Sunday, December 18, 2011

அமர்நீதி நாயனார் - 4

புத்தாடை பொன்னாடைகளால்
ஈடாகாத் தட்டில் தன்
பொன் பொருள் செல்வங்களை எல்லாம்
இட அனுமதி வேண்டி நின்றார் அமர்நீதியார்;

மனதுள் புன்னகைத்து
மறுப்பேதும் சொல்லாது
'எம்மாடைக்கு ஈடாய்
உம்சொத்து எதுவேண்டுமானாலும்
இடுவாய்,
ஈடானதும் அவை அத்தனையும்
எமக்குத் தருவாய்'
என்றார் அடியார்;

இரத்தினம் வந்தது,
பொன் வந்தது,
வெள்ளி, வெண்கலம் இன்னும் பல உலோகங்கள் வந்தது,
எடுத்து வந்ததெல்லாம்
ஏறி இருக்கும் தட்டில் இட, இட,
எந்த ஒரு அசைவும் இன்றி அந்தத் தராசு கிடந்தது;

இதற்குள் ஊர் மக்கள் ஒன்று கூடினர்,
நடக்கும் நாடகத்தைக் கண்டு அதிசயித்தனர்;

‘என்னுடையதெல்லாம்
எடுத்து வைத்து விட்டேன்;
எஞ்சி இருப்பது
என் மனைவி, மகன் மற்றும் நான்;
எங்களையும் இத்தட்டிலிட
அனுமதி வேண்டுகிறேன்’
அமர்நீதியார் கேட்டார்.
சிவனடியார் சம்மதித்தார்;

     இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய்யடிமை
     பிழைத்திலோமெனிற் பெருந்துலை நேர் நிற்க வென்று
     மழைத்தடம் பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
     தழைத்த அஞ்செழுத்தோதினார் ஏறினார் தட்டில்

'அன்போடு இதுகாறும் திருநல்லூர் இறைவ,
உம்மைத் தொழுதேன்;
திருநீறு அணிந்தேன்;
அடியவற்குதவி செய்தேன்;
எனக்குத் தெரிந்த வரை
எந்த ஒரு தவறும் செய்தேனில்லை;
இவையாவும் உண்மையெனில், இறைவா,
நாங்கள் ஏறி நிற்க இத் தராசு
ஈடாக வேண்டும், நமசிவாய' எனச் சொல்லி
தராசில் ஏறினார்
தன் மனைவி மகனோடு;

அக்கணமே தராசின் தட்டுக்கள்
இணையாக நிற்க,
இதுவரை அங்கு சிவனடியாரை நின்றிருந்தவர்
மறைந்தார்;
பார்வதியோடு பரமேஸ்வரன் தன்
பக்தருக்குக் காட்சி தந்தார்;
தேவர்கள் பூ மாறிப் பொழிந்தனர்;

அந்தத் தராசே
அமர்நீதியாருக்கும்
அவர் குடும்பத்தாருக்கும்
விமானமாகி இறைவன் திருவடியை அடைய,
சிவபதம் அருளி இறைவன் தன் பக்தனை
ஆட்கொண்டார்;

                              ஓம் நமசிவாய

Saturday, December 17, 2011

அமர்நீதி நாயனார் - 3

'அமர்நீதியாரே,
ஏன் இந்த நாடகமாடுகிறீர் ?
என் ஆடையின் சக்தியை
எப்படியோத் தெரிந்து கொண்டு, அதை
எடுத்துக் கொண்டு,
கலங்கியக் கண்ணோடு,
காணாமற் போய் விட்டதெனச் சொன்னால்
யாம் நம்ப வேண்டுமோ ?'

'ஐயனே,
எப்படியோ மறைந்து விட்டது
தங்கள் பொருள், அதற்கு ஈடாக
என்னால் முயன்ற
எதை வேண்டுமானாலும் கேளுங்கள்,
பொன் பொருள் பட்டாடை எல்லாம் தருகிறேன்;
எவ்வளவு வேண்டுமானாலும்
எடுத்துத் தருகிறேன்;
என் பிழை பொறுத்து,
என்னை மன்னித்து அருள வேண்டும்'

     பணியும் அன்பரை நோக்கி அப்பரம்பொருளானார்
     தணியும் உள்ளத்தராயினர் போன்று நீர் தந்த
     மணியும் பொன்னும் நல்லாடையும் மற்று மென்செய்ய
     அணியுங் கோவணம் நேர்தர அமையும் என்றருள

அணிய என் ஆடை வேண்டும் எனக்கு;
தாங்கள் தரும் பொன் பொருள் பட்டாடை எதற்கு ?
என் ஒராடைக்கு இணையாய் ஏதேனும் தர முடியுமா உம்மால் ?
என்று சொல்லி தன் கோவணத்தை தட்டில் வைத்து
'இதற்கு ஈடாய் என்ன இருக்கு உம்மிடம்' என்று கேட்டார் அடியார்;

அமர்நீதியாரும்
அவர் சொல்லுக்கு இணங்கி,
அளக்கும் தராசு ஒன்று கொணர்ந்தார்;
அடியவரின் கோவணத்தை ஒரு தட்டில் வைத்தார்;
அதற்கு அடுத்தத் தட்டில் தான் கொணர்ந்த கோவணத்தையும் வைத்தார்;

ஆண்டவனின் பொருளுக்கு ஈடு
ஆரிடம் இருக்கு ?

