Wednesday, February 28, 2018

பொன்மாலைப் பொழுதில் 14

இப்போல்லாம் தினம் பல்துலக்குகிறேன்
தீவாளியோ பொங்கலோ மார்கழியோ
நாளெதுவாகினும் தினம் குளிக்கிறேன்.
எண்ணையில் ஊறவைத்துத் தலை சீவிக்கொள்கிறேன்.
அழகாய் உடுத்த ஆசைப்படுகிறேன்
இருப்பதை துவைத்துக் கசக்கி காயவைத்து
இடையிருக்கிக் கட்டிக்கொள்கிறேன்
இருப்பு ஏதுமில்லையென்றாலும் ஈகை செய்வதில்
முழுமனதோடு ஈடுபடுகிறேன்
மெல்லிசைப்பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்கிறேன்
துள்ளிசைத் தகடுகளைத் தூக்கியெறிந்து விட்டேன்
நல்லவனாகவே இருந்து விடுகிறேன்,
இன்னொருமுறை ... இன்னும் ஒரு முறை...
மெல்..ல ... தலைசாய்த்து ... கண் சிமிட்டி ...
கன்னத்தில் குழி விழ ... ஒரு  சிறு புன்னகை

ஐயையோ நெஞ்சு அலையுதடி ஆகாசம் இப்போ வளையுதடி

***

இப்பொழுதெல்லாம் என் இதயம்
எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது.
கண் திறந்திருந்தாலும் மூடியிருந்தாலும்
காணும் காட்சி உன்முகமாகவே இருக்கிறது.
தூரத்திலிருந்த வட்ட நிலவு வான் விட்டு
என் ஐன்னல் பக்கம் வந்து நின்றுப் பேசுகிறது.
இதுநாள்வரை தழுவிக்கிடந்த உறக்கம்
எனைவிட்டு எங்கோ தூரம் சென்று விட்டது.
என் சிந்தனை, செயல், சொற்கள் எல்லாம் இன்று உனைச்சுற்றியே இருக்கையில்
நேற்று வரை வேறென்னெல்லாம் செய்து வந்தேன் என்று எனக்கேப் புரியாதிருக்கிறது
எல்லாம் காதல் செய்த மாயமோடி ?
நீ ஆனாய் என் உயிரடி, சந்தேகமா ?
ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்துக் கேளடி

***

கவலை எதற்கு கலக்கம் எதற்கு
எல்லாம் மாறும் என்பது தெரியாதா உனக்கு
ஏறியது இறங்குவதும்
இறங்கியது ஏறுவதும் இயற்கை
இதற்கிடையில் எதற்கு அழுகை ?
வென்றால் குதிக்காதே
தோற்றால் குமுறாதே
முயன்று செய் எதிர்பார்த்து ஏமாறாதே
உனைச் செய்யவைப்பவன் அவனே
நீ வெல்ல வழிசெய்துத் தருபவன் அவனே
தோற்றாயெனில் குழிவெட்டியவன் அவனே
உனக்கென்று ஒரு காலம் உண்டு
அக்காலத்தில் உனக்கு வெற்றி உண்டு
அதுவரை காத்திரு பொருமை கொண்டு.
கனவு கண்டிரு
கடவுளைத் துதித்திரு
காலம்கனியும் வரை கண்திறந்துக் காத்திரு
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே

***

Wednesday, February 21, 2018

கலாட்டா கல்யாணம் 4



சசி தன் வீட்டில்

'ஜோசியரே ... நான் சசி பேசுறே ... '

'சொல்லுங்க தம்பி, செங்கல்பட்டு வந்திருக்கீங்களா ? '

'பொண்ணு பாத்துட்டீங்கன்னா வரேன் ... ரெடியா?'

'எங்க தம்பி பொண்ணே கெடைக்கமாட்டேங்குது'

'எனக்குத் தெரிஞ்சவங்க ... அவங்க பொண்ணு இருக்கு ... அப்பாம்மாட்ட அழைச்சுக்கிட்டு போய் காமிங்க … ஒங்க கமிஷன் பத்தியும் நான் சொல்லிட்டேன்'

'ஹிஹிஹி'

'நாளைக்கு இல்லே நாளை மறுநாள் உங்களைப் பார்க்க வர்றாங்க, வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போங்க, சரியா?'

'காதலா தம்பி ? என்னோட அட்ரஸ் குடுத்துருங்க ... நான் ஒங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போயி பேசி முடிச்சுடறேன்'

'பேசு முடிக்கறதை அப்புறம் பார்ப்போம்... காட்டிட்டு மட்டும் வாங்க'

'சரீங்க தம்பி'

-------------

சசி அலுவலகத்திலிருந்து

'சுகன்'

'என்னடா ஆபிஸ்ல ஞானி சார் கிட்ட பேசிட்டியா ?'

