Tuesday, August 23, 2022

தமிழமுது 11

திருக்குறள்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (65)

 பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்

----------------------------------------------------------------------------

நாலடியார்

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்.    94

ஒரு சிறிய அரிசியின் அளவாவது - நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர்.

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

9. கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.


அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.

--------------------------------------------------------------------------------

தேவாரம்

முதிருஞ் சடைமுடிமேன் மூழ்கு மிளநாக மென்கின் றாளால்
அதுகண் டதனருகே தோன்று மிளமதிய மென்கின் றாளால்
சதுர்வெண் பளிக்குக் குழைகாதின் மின்னிடுமே யென்கின் றாளால்
கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
. (4.6.7)

 

நன்கு செறிந்து நிறைந்த சடைமுடிமேல் இளநாகம் மறைந்து கிடக்கிறது. அதனைக் கண்டு அஃது ஊறுதாராது என்ற கருத்தோடு அதன் அருகிலே பிறை காட்சி வழங்குகின்றது. வேலைப்பாடு அமைந்த வெண்ணிறத்ததாகிய பளிங்கினாலாகிய காதணி காதில் இருந்து கொண்டு ஒளி வீசுகின்றது என்று கூறுகின்ற என்பெண் ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கடல் அலை கரைக்கண் செலுத்தும் திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய் (8.7.10) 

 

இறைவன் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?
--------------------------------------------------------------------------------



( தொடரும் )

copy right to the respective web sites.


Tuesday, August 16, 2022

தமிழமுது 10

திருக்குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50)

 

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

----------------------------------------------------------------------------

நாலடியார்

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.      75

 

மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக.

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

8. சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே

 

என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்

--------------------------------------------------------------------------------

தேவாரம்

தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. (1.1.9)

 

திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன்
   
தீக்கதுவ
வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை
   
யார்நறவந்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந்
   
தம்முரல்வண்
டதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வார்யி
   
தடலரைசே (8.6.36)

 

மனம் நிறைந்த, தேன் ததும்புகின்ற மந்தார மலரில் தாரமாகிய வல்லிசையைப் பழகி, பின் மந்தமாகிய மெல்லிசையை ஒலிக்கின்ற, வண்டுகள் அழுந்தித் திளைக்கின்ற செழுமையாகிய தேனோடு கூடி விளங்குகின்ற சடையினையுடைய, பரமாகாயத்தி லுள்ள வலிமை மிக்க அரசனே! மரப்பொந்தினை அடைந்த நெருப்புப் போல, புகைந்து எரிகின்ற அந்தப் புலன்களாகிய நெருப்புப் பற்று தலால் வெப்பமுறுகின்ற என்னை விட்டு விடுவாயோ?
--------------------------------------------------------------------------------

திருமந்திரம்

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே  (10.5.25)

 

தோற்பை போன்றதாகிய இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவது தான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை நன்கு முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணப் பலரும் புகழ்ந்து போற்றினாலும் அதனால் பெறப்படு வதுதான் யாது

--------------------------------------------------------------------------------


( தொடரும் )

copy right to the respective web sites.


Monday, August 8, 2022

தமிழமுது 9

திருக்குறள்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (41)

 மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

----------------------------------------------------------------------------

நாலடியார்

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.  70

 

சினம் கொண்டு நாய் தமது உடம்பைக் கடிப்பதைப் பார்த்தும், அதற்குப் பதிலாகத் தம் வாயினால் நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகில் இல்லை! அதுபோல, தகுதியின்றி, கீழ் மக்கள் கீழ்த்தரமான சொற்களைச் சொல்லும்போது மேன் மக்கள், அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வார்களோ? சொல்லமாட்டார்கள்.

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

7. ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.


தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!

--------------------------------------------------------------------------------

தேவாரம்

வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே யென்கின் றாளாற்
சினபவளத் திண்டோண்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்ற னென்கின் றாளால்
அனபவள மேகலையொ டப்பாலைக் கப்பாலா னென்கின் றாளால்
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. (4.6.1)

 

அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து தேவர்களுக்கும் அருள் வழங்குகின்றவனே என்கின்றாள். சிவந்த பவளம் போன்ற திண்ணிய தோள்களின்மேல் சேர்ந்து விளங்கும் வெள்ளிய திருநீறு அணிந்தவனே என்கின்றாள். அன்னம் போன்ற நடையினளாய்ப் பவளத்தாலாகிய மேகலையை அணிந்த பார்வதியோடு சுத்தாவத்தைகளுள் துரியத்துக்கு அப்பாற்பட்ட துரியாதீதத்தில் உள்ளவன் என்கின்றாள். பெரிய பவளங்களைக் கடல் கரையில் சேர்க்கும் திருக்கழிப்பாலையில் உள்ள எம்பெருமானை என்மகள் தரிசித்தாளோ ?

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

ஆயநான் மறையவனும் நீயே யாதல்
   
அறிந்தியான் யாவரினுங் கடைய னாய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
   
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
   
அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர்
பேயனேன் இதுதான்நின் பெருமை யன்றே
   
எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே (8.5.23)

 

நான்கு வேதப் பொருளாய் இருப்பவன் நீ என்பதையும் எல்லாரினும் இழிந்தவன் நான் என்பதையும் அறிந்து உனக்கு நானும் ஓரடியான் என்றேன். ஆதலால், ஆண்டு கொண்டனை. அத்தனையே அன்றி, உனக்கு அடியார் இல்லாத குறையினால் அன்று, உன் பெருங்குணத்தைக் குறித்து நான் என்ன சொல்லிப் புகழ்வேன்?

--------------------------------------------------------------------------------

திருமந்திரம்

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுற மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே (10.5.10)

 தீய ஊழ் விரைய வந்தமையால், தங்க நிழல் தரும் பந்தல்போல்வதாகிய உடம்பு நிலைகெட்டு விட்டது. அதனால் அதற்குள் கருவூலம் போல இருந்த உயிர், காவலற்றுக் கொள்ளை போகும் நிலையை (யமதூதுவர் கொண்டு செல்லும் நிலையை) அடைந்து விட்டது. பந்தலில் ஒன்பது வாயில்கள் அமைக்கப் படிருந் தன; அவை அனைத்தும் அடைபட்டு விட்டன. அன்புடைய சுற்றத் தார் என் செயவல்லார்! தொடர்ந்து அழுததோடு போய்விட்டனர்

--------------------------------------------------------------------------------


( தொடரும் )

copy right to the respective web sites.