ஆடியவர் கோவணமிருந்த தட்டு கீழிறங்க
அமர்நீதியார் கொணர்ந்த கோவணம் மேலேற,
தன் வீட்டில் வைத்திருந்த மேலும் சில /பல
துணிகளை அள்ளி எடுத்து வந்து வைக்க,
அப்பொழுதும் அத்தராசு சமமாகாது மேலேறிக் கிடக்க,

ஆண்டவனின் திருவிளையாடலை
அறிந்து கொள்ள முடியாது
அமர்நீதியார் திகைத்து நின்றார்;
ஒரு கோவணத்திற்கு இணையாய்
இத்தனை ஆடைகள் வைத்தும்
இரண்டும் சமமாகாது
இருப்பதேனோ ? என்று வியந்து நின்றார்;

                                                                        ( தொடரும் )

Friday, December 16, 2011

அமர்நீதி நாயனார் - 2

வந்தவர் யாரெனத் தெரியாதே
வரவேற்றார் அமர்நீதியார்.

'ஆண்டவனுக்குச் சேவை என்றெண்ணியே,
அடியவர்கட்கு சேவை செய்கிறேன்
அடியேன், இன்றெம் வீட்டில்
அமுதுண்ண வேண்டும்,
அருள் செய்ய வேண்டும்' என்று சொல்லி
அனைத்து ஏற்பாடுகளையும்
அமர்நீதியார் செய்தார்.

'ஆகட்டும்,
நான் காவிரியில் நீராடி
வருகிறேன்,
அதுவரை என் துணியை
மழையில் நனையாது
பாதுகாத்து வரவும், நான்
கேட்டவுடன் திருப்பித் தரவும்’;

'அப்படியேச் செய்கிறேன்' என
அமர்நீதியார் சொல்ல,
அடியார் அங்கிருந்து அகன்றார் காவிரியில் நீராட.

     ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறுமக்கே
     ஈங்கு நான்சொல்லவேண்டுவதில்லை நீரிதனை
     வாங்கி நான் வருமளவும் உம்மிடத்திகழாதே
     ஆங்கு வைத்து நீர்தாரும் என்றவர் கையிற் கொடுத்தார்.

பிரம்மச்சரியன் வேடத்தில் வந்த
பரமேஸ்வரன்
பரம ரகசியமாய்த்
தான் தந்த ஆடையை மறையச் செய்தார்;
சிறிது நேரம் கழித்து
குளித்து முடித்துத் திரும்பி வந்தார்;

'என் உடை ஈரமாயிருக்கிறது,
நான் தந்த மாற்று உடை
தருவீரா ?' எனக் கேட்க,
அவர் தந்த உடை வைத்த இடத்தில்
அமர்நீதியார் பார்க்க,
அங்கே மாற்று உடை இல்லாததும்
அதிர்ச்சி அடைந்தார்;

எங்கு தேடியும் இல்லாது,
என்ன செய்வதென்று தெரியாது
திகைத்து நின்றார்.
மாற்று ஏற்பாடாக
புதியத் துணி
வேதியர் அணிய எடுத்து வந்தார்;

'புனிதமானவரே,
தாங்கள் தந்த ஆடை
வைத்த இடத்திலில்லை;
எப்படியோ எங்கோ மறைந்துவிட்டது;
அதிசயமாய் இருக்கிறது,
ஆனால் உண்மை;
தயை செய்து
தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்;
இந்த மாற்றாடையை உடுத்த வேண்டும்;
தயாராய் உணவிருக்கு, உண்ண வேண்டும்’;

அமர்நீதியார் வேண்டிநின்றார்;
சிவனடியார் ஆத்திரம் கொண்டார்;

                                                                        ( தொடரும் )

Thursday, December 15, 2011

அமர்நீதி நாயனார் - 1

காவிரி பாயும் சோழ நாட்டின்
ஒரு பகுதி,
வளம் நிறைந்தப் பகுதி,
மலர்கள் மலர்ந்து
சோலைகள் நிறைந்தப் பகுதி,
வண்டுகள் மலர்களில்
மது அருந்தி ரீங்காரமிட்டு
மகிழ்ந்துக் கிடக்கும் பகுதி;
அப்பகுதியின் பெயர்
பழையாறை.

அந்தப் பழையாறையில்
பிழையேதும் செய்யாது
பிழைப்பு நடத்தி,
வியாபாரம் செய்து வந்தார்
அமர்நீதியார்.

நல்லவர்,
நீதி நேர்மை வழுவாது வாழ்பவர்.
பண்புள்ளம் கொண்டவர்.
பணமிருந்தும்
பணத்தாசை இல்லாது
பணி செய்துவந்தார்.

ஆண்டவன் பாதம் தொழுது,
அவனடியவர்கட்குத் தொண்டு செய்து,
அல்லல் படுவோர் துயர் துடைத்து,
சிவபெருமான் வீற்றியருளும்
திருநல்லூர் எனும்
திருத்தலத்தில் ஒரு மடம் அமைத்து,
தினம் அன்னதானம்
திறம்பட நடக்க ஏற்பாடு செய்தார்;

     மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்த்
     திருவிழாவணி சேவித்துத் திருமடத் தடியார்
     பெருகும் இன்பமோடமுது செய்திட அருள் பேணி
     உருகு சிந்தையின் மகிழ்ந்துறை நாளிடை ஒருநாள்

அடியார்கட்கு
உடுக்க உடை தந்து,
இருக்க இடம் தந்து,
வாழ்ந்து வந்த
அமர்நீதியாரை
அந்த ஆண்டவன் சோதித்து
அருள் செய்ய எண்ணினார்.
அக்கணமே ஒரு பிரம்மச்சரியனாய்
அவதாரமெடுத்து
அமர்நீதியார் இருக்கும் ஊருக்கு வந்தார்.

