளிப்பது
அவமதிப்பதற்கு சமானம்
என்று எண்ணினார் சுதாமா;
ஏதும் சொல்லாமலே இருந்தார்;

கண்ணனே பேசினான்;
அன்பில்லாமல் பலர்
அள்ளி அள்ளித் தருவர்;
அவர்கட்கு என்
ஆசீர்வாதம் கிடைப்பதில்லை;
அன்போடு எனக்குக்
கொஞ்சம் தந்தாலும்
அப் பக்தர்கட்கு நான்
அடிமை என்றான்;

இவ்வளவு சொன்ன பின்னும்
எடுத்து வந்த அவலைக் கிருஷ்ணனுக்குக்
கொடுக்கத் தயங்கினார் சுதாமா;

கிருஷ்ணன் இத்தனை சொன்ன பின்னும்
கொண்டு வந்த அவலைக்
கொடுக்கத் தயங்கினார் சுதாமா;
'என்ன மூட்டை இது'
என்று தானே சுதாமாவின் அருகில் இருந்ததை
எடுத்தான், பிரித்தான், அதிசயித்தான்;

சுதாமா, எனக்கு மிகவும் பிடித்த அவல்;
ஆகா ஆகா என்று ஆனந்தப்படான்;

ஒரு கை அவல் எடுத்தான்;
தன் வாயில் போட்டுக்கொண்டான்;
இன்னொரு கை அவல் எடுத்தான்;
அதற்குள் மனைவி ருக்மணி
கண்ணனைத் தடுத்தாள்;
ஒரு கை அவலுக்கே சுதாமாவிற்கு
அனைத்து ஐஸ்வர்யங்களும் கிட்டி விடுமே;
இன்னொரு கைப்பிடி அவல் எதற்கு ?
இன்னும் அவருக்குத் தர என்ன இருக்கு ? என்றாள்;

சிரித்துக் கண்டான் சிரீதரன்;

புலர்ந்தது காலை;
மலர்ந்தது புதிய வேளை;
புறப்பட்டார் சுதாமா தன் மனை நோக்கி;
பரந்தாமனின் அன்பைத் தன் மனதில் தேக்கி;
பிரியா விடை தந்தான் கண்ணன்;
பிரிய மனமில்லாப் பள்ளித் தோழன்;

சுதாமா
கண்ணனை எண்ணியப்படியே,
கண்ணனின் கருணையை நினைத்தப்படியே,
கண்ணன் காட்டிய அன்பை அசைபோட்டுக்கொண்டே
தன் ஊருக்கு வந்து சேர்ந்தார்;
தன் வீட்டருகே வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி;
அங்கே அவர் மனை இருந்த இடத்தில்
அரண்மனை போன்றோர் மாளிகை இருந்தது;
என் மனை எங்கே ?
என் மனைவி, மக்கள் எங்கே ?
என்றவர் குழம்ப,
அதற்குள் சுதாமா வருகையை
அறிந்த அவ்வூர் மக்கள்,
மேல தாளத்துடன் அவரை வரவேற்க வந்தனர்;
சுதாமாவின் மனைவி
சூரிய ஒளிபோல் பிரகாசிக்குமந்த அரண்மனையிலிருந்து
வெளிப்பட்டாள்;
உங்கள் வீடு, உங்கள் மனை என்று
ஊரார் தெரிவித்தனர்;
எல்லாம் அந்தக் கண்ணனின் கருணையால்
நிகழ்ந்தது என்றுணர்ந்தார் சுதாமா;
மரகதம்,தங்கம், வெள்ளி எல்லாம்
மின்னியது அந்த
மாளிகையில்;
சுதாமாவின் வறுமை ஒழிந்தது;
வளமை மிகுந்தது;

சுதாமா -
பணம் வந்திடினும்
பழமை மறக்காது இருந்தார்;
பரந்தாமன் மேல்
பக்தி செய்து வந்தார்;

பரம ஏழை சுதாமாவின் இந்தக் கதையைப்
படிப்பவர்க்கு அந்தப்
பரந்தாமன் அருள்
பாலிப்பான்;

                                    கிருஷ்ணார்ப்பணம்


                                                                        ( சரித்திரம் முடிவுற்றது )