'ஞானி இல்லேப்பா யோகி, பேசிட்டே, எனக்கு 30% நல்ல பொண்ணு ஒன்னு வேணுமே'

'30% ? பொண்ணு ? நான் இருக்கேனே போதாதா?'

'நீ 50% பா, எனக்கு 30% போதும்'

'ஒன்னும் புரியல ?'

யோகி சாரிடம் பேசியதெல்லாம் விவரித்தான் சசி.

'சசி, என்னோட ப்ரெண்ட் ஒருத்தி இருக்கா, தான்வி ன்னு பேரு, அடங்காப்பிடாரி'

'ஓகே, கொஞ்சம் கர்வம், கொஞ்சம் பணக்காரத் திமிர், ஸ்டைல், எதிர்த்து எதிர்த்து பேசனும்'

'இதெல்லா அவளோட பேசிக் க்வாலிட்டீஸ்'

'வெரிகுட்'

'நாளைக்கு அவ செங்கல்பட் போகமுடியுமா ... கேட்டுச்சொல்லு'

-------

செங்கல்பட்டு ... ஜோசியர் வீடு

'ஹலோவ் ஜோசியரே '

'யாரும்மா?'

'தான்வி ... சசி அனுப்புனாரு ... அவரு வீட்டுக்கு ... போவோமா ?'

'அப்பாம்மா வரலியாம்மா?'

'இந்தாங்க 100 ரூபா ... 5 நோட்டு ... புத்தம் புதுசு ... போலாமா?'

----------

செங்கல்பட்டு ... சசியின் வீடு

'வாங்க ஜோசியரே ... நல்லா இருக்கீங்களா ... பொண்ணு கெடச்சுதா ?' என்று ரகுராமன், சசியின் அப்பா, கேட்க

'கையோட கூட்டிட்டு வந்திருக்கே'

'எங்கே ? ஏங்க முன்னாலேயே சொல்ல மாட்டீங்களா .... கமலம்' தன் மனைவியை அழைத்துக்கொண்டே ரகுராமன் உள்ளே செல்ல,

பின்னாலேயே ஜோசியர் தொடர ...

கொஞ்சம் நேரம் கழித்து ... உள்ளே நுழைந்த தான்வி, 'ஹலோவ்' திறந்திருந்த கதவில் டொக்கினாள்.

'யாருங்கவேணும்?' என்று ரகுராமன் கேட்க

'இவங்க தான் பொண்ணு ஜானகி' என்று ஜோசியர் சொல்ல,

'தான்வி, பையன பாத்துட்டு வரனும்னு அப்பா சொல்லிட்டிருந்தாரு, அதா வந்தேன், சசி தானே பையன் ? இருக்கானா?'

சுருக்கென்றிருந்தது ரகுராமனுக்கு. இருந்தாலும் நம்ப காலமில்லை. 2018 லில்  இருக்கோம் என்று ஞாபகப்படுத்திக்கொண்டார்.

'உள்ளே வாம்மா, இப்படி உட்காரலாம்'  என்று ரகுராமன் சொல்லிக்  கொண்டிருக்கும்போதே தான்வி அங்கிருந்த இருக்கையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ரகுராமன் ஜோசியரைப் பார்க்க, அவர் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தார்.

அதற்குள் உள்ளிருந்து கமலம், சசியின் அன்னை வர, 'சசியை பையன் பார்க்க' என்று ரகுராமன் சொல்லிக்கொண்டே, 'தான்வி ன்னா என்னம்மா அர்த்தம்?' என்று கேட்க

'யாருக்குத் தெரியும், மாத்தலாம்னு கூட யோசிச்சே, ஆனா ப்ரெண்ட்ஸ் லா ஷார்ட்டா ஸ்வீட்டா இருக்கு ன்னு சொன்னாங்க, சரின்னு விட்டுட்டே'

'அப்பாம்மா வரலியாம்மா?' கமலம் ரகுராமனைப் பார்த்துக்கொண்டே தான்வியிடம்  கேட்க

'நான் மொதல்ல ஓகே சொல்லணும்ல, கல்யாணத்துக்கு வந்துருவாங்க, சசியைக் கூப்பிடுங்களேன் பார்த்துட்டுக் கெளம்புறேன்'

'சசி … சென்னைல இருக்கா, காஃபி கொண்டுவா' மனைவியைப் பார்த்துச் சொல்ல

'காஃபில்லா வேணா' என்று இடைமறித்து, 'ஜில்லுன்னு என்ன கெடைக்கு?' என்று தொடர்ந்தாள்.