                                                                        ( தொடரும் )

Wednesday, December 14, 2011

வள்ளித் திருமணம் - 11

கிழவனை மணக்க
சம்மதம் சொன்னதை எண்ணி
கன்னி வள்ளி கலங்கினாள்,
புலம்பினாள்;

வேலனே,
உன்னை விவாகம் செய்ய
வேண்டி இருந்தேனே,
தாடி மீசை நரைத்தக் கிழவனைத் தொட்டு,
சத்தியம் செய்து விட்டேனே,
ஐயகோ, நான் இனி வாழ்வது வீணே;

வள்ளி
வருந்திக் கிடக்கையில்
வடிவேலன் தன்
பன்னிரண்டு கரங்களோடு
தரிசனம் தந்தான்.

'தினைபுனத்து வள்ளியே, என் நெஞ்சைக்
திருடியக் கள்ளியே,
முன் வேடனாய் வந்தவனும் நானே,
முடி நரைத்தக் கிழவனாய் வந்தவனும் நானே,
உன்னிடம் சத்தியம் பெற்றவனும் நானே,
நீ கலங்குவது வீணே,
இனி என்னோடு தான் உன் வாழ்வே';


     முருகா ! முருகா ! முருகா ! - முத்துக்
     குமரா வருக முருகா !
     மயில் ஏறி வந்தாயோ முருகா - ஏன்
     மகளைக் காண வந்தாயோ முருகா,
     வள்ளியை மணக்க வந்தாயோ, எங்களை
     வாழ்த்தி அருள்புரிய வந்தாயோ,
     முருகா ! முருகா ! முருகா ! - நாங்கள்
     உன்னடி பணிந்தோம் குமரா !!!


வள்ளி, ஆறுமுகன் பாதத்தில்
விழுந்து வணங்க,
நம்பிராஜனும் அவர் புதல்வர்களும்
அருள்புரிய வேண்டி நிற்க,
நாரதர் வர,
நல்லாசி தர,
முப்பத்து முக்கோடி தேவர்களும்
பூ மழைப் பொழிய,
சுபமாய் நடந்தேறியது
சுப்பிரமணியன் வள்ளி திருமணம்.


வள்ளி முருகன் திருமணத்தை
வாசிக்கும் எல்லோருக்கும்
வளமான / நலமான வாழ்வு கிட்ட
வழி செய்வான்
வடிவேலன்;

          வாழ்க வளமுடன் !

Tuesday, December 13, 2011

வள்ளித் திருமணம் - 10

'ஆனை என்றால்
அம்மணிக்கு பயமோ'

'ஆம்'

'சரி வா அந்தப் பக்கம் சென்றுவிடுவோம்'

இருவரும் வேறிடம் செல்லத் தொடங்கினர்;

மனதிற்குள்
மகிழ்ந்தான்
முருகன்; தனக்கு
மூத்தவனை ஆனைமுகனை
மனதால் எண்ணினான்; தன்
முன் தோன்றப் பண்ணினான்;

தம்பியின்
துயர் தீர்க்கத்
துணை புரிந்தான்
தும்பிக்கையான்;

ஆனை வந்தது;
அலறினாள் வள்ளி;
கிழவன் பின்னே ஓடினாள்;
காப்பாற்றக் கெஞ்சினாள்;


'என்னைத் தொடாதே, தள்ளிப் போ' - கிழவன் கத்தினான்;

'ஆபத்துக் காலத்தில்
உதவுவது தானே மரபு' - வள்ளி கெஞ்சினாள்

'ஆனாலும் நான் கிழவனன்றோ'

'ஆண் அன்றோ'

'அதுசரி, ஆனையைத் திருப்பி
அனுப்புகிறேன், என்னை நீ
கல்யாணம் செய்துக் கொள்வாயா'

'ஆனையைத் துரத்திவிடு, நீ
சொல்வதெல்லாம் செய்கிறேன்'

கிழவன் வேண்ட,
காட்டு யானை திரும்பிச் செல்ல,

வள்ளி - 'தாத்தா உன்னை ஏமாற்றிவிட்டேன்' எனச் சொல்ல,
கிழவன் மீண்டும் வேண்ட,
ஆனை மீண்டும் வர,
வள்ளி மீண்டும் கத்த,

'கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று
சத்தியம் செய்து கொடு'

கிழவர் கேட்க,
வள்ளி சத்தியம் செய்ய,
யானையும், கிழவரும் அங்கிருந்து மறைந்தனர்;

                                                                        ( இன்னும் வருவாள் )

Monday, December 12, 2011

வள்ளித் திருமணம் - 9

நம்பிராஜன் வள்ளியிடம்
அம்முதியவருக்கு
எல்லா உதவியும்
செய்யச் சொல்லி தன் வழி சென்றான்;

வாருங்கள் தாத்தா, அமருங்கள்;
நீயும் அருகில் அமர்வாய் குழந்தாய்;
நீண்ட வெள்ளைத் தாடி, கஷ்டமாய் இருக்கோ
தாடி என்றாலும் கஷ்டம், வாடி என்றாலும் கஷ்டம், போடிப் பெண்ணே;
கோபிக்காதே தாத்தா, என்ன வேண்டும் சொல்;
பசிக்கிறதே, தின்ன என்ன இருக்கு;
தினைமாவும் தேனும் இருக்கு, தின்னு பசியாறு;

கிழவர் தினைமாவு தின்கையில், விக்கலெடுக்க

'தண்ணீர் தா, என்
தாகம் தீர்,
தாகம் தீர்க்க
நீர் தா, அதை
நீ தா'
எனக் காத்த,
வள்ளி தண்ணீர் தர,

'பசி தீர்ந்தது,
தாகம் அடங்கியது,
மோகம் தொடங்கியது;
வாடி பெண்ணே, அருகில் வா,
அணைத்துக்கொள்ள வா, அணைத்துக்கொள் வா'

'தாடி நரைத்தக் கிழம் என்னை
வாடி எனச் சொல்வது முறையோ'

'தாடியில் ஒரு முத்தம் தந்திடு போதும்'

'உளறித் தொலைக்காதீர், ஓடிப் போய்விடும்'

'வள்ளிக்கொடி, எனை அள்ளிக்கோ டி'

'கிழமே, நீ போய்த் தொலையேன்'

'சரி சரி பெண்ணே, கோபம் கொள்ளாதே,
நாம் இங்கு இருப்பது நல்லதன்று,
கொடிய மிருகங்கள் ஏதும் வரலாம்,
வந்துவிடு அந்தப்புரம், அந்தப் புறம்'

'மிருகம் என்றால் பயமோ உமக்கு ?'

'என், நீ பயப்பட மாட்டியோ ?'

'ஒரு மிருகம் தவிர வேறெதுக்கும் அஞ்ச மாட்டேன் நான்'

'அப்படியா, சரி அதை விடு,
வரும் வழியில் யானை ஒன்றைக் கண்டேன்,
அதைக் கண்ட முதல் கலவரமடைந்தேன்,
அதுவே என் கவலை'

'ஆ ! ஆனையா, ஐயோ'

                                                                        ( இன்னும் வருவாள் )

Sunday, December 11, 2011

வள்ளித் திருமணம் - 8

குடும்பத்தார்
வள்ளியின் நலம்
விசாரித்தனர்; பின்
வந்த வழியேத் திரும்பிச்
சென்றனர்;

வேங்கை மரமாய் நின்ற
வேலவன்,
வேடனாய் மீண்டும் உருவெடுத்தான்;

'என் தந்தையைக் கண்டு பயந்தவரே,
உம் வழி பார்த்துச் செல்லும்';
வள்ளி சொன்னாள்;

வள்ளியை வழிக்குக் கொண்டு வருவது
எப்படி என்று யோசிக்கலானான்
வேலவன்;

                                    கிழ வேடத்தில் இள முருகன்

இள வேடன் உருவில்
ஏதும் செய்ய முடியாது,
கிழ வேடமெடுத்தான்
கந்தன்;
தலையில் வெள்ளை முடி;
நடையில் தள்ளாட்டம்;
கையில் ஒரு கோல்;
கண்ணில் மங்கியப் பார்வை;

மெதுவாய்த் தள்ளாடி
நம்பிராஜன் இருக்குமிடமடைந்தார்;
தாங்கள் யார்,
இந்த வழி செல்வதெங்கே
வினவினான் மர நிழலில் இருந்த மன்னன்;
விடை தந்தான் கிழ வேடத்தில் இருந்த முருகன்;

அப்பா நான்
காசியிலிருந்து
கன்னியாக்குமரிக்குச் செல்ல வேண்டும்;
இடையில் எங்கேயோ
வழி மாறி
வந்து விட்டேன்;
பசி தாகம் என்னை
வாட்டுகிறது;

கவலை வேண்டாம் சுவாமி;
அருகிலிருக்கு என் காடு;
காட்டுக்குக் காவலிருப்பவள்
என் மகள்;
அவளிடம் உம்மை
அழைத்துச் செல்கிறேன்;
அவளுமக்கு உண்ண உணவும்,
அருந்த நீரும்
அளிப்பாள் எனச் சொல்லி
அவரை அழைத்துச் சென்றான்
அரசன்;

                                                                        ( இன்னும் வருவாள் )

Saturday, December 10, 2011

வள்ளித் திருமணம் - 7

'கானகத்திலிருக்கும் காரிகையே,
புல் மேயாத மான், புள்ளி மான்,
நல்ல ஜாதி மான்,
சாயாத கொம்பிரண்டிருந்தாலும்
தலை நிமிர்ந்துப் பாயாத மான்,
அம்மனைத் தேடி வந்தேன் பெண் மானே'

'உம் மொழியும் சரியில்லை,
முழியும் சரியில்லை
வேட்டைக்கேற்ற மான் மலையில்,
இந்த மான் நம்பி தந்த மான்,
தைரிய மான்,
உமது வலைக்கு அகப்படா மான்,
இவ்விடம் விட்டுச் சென்று விடும்'

'ஏ ! பெண்ணே, உனைக் கண்டதும்
என்னுள் மாற்றங்கள்,
ஏகப்பட்ட உணர்ச்சிகள்'

பூங்குயிலே,
உன் மேல் மோகம் வந்ததடி,
வேகமாய் உன்முன் வந்தேனடி,
தினமும் உன் நினைவில் உருகி வாடுகிறேனடி,
மன்மதனின் கணைகள் எனைப் பாடாய்ப் படுத்துதடி

எந்நாளும் உன்னை மறவேன்,
உத்தமியே உனைவிட்டு விலகேன்,
உறுதியாகச் சொல்வேன்,
என்னோடு வந்திடு,
என் வேதனைக்கு
மருந்திடு’;

'பித்து பிடித்தவனே,
புறம் சென்றுவிடு;
என் அண்ணன்மார்கள் உன்னை
இரண்டாகப் பிளந்து
நரி பருந்து இவற்றிற்கு
உணவாக்கி விடுவார்கள் உன்னை
ஜாக்கிரதை'


'என்னோடு சரசமாட வா'
'வீண்மொழி பேசாதே போ'
'உன் பருவம் வீணாகலாமா'
'சீச்சி தகாத வார்த்தைகள் பேசாது, தள்ளிப்போ'

'பெண்ணே உனக்குத் துணையிருப்பேன்,
நீ இட்ட வேலைகள் செய்வேன்,
பறவைகளைத் துரத்துவேன்,
வேறென்ன வேண்டும் உனக்கு,
சொல் செய்கிறேன்'

அந்தச் சமயம் வள்ளியின்
தந்தையும்,
தமையரும் வரவே,
தன் வீரம் காட்டத்
தக்கத் தருணம் பின்வரும் என்று,
வேங்கை மரமாய் உருமாறி
மறைந்து நின்றான்
வேலவன்;

                                                                        ( இன்னும் வருவாள் )

Friday, December 9, 2011

வள்ளித் திருமணம் - 6

                                    கந்தனும் கலகப் பிரியனும்

கந்தா,
காலை வேளை
தங்கள் வேலை முடித்து வர விரைந்தேன்;
கண்டேன் குறத்தி மகளை, இந்தக்
குமரன் மனம் கவர்ந்தவளை;
அடையர்க்கறியக் கனி அவள்;
ஆறுமுகனுக்கேற்றவள்;

என் சொல் ஏதும் எடுபடவில்லை
ஏந்திழையாளிடம்;
எம்பெருமான் செல்ல வேண்டும்;
அவளை வெல்ல வேண்டும்;
வள்ளி முருகனாய்
விரைந்திங்கு வர வேண்டும்;

‘நாரதரின் சொல் எடுபடாதுபோனதா ?’
வினவினான் வேலன்;
‘பொல்லாப் பெண் அவள்;
யாரும் எளிதில் நெருங்க முடியாதவள்;’
விளக்கினார் நாரதர்;
முருகன் கிளம்பினான்; தான்
முன் தந்த வாக்கை
நிறைவேற்ற விரும்பினான்;

                                    முருகனும் வள்ளியும்

முருகன்
வள்ளியின் இருப்பிடம்
வந்தடைந்தார்;
வேடவப் பெண்ணைப்
பார்க்க செல்கையில்
வேடவனாய்த் தன்
உருவத்தை மாற்றிக்கொண்டார்;

'வேடவப் பெண்ணே,
வேல் போன்ற கண்ணே'

'அதென்னையா, கண்ணே என்று
அழைக்கிறீர்'

'சரி, வேல் போன்ற கண் கொண்டப் பெண்ணே'

'என்ன வேண்டுமுமக்கு ? யார் நீர் ?'

'பாதை மாறி வந்ததே மான்,
என் மான்,
துள்ளித் துள்ளி வந்தப்
புள்ளி மான்,
பார்த்தாயா பாவையே'

'மானைத் தேடித் தேடியே ஸ்ரீமான்
பெருமான் தன் மட* மானைத் தொலைத்தார்;
நீ எம்மாத்திரம்; எப்படியிருக்கும் உம்மான் ?'

தான் தேடி வந்த
மானைப் பற்றிப்
பெண் மானிடம் சொன்னார்
முருகப் பெருமான்.
____________________________________________________
*மட - வீடு

                                                                        ( இன்னும் வருவாள் )

Thursday, December 8, 2011

வள்ளித் திருமணம் - 5

                                    நாரதர் கலகம்

'மங்கையே உனக்கு இன்னும்
மணமாகவில்லை போலிருக்கிறதே'

'சுவாமி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
எனைப் பெற்றோர்';

காலாகாலத்தில்
கல்யாணம் பண்ண வேண்டுமே'

'கட்டிக்கொள்ளத் தகுதியுடையவர்
கண் முன் தென்பட்டால்
காலம் தாழ்த்தாது
காரியம் நிறைவேறுமே'

‘நீ சரி என்று சொல்,
நடக்கவேண்டியதை
நான் நடத்துகிறேன்;
இந்த வெயிலில்
தனியாக வாடுவதை விடுத்து
என்னோடு கழுகுமாமலை வந்தால்
வளமாய் வாழ
வழி செய்கிறேன்;
வள்ளி, நீ என்ன சொல்கிறாய் ?'

'துறவி போல் வந்தவர்
தூதாகி நிற்கிறாரா ? இல்லை
தூது,
துறவி வேடத்தில் வந்திருக்கிறதா ?
தங்களுக்கு எதற்கு இந்தச் சிரமம்; எனது
தமையர், தாய், தந்தையர்
காலம் பார்த்துக் காரியம் புரிவர்; நீர்
கவனம் சிதறாதுத் தவம் புரிவீர்';

இதனைத் தொடர்ந்துக்
கந்தன் பெருமை சொன்னார்;
கன்னி அசையாது நின்றாள்;

'சொல்லும் வார்த்தை கேளம்மா, என்
சொல்லைத் தட்டாதேம்மா'

'வேண்டாம் வாதம் தவச்சீலரே, உடனே
எம்மிடம் விட்டுச் செல்வீரே'

'பட்ட அவஸ்தை போதுமம்மா, அந்தப்
பழனி ஆண்டவனை மணந்து கொள்ளம்மா'

'கூட்டிக் கொடுப்பதும்குலத் தொழிலோ,
தனியாய்ப் பெண்ணிடம் பேசும் முறை இதுவோ ?'

'ஞானமில்லாக் குறத்திப் பெண்ணே, நான்
சொல்வதைக் கேட்டால் நலம் உண்டாகும்'

'எம் நலம் விடும்; நீர்
உம் நலம் பார்த்து வந்த வழி செல்லும்'

'அந்தக் கந்தனே
உனக்கேற்றவன்;
அவனையே உனக்கு
மணமுடிப்பேன்;
அதை என் கண்ணால்
கண்டு களிப்பேன்;
ஆறுமுகனே
உன் மணாளன்;
என்றுரைத்தவரே
அங்கிருந்து நகர்ந்தார் நாரதர்'

                                                                        ( இன்னும் வருவாள் )

Wednesday, December 7, 2011

வள்ளித் திருமணம் - 4

வேலவன் விரைந்தழைத்தான்
நாரதனை,
கலகப் பிரியனை, தன்
காதல் சொல்லி வள்ளியைக்
கவர எண்ணி,
தூது போக
துணைக்கழைத்தான்
தம்புராவை மீட்டித்
திரிபவனை;

நாரதர் வந்தார்;
தினைப்புனம் நோக்கிச் செல்ல,
வள்ளியைக் காண, கந்தனின் காதல் சொல்லக்
கிளம்பினார் கலகப் பிரியர்;

                                    நாரதரும் வள்ளியும்

இனிய என் யாழிசையைவிட
இனிமையாகப் பாடும்
இக் குரல் யாருடையது ?
இவள் யார் ? என்று எண்ணியவரே
வள்ளி இருக்கும் தினைப்புனம் நோக்கி
வந்தார் நாரதர்;
தன் அறிவையெல்லாம்
தரணியில் வாழ்வோர்க்குத்
தந்துதவும் பிரம்மனின் புத்திரர்;

'முனியே வருக,
சுவாமி வருக,
தாங்கள் இங்கு எழுந்தருள
நாங்கள் என்ன தவம் செய்தோம்,
வருக,
வந்திங்கு அமர்க' என்று
வரவேற்றாள் வள்ளி நாரதரை;

'பெண்ணே நீ அழகு,
மான் போல் நீ துள்ளிக் குதித்து ஓடுவது அழகு,
பறவைகளைச் சோ...சோ... என நீ துரத்துவது அழகு,
கானகத்திற்கு நீ காவல் புரிவது
அழகோ அழகு;
பிள்ளாய், உன்
பூர்வீகக் கதை
கொஞ்சம் சொல்லாய்';

வினவினார் நாரதர்;
விளக்கம் தந்தாள் நம்பிராஜன் மகள்;

'குரு முனியே,
குறவர் குலத்தில் பிறந்த
குழந்தை நான்,
வள்ளி என்றழைப்பர் எனை;
தந்தை நம்பிராஜன்,
தாய் மோகினி,
ஊர் வழக்கப்படி
வயல் காவல் காக்க
வந்தேன்;
வந்ததால் தங்களைக் கண்டேன்;
வணங்கி நிற்கிறேன்,
வாழ்த்துங்கள்';

கலக்கம் செய்யத்
தக்கத் தருணம்
பார்த்து நின்றார் நாரதர்;

                                                                        ( இன்னும் வருவாள் )

Tuesday, December 6, 2011

வள்ளித் திருமணம் - 3

                                    தினைப்புனத்தில் வள்ளி

வள்ளியை அழைத்தான் நம்பிராஜன்.
தினைப்புனக் காவலுக்கு
அவள் செல்ல வேண்டுமென்றுத் தெரிவித்தான்;


      காட்டுக்குச் செல்ல வேண்டும் நீ,
      காவலுக்குச் செல்ல வேண்டும் நீ,
      தினைப்புனத்தைக் காவல் காக்க வேண்டும் நீ,
      காக்கை கிளி மைனா போன்ற பறவைகளை
      கவண்கல் கொண்டு எரிந்திடவேண்டும்,
      அவைகளைத் துரத்திடவேண்டும்,
      வள்ளி நீ காக்க வேண்டும்,
      கவனமோடிருக்க வேண்டும்,
      காவல் புரிய வேண்டும்,
      தினைப்புனம் செல்ல வேண்டும்;


“துணைக்கு என் தோழிமார் வேண்டும்,
கூப்பிடு தூரத்தில் அண்ணன்கள் வேண்டும்,
இவை போதுமே, வேறென்ன வேண்டும்;
காவலுக்குச் செல்கிறேன்,
தந்தையே, தங்கள் ஆணை வேண்டும்” என்று
சிரம் தாழ்த்தி நின்றாள்
வள்ளி;

அண்ணன்மார் வள்ளியையும்
அவள் தோழிகளையும்
தினைபுனத்திற்கு அழைத்து வந்தனர்;
அவர்கள் அமர, பறவைகளைத் துரத்த
இடமைத்துத் தந்தனர்;
கவண்கல் எறியப் பயிற்றுவித்தனர்;
வேறேதேனும் தேவைப்பட்டால்
ஒருகுரல் தந்தால்
ஓடோடி வருவோம் எனச்சொல்லித்
தம் வழி சென்றனர்;

புதிய இடம் பரவசம் தந்தது,
புதிய வேலை சுறுசுறுப்புத் தந்தது;
வயல் வெளி, காற்று ஆனந்தம் தந்தது;
ஆடினார்கள், பாடினார்கள்,
ஆவலில் கூத்தாடினார்கள் வள்ளியும் அவள் தோழியரும்;
பறவை அண்டினால் போதும், அதைப்
பாடாய்ப் படுத்தினார்கள்;

வள்ளியை,
தன் நெஞ்சம் கொள்ளைக் கொண்டக்
கள்ளியை,
அவள் தினைப்புனம் காவல் காக்கும்
அழகை, தன்
மனக்கண்ணால் கண்டு ரசித்தான் முருகன்,
முன்னொருகாலம் தன்னை
மணந்துகொள்ளக் கெஞ்சியவளை
வேடவப் பெண்ணாகப் பிறந்துவருவாய் *,
அப்பொழுது உன்னை மணக்க நான் வருவேன் என்று
வாக்குத் தந்த
வடிவேலன்;

                                                                        ( இன்னும் வருவாள் )
____________________________________________
* refer link

Monday, December 5, 2011

வள்ளித் திருமணம் - 2

வேட்டை நடந்தது;
சிங்கத்தைக் கொன்றனர்; இன்னும்
சில மிருகங்களைக் கொன்றனர்;

                                    குழந்தை வள்ளி

அருகே ஒரு இடத்தில்
அநேகம் பேர் ஏதோ குரலெழுப்ப
அரசனும்
அவன் பிள்ளைகளும்
அங்கே ஓடிச் சென்றனர்;
அழகான பெண் குழந்தை ஒன்று
அங்கிருக்கக் கண்டனர்;
அதிசயித்தனர்;
அரசனிடம் ஒப்படைத்தனர்;
அனேக நாட்களாய்
அவனுக்குப் பெண் பிள்ளை இல்லை என்ற குறை இருக்க,
அதைத் தீர்க்கவே
ஆறுமுகன் இந்தப் பெண்ணை
அனுப்பியிருக்கிறான் என்று எண்ணினான்;
அக்குழந்தையை அவன்
அரசியிடம் தந்தான்;

வள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட
வயலில் கிடைத்தப் பிள்ளைக்கு
'வள்ளிக்கொடி' என்றுப் பெயரிட்டான்;
வாஞ்சையோடு வளர்த்துவந்தான்;


பிறிதொரு சமயம்;

பறவை இனங்கள் கிளி,மைனா,புறா
போன்றவை நன்றாய் விளைந்தப்
பயிர்களைச் சேதப்படுத்தின;
தினைப்புனத்தைக் காவல் காக்க
ஆர் செல்வதென
ஆலோசனைச் செய்தனர்,
நம்பிராஜனும் அவனை
நம்பி வாழும் ஊர்ப்பெரியவர்களும்;

அக்கம் பக்கத்து வயல்களுக்குப்
பெண்களே காவலிருப்பதால்
தினைப்புனக் காவலுக்கு
வள்ளியை அனுப்பலாமென்று
முடிவுசெய்தனர்;

                                                                        ( இன்னும் வருவாள் )

Sunday, December 4, 2011

வள்ளித் திருமணம் - 1


      பானைவயிரோனுக்கு இளையவனே,
      பார்வதி சங்கரன் புதல்வனே,
      பன்னிரண்டு கையுடையவனே,
      ‘ஓம்’ என்ற சொல்லுக்குப்
      பொருளுரைத்து பெயரெடுத்தவனே,
      முருகா ! பணிகிறேன் உன்னடி,
      காத்திடு இனி நீ;


முன்னுரை – என்னுரை

முருகன் வள்ளித் திருமணத்தை
முத்தமிழில் வசனக் கவிதையில் சொல்லிட
முயல்கிறேன்;
பிழை இருக்கும், பொருத்தருள வேண்டும்;



நம்பிராஜன்

நாடு சித்தூர், இடம் கழுகுமாமலை
நாடாளும் அரசன்
நம்பிராஜன்.
வேல்முருகனைக் குல தெய்வமாய்க்
கொண்டு வாழும் குலம்,
வேடர் குலம்,
அவன் குலம்.

கந்தனை வழிபட்டு,
கடமையாற்றிக்கொண்டிருக்கையில் ஒருநாள்,
வேடவர்கள் வந்தனர்;
வேந்தனிடம் சொன்னனர்
துட்ட மிருகங்கள்
துரத்துது, துன்புருத்துது,
பயிர்களை மெல்லுது, சில
உயிர்களைக் கொல்லுது, துரத்திப்
பிடிக்குமுன் ஓடிச் செல்லுது;

தலைவா நீ
தயவு செய்து, எங்கள்
துன்பம் போக்க
துணை புரியவேண்டும்;

வேடவர்
வேண்டினர்;
வேந்தன் கிளம்பினான்
விலங்குகளை
வேட்டையாட;
வேந்தனுடன்
வந்தனர் அவன்
விழுதுகள்;


      வில்லை எடுத்து வாடா தம்பி,
      வேலையும் எடுத்து வாடா,
      நீ என்னோடு வாடா,
      வாடா தம்பி வாடா நீ
      விரைந்து வாடா;

      வாட்டம் தரும் விலங்கினங்களைக்
      கொல்வோம் வாடா,
      புல்லையும் நெல்லையும் அழிக்குதடா,
      வாடா, அம்மிருகங்களை அழித்திடுவோமடா;
      வாடா தம்பி வாடா நீ
      விரைந்து வாடா;

      பிள்ளைகளுக்குத் தொல்லைகள் தருதுடா,
      அவ் விலங்குகளை இல்லை என்றாக்கிடுவோமடா;
      வாடா தம்பி வாடா நீ
      விரைந்து வாடா;


                                                                        ( இன்னும் வருவாள் )

Saturday, December 3, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 4


      வேதனை யெய்தி வீழ்ந்த
        வேந்தரால் விலக்கப் பட்ட
      தாதனாந் தத்தன் தானும்
        தலையினால் வணங்கித் தாங்கி
      யாதுநான் செய்கே னென்ன
        எம்பிரா னடியார் போக
      மீதிடை விலக்கா வண்ணம்
        கொண்டுபோய் விடுநீ யென்றார்.


'சிவனடியார் வேடத்தில் வந்தவர்க்கு
சிரமம் ஏதும் நேராது,
எல்லை கடக்கும் வரை
எந்தத் தடையும் வராது காத்து,
அழைத்துச் செல்' என்று
ஆணையிட்டார்;

தத்தன் பகைவனை அழைத்துக்கொண்டு
சென்றான்; அவன்
திரும்பி வரும்வரை
மன்னன் காத்திருந்தான்;
எத்தடையும் இல்லாது
எதிரி சென்றுவிட்டான்
என்று சொன்னான் தத்தன்,
மகிழ்ந்தான் மன்னன்;

ஆண்டவனின் அடியவன் என்ற
அவதாரத்தில் வந்த கொடியவனுக்கும்
அன்போடு கருணை காட்டிய மெய்ப்பொருளாரை
அந்தச் சிவன் ஆட்கொண்டு,
என்றும் தன் திருவடியில் இருக்கும்படி
அருள் செய்தார்;


      தொண்டனார்க் கிமையப் பாவை
        துணைவனார் அவர்முன் தம்மைக்
      கண்டவா றெதிரே நின்று
        காட்சிதந் தருளி மிக்க
      அண்டவா னவர்கட் கெட்டா
        அருட்கழல் நீழல் சேரக்
      கொண்டவா றிடைய றாமல்
        கும்பிடுங் கொள்கை ஈந்தார்.


                                                                  ஓம் நமசிவாய

Friday, December 2, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 3

'இமாலயத்திலிருந்து நான்
இங்கே வந்திருக்கிறேன்;
இப்பொழுதே காண வேண்டும்
இந்நாட்டு அரசனை' எனச்
சொல்லி, தத்தன்
சொல்லைச் செவியில் கொள்ளாது
தொடர்ந்து சென்றான் கொடியவன்;

அடியவர் உள்ளே வர
அரசியார் தன் மன்னவனை எழுப்ப,
அரசன் கோபம் ஏதும் கொள்ளாது
அடியவரைத் தொழுது
அமரச் செய்தான்;
வந்த விஷயம் சொல்ல வேண்டினான்;

சிவனடியார் வேடத்தில் வந்தவன்
'சிவன் முன்னம் அருளிய பூசை வழிமுறைகள்
சிலவற்றைச் சொல்ல வந்திருக்கிறேன்,
தனிமையில் சொல்ல விரும்புகிறேன்' என்றான்.


      பேறெனக் கிதன்மேல் உண்டோ
        பிரானருள் செய்த இந்த
      மாறில்ஆ கமத்தை வாசித்
        தருள்செய வேண்டு மென்ன
      நாறுபூங் கோதை மாதுந்
        தவிரவே நானும் நீயும்
      வேறிடத் திருத்தல் வேண்டும்
        என்றவன் விளம்ப வேந்தன்.


அரசி அங்கிருந்து சொல்ல,
அரசன் கை கூப்பி
அருகில் நிற்க,
அச்சமயம் முத்தநாதன்
அவன்திட்டப்படி கத்தியை எடுத்தான்;
அரசன் நெஞ்சில் குத்தினான்;
அடியவன் வேடத்தில் வந்த
அந்தக் கொடியவன் செயலை எதிர்க்காது,
அசையாது நின்றார்,
அப்படியேத் தரையில் சாய்ந்தார்;

வந்தவர் மேல் சந்தேகக்கண் வைத்து,
வாசலில் காவலுக்கு நின்றிருந்தத் தத்தன்
சத்தம் கேட்டு உள்ளே வந்தான்;
குருதியினிடையே அரசன் கிடப்பதைக்
கண்டான்; தன் வாள் உருவினான்;
அடியவர் வேடத்தில் வந்தக்
கயவனைக் கொல்லப் பாய்ந்தான்;
'தத்தா நில்' அரசன் ஆணையிட்டான்,
'அவன் நம்மில் ஒருவன், நம்மைப் போல் ஒருவன்,
அந்தச் சிவனின் அடியவர்களில் ஒருவன்,
சிவனடியார் வேடத்தில் இருப்பவனைச்
சிரச் சேதம் செய்வது கொடியப் பாவச்
செயலாகும்' என்று சொன்னார்;

                                                                        ( தொடரும் )

Thursday, December 1, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 2

சிவனடியார் வேடம் பூண்டால்
அவனடி பணிந்து நிற்பான்
அரசன் என்று அறிந்தவன் முத்தநாதன்;
அதனால் அவ்வேடமே அணிந்து,
அரசன் அருகில் சென்று,
கொன்று விட எண்ணினான்
கோழை முத்தநாதன்;


      மெய்யெலாம் நீறு பூசி
        வேணிகள் முடித்துக் கட்டிக்
      கையினிற் படைக ரந்த
        புத்தகக் கவளி யேந்தி
      மைபொதி விளக்கே யென்ன
        மனத்தினுட் கறுப்பு வைத்துப்
      பொய்தவ வேடங் கொண்டு
        புகுந்தனன் முத்த நாதன்.


அந்த நாளும் வந்தது;
தன் உடலெங்கும் சாம்பல்
தடவிக்கொண்டு,
தலை முடியைச் சுருட்டி
சடாமுடி அணிந்துக் கொண்டு,
திருநீறு பூசிக் கொண்டு,
தன் ஆடையில் ஒரு ஆயுதத்தை
மறைத்துக் கொண்டு,
மெய்ப்பொருளார் அரண்மனை நோக்கி
பொழுது சாய்ந்த பிறகு
புறப்பட்டான்;

வாயில் ஓம் நமசிவாய மந்திரம்
உரைத்துக்கொண்டு
வந்தவனை எந்த
வாயிற்காப்பாளனும்
வழிமறிக்கவில்லை, அவனை
வணங்கி
வரவேற்றனர்;
தடையின்றி உள்ளே செல்ல
தயக்கமின்றி அனுமதித்தனர்;

மெய்ப்பொருளாரின்
மெய்க்காப்பாளன் தத்தன்;
அரசனைக் காப்பதே
அவன் தன் கடமை என்று
அனுதினமும் எண்ணிச் செயலாற்றினான்;

அரசன் உறங்கச் சென்றபின்,
அரண்மனைக்குள் புகுந்தவனை
அந்தப்புரத்தில் நுழையமுடியாது
தடுத்தான் தத்தன்;
காவலன்
கண்ணுறங்கச் சென்ற வேளையில்
காண வந்தக் காலனைக் கொஞ்ச நேரம்
காத்திருக்கச் சொன்னான்;

                                                                        ( தொடரும் )