Tuesday, October 18, 2011

சுதாமா சரித்திரம் - 5

                                    சுதாமா கண்ணன் சந்திப்பு

சுதாமாவைக் வருவதை அறிந்ததும்,
ஜல் ஜல் ஜல் என்று தன் சலங்கை சப்திக்க
சுதாமாவை வரவேற்கக் கண்ணன் ஓடினான்;


அங்கிருந்து சுதாமா வர,
இங்கிருந்து கண்ணன் வர,
இருவரும் வழியில் சந்திக்க, கண்ணன்
இறுக்கிக் கட்டிக் கொண்டான்
சுதாமாவை, தன் பள்ளித் தோழனை;

     


இருவர் கண்களிலிருந்தும்
கண்ணீர் கொட்டியது;
இவர் கண்ணீரை அவர் துடைக்க,
அவர் கண்ணீரை இவர் துடைக்க,
இதையெல்லாம் கண்டோர் ஆனந்தித்து மகிழ,
கண்ணா உன்னை தரிசிக்க
என்ன பேறு செய்தேன் நான்
என்று சுதாமா கண்ணனை வணங்கித் துதிக்க,
கண்ணன் அவரை அணைத்து
அழைத்துச் சென்று
அவர் கால் சுத்தம் செய்து,
அந்த நீரைத் தன் தலையில்
அள்ளித் தெளித்துக் கொண்டார்;


பள்ளித் தோழர்கள்
படிக்கையில் நடந்த சுவாரஸ்யமான
பல நிகழ்வுகளைப்
பகிர்ந்துகொண்டனர்;
பேசிப் பேசிச் சிரித்துக் கொண்டனர்;

அன்று நடந்தது முதல்
அன்றாட நிகழ்ச்சி வரை
அனைத்தும் பேசினார்;

உலகளந்த உத்தமன்
உயிர்த்தோழன் சுதாமாவை
உணவு உண்ண அழைத்துச் சென்றான்;
வேலை செய்வோர்
வியந்து நோக்க தானே தன் கையால்
உணவு பரிமாறினான்;
உண்ணப் பணிந்தான்;



     

கோசும்பிரி, பச்சடி,
கூட்டு,
அவரை கீரைப் பொரியல்,
கிழங்கு வகைகள்,
முறுக்கு, பஜ்ஜி,
மெது வடை, ஆமை வடை,
தயிர் வடை,
பச்சரிசி சோறு,
பருக இளநீரு,
தக்காளி ரசம்,
மல்லி ரசம்,
பூண்டு ரசம்,
பல வித இனிப்பு வகைகள்,
ரவா லாடு, பேசின் லாடு,
ஜாங்கிரி, ஜிலேபி, போலி,
பால் பாயசம், பருப்புப் பாயசம்,
சேமியாப் பாயாசம்,
ஜவ்வரிசி பாயாசம்,
கெட்டித் தயிரு,
சுண்டக் காய்ச்சிய மாட்டுப் பால்
இன்னும் பல பலகாரங்கள்;

சுதாமா திகைக்கத் திகைக்கப் பரிமாறினான்;
தின்னச் சொல்லி வற்புறுத்தினான்;
போதும் என்றார் சுதாமா,
போதாது இன்னும் போடு என்றான் கண்ணன் ருக்மணியை;

வயிறு வெடித்துவிடும் என்றார்;
உடல் இளைத்திருக்கிறதே என்றான்;
முடியாது கண்ணா என்றார்;
முடியும் தின்ன என்றான்;

                                                                        ( சரித்திரம் தொடரும் )

Monday, October 17, 2011

சுதாமா சரித்திரம் - 4

                                    துவாரகையில் சுதாமா

குருகுலம் விட்டு வந்த பின்
எசொதைக் கண்ணன்
என்னை எப்பொழுதாவது
எண்ணியிருப்பானா ?
என்னை இன்னும்
மறக்காது இருப்பானா ?
அவனைக் காணும் பாக்கியம்
எனக்குக் கிட்டுமா ?
ஏழை என் சிநேகம்
ஏற்புடையதன்று என்று
எண்ணுவானோ ? இன்னும் இதுபோல்
ஏராளமானக் கேள்விகள்
எழுந்தது சுதாமாவின் மனதுள்;
எழுந்த கேள்விகள்
எதற்கும் பதில் தெரியாது,
எல்லாமே கிருஷ்ணார்ப்பணம்
என்றெண்ணியப்படி
தூவரகை வந்தடைந்தார் சுதாமா;

துவாரகை -
அழகான ஒரு நகரம்;
ஆனந்தம் அங்கு எங்கும் உலவும்;

கம்பீரமானக்
கட்டிடங்கள்;
முகிலை முட்டும்
மாடமாளிகைகள்;
உயர்ந்து நிற்கும்
கோபுரங்கள்;

வளம் கொழிக்கும்
வயல்கள்; நற்
குணம் நிறைந்த
மனங்கள்;
ஆடு மாடு பால் தயிர் என்று
எதற்கும் குறையில்லாது
எங்கும் வளம்;

அழகான மாளிகைகளின் இடையே
அரசனின் மாளிகை எது என்றறிவது
அத்தனை சுலபம் இல்லாது போனது;
ஊர் மக்கள்
உதவி செய்தனர்;
உத்தமன் கண்ணன்
உறைவிடம் காண்பித்தனர்;

சுதாமா
அரண்மனையின் உள்ளே நுழைந்தார்,
பரந்தாமனைப்
பார்க்கப்
பலப் பிரதேசத்திலிருந்துப்
புரவலர்கள் பலர் வந்திருப்பதைப்
பார்த்தார், இத்தனைப்
பேர்களுக்கிடையில் இந்த ஏழையைப்
பார்க்கப் பிரியப்படுவானா கண்ணன்,
என்று எண்ணினார்;

நெஞ்சில் கண்ணனை
நினைத்தப்படியே, கண்ணில்
நீர் வந்தபடியிருக்க
தியானத்தில் அமர்ந்தார்
சுதாமா;
சுதாமா வந்ததைச்
சுந்தரன் கண்ணன்
உணர்ந்துக் கொண்டான்;
இக்கணமே அவரை
இங்கே அழைத்துவரத்
தம் பணியாளரைப் பணிந்தான்;

காவலர் வந்தனர்;
கண்ணன் அழைத்ததைச்
சுதாமாவிடம் சொன்னனர்;
கண்ணில் கண்ணீரோடு, நெஞ்சில்
கண்ணனைக் காணும் ஆசையோடு
காவலனோடு சுதாமா
அரண்மனை உள் சென்றார்;
ஆவலோடு கண்ணன்
அங்குக் காத்திருந்தான்;
                                                                        ( சரித்திரம் தொடரும் )

Sunday, October 16, 2011

சுதாமா சரித்திரம் - 3

                                    குசேலாவின் யோசனை

பசியால் வாடியப்
பிள்ளைகளின்
முகம் கண்டு வாடியது
அன்னையின் முகம்;
பொங்கியது துக்கம்;
தோன்றியது ஓர் உபாயம்,
அதற்குத் தேவை கணவனின் சகாயம்;

சுதாமாவிடம் சென்றாள்; ஒரு
சூட்சுமம் சொல்வேன்,
செவிமடிக்க வேண்டுமென்றாள்;
'சொல்' என்றார்,
சொன்னாள்;
'பிரிய பர்த்தா,
பரந்தாமனை ஒருமுறை
பார்த்து வாருங்கள்,
பரந்த
உள்ளம் படைத்தவன், எளியவர்க்கு
உதவும் தயாளன், உங்கள் நண்பன்,
உங்கள் சொல்லுக்கு செவி மடிப்பான்,
உதவி கேட்டால் நாம்
உய்ய வழி சொல்வான்,
உலகுக்கே படி அளப்பவன்
உங்களுக்கு இல்லை என்ற சொல்வானா என்ன ?
உரைத்தாள் பாரியாள்;

அகமுடையாளின் யோசனையை
அவர் ஆமோதித்தாலும்
ஆருயிர் நண்பனிடம்
உதவி கேட்பது
உத்தமம் ஆகாது
என்று எண்ணினார்;
எனினும்
எசொதை மைந்தன் கண்ணனைப்
பார்த்துவிட்டு வர ஒப்புக் கொண்டார்;

அரசன் அவன்,
அவனைக் காணச் செல்கையில்
கையில் என்ன கொண்டு செல்ல ?
எனக் கேட்டார்; உடனே
அவர் மனைவி
அக்கம் பக்க வீடுகளிலிருந்து
அவல் கொஞ்சம் வாங்கி,
அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி,
அவர் கையில் கொடுத்தார்;


பசி ஒரு பக்கம் தள்ள, கண்ணன் மீது
பாசம் ஒரு பக்கம் இழுக்க,
புறப்பட்டார் சுதாமா,
துவாரகை நோக்கி;
கண்ணனோடு தானிருந்த
காலத்தின் நினைவுகளை
மனதில் தேக்கி;

                                                                        ( சரித்திரம் தொடரும் )

Saturday, October 15, 2011

சுதாமா சரித்திரம் - 2

                                    சுதாமா என்ற குசேலர்
சுதாமா -
பணம் பொருள் மேல்
பற்றிலாதவர்;
மனதை அடக்கி
வாழ்பவர்; பணம்
வந்தபோது மகிழார்,
வராதபோது வருந்தார்;

இருப்பதைக் கொண்டு
இல்லறம் செய்வார்;
இதயத்தில் கண்ணனை
இருத்திவைத்து மகிழ்வார்;

அழுக்காடை அணிந்திருப்பார்
அரையில்;
அதைத் துவைத்தால் காயும்வரை
அம்மணமாய் அமர்ந்திருப்பார்
அறையில்;

அணிவது அழுக்காடை என்பதால்
ஆனது அவர் பெயர் 'கு சேலன்*' என்று;
குசேலன் மனைவி குசேலி ஆனாள்;
மண் நிறம் பெரும் நீரானாள்;
அவரோடு ஒன்றி வாழ்ந்தாள்;

தனக்கென ஏதும்
தள்ளிவைத்துக் கொள்ளது
தன் தலைவனுக்கே எல்லாம்
என்றெண்ணி வாழ்ந்தாள்;
தலைவனின் நலம் தவிர வேறேதும்
எண்ணாது வாழ்ந்தாள்;

ஒவ்வொருமுறையும்
சுதாமா தன் துணைவியை அழைப்பார்;
அழைத்த அக்கணத்திலேயே
அவரெதிரில் அவள் வந்து நிற்பாள்;
'ஆர் தெரியுமா உன் ஆளன்,
அந்தப் பரந்தாமனின் பிரியத் தோழன்'
பெருமையாய்ச் சொல்வார்,
பொறுமையாய்க் கேட்பாள்;


நாட்கள் நகர்ந்தது;
பிள்ளைகள் பிறந்தது;
வறுமையும் வளர்ந்தது;
                                                                        ( சரித்திரம் தொடரும் )

___________________________________________________________
*சேலம் என்றால் ஆடை என்று பொருள்

Friday, October 14, 2011

சுதாமா சரித்திரம் - 1

                                    முன்னுரை - என்னுரை

சுதாமா -

சுத்தமான ஒரு ஆத்மா,
பரந்தாமனோடு கூடப் படித்தவர்,
பள்ளித் தோழர்,
பண்பு நிறைந்தவர்,
பிரம்ம நுணுக்கங்களை அறிந்தவர்; ஆனால்
பரம ஏழை;

வேதம் கற்றவர், வாழும்
விதம் கல்லாது போனார்; காசு
பண்ணத் தெரியாது வாழ்ந்தார்;


உண்ண உணவில்லாது,
பிழைக்க வழி தெரியாது
திண்டாடினார்;
அன்போடு அண்டியவரை
அரவணைத்துக் கரைசேர்க்கும்
அந்தக் கண்ணன்
அவல நிலையிலிருக்கும் தன் நண்பனை
அப்படியிருக்க விட்டுவிடுவானா ?
அவன் பால்
அன்பு செய்யாது போய்விடுவானா ?

கஷ்டத்திலிருக்கும் நண்பன் மேல்
கருணை வைத்தான்,
காப்பாற்றினான்;
கரை ஏற்றினான்;
கண்ணன், அந்தக்
கதை இனி அனுதினமும்;

                                                                        ( சரித்திரம் தொடரும் )

Thursday, October 13, 2011

பக்த பிரகலாதன் - 10

                                    நரசிம்மம்

அரியை நம்பும்
அவனை என் வாளால்
அரிவேன் என்றான்;
எடுத்தான் வாளை;

'எங்கே உன் அரி,
அதை இப்பொழுதே அறிவி,
எனக்குத் தெரிவி'
'அப்பா, அரி எங்கும் இருக்கிறான்'
'எங்கும் இருக்கிறான் எனில்
என் கண்ணுக்கு தெரியவில்லையே'
'எனக்குத் தெரிகிறானே அப்பா'
'எனக்குத் தெரியவில்லையடா, அவன் இல்லையடா'
'எனக்குத் தெரிகிறானே அப்பா'
'இங்கு இருக்கிறானா ?'
'ஆம்'
'இந்தத் தூணில் ?'
'அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்'
'பிரகலாதா, இப்பொழுதே இந்தத் தூணிலிருந்து
அந்த உன் அவன் வெளிப்படாவிட்டால்
உடனே உன் தலை துண்டிக்கப்படும்
'

