Saturday, June 30, 2012

அரிச்சந்திரன் - 8

                                    காசியில் ஒரு காட்டில்

அடர்ந்த காடு
தளர்ந்த நடை
கஷ்டப்பட்டு கடக்கிறார்கள்
பசியால் மகன் வாடுகிறான்,
நீர் வேண்டி மனைவி வேண்டுகிறாள்;
விசுவாமித்ரரின் சீடன் தனக்கு
பணிவிடை செய்ய ஆணை இடுகிறான்;
அல்லல் படுகிறான் அரிச்சந்திரன்;

'பொருள் தர முடியாதெனச் சொல்,
உடன் நான் திரும்பிச் செல்கிறேன்,
உனை இக்கணமே விட்டு
விலகிச் செல்கிறேன்;
உன் கஷ்டம் உன்னோடு,
நானேன் கஷ்டப்பட வேண்டும் உன்னோடு,
விளக்கம் இருக்கா, சொல்லிடு ?'

பொறுத்துக்கொள்ளக் கெஞ்சினான் அரிச்சந்திரன்;
‘போதாது இன்னும் உண்ணக் கொடு,
குடிக்க நீர் கொடு’
எல்லாம் எனக்குக் கொடு,
கூடவே வந்து
கேடு செய்தான்,
தொல்லை தந்தான்

மனைவி தன் தாகம் பொறுத்துக் கொண்டாள்.
மகன் தன் பசி மறந்துத் தொடர்ந்தான்.

காட்டு வழி வந்தவர்,
காசி அடைந்தனர்;
தம் கஷ்டங்கள் தீர
மனமுருகி வேண்டினர்;
'காசி விஸ்வநாதா,
எம்மைக் காத்திடுவாய்.
கெடுதி எது வந்த போதிடினும்
தர்ம நெறி தவறாது வாழ வழி செய்வாய்.
எப்பிறப்பிலும்
எப்பாவம் செய்திட்ட போதிடினும்
எமை மன்னித்து அருள்வாய்.
சொன்ன சொல் தவறாது வாழ
சொக்கநாதா அருள் புரிவாய்.
ஒன்றுமறியா பாலன்
எம்மோடு துயரடைகிறான்.
அவனுக்கு எத்துயரும் நேராது
தயை செய்திடுவாய்'.

அப்பொழுது சந்திரமதி
ஒரு யோசனை சொன்னாள்;
தன்னையும் பிள்ளையையும்
அடிமையாய் யாரிடமாவுது
விற்றுவிடச் சொன்னாள்;
விற்று பெற்ற பொருள் கொண்டு
விஸ்வாமித்திரர்க்குத் தந்த சொல் காத்திட
யோசனை சொன்னாள்;

அந்த யோசனை கேட்டு
அரிச்சந்திரன் அதிர்ச்சி அடைகிறான்;
அரற்றுகிறான்;
கண்ணீர் விட்டுக் கதறுகிறான்;

                                                                        ( தொடரும் )

Thursday, June 28, 2012

அரிச்சந்திரன் - 7

அடுத்த நாள் காலை,
அயோத்தி அரண்மனை,
அரிச்சந்திரன் வந்தான்,
ஏனைய அமைச்சர்களும் வந்தனர்,
விஸ்வாமித்திரர் வந்தார்,
அவர்தம் சீடர்களும் வந்தனர்,
நாட்டை தாரை வார்த்துக் கொடுக்கத் தயாரானான்
அரிச்சந்திரன்;

'அவசரப்பட்டு முடிவெடுக்காதே,
அப்புறம் சங்கடப்படாதே'
விஸ்வாமித்திரர் சொன்னார்;

'முனிவரே, சொன்ன சொல் மாற மாட்டேன்;
நாடு மக்கள் அரண்மனை அதைச் சேர்ந்த சொத்து செல்வம்
பொன் பொருள் எல்லாம் இனி உமக்குச் சொந்தம்,
இவற்றோடு எமக்கினி
இல்லை பந்தம்';

'நீ உன் மனைவி மகன் எல்லோரும்
அணிந்திருக்கு ஆடையையும்
அவிழ்த்து விட்டு,
துறவாடை தரித்து
தூரச் செல்லுங்கள்'