'மோர் குடிக்குறியாம்மா?'

'மோர் ? அப்டின்னா?'

'வீட்டுல கூடமாட வேலை செய்யமாட்டியா ? இந்த மோர் குடிச்சா ...' கமலம் பேசிக்கொண்டிருக்கும்போதே தான்வி இடைபுகுந்தாள்.

'நான் வெரி சோஷியல், ப்ரெண்ட்ஸ், பார்ட்டி, காலைல ஒருத்தன் பிக்கப் பண்ணுவான், நைட்டு ஒருத்தன் ட்ராப் பண்ணுவான்'

'பேஸ் பேஸ் ... பார்ட்டி ல்லா போறேன்னா ... உனக்கு நல்ல பாட்டு பாட வருமே கரெக்ட்டா?' ரகுராமன் கேட்க

'ராம், எல்லா பார்ட்டிலேயு என்னோட குத்தாட்டம் தான் மெயின் அட்ராக்சன்'

ரகுராமன் கமலம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

'சமைக்கத் தெரியுமாம்மா ஒனக்கு ?' என்று கமலம் கேட்டாள்

'வீட்ல சமைக்க ஆளிருக்கு,  ரோட்டுல ஒவ்வொரு மூலையிலும் ஹோட்டல் இருக்கு, கையில பணமிருக்கு’

'கல்யாணம் ஆனா சேர்ந்து இருப்பியா இல்லே ...' ரகுராமன் ஒரு ஐயத்துடன் கேட்க

'லுக் மிஸ்டர் … ராம், இன்னும் நான் கல்யாணம் பண்ணனுமா, வேணாமா ன்னு முடிவெடுக்கலே, சசி அதுக்குத் தகுதியானவனான்னு இன்னும் தெரியலே ... வாட்டவர் ... தனியா இருந்தா பெட்டெர்னாலும் வேலை செய்யனும், காஃபி போடணும், சமைக்கணும் இதுக்கெல்லா செலவில்லாம ஆளிருந்தா நல்லதுதானே ... என்ன சொல்றீங்க?' என்று எதிர் கேள்வி கேட்டு, தான்வி தொடர்ந்தாள் ..... 'பை த பை சசி க்கு எவ்ளோ சம்பளம் ?'

'ஒங்க தேவையோட கம்மியாத்தான் இருக்கும்'

'பாஸ்போர்ட் லா இருக்குல்ல அவன்கிட்ட?'

ரகுராமன் ஏதும் பேசாது எழுந்துகொண்டார்.

'ஓகே ராம் நான் யோசிச்சி சொல்றேன், வேணாம்னு சொல்லிட்டா டோன்ட் பீல் பேட், பை கமலம்'

கமலம் திகைக்க,
ரகுராமன் ஜோசியரைப் பார்த்து முறைக்க,
தான்வி அங்கிருந்துக் கிளம்பினாள்.

'சசிக்கு கல்யாணமே ஆகலைன்னாலும் பரவாயில்லை ஆனால் இப்படியொரு பெண், வேண்டவே வேண்டாம்' என்ற நிலைக்கு வந்தனர் அவன் பெற்றோர்.

'ஜோசியரே … அனுப்பிட்டு வாங்க' என்று ரகுராமன் அழுத்திச் சொன்னது ஏன் என்று ஜோசியருக்கு நன்றாகவேப் புரிந்தது.

-----

தான்வி தான் செய்த கலாட்டாவை சுகன்யாவிடமும் சசியிடமும் விளக்கினாள்.

'சுகன் இன்னொரு ரெண்டு மூணு நாள் கழிச்சி ஒங்க அப்பா அம்மாவை சசியோட அப்பா அம்மாவைப் போய் பார்க்கச் சொல்லு, கண்டிப்பா ஒத்துப்பாங்க, கவலை வேண்டாம்'

'தேங்க்ஸ் தான்வி' என்று சுகன் சொல்ல

'சாரி தான்வி உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்' என்று சசி சொல்ல

'சேச்ச்சே நான்தான் ஒங்க அப்பா அம்மா அந்த ஜோசியர் எல்லாரையும் கலாட்டா பண்ணிட்டே, இன் பாக்ட் நான்ஒங்க கல்யாணத்துக்கு வர முடியாது இப்போ, அவங்களுக்கு அப்புறம் நம்ப ப்ளான்லா தெரிஞ்சிடும்'

-----

மணமக்கள் திட்டமிட்டப்படி, பெற்றோர் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி, திருமணத்திற்கு நிச்சயித்து, சசி சுகன்யாