Friday, November 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 40


307. பிடித்தது, இணைந்திருந்தோம்
பின் என்னென்னவோ காரணம், பிரிந்து விட்டோம்.
பிரிந்ததும் விலகிச் செல்லாமல் ... புரியவில்லை, இதுதான் விதியா ?
ஒரேயிடத்தில் இருந்துகொண்டு, விலகி விலகி நின்று கொண்டு,
பாதை குறுக்கிடும் போதெல்லாம் சில சமயம் விலகி, பல சமயம் மனதுள் அலறி, முறைத்து, அனல் வார்த்தை வீசி, நெஞ்சைப் பொசுக்கி, ஐயகோ ...
நாலு பேர் சூழ இருக்கையில், உனை வெறுப்பேற்றி, உனக்கெது பிடிக்காதோ அதையே செய்து  ...
மனதுக்குப் பிடித்தவரிடத்தில்தான் கோபம் கொள்ள முடியுமாமே;
ஊடலும் ஒருவிதத் தேடல் தானாமே
மெல்ல மெல்ல உணர்கிறேன், என்னை மாற்றிக் கொள்கிறேன்.
ஒன்றாயிருந்தக் காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் சீண்டி சிரித்து விளையாடியதை எல்லாம் எண்ணி மகிழ்கிறேன்.
சிறுபிள்ளைத்தனமான என் செயல்களைக் குறையாகக் கருதாது ... எனை *மன்னிப்பாயா?*


306. பச்சை பசேல் புல்வெளி
நடுவில் வளைந்து வளர்ந்த ஒற்றை தென்னை மரம்
கீழே ஆறு இல்லை இல்லை நதி
என்ன வித்தியாசம் என்று கேட்க நினைத்து எப்போதும் போல் மௌனமாகவே இருக்கிறார்கள்.
சரி சுருக்கமாய் நீர், மிதக்கும் படகு.
துடுப்பு தவிர படகில் யாருமில்லை
நமக்குத் தனிமை வேண்டுமே.
லேசான தூரல், கொஞ்சம் குளிர்
பகல் முடிந்துப் பதுங்கும் பகலவன்
பின் மாலையில் உலா வந்தபடி நமை நோட்டம் விடும் பிறைநிலா
சரி என்ன தான் சொல்ல வருகிறான் பார்ப்போம் என்றுத் தொடர்ந்து படிக்கும் அவர்கள்.
இன்றாவது ஏதாவது சொல்வாயா என்றுன்னைப் பார்க்கும் நான்.
கைப்பேசியில் வந்த இந்த 'பச்சை பசேல் புல்வெளி' கவிதையைப் படிக்கும் நீ.
கூடவே ஒலிக்கும் பாடல்
*நீ......ல வானம்*


305. ஆரம்பத்திலிருந்தே என்னுளுண்டு இறுக்கம்.
அருகில் யார் வந்தாலுமொரு கலக்கம்.
நெஞ்சம் நிறையக் குழப்பம்.
எதைக் கேட்கவும் தயக்கம்.
என் அதிர்ஷ்டம், கிட்டியதுன் அறிமுகம்
உன்னாலென் உள்ளத்தில் உத்வேகம்.
அசரவைத்தது உன் விவேகம்.
எதைக் கேட்டாலும் விளங்குமாறு நீ வழங்கும் விளக்கம்.
கொஞ்சம் கொஞ்சமாய்க் கூடும் நம் நெருக்கம்.
என் நெஞ்சமுழுதும் உன் ஆதிக்கம்.
இனி நீ சொல்வதே என் மார்க்கம்.
உன்னாலென் வசந்தகாலத் தொடக்கம்
இப்போதெல்லாம் நீ ஏது செய்தாலும் பிடிக்கும்.
ஏனெனில் என் நெஞ்சில் ...
*காதல் மயக்கம்*


304. பார்த்து, சிரித்துப் பேசி, பிடித்துப் போக நெருங்கிப் பழகி;
தெரிந்தும் தெரியாமலும் இடித்து முட்டி முறைத்து விளையாடி;
ஆளிருந்தால் விழியால் பேசி ஆளில்லாப்பொழுது விரலால் பேசி;
முத்தத்திற்கு கணக்கு வைத்து
சத்தமின்றி இருட்டில் பரிமாறி;
புதுப்புது ஆடை பரிசாய்த் தந்து, அணியப் பார்த்து வியந்து வியர்த்து
ஆடை பாரம் என்பதை உணர்ந்து, நீரை வீணாக்காது சேர்ந்து நனைந்து;
இன்னும் தாமதிக்க தாத்தா பாட்டி ஆக நேரிடுமென்று பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்து;
கோவில் தேவஸ்தானமாம் என்றிழுக்க
முதலிரவு தானே கூடாது, இது எங்கட்கு முதலிரவில்லை என்று சொல்லிவிட்டேன்.
சரி சரி உன்னிடம் யாராவது இதுபற்றிக் கேட்டால் ... நீ
*என்ன சொல்லப் போகிறாய் ?*

303. அடி என்னருமைக் காதலி,
நேற்றென் உறக்கத்தில் ...
வாரணங்கள் வரவில்லை,
தோரணங்கள் நாட்டப்படவில்லை,
நாளையா மணநாள் ? தெரியலை.
காளை போன்றுதான் இருக்கேன் ஆனால் பந்தல் புகவில்லை,
மந்திரங்கள் சொல்லப்படவில்லை.
மத்தள ஓசை இல்லை
சங்கொலி முழங்கவில்லை
நானுன் கைத்தலம் பற்றியது நினைவிருக்க, தீ வலம் இல்லை,
அம்மி மிதிக்கவில்லை
அருந்ததி பார்க்கவில்லை,
எனினும் ஏழேழ் பிறவிக்கும் நீயே என் காதலியாய், ஆருயிராய், என் எல்லாமுமாய் இருப்பதாய்க்
*கனா கண்டேனடி ... தோழி*

                              (நன்றி: ஆண்டாள்)

302. எந்தெந்த வேதிப்பொருட்களை எப்படி இணைத்தால் என்ன கிட்டும் என்று உனக்குத் தெரியும்.
கணிதத்தில் எதைக் கேட்டாலும் விடை சொல்லி நிரூபிக்க உனக்குத் தெரியும்.
வார்த்தைகளை வளைத்து வர்ணங்களை வாரியிரைத்து வசீகரமாய்க் கவிதை ஓவியம்  படைக்க உனக்குத் தெரியும்.
மழை பெய்யப்போகும் நேரம், அளவு; பறவைகள் சிறகுகடித்துப் பறக்கக் காரணம் இவையெல்லாம் கூட உனக்குத் தெரியும்.
நாம் பேசுகையில் சிரிக்கையில் நடக்கையில்  உடலினில் எத்தனை தசைகள் இயங்குகிறது என்று உனக்குத் தெரியும்.
சரி, முத்தமிடுகையில்? தெரியாதா?
நீ உணராத இன்னொரு விஷயத்தை உரைக்கவா ?
*சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு*

Wednesday, October 24, 2018

பொன்மாலைப் பொழுதில் 39

301. நிற்காது ஓடு, ஓடிக்கொண்டேயிரு
உன்னோடு வர வேண்டியவர் வருவர்.
நீ வேண்டாமென்றாலும் தொடர்வர்.
வராதாரை வேண்டி அழைத்தாலும் வரார்.
அவர் வரத் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டிருப்பதை உணர்.
நீ எதையும் தேடத் தேவையில்லை.
உனக்கானது வந்து சேரும்.
நீ போகும் பாதை புரிந்து கொண்டு, தக்க சமயத்தில் குறுக்கிடும்.
ஓடு ஓடு ஓடுவது மட்டுமுன் வேலை
நடக்கவேண்டியவை தானே நடந்தேறும்.
வளைவுகளில் வளைந்து விழ வேண்டிய இடத்தில் விழுந்து, எழும் சமயம் வீறுகொண்டெழுந்து விவேகத்தோடு விரைந்து ஓடு.
துன்பம் துடை. இன்பங்களில் இணை. உனக்கேது தடை.
உன் பணி முடிந்தவுடன் உன் பாதை முடியும்; அதுவரை ஆடு ஓடு பாடு
உன்னால் எல்லாம் நலமே
*நானென்ற நதிமுலமே*


300. எது எப்படியிருந்தாலென்ன,
எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தானே மெய்;
விரும்பினாலும், வெறுத்தாலும்,
இரண்டும் இல்லாது தவிர்த்தாலும்,
தனித்திருந்தாலும்,
சில சமயத்தில் ஒட்டி, வேறு பல சமயங்களில்  எட்டி நின்றாலும்,
புரிந்த போதும் புரியாததுபோல் பாவித்தாலும், புரியாத போதும் புரிந்ததாய்ப் பாராட்டினாலும்
இன்றும் இதானா என்று இகழ்ந்தாலும்,
இன்று இதுவா, நாளை எதுவோ என்று எண்ண வைத்தாலும்,
ஏன் எப்படி எதற்கு என்றெதுவும் சொல்லாது மறைத்தாலும்,
எது வரை இது போகும், என்று நிற்குமென்றுத் தெரியாதெனினும் எப்போதும் எல்லாருக்கும்
*வந்தனம் ... என் வந்தனம்*

299. என்ன கேட்டாலும் அசராது விடை தருகிறாளே.
ஏழெட்டு வரிகளில் விளக்கி விவாதிக்கிறாளே.
அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம், ஐரோப்பிய தொழில் நுட்பம் அத்தனையும் அறிந்திருக்கிறாளே.
1917 லிருந்து இன்றைய வரலாறு வரை இயல்பாய் இயம்புகிறாளே.
ம்ம்ம் ... இவளை வேறெப்படி மடக்க?
கடினமான விடயங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவள் எளிமையான கேள்வியில் ஏமாறலாமே,
மலை தடுக்கி யாரும் விழுவதில்லை, கல் தடுக்கி தானே.
சரி சரி ஒரே ஒரு வினா, ஆம் / இல்லை விடை; ஒரு வார்த்தை ஒரு கோடி, தயாரா ?
*சந்திரனைத் தொட்டது யார் ... ஆம்ஸ்ட்ராங்கா ?*

298. சரி, புது ஜிமிக்கி, புரிகிறது
அதை இப்படி தட்டித் தட்டி ஆட்டித் தான் காமிக்கணுமா ?
நான் பார்ப்பதெப்படித் தெரிகிறது? சட்டென்று இங்கு அங்கு இழுத்து மறைத்துக் கொல்கிறாயே.
மல்லிப்பூ சூடிய அன்றாவது முதுகு தெரிய ஜாக்கெட் அணிவதை நிப்பாட் ... சுடிதார் அணிந்து வா என்றர்த்தம்.
ஃபோன் பேசிக்கிட்டே அதென்ன குனிந்து ஒரு கண்ணை இழுத்து மூடி என்னைப் பார்க்குறது?
பூ வாங்கித் தந்தால் கூந்தலில் முடியச்  சொல்வது, சாப்பிடுகையில் ஊட்டிவிடச் சொல்வது, இதெல்லாம் சரி, நாயுடு ஹாலுக்கு நான் எதற்கு?
ஐயோ ... எனைக் கொல்லாதேடி
*ஐயங்காரு வீட்டு அழகே*


297. பார்த்து ஐந்து நாள் ஆகுது.
பழகியதெல்லாம் ஞாபகத்திற்கு வந்து வந்துப் போகுது.
எனை இங்கு ஏங்கித் தவிக்க விட்டு எங்கு சென்றாயோ ?
எப்படி இருக்காயோ, எதற்கிந்தத் திடீர்த் தலைமறைவோ ?
எவ்வாறுனை நான் தேட? யாரென்று யாரேனும் கேட்டால் என்ன சொல்ல ?
ஏதாவதொரு வழியில் தகவல் தா
என்னுயிரே இக்கணமேயருகே வா.
தழுவியக் கரங்களைத் தேடுகிறேன்
படர வழியில்லாதக் கொடியாய் அல்லாடுகிறேன்.
ஊண் உறக்கம் ஏதுமின்றி உன் நினைவால் வாடுகிறேன்.
என்றுனை மீண்டும் காண்பேனோ,
அதுவரை என் நிலை
*அனல் மேலே பனித்துளி*


296. கோபம் தானே, பட்டுக்கொள்.
ஊடல் தானே, ஒதுங்கி நில்.
கவிதை சொல்லமாட்டாயா, சரி
நீ சொல்ல நினைப்பதை நான் சொல்லவா ? கேட்டு ரசி, வா.
*
அள்ள அள்ளக் குறையாத அளவு உன்னுள் கற்பனைகள் சுரக்க வைக்கும் ~அமுத~ கவிதைசுரபி நானல்லவா.
உன் உள்ளத்தினுள் உற்சாகம் உற்பத்தியாகும் உயிர்நாடி நானல்லவா.
விழி திறந்திருக்கையிலேயே உன்னைக் கனவு காண வைப்பவள் நானல்லவா.
உண்ண விடாது உறங்க விடாது
அகிம்சை முறையில் இம்சை செய்பவள் நானல்லவா.
எல்லாம் மறந்து நீ  உறங்க,
உன்னைத் *தாலாட்டும் பூங்காற்று நானல்லவா*

295. காத்திருந்துக் காத்திருந்துக் காலம் கழித்தது போதும்.
கனவுகளில் மட்டும் கைகோர்த்து வாழ்ந்தது போதும்.
உண்ணப் பிடிக்காது உறங்குவதும்
உறங்காது உளறுவதும் போதும்.
எந்த சம்மந்தமும் இல்லாதபோதும்
ஏதும் மறக்காது ஏங்கித் தவித்து இளைத்துக் களைத்தது போதும்.
நெஞ்சில் நிறைந்த ஆனந்தமே
என்றும் என் கூடவேயிருக்கும்
*வசந்தமே, அருகில் வா*

Thursday, October 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 38

293. கண் விழிக்கையில் நெஞ்சில் புத்துணர்ச்சி,
நிம்மதியாய் நானுறங்க யாரேனும் தாலாட்டு பாடினாரோ ?

அருமையான சிற்றுண்டி, ரசித்து உண்கிறேன்.
இத்தனை சுவையாக யார் சமைத்தது ?

என் மனங்கவர் வண்ணத்தில் உடுத்தப் புத்தாடை,
எனக்காகவா ? யார் இதை வாங்கியிருக்கக் கூடும் ?

அதிசயமாயொரு மின்னஞ்சல் இன்று  உன்னிடமிருந்து.
எப்படி எதனால் உன் மனம் இளகியிருக்கும்?

நான் போகும் பாதையில் அற்புதமான சுகந்தம் உணர்கிறேன்
*யாரிந்த சாலையோரம் பூக்கள் வைத்தது ?*


292. கொஞ்ச நாளாகவே நான் உன்பால் ஈர்க்கப்பட்டிருப்பதை உணர்கிறேன்.
அமைதியாய் அகந்தையின்றி அளவோடு  அலவாடுவது கண்டு அதிசயிக்கிறேன்.
விசாலமான உன் சிந்தனையும், விவேகமானப் பேச்சும், நுண்ணறிவும், செயலில் நேர்த்தியும், நியதி பிறழாத நேர்மையும் ... ம்ம்ம் என் நெஞ்சை நெகிழ்த்திட்டாய்.
உபத்திரவமில்லாது உதவுகிறாய், உதவினேன் என்று உரக்க உரைக்காதிருக்கிறாய்.
எனக்கென்னவோ இன்னுமதிகம் சிந்திப்பதும் குழப்பிக் கொள்வதும் வீண் என்றே தோன்றுகிறது.
காலம் போகும் போக்கில், கா...தல் காட்டும் பாதையில் உனைத் தொடரப்போகிறேன்.
புரிந்து விட்டது, இனி நீ இல்லாது வாழ்வது வீணே.
*உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே*.


291. காடு காய்ந்துக் கிடந்ததெல்லாம் பழைய கதையாகட்டும்.
வானம் பார்த்தே வறண்டு போன பூமி இனி வரலாறில் மட்டும்.
ஆழிமழைக் கண்ணன் வரம் தரட்டும்.
ஆண்டாள் பாடியது பாடியபடியே பழிக்கட்டும்.
வானின் கொடை அருள் அனைவர்க்கும் விளங்கட்டும்.
கருமேகங்கள் சூழட்டும்.
இடி இடிக்கட்டும்,
மின்னல் ஜொலிக்கட்டும்
காய்ந்த நிலமெல்லாம் செழிக்கட்டும்.
*மாரி மழை பெய்யாதோ !*

290. தவறு தான்
தப்பாய் யோசித்தது நான் தான்
பெண் புத்தி பின்^புத்தி என்பது சரிதான்
*
எவன் வராது ஏமாற்றி விட்டான் என்று நான் எண்ணினேனோ ...
எவன் என்னை மறந்து விட்டான் என்று நினைத்தேனோ ...
*
எவன் என் உறக்கத்தினுள் புகுந்து கனவு பல விதைத்தானோ ...
எவன் என்னைச் சீண்டி சிரிக்க வைத்து சிநேகித்தானோ ...
எவன் இல்லாது என்னால் வாழ முடியாது என்றாகிப்போனதோ ...
எவனால் நான் பெண்ணாகப் பிறந்ததன் பொருள் புரிந்துக் கொண்டேனோ ...
*
அந்தத் *தங்கமகன் இன்று சிங்க நடைபோட்டு அருகில் அருகில் வந்தான்*

^ பின் - pin - sharp

289. நீ வெட்டி எறியும் நகங்களெல்லாம்
   பிறைநிலவாகும்
நீ வரையும் புள்ளியும் கோடும்
   ஒப்பில்லா ஓவியம்
நீ நடக்கையில் கொலுசு இசைப்பது
   சுகமான ராகம்.
நீ தொட்டு உண்ணத் தருவதெலாம்
   தேவாமிர்தமாகும்.
நீ என்ன எழுதினாலும்
   கவிதைகள்
நீ பேசும் வார்த்தையெல்லாம்
   *சங்கீத ஸ்வரங்கள்*

288. காலையில் இன்று கண் விழிக்கும் போதே நல்ல சகுனமாய்ப் பட்டது.
என்றுமில்லாமல் பச்சைக்கிளி ஒன்று சாளரம் அருகில் வந்து கிச்சித்து, மறவாத உன்னை ஞாபகப்படுத்தியது.
குளித்து வர கோடியம்மன் கோவில் ப்ரசாதமாய், உனக்குப் பிடித்த, அக்காரவடிசல் தயாராயிருந்தது.
நான் எண்ணியதுபோலவே, உன் தங்கை நீ வந்திருப்பதை பறையறிவிக்க நெஞ்சம் பரபரத்தது.
அடுத்த நொடியே உனக்குப் பிடித்த பச்சை நிறத்தில் உடுத்திக் கொண்டேன்.
ஜிமிக்கி உனக்குப் பிடிக்காதே, கழட்டி எறிந்து விட்டுத் தோடு அணிந்து கொண்டேன்.
மறவாது மூக்குத்தி, மல்லிப்பூ;
உதட்டுச் சாயம், சுவையில்லை என்பாய், தவிர்த்து விட்டேன்.
மதியமும் முடிந்து மாலை ஆறு ஆனதும் கோவிலில் உன்னைத் தேடினேன், காணோம்.
ஏழு, எட்டு, இரவு் ஒன்பது, மறந்து விட்டாயா? என்னையா? வீட்டையா?
*நீ வருவாய் என நான் நினைத்தேன்*

287. அடேய் அதிகப்ரசங்கிக் காதலா,
இன்னும்  இன்னும் என்று என்னுள் எப்போதும் எதையாவது தேடாதே.
நீண்டு  நீண்டிருக்கும் விரல்களால் எல்லை மீறி நோண்டாதே.
பூ போன்றிப் பூவை எனை நின் வலு தோள் மார்பினால் முட்டாதே.
காந்தப் பார்வையால் கன்னி நெஞ்சைக் கவர்ந்திழுக்காதே.
இன்று எனை எப்படி இம்சிக்கப் போகிறாயோ என்று ஏங்க விடாதே.
*எங்கெங்கு எங்கெங்கு இன்பம் என்று தேடி எனைக் கொல்லாதே*

286. சின்ன வயதிலெல்லாம் உன்னோடு தான் விளையாடுவேனாம்.
ஒன்றாய்ப் பள்ளி சென்று, விளையாடிக் கொண்டே திரும்புவோமாம்.
ஒருமுறை சைக்கிளில் பின்னால் நான், குரங்கு பெடல் போட்டு, இருவரும் கீழே விழுந்து, இப்போது நினைத்தால் சிரிப்பாயிருக்கு.
அதன்பின் வீடு மாறி, தெரு மாறி, ஊர் மாறி, காலம் மாறி ... ம்ம்ம் நாடு வேறு மாறி,
காலையில் கோலம் போடையில், நீ வந்து நின்றதும் ஒரு உற்சாகம்,
என்னை நீ மறக்கவில்லை என்ற எண்ணம் தந்த பரவசம்.
இது அதுவா ? அதுதானா இது ? என்றக் குழப்பங்கள் ஏதுமின்றி,
எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றிதான் பழகுகிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய் சொல்ல முடியும்,
அது ... உன்னோடு பேசும் போதும் பழகும் போதும் ...
என்னுள் ... ஒரு ... ஒரு ...
*ஒரு வெட்கம் வருதே...வருதே*

Friday, October 12, 2018

பொன்மாலைப் பொழுதில் 37

285. மரம் நிழலும் கனியும் தந்துக் காத்திட
பறவைகள் கைமாறு என்ன செய்யுமோ ?
மழை பெய்துக் குளிர்விக்க
மேகத்திற்கு மண்ணோடு முன்ஜென்ம பந்தமோ?
தேடி வந்ததும் வாரியணைத்துக் கொண்டானே குசேலனை,
அத்தனை  பாக்கியவானோ ?
மல்லிப்பூ மலர்ந்து மணம் வீச
செடி ஏதேனும்  புண்ணியம் செய்திருக்குமோ ?
கண்ணனை மகனாய் வளர்த்திட
யசோதா ஏதும் வரம் பெற்றிருப்பாளோ ?
*நெற்றிக் குங்குமம் நீ சூட்ட
எத்தனைத் தவம் நான் செய்தேனோ ?*


284. ரசிக்கவா ? பாடவா ?
இனிய கானம் கேட்குதே

உண்ணவா ? மறுக்கவா ?
இனிப்பு அதிகமாய் இருக்குதே

சொல்லவா ? எழுதவா ?
நெஞ்சில் கவிதை சுரக்குதே.

சிரிக்கவா ? பேசவா ?
மெல்ல என்னைப் பார்க்கிறாளே.

எடுக்கவா ? தொடுக்கவா ?
*கொடியிலே மல்லியப்பூ மணக்குதே*


283. புரிகிறது,
உனக்குப் பிடித்திருக்கிறது.
நீ சொல்லாமலேயே தெரிகிறது.
உன் இதயம் அவன் பின்னே பறக்குது.
அவன் இருக்குமிடம் தேடி அலையுது.
அவன் உன்னருகே வந்து பேசணும் என்றுன் மனம் அல்லாடுது.
ம்ம்ம் ... சாதிக்கப் பிறந்தவள் நீ.
சாதிக்கப் பிறந்தவர்கள் காதலிக்கக் கூடாதா என்று தானே கேட்க வருகிறாய்?
காதல் ... வலி தரும், உன் வழி மாற்றும், வலிமை குறைக்கும்.
கனவுகள் பிறக்கும், உன் காரியம் கெட்டுப் போகும்.
நன்றாய் யோசி, பின் செயல்படு.
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேலைக்காகாது.
எவ்வழியில் நீ பயணப்பட்டாலும் சங்கடங்களும் சச்சரவுகளும் உனைச் சந்திக்கக் காத்திருக்கும்.
விடாது முயன்றிடு, கலங்காது போராடு, வெற்றி என்றும் உன்னோடு.
என்ன பார்க்கிறாய்? யார் பேசுவது என்றா? நான் தான் *பேசுகிறேன், பேசுகிறேன், உன் இதயம் பேசுகிறேன்*


282. தனித்திருக்கிறாய், எனை விட்டு விலகியிருக்கிறாய்.
ஆனால் எனை நீ மறக்கவுமில்லை, வெறுக்கவுமில்லை.
என்னவோ கோபம், இல்லை ஏக்கம்
வெளியில் சொல்ல முடியாதுத் தவிப்பு.
எனைத் தவிர்த்து மறைந்து வாழ்வதாய் எண்ணி உனை நீ ஏமாற்றிக் கொள்கிறாய்
உன் மனது அறிவேன், அந்த மழைநீர் போல் நீ மிகத் தூய்மையானவன் என்பதையும் அறிவேன்.
உனக்காக நான் காத்திருப்பேன்.
உன் கவலை தீர்க்கக் காரியம் ஆற்றுவேன்
முதல் வேலையாய், மன்னவனே
என் *மன்னவனே நீ போன பாதை தேடிதேடி வருவேன்*


281. நெஞ்சில் காதல்; கொஞ்சிப் பேச முடியாததால் கொஞ்சம் கோபம்;
கையளவு மனதில் கடலளவு சோகம்.
இருந்தும் இல்லை என்றாகிவிட்ட பின் இல்லாமலா போகும்?
அன்பு அறிந்துக்கொள்ளாதபோது அருகில் இருந்தாலென்ன, அயல்நாட்டில் இருந்தாலென்ன ?
காலம் ஆற்றாதா காயம்? நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
புதிய  இடம், புதிய வழி ஏதேனும் கிட்டும் என்றெண்ணி, கொஞ்ச நாள் பறந்து வந்து விட்டேன்.
அன்று அவமானமாய்த் தெரிந்தது, இன்று விலகி நின்று யோசிக்க வெகுமானமாய்த் தெரிந்தது.
எனக்கென்று இருந்தால் யாரால் பறிக்க முடியும் என்று ஆறுதலோடு,
இதோ காத்திருக்கிறேன்,
இமை கூட மூட இயலாது,
இரண்டு நாளாய் உறக்கமில்லாது,
இது இரவு நேரம்
*ந்யுயார்க் நகரம் உறங்கும் நேரம்*


280. எழுத எனக்கு நாட்டமில்லாத போது என் எழுத்தில் சுவையிருக்காது, எழுதியவரை போதும்.
என்ன வரைய என்றேதும் தீர்மானிக்காது வர்ணத்தை மட்டும் வாரியிரைக்க யாருக்கும் புரியாது. நிறுத்திவிட்டேன்.
பழைய அரவிந்த் சாமி கமல் அளவுக்கு இல்லையென்றாலும் பார்க்க சுமாராயிருந்தேன்.
'இருந்தேன்' இறந்த காலம் தானே ?
ஆமாம் எல்லாம் இனி இறந்தகாலம் தான்.
இதுவரை இப்படி இல்லை.
இனியென்ன இருக்கு.
கவிதைகளிலும் கனவுகளிலும், என் எண்ணங்களிலும், இன்றிலிருந்து இல்லாமலிருக்கலாம், ஆனால் *நேற்று அவளிருந்தாள்*


279. கடற்கரையில், அலைகளின் இடையில், ஆனந்தமாய் கைகோர்த்தபடி ஆடுகிறோம்.
பூஞ்சோலையில், பூக்களின் இடையினில், புல் தரையினில், பனிப் போர்வையில் புரண்டு கிடக்கிறோம்.
பத்து யானைகள், இருபது குதிரைகள், படை சூழ, வீரவாள் ஏந்தியபடி, வெள்ளைப் பட்டில் நீ,  தேரிலிருந்துக் குதிக்கிறாய்.
திரையரங்கம், மொக்கைப் படம், ஆளில்லா வரிசை, ஓர இருக்கை, முத்தக் காட்சி, மெல்ல எனைப் பார்க்கிறாய்.
வீடு, தனி அறை, இசையில் தொடங்குதம்மா பாடல், வெளியில் மழை, கையில் டீ, மடியில் நீ, கவிதை சொல்ல, நான் ரசிக்க, பரிசு கேட்க, எதைத் தர எப்படித் தர என்று நான் *கனா காண்கிறேன், கனா காண்கிறேன், கண்ணாளனே*

Tuesday, September 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 36

278. அருகில் யாரோ நிற்பதை உள்ளுணர்வு உணர்த்தியது.
நிமிர்ந்து, மெல்ல தலையைத் திருப்பிப் பார்க்க வைத்தது.
என் நெஞ்சைக் கவர்ந்த, அதே கருநீலவண்ணச் சேலையோ?
மெல்லிய தேகம், நீள் வட்ட முகம்,
பார்க்கையில் காதல் பொங்கும்.
வாயில் சிரிப்பு, பரபரப்பு.
பார்வையிலொரு வசிகரிப்பு.
அருகிலழைக்கும் மல்லிகை மணம்,
ஆழ்ந்து நுகர மோகம் தரும்.
கிட்ட நிற்கையில் கொஞ்சமாய்த் தெரியும் அந்தச் சிற்றிடை,
அச் சிற்றிடையையும் காண விடாது மறைக்கும் அவள் கருங்கூந்தல்.
கை நீட்ட, வெட்கம் படர, கைப்பேசி அலற, ம்ம்ம் ... விடிகாலை 5 மணி,
*யாரது யாரது கனவிலே வந்து போனது?*

277. என்னவென்று சொல்வேனடி,
ஏதும் மறக்க முடியாது தவிக்கிறேன்
ராதே ராதே என்று குழைந்தவன்,
ரகசியமாய்ப் பலமுறை என்னைச் சீண்டி விளையாடியவன்,
எனக்கே எனக்காய் இருப்பான் என்று தானே பழகினேன்.
எல்லாரோடுமிப்படி சுகித்திருப்பான் என்றுத் தெரியாது போயிற்று.
ராமனென்று எண்ண, அவன் காம ரூபன் எனத் தெரியாது போயிற்று.
எல்லாம் புரிந்து, நகர்ந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.
எனினும் ...  எனினும்,
என்ன அவன் இப்பொழுதும் பட்டுப் பீதாம்பரத்தில் தான் திரிகிறானா ?
கொஞ்சம் சிகப்பேறி இருப்பானே ! காதலை என்னுள் கலந்த  அவன்
*ஆசை முகம் மறந்து போச்சே !*

276. பணம் பணம் என்று நாங்கள் பயணப்பட்டது போதும்,
நீயும் எங்கள் வழியிலேயே வந்து விசனப்பட வேண்டாம்.
இருப்பதைக் கொண்டு அளவாய் நிறைவாய் வாழ கற்றுக் கொள்.

பணம் சேர்க்க ஆயிரம் வழி இருக்க, இனிமேலும் இயற்கையை இம்சித்து வாழவேண்டாமே.
பறவை விலங்கு மரம் செடி கொடி இவற்றை நேசி.
நீரையும் நிலத்தையும் கூட, உன் தாய் போலே எண்ணு, மதி.
மண்ணிலும் மனதிலும் மாசு நிறையாது வாழ, இதுவே மதி.

அதிகமான அறிவு ஆணவம் தரும்.
அமைதியான வாழ்வே ஆனந்தம் தரும்.
இயற்கைக்கு அடிபணிந்து வாழ எல்லாம் வளம் பெரும்.

பாரம்பரியப் பாதையில் பயணப்படு
ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடம் தென்படும், போராடு.
நீ செய்யாவிட்டால் வேறார் செய்வார் ?
நம்பிக்கை வைத்திடு,
*உன்னால் முடியும் தம்பி*


275. *ஆயிரம் நிலவே வா* என்று ஆரம்பித்து *வான் நிலா நிலா* என்று தொடர்ந்து *நிலாவே வா* என்று மீண்டும் ஒருமுறை அழைத்து *நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்* என்று விளம்பி *நந்தா என் நிலா* என்று உரிமை கொண்டாடி, *பெண்மானே சங்கீதம் பாடிவா* என்று கூடப் பாடழைத்து,  *கண்மணியே காதல் என்பது* சொல்லித் தந்து, *வண்ணம் கொண்ட வெண்ணிலவே* என வர்ணித்து, *இளைய நிலா பொழி* வது கண்டு பரவசித்து, *நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா* என்று உவமித்து, ஊடல் பொழுதில் *நிலவே முகம் காட்டு* எனக் கெஞ்சி, *சங்கீத மேகம் தேன் சிந்த*  ... இன்னும் இருக்கு சொல்ல, நேரம் பொறுமை இருக்கா கேட்க.

274. பார்க்காதபோது பார்த்து,
பார்க்கையில் இமை தாழ்த்தி, இந்தப் பழக்கமெல்லாம் இல்லை.
சிரித்துப் பேசி சிநேகித்ததில்லை.
கவிதை என்றேதும் என் நெஞ்சில் சுரந்ததில்லை.
காதல் பாட்டுக்களை திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்ததில்லை.
கண் திறந்திருக்கக் கனவு கண்டதில்லை.
உறக்கம் வராது படுக்கையில் புரண்டுக் கிடந்ததில்லை.
சாப்பிட்டேனா, குளித்தேனா என்றக் குழம்பமெல்லாம் இருந்ததில்லை.
எதையோ செய்ய வந்து என்ன செய்யணும் என்பதை மறந்து சிலையாய் நின்றதில்லை.
ஆனால் இதெல்லாம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் இப்போது நெஞ்சிலிருக்கு.
என்னிடம் அனுமதி ஏதும் *கேளாமல் கையிலே வந்தாயே காதலே*

273. நம் வாழ்வில் எல்லாமே இசை.
எல்லா சமயத்திலும் சடங்கிலும் நிறைந்திருப்பது இசை.
உறங்கவும், எழும் போது, எழுச்சிக்கும், எல்லாம் முடிந்துப் போகும் போதும்.
அமைதி நாடும் போதும், அழகாய்ப் பாடும் போதும்.
சிரிக்க இசை, சிந்திக்க உதவும் இசை
குழந்தையின் சிரிப்பிலும் அழுகையிலும் நிறைந்திருக்கும் இன்னிசை.
காதலிலும் காமத்திலும் கலந்திருப்பது இசை.
இவ் உலகில் எல்லாமே *இசையில் தொடங்குதம்மா*

272. கோபங்கொள், பேசாதிராதே
திட்டு, சண்டையிடு, தனியே தவிக்க, தவிர்ப்பது தவறில்லையா?
இரவும் பகலும் அடுத்தடுத்து வருவது இயற்கை
சச்சரவும் சமாதானமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை.
ஊடலும் கூடலும் உறவில் சகஜம்.
அப்படி என்ன கோபமடி உனக்கு? அதற்கு இத்தனை நாளா பேசாதிருப்பாய் ?
சிரித்தால் முறைக்கிறாய், அருகில் வந்துப் பேசினால் அதட்டுகிறாய்.
எசகுபிசகாய் எங்காவது கண்டுவிட்டால் காணாதது போல் நழுவுகிறாயே,
ஒருவேளை பழசு எல்லாம் மறந்துப் போயிருச்சோ?
என் நெஞ்சைக் களவாடிய
*ஏடி கள்ளச்சி, எனை தெரியலியா?* 

Sunday, September 2, 2018

பொன்மாலைப் பொழுதில் 35

271 என்றும் நாம் ஒன்றாயிருக்க வேண்டும்.
நம் வாழ்வில் எல்லாம் நன்றாய் அமைய வேண்டும்.
உன்னால் நான் மலர வேண்டும்.
என்னால் நீ உயர வேண்டும்.
இரவிலென் கனவில் நீ வேண்டும்
பகலிலுன் நினைவில் நான் வேண்டும்.
என் எண்ணங்களெல்லாம் உனைச்சுற்றியிருக்க வேண்டும்.
உன் வெற்றியில் எனக்கொரு பங்கு வேண்டும்.
என் போர்வை நீயாக வேண்டும்.
உன் பார்வை என் மேல் மட்டும் பட  வேண்டும்.
என் துங்கங்களிலெல்லாம் உன் துணை வேண்டும்.
உனக்கு இணையாய் பக்கத்தில் எனக்கோர் இடம் வேண்டும்.
என்றும் எக்கணமும் எனை நீ விட்டு விலகாதிருக்க வேண்டும்.
*ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்*

270. மஞ்சளோ பச்சையோ கையில் கிடைத்த எதையாவது அணிவேன்.
அழகாய்த் தோன்றுவது எப்படி என்று சொல்லித் தந்தது நீ தான்.
எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி வாழ்க்கை செல்லும் வழியில் வாழ்ந்து வந்தேன்.
அத்தனைக்கும் ஆசைபட சத்குரு சொன்னதாக எடுத்துரைத்தது நீ தான்.
பதங்களைப் பகுத்து வரிக்கு ஒன்றாய் எழுதி புதுப்பா என்று்ப் பெயரிட்டேன்.
தேமா புளிமா வெண்பா இலக்கணங்களை விளங்குமாறு விளக்கியது நீ தான்.
கோவில்கள் நடைபயிற்சிக்கு என்று நம்பியிருந்தேன். கோரிக்கைகள் பிரார்த்தனைகள் பற்றியெல்லாம் பாடமெடுத்தது நீ தான்.
ஏதும் தெரியாது இத்தனை நாள் எப்படித்தான் வாழ்ந்திருந்தேனோ ?
*என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் ?*

269. சரி உனக்குப் பிடித்திருக்கிறது என்பது புரிகிறது.
உன் நடவடிக்கைகளிலிருந்து தெளிவாய்த் தெரிகிறது.
இப்படி வாய் திறந்தபடி பார்க்காதே, கட்டுப்படுத்திக்கொள்.
கனவுகளிலெல்லாம் காட்சி தருகிறான், அதானே?
அழகாய், மென்மையாய்ப் பேசுகிறான், ஆணவமில்லாதுப் பழகுகிறான், அதற்கு?
கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள் தான், காணாததைக் கண்டதுபோல் நீ காண்பது ஏன்?
அமைதியாய், அவன் வருகையில் வேறு திசை பார்த்திரு;
ம்ம்ம் ... விழலுக்கு இறைத்த நீராய் எத்தனை முறை எடுத்துச் *சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது*.

268. பல மாதங்களுக்குப் பின் வீட்டிற்கு வர, வாசலில் அரிசி மாவுக் கோலம், பிடித்திருந்தது.
எல்லா இடமும் சுத்தமாய், வீடே ஒருவித நறுமணத்துடன், பிடித்திருந்தது.
பாலைக் காய்ச்சி நுரையோடு சூடாய்க் காபி, பிடித்திருந்தது.
வளையலோசை, மல்லிப்பூ மணம், கலகல சிரிப்போசை எல்லாமே பிடித்திருந்தது.
எல்லாவற்றிலும் தெரியும் புதுமை ஏன் எப்படி என்று விசாரிக்க,
ரேவதி, என் மாமன் மகள், விடுமுறைக்கு வந்திருக்கிறாளாம். பிடித்திருந்தது.
மறைந்து நின்று பார்ப்பதும், ஒற்றை வார்த்தை பதிலும், பிடித்திருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் பேசிப் பழகி, இதெல்லாம் பெரியவர்களின் திட்டமோ என்று சந்தேகித்தோம்.
எந்த எதிர்பார்ப்பும் கொள்ளாது நட்பைத் தொடர்ந்திட முடிவு செய்தோம்.
ஒருவரை ஒருவர் பார்க்கையில் நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்,
*மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்*

267. ஆடு ஓடு அலைந்துத் திரி
பணம் தேடு பாவம் செய்
எல்லாவற்றின் மேலும் ஆசைபடு
கிடைக்காதெனில் ஆத்திரப்படு
கோபம் மோகம் நெஞ்சில் வளர்
சாஸ்திரம் சம்பிரதாயம் மற
உனக்கென்றோர் நியதி கொள்
தேவையெனில் மாற்று.
யாரையும் மதிக்காது வாழ்
பாவமூட்டை சுமக்க முடியாது கதறு
கண்ணீர் விட்டுக் கடவுளை நினை
மீண்டும் பிறந்து அவதியுரு
அடுத்த பிறவியிலாவது, தாமரை இலை மேல் தண்ணீராய் வாழ்.
எல்லாம் மாயை என்பதை உணர்.
மந்திரம் இதுதான், மறவாதிரு
உடம்பொரு குப்பை
*அப்பனும் அம்மையும் கொட்டிவைத்தது*


266. அடி என் ஆருயிர்த் தோழி
அருகில் வந்தொரு சேதி கேளடி.
அரிவை நீ  அறிவாய் தானே.
*
கோட்டைக்குக் காவலாய் கோவில் அருகில் இருக்கும் வாசலில் நிற்பானே,
கையில் ஈட்டியோடு இருட்டின் நிறம் ஒத்து இருப்பானே,
நாம் பந்தாடி விட்டு வருகையில் 'பொங்கு கனங்குழை' பாடினானே,
*
நேற்று, குதிரையில் வந்து, எனை நெருங்கி நிறையப் பேசினான்.
தன் தினப்பணி பற்றி பல செய்தி பரைந்தான்.
தேன் ததியன்னம் கம்பங்கூல் அப்பம் மோர் என்று நிறையத் தின்னக் கிடைக்குமாம்.
அளவாடியபடியே திடீரென்று எனைப் பெண் கேட்க வரலாமா என்று வினவினான்.
தன் கைக்காப்பைக் கழட்டி என் கையில் மாட்டிவிட்டான்.
*
பதறிய படியே நான் விலக,
அவன் எனை விடாதுத் தொடர,
அவ்வமயம் குதிரை கனைக்க,
நான் பயந்து அலர,
'என்னடி' என்றென் தாய் கூச்சலிட,
ம்ம்ம் ... *மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி*

265. மனமொன்றிப் பழகியதெல்லாம் பழைய கதை.
தொட்டுப்பேசி விட்டுக்கொடுத்த தெல்லாம்  வெட்டிப் பேச்சு.
இருவேறு திசையில் பிரிந்து பலகாத தூரம் பயணப்பட்டாச்சி.
கண் பார்த்துப் பேசிய காலமெல்லாம் போயேபோச்சி.
'நல்லாயிருக்கியா?' எனக் கேட்டே நிறைய நாளாச்சி.
விவரமெதையும் சொன்னதில்லை, சுற்றி நடக்குமெதையும் விசாரிக்கவுமில்லை.
இனி ஒட்டமுடியாது என்று புரிந்து விலகியே இருந்த போதிலும்,
மனம் லயித்து எந்த விஷயத்தில் ஈடுபடினும் உடனுன் ஞாபகம் வருகுதே,
*எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா?*

Sunday, August 26, 2018

பொன்மாலைப் பொழுதில் 34


264. அடேய் அழகா, அற்புதா,
தினம் உனைக் காண, அது போதும்.
உன்னோடு கண்டபடி சிரித்துப் பேசிப் பழக, அது போதும்.
நீ செல்லுமிடமெல்லாம் உன் விரல் கோர்த்தப்படியே சுற்றுவது போதும்.
உன் கவிதைகளைப் படிக்கையில் பரவசம் பிறக்குதே, அது போதும்.
எங்குனை இழுத்துச் சென்றாலும் துணையாய் வருவாயே, போதும்.
சாப்பிடுகையில் 'ஊட்டிவிடவா?' என்று கேட்பாயே, அது போதும்.
வஞ்சியை வசீயம் செய்துவிட்ட
*வசீகரா, என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்*

263. வாழ்க்கையிலுண்டு பல இக்கட்டு
அசந்தால் உன் திறமைகள் போகும் திருட்டு
கலங்காது போராடு
அயராது போட்டியிடு
நற்சிந்தனைகளை நெஞ்சில் புகட்டு
நீ முன்னேற முன்னேற தினம் கிட்டும் வசை தோல்வி திட்டு
காதில் கொள்ளாது காரியம் ஆற்றிடு
உன் உழைப்பைக் காட்டு
புது யுக்திகளைக் கடைபிடித்திடு
பாராட்டப் பார்க்கப் பணிந்திடு
வெற்றி கிட்டும், மகிழ்ந்திடு
கர்வம் கொள்ளாதிருந்திடு
நெஞ்சைக் கொஞ்சம் அமைதிப்படுத்திடு
காது குளிர மெல்ஸிசைப் பாட்டு
ஒருவகையில் இதுவும் தாலாட்டு
இதோ இன்று *நிலவே முகம் காட்டு*


262 திடீரென்றெனக்குப் பொறையேற
ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வந்தாய், மகிழ்ச்சி.
நூலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு சில புத்தகங்கள் கேட்க,
தேடி எடுத்துத் தந்தாய், மகிழ்ச்சி.
நானெது சொல்லினும்
சிரித்த முகத்தோடு நீ  செய்வது கண்டு பெருமகிழ்ச்சி.
*
ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்க,
மெதுவாய் நீ என்னை நெருங்க
'முத்தம் தரணுமா ?' என்று நான் வினவ,
'மதி தெரிய, மழை பொழிய, மடியில் நீ கிடக்க ...' கவிதை மட்டும் பாடிவிட்டுப் போய்விட்டாய்.
*
இதோ ... இன்று ...
காத்திருக்கிறேன், ஏமாற்றாது வா.
எனை மீண்டும் மகிழ்ச்சியில் திழைத்திடச் செய், வா.
நீ சொன்னபடியே, இது மதி தெரியும்
*மாலை நேரம், மழை தூறும் காலம்*


261. இன்றென்ன சொல்ல என்றெண்ண
எதுகை மோனையோடு ஏழெட்டு வரிகள் எடுத்தியம்பினாய்.
எவ்வழி என்வழி என்று நான் தேடிக்கிடக்க
இவ்வழி நல்வழி என்று நீ அழைத்துச் சென்றாய்.
சோகத்தில் நான் துவண்டிருக்க
தோள் தந்தென் துயர் துடைத்தாய்.
தாகத்தில் தவித்தேன், பருக பானகம் தந்தாய்.
*நிழல் வேண்டி நின்றேன், மேகமென*

260. இதுவரை என் மனம் இப்படி சஞ்சலப்பட்டதில்லை.
பார்க்குமெல்லாவற்றிலுமொரு பரவசம் பிறந்ததில்லை.
உள்ளத்திலொரு புத்துணர்ச்சி, இதுவரை  உணர்ந்ததில்லை.
கனவுகள் கருப்பு வெள்ளையில் மட்டும் என்று படித்திருக்க,
என்னுறக்கத்தின் உட்புகுந்து உள்ளத்துணர்வுகளில் வர்ணமிறைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறேன்.
இசையிலார்வம் இருக்கெனினும்
ஸ்வர வரிசையிலிதுவரை சிந்தித்ததில்லை.
எதனாலிப்படியொரு மாற்றம் ?
இதெப்படி நிகழ்ந்திருக்குமென்று  யோசித்திருக்க,
இத்தனைக்கும் காரணமான அந்த *ஒரு பொன்மானை நான் காண ... தகதிமிதோம்*

259. தவறு தான், ஒத்துக்கொள்கிறேன்.
வேலை வேலை என்றோடி தேவையற்ற செயல் பல செய்தது தவறு தான்.
பணம் தேடும் பயணத்தில் பாவையுன் குணம்  மறந்துத் திரிந்தது தவறு தான்.
கன்னியுன் கட்டழகை வர்ணித்தக் காதல் வார்த்தைகள் காலப்போக்கில் காற்றில் கரையவிட்டது தவறு தான்.
சீற்றத்தில் சுடுசொற்கள் பலவற்றை சிந்திவிட்டு விலகி நின்றது தவறு தான்.
ஆப்பக்குழி கன்னத்தில் அதரம் பதித்தது மறந்து அறைந்தது தவறு தான்.
எல்லாமே என் தவறு தான், ஏற்றுக் கொள்கிறேன், என்னுயிரே ...
*ஆருயிரே எனை மன்னிப்பாயா ?*

258. பிடித்திருக்கு என்றால் ... அதற்குப் பத்து காரணங்கள் சொல்லி கன்னி மனதைக் குழப்பணுமா என்ன ? சண்டாளா;

வேதியல் மாற்றங்களை விலாவாரியாய் படித்திருக்க, இன்று கணக்குப் பரிட்சையாம். படுபாவி படுபாவி.

வெயிலில் சிரித்துக்கொண்டே தனியே நடுவீதியில் நின்றிருந்தேனாம், வத்தி வைத்து விட்டார்கள். இதற்கும் நீ தானடா காரணம்.

இன்று காலையில் 'குட்மார்னிங் அங்கிள்' என்று சொல்ல, தூக்கக் கலக்கம் என்று போகவேண்டியது தானே, அப்பப்பா காதில் ரத்தம் வரவர அறிவுரை, அப்பாவை அங்கிள் என்று அழைத்ததற்கு.

அடுத்து நீ என்னை என்ன செய்ய வைக்கப் போகிறாய் என்று பயந்தபடியே இருக்கிறேன், புரியாமலேயே எனைப் படுத்தி எடுக்கும்  இது, *என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?*

257. கந்தர்வ விவாகம் செய்து கொண்டு 'இல்லை' என்று பொய் சொல்லவில்லையா துஷ்யந்தன்;

'தலைமுடியைக் கண்டேன், தாளம்பூவே சாட்சி' என்று பொய் சொல்லவில்லையா நான்முகன்;

தான் க்ஷத்ரியன் இல்லை என்று பொய்  சொல்லி வில் வித்தை கற்கவில்லையா  கர்ணன்;

மண்ணை நான் திங்கவில்லை என்று பொய் சொல்லவில்லையா மாயக் கண்ணன்;

நீ மட்டும் தயங்குவதேனடி பெண்ணே?
உன் காதலன் நான் தானென்று
*ஒரு பொய்யாவது சொல் கண்ணே*