'அப்படியே செய்கிறேன், ஆணைப்படி
உமது சொல்படி';

தன் குடும்பத்தாரோடு
தனியே நடக்கத் தொடங்கினான்
தலைவன்;

'அரிச்சந்திரா நில்'
அழைத்தார் முனிவர்;
'யாகம் செய்ய
எனக்குத் தருவதாய் வாக்களித்தப்
பொருள் எங்கே ? - அதைத்
தந்து விட்டுச் செல்'

'சுவாமி,
அப்பொருள் மிக பத்திரமாய்
அரண்மனைக் கருவூலத்தில் உள்ளது;
எடுத்து வரவா இப்பொழுது ?'

'யாருடைய கருவூலத்தில்?'

'என் ... மன்னிக்கவும், தங்களுடைய கருவூலத்தில்'

'என் கருவூலம் பணத்தை
எனக்கு தருவது தான் தானமா ?
இது தான் நீ கற்ற தர்மமா ?'

'....'

'எனக்குத் தருவதாய் சொன்னப் பொருளை
எப்படித் தரப்போகிறாய் ?
எப்பொழுது தரப்போகிறாய் ?'

'சுவாமி, எனக்குக் கொஞ்சம் தவணை தர வேண்டும்,
தங்கள் பொருளைத் தந்து விடுகிறேன்,
தயை காட்ட வேண்டும்'

'ம்ம்ம்ம் ... சரி என் சீடனை உன்னோடு அழைத்துச் செல்,
உனக்கு 15 நாள் தவணை,
அதற்குள் எனது பொருளை ஒப்படைத்துவிடு,
என் பொருள் என்னிடம் வரும் வரை,
எனது சீடன் உன்னுடன் இருப்பான் தவறில்லை,
அவனுக்கு ஒரு குறையும் நேராது காப்பது உன் கடமை'

'அப்படியே ஆகட்டும்'

'அரிச்சந்திரா,
ஒரு சொல் மாற்றிச் சொல்,
பொருள் தருவதாய் நான் சொல்லவில்லை,
என்று மட்டும் சொல்,
மாறிடும் உன் நிலைமை,
சம்மதமா சொல், உன்
சங்கடம் மாற்றுவேன் ஒரு பொழுதில்'

'சுவாமி, சத்தியம் தருமம் வீழ வாழ மாட்டேன்,
சொன்ன சொல் தவற மாட்டேன்'

'சரி, நீ செல்க,
15 நாளில் பொருள் திருப்பித் தருக,
என் சீடனை அதுவரை உன்னோடு கொள்க,
ஆசி'

அரிச்சந்திரன் அரண்மனை விட்டுச் செல்கிறான்,
அவனைத் தொடர்ந்து அவன் குடும்பம்,
அவர்களைத் தொடர்ந்து விஸ்வாமித்திரரின் சீடன்,
அதன் பின் அமைச்சர்கள், காவலாட்கள்,
அவர்களைத் தொடர்ந்து
அயோத்தி நகரத்து மக்கள்,
கலங்கியக் கண்ணோடு,
கனத்த நெஞ்சோடு;

                                                                        ( தொடரும் )

Tuesday, June 26, 2012

அரிச்சந்திரன் - 6

                                    விஸ்வாமித்ரர் அரசை அபகரித்தல்

விஸ்வாமித்ரர் வந்தார்; தன் கூடவே
வஞ்சியர் இருவரையும் அழைத்து வந்தார்;
பொய்க் கோபத்தோடு
புரவலனிடம் பேசினார்;
'அடேய் அரிச்சந்திரா,
அடுக்குமா நீ செய்த காரியம் ?
அரசனுக்கு இது தகுமா ?
அழகியர் இருவரையும் ஆட வைத்து, பின்
அவர் யாசிப்பதை தர மறுப்பது நியாயமா ? தர்மமா ?
அணுவளவும் வழுவா செங்கோல் ஆட்சி இதுவா ?

இவர்களை அவமதிப்பது
இவர்கள் கற்ற கலையை அவமதிப்பதாகும்;
இங்ஙனம் இவர்கள் கற்ற கலையைப்
பயிற்றுவித்த என்னை அவமதிப்பதாகும்;
இது நியாயமாகும் ?'

அடுக்கடுக்காய்க் கேள்விக்கணை வீசினார் முனிவர்;
அவர் முடிக்கும் மட்டும் காத்திருந்த அரசன்,
அடுத்து தன் நியாயத்தை ஓதினான்;
அப்பெண்டீர் கேட்டது அதர்மம் என்றான்;
அவ்வழியில் தான் செல்வது அடாது என்றான்;
அவரையே தர்மப்படி ஒரு வழி சொல்லப் பணிந்தான்;
அங்ஙனம் அவர் சொல்வதை
அரசன் தான் செய்வதாய் ஒப்பினான்;

'அரிச்சந்திரா,
அரசனென்ற ஆணவம் உன்னை
ஆட்டிவிக்கிறது;
அதை நான் போக்குகிறேன்;
அதற்கு உன் அரசை
அடியேனுக்கு தாரை வார்த்துக் கொடு'

'அவ்வாறே தர
ஆவலாய் இருக்கிறேன்
அருள்கூர்ந்து பெற்றுக்கொள்ளவும்'

அரசன் சொன்னதைக் கேட்டு
அந்தணர்
ஆச்சரியம் அடைந்தாலும்
அதை வெளிக்காட்டாது,
'அந்தி வேளை இது,
அடுத்த நாள் காலை
அரண்மனை வருகிறேன்,
அயோத்தியை என்னிடம் தந்துவிட்டு
அப்படியே நீ சென்று விடு.'

ஆணையிட்டார்,
அரசன் சம்மதித்தான்;

நாட்டை ஆளப்போகும் முனிவன்
காட்டு வழி சென்றான்;
காட்டில் வாழப்போகும் அரசன்
நாட்டு வழி சென்றான்;

                                                                        ( தொடரும் )

Sunday, June 24, 2012

அரிச்சந்திரன் - 5

                                    காட்டில் வேட்டை

விஸ்வாமித்ரர் வந்து,
யாகம் செய்ய பொருள் வேண்ட,
அரசனும் அதைத்தருவதாய்
வாக்குத் தர,
வாக்கு பெற்றுக்கொண்டு
வந்த வழி முனிவர் திரும்ப,
அதனைத் தொடர்ந்து
அரசனைக் காண
அயோத்தி மக்கள் வர,
தங்கள் வயலை
சேதப்படுத்தும் மிருகங்களை
வேட்டையாட அவர்கள் உதவி கேட்க,
அரசன் கிளம்பினான் வேட்டைக்கு;
தன் மக்களின் உதவிக்கு;

வேட்டை நடந்தது;
வயலை நாசமாக்கும்
விலங்கினங்கள் வீழ்த்தப்பட்டது;
வேட்டையாடி களைத்தவர்களுக்கு
ஓய்வு தேவைப்பட்டது;
அரசரும் மற்றவர்களும்
ஆங்காங்கே ஓய்வெடுத்தனர்;
அப்பொழுது இரு மங்கையர்
அரசனைக் காண வந்தனர்;
அழகாய் நாட்டியம் ஆடுவோம்,
அந்தக் குயிலைப் போல் பாடுவோம்,
அதைக் கண்டு கழிக்க வேண்டும் தாங்கள்,
தாங்கள் புகழ்ந்தால்
மகிழ்வோமே நாங்கள்;

ஆணை வந்தது;
ஆட்டம் நடந்தது;
ஆடினார், பாடினர்
அழகு காட்டு
அதிசயக்க வைத்தனர்;
அரசன் மகிழ்ந்தான்,
அழகாய் முத்து மாலை
அன்புப் பரிசாய்த் தந்தான்;

'ஏராளமாய்ப் பொன் பொருள்
இருக்கு எங்களிடம்,
எனவே இதை வைத்துக்கொள்ளும்
தாங்கள் தங்களிடம்'
என்று சொல்ல,

வேறென்ன வேண்டும் என வினவ

'வேந்தே தங்கள் செங்கோல் எங்கட்கு
வேண்டும்' எனச் சொல்ல,
'தலைவன் தன் செங்கோலையும்,
தலை மகுடத்தையும்
தானமாய்த் தருவது
சத்திய நெறிக்கு ஒவ்வாது,
வேறேதும் கேளுங்கள்' என்றான்.

'சரி எங்களை
விவாகம் செய்து கொள்ளுங்கள்' என்றனர்;
'வஞ்சியரே, நான் ஏகபத்னி விரதம் கடைபிடிப்பவன்,
இன்னொரு மணம் செய்ய மனம் ஒப்பாதவன்,
வேறேதும் ... '

'மன்னா,
எங்களை ஆட வைத்து,
பாட வைத்து,
பின் நாங்கள் கேட்டதை
கொடுக்க மறுக்கும் தங்களைக்
கேள்வி கேட்க ஒரு
துணையோடு வருவோம்'

எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து
விரைந்தனர்;

அடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம்
அங்கே வந்தார் விசுவாமித்திரர்
அந்தப் பெண்களோடு,
கண்ணில் கோபத்தோடு,
நெஞ்சில் வஞ்சத்தோடு;

                                                                        ( தொடரும் )

Thursday, June 21, 2012

அரிச்சந்திரன் - 4

                                    விஸ்வாமித்ரர் அரிச்சந்திரன் சந்திப்பு

கனவுகளால்
களைத்துப் போனாலும்
அரிச்சந்திரன்
அரசவையில்
அமைச்சர்களுடன்
ஆலோசித்து
அன்றைய கடமைகளை
ஆற்றிவந்தான்;
அப்பொழுது
அங்கு வந்தார்
முனிவர் விஸ்வாமித்திரர்;
மன்னவன் வரவேற்றான்;
வணங்கினான்;
முனிவருக்கு பணிவிடை செய்தான்;
உட்கார ஆசனம்,
உண்ண அன்னம்
எல்லாம் ஏற்பாடாயிற்று;
வந்த வேலை என்ன என்று வினவினான்,
தன்னால் ஏதும்
தொண்டு செய்ய முடிந்தால் மகிழ்வேன் என்றுரைத்தான்;

'அரிச்சந்திரா,
அயோத்தியின் மன்னா,
யாம் யாகம் ஒன்று செய்யவிருப்பதால்,
எமக்குப் பொருளுதவி வேண்டும்,
எனவே உம்மை நாடி வந்தோம்;
உதவி செய்வாய் என்று நம்புகிறோம்;
என்றுரைத்தார்';

'சுவாமி,
தாங்கள் சொல்லி அனுப்பினால் போதுமே,
இந்த நாடே தங்கள் பின்னே நிற்குமே,
எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்;
எல்லாமே தங்களுக்குத்தான்'

சொல்லி நின்றான் மன்னன்;
இவ்வளவு நல்லவனான
இவனையா சோதிப்பது
என்று எண்ணாது
எள்ளி நகைத்தப்படி தள்ளி நின்றார் முனிவர்;

'மன்னா,
மகிழ்ச்சி;
பொன் எனக்கு இப்பொழுது வேண்டாம்;
பத்திரமாய் என் பொன் உன்வசம் இருக்கட்டும்;
யாகம் பொருட்டு வேறு சில வேலை
இருக்கு;
அவற்றை முடித்து விட்டு வருகிறேன்;
வந்து உன்னிடம் பொன் வாங்கிச் செல்கிறேன்;
இப்பொழுது கிளம்புகிறேன்'
என்று சொல்லிப் புறப்பட்டார்
ஒரு புயலை உருவாக்கி,
அது ஏற்படுத்தும் சேதம் எதுவும் அறியாது
அவருக்கு விடை கொடுத்தான் தலை வணங்கி;

                                                                        ( தொடரும் )

Tuesday, June 19, 2012

அரிச்சந்திரன் - 3

                                    அரிச்சந்திரன் சந்திரமதி

சக்கரவர்த்தி அரிச்சந்திரன் தன் மனைவி
சந்திரமதியுடன், கூடவே
சாந்தமே உருவான புத்திரனுடன்
சயனித்திருக்கிறான்.
விடிகாலைப் பொழுது;
விடிய இன்னும் நேரம் இருக்குப் பொழுது
அரிச்சந்திரன் ஒரு கனவு கண்டான்.
அதிர்ச்சியில் விழித்துக்கொண்டான்;
இருள் போக்கும் வெள்ளி
தன் கவலை தீர வழி காட்டும்
என எண்ணிக் காத்துக் கிடந்தான்;
கனவின் காரணம் தேடிக் கிடந்தான்;
முகம் வாடிக் கிடந்தான்;

அவ்வமயம்
அரிச்சந்திரன்
அன்பு மனைவியும் கனவொன்று காண,
அடுத்தகணமே அஞ்சி
அலறினாள்;
கணவன் தேற்றினான்;
கண்ட கனவு யாது என்று வினவினான்;

"காவலா, தங்களைக்
கருப்பு நிறப் பாம்பு ஒன்று
சுற்றிக் கொள்கிறது,
சிம்மாசனத்திலிருந்து உங்களை அது
கீழே தள்ளுகிறது;
தப்பிக்க முடியாது
தவிக்கிறீர்கள் நீங்கள்;
பின் ஒருவாறு அந்தப்
பாம்பைக் கொன்று
எழுந்து வருகிறீர்கள்;
என்ன ஒரு கொடுமையானக் கனவு"

நடுநடுங்கியே
நவின்றாள் தலைவி;
நல்லதே நடக்கும், நம்பி இரு என்று
ஆசுவாசப்படுத்தினான்
நாடாளும் தலைவன்;

மேலும் தொடர்ந்து பேசினான்;
‘கண்மணி
கலங்காதே,
அந்த ஈஸ்வரன் கிருபையால்
நமக்கு ஒரு ஆபத்தும் நேராதே;
அவனின்றி ஒரு அணுவும் அசையாதே;

நானும் கண்டேன் ஒரு சொப்பனம்;
அதைக் கண்டது முதல் காணவில்லை சயனம்;
நமைக் காக்கும் சிவம்;
அவனே இதற்கு நிவாரணம்';

தாங்கள் கண்ட கனவு யாதென்று
வினவினாள் தமயந்தி;
விளக்கினான் அவள் தலைவன்;

தமயந்தி,
என் கனவில்
உன்னைத் தவிர இரண்டு மனைவியர் எனக்கு;
அவர்களில் ஒருவரை
அரக்கன் ஒருவன்
அபகரிக்கிறான்;
அதையும் தொடர்ந்து
அன்பே நீ என்னை விட்டு பிரிய நேர்கிறது;
இன்னொருத்தி பிரியாது என்
இணையாய் இருக்கிறாள்;
இவ்வளவு இக்கட்டுக்குப் பின்
பிரிந்த இருவரையும் ஒருவாறு
மீண்டும் இணைய முடிகிறது;

சொல்லி முடித்தான் அயோத்தி அரசன்;
சொல்ல முடியாத் துயரம் கொண்டாள் அரசி;
அரசனை விட்டு
அணுவளவும் இதுவரை பிரியாத கற்புக்கரசி;

                                                                        ( தொடரும் )

Sunday, June 17, 2012

அரிச்சந்திரன் - 2

                                    நாரதரும் விஸ்வாமித்ரரும்

கலகம் நிகழும் இடத்தில்
இருப்பது தானே
கழகப் பிரியர் நாரதரின் விருப்பம்;
நாரதரும் வந்தார்;
விஸ்வாமித்ரரைக் கண்டார்;
யாது செய்தி என்று வினவினார்;
விஸ்வாமித்ரர் விவரித்தார்;
வினை முடிக்க துணை புரியக் கேட்டார்;
அரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைப்பது
முடியாத காரியம் என்றும்,
அதர்மப் பாதையில்
அரிச்சந்திரன் எந்நாளும் செல்லான் என்றும்
எடுத்துரைத்தார் நாரதர்;

உண்மையை வரவழைப்பது அரிது;
பொய் சொல்ல வைப்பது எளிது;
எனக்குத் துணைபுரி,
உனக்கு நான் வேண்டும்போது உதவி புரிவேன், இதை அறி;
உரைத்தார்
அரசனாய் இருந்து முனிவனாய் மாறியவர்.
ஓர் உபாயம் தந்தார்
முனிவனாகவே வாழ்பவர்;

"ஏதாவது யாகம் செய்வதாய்ச் சொல்லி
பொருள் கேளும்,
தருவதாய் வாக்குத் தருவான்;
பின் அவன் வாக்கு தவறும்படி,
இல்லை என்று சொல்லுப்படி
பெரும் பொருள் படை எல்லாம் கேளும்;
இத்தோடு ஏதும் உபாயம் செய்து
அவனைச் சத்தியம் தவறச் செய்யும்;

இருந்தும் எனக்கு நம்பிக்கை இல்லை,
அவன் பெருந்தன்மைக்கு வானமே எல்லை;
இல்லை என்று சொல்ல அவன் நா
எழுந்ததேயில்லை;
தந்த வாக்கை
தலை விற்றாவது
நிறைவேற்றுவான் அரிச்சந்திரன்";

சொல்லி முடித்துக் கிளம்பினார் நாரதர்;
தான் சொன்ன படி செய்து முடிக்கக்
கிளம்பினார் விஸ்வாமித்திரர்;


                                                                        ( தொடரும் )

Thursday, June 14, 2012

அரிச்சந்திரன் - 1

                                    முன்னுரை


          


அரிச்சந்திரன்,
அயோத்யா நாட்டு
அரசன்;
அறநெறியில் வாழ்பவன்;
சத்ய விரதம்
பூண்டவன்;
சத்தியம் தர்மம்
பிறழாது வாழ்பவன்;
உண்மை ஒன்றே
உரைப்பவன்;
உண்மை அற்றவற்றை
உரைக்காதவன்;
சொன்ன சொல் தவறாதவன்;

அற வழியில் நடப்பவர்க்கு
ஆயிரம் சோதனை வரும்;
அரிச்சந்திரனுக்கும்
அதுபோல் சோதனை வந்தது;
அவதி வேதனை
அவனை நாடி வந்தது;
விஸ்வாமித்ர முனி
வேடத்தில் வந்தது;

                                    தேவேந்திரன் திருச்சபை

ஒரு நாள்
இந்திரனும் மற்ற தேவர்களும்
சபையில் கூடி இருக்கையில்,
விஸ்வாமித்ரர் மற்றும்
வசிஷ்டர் ஆகியோரும் அங்கு இருக்கையில்,
வசிஷ்டர்,
தன் சிஷ்யன்
அரிச்சந்திரன்
சத்ய தர்மம் பிறழாது வாழ்பவன்
என்று சொல்ல,
அவனை சோதித்து
அறவழி தவிர்க்க வைப்பேன்,
அப்படி இல்லாது போனால்
என் தவ வலிமையில் பாதி தருவேன்
என விஸ்வாமித்ரர் சூளுரைக்க,
இப்படியாக ஏற்பட்டது
அரிச்சந்திரனுக்கு இக்கட்டு;
இதற்கென குறிக்கப்பட்ட காலம்
ஒரு ஆண்டு;

இது அரிச்சந்திரன் மேலுள்ள கோபத்தால்
ஏற்பட்டதன்று;
வசிஷ்டரே உம்முடைய கர்வத்தை அடக்கும் பொருட்டே
ஏற்பட்டது
என உரைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தார்
விஸ்வாமித்ரர்.

                                                                        ( தொடரும் )

Friday, June 1, 2012

முருகா



     

முருகா ! முருகா ! முருகா ! - - எமக்குத்
   துணையாய் வருவாய் அருள்வாய்.
கந்தா கடம்பா கதிர்வேலா - எம்
   கவலைகளைப் போக்கி நீ அருள்வாய்.

ஆறுமுகனே -
அபயம் அளிப்பவனே
அழகனே
அண்டம் காத்திடத் துணை புரிபவனே,
சண்முகா - எம்
சங்கடங்களை தீர்த்திட வா !

பார்வதியின் புத்திரனே - எம்
பாவங்களைப் போக்கி அருள்பவனே,
சிக்கல் சிங்காரவேலவா,
சீக்கிரம் எம்முன் வா வா வா;


கதிர்காம வேலவனே - எம்
கவலைகளைத் தீர்ப்பவனே,
கார்த்திகை மைந்தனே - நீவிர்
வாழி வாழி வாழியவே !

பரமேஸ்வரன் புத்திரா,
பார்வையில் சுந்தரா,
பக்தர்களின் மித்திரா - நீவிர்
வாழி வாழி வாழியவே !

பார்வதிக்கு மகனே,
பானை வயிறோனுக்கு இளையோனே,
பழனி மலையோனே - நீவிர்
வாழி வாழி வாழியவே !