ஆக்ரோஷமாய்க் கத்தினான்
ஆத்திரம் கொண்டுதைத்தான் அத் தூணை;
வாள் எடுத்து வெட்டினான்;

அண்டமே அதிரும்படி ஒரு சத்தம்;
அரண்மனையிலிருந்தோர்
அனைவரும்
அதிர்ந்து சிலையாகும்படி எழுந்த
அந்த ஓசையில்,
தூணை இரண்டாகப் பிளந்து,அதன்
இடையிலிருந்து எழுந்தது
நரசிம்மம்;
சிம்மத் தலை,
மனித உடல்,
தங்கம் போன்று ஜொலிக்கும் கண்கள்,
நேர் நேராய் நிற்கும் முடி,
கூர்மையான பற்கள்,
நீண்ட நாக்கு,
குகை போன்று வாய்,
மலை போன்று உடல்,
எண்ணற்ற கைகள்,
ரோமம் அடர்ந்து வளர்ந்த உடல்;

கண்டோர் கலங்கினர்;
எதிர்த்து போரிட
எவருக்கும் துணிவில்லாது மிரண்டனர்;
தனித் தனியே தள்ளி நின்றனர்;




இரண்யகசிபு சுதாரித்துக்கொண்டான்;
'ஒஹோ !
இவன் தான் மகா விஷ்ணுவா ? என்
இளையவனைக் கொன்றவனா ?
இதோ இப்பொழுதே இவனை கொல்கிறேன்;
இவனைக் கொன்றால் தேவர்களுக்குதவ
வேறு யாரும் இல்லாது போகும், அவர்கள் நிலைமை
வேர் இல்லா மரம் போல் ஆகும்,
இப்பொழுதே என் வாளால்
இவனைக் கொல்கிறேன்' என்று தன்
இடைவாளோடு பாய்ந்தான்
இரண்யகசிபு;

என்னதான் வலிமை
இரண்யகசிபுவிற்கு இருந்தாலும்
நரசிம்மம் முன் அவன்
பாறாங்கல்லை நோக்கிப்
பாய்ந்துவரும்
பறவை போலானான்;
பாம்பைக் கவ்விப் பிடிக்கும்
கருடன் போல்,
அரக்கன்
அகப்பட்டான் நரசிம்மனிடம்;

பலத்த ஓசையுடன்
நரசிம்மர் இரண்யகசிபுவைத் தூக்கினார்;
வாசலில் வந்தமர்ந்தார்;
மடியில் இரண்யகசிபுவை வைத்துக்கொண்டார்;
தன் விரல் நகத்தாலே அவன் உடலைக் கிழித்தார்;
குடலை மாலையாக மாட்டிக்கொண்டார்;

அரண்மனைக் காவலர்கள்
அத்தனையும் கண்டும் ஏதும் செய்ய முடியாது
அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்;

எதிரியைக் கொன்று அவன்
அரியாசனத்தில்
அமர்ந்தார், சுற்றும் முற்றும் பார்த்தார்;
தேவர்கள் பூ மாறிப் பொழிந்து
வாழ்த்தி வணங்கி நின்றனர்;

பிரகலாதன்
பணிந்தான் நரசிம்மரின்
பாதத்தில்;
பரவசமடைந்தார் நரசிம்மர்;

வேண்டுவதென்ன கேள் என்றார் நரசிம்மர்;
உன் சிந்தனை தவிர
வேறேதும் என் நெஞ்சில் நுழையாதிருக்க வேண்டும்
என்றான் பிரகலாதன்;
நரசிம்மர் மனமகிழ்ந்தார்;

உன் புகழை
உணர்ந்து படிப்போர் அனைவருக்கும்
இந்த நரசிம்மமூர்த்தியின்
அருள் கிட்டும் என
ஆசிர்வதித்தார்;

நாராயணன் நாமம்
நாவில் கொள்வோர் வாழ்வில்
நலமே இன்றும்;

வாழ்க வளமுடன் !

                                                                        ( பக்தி முடிந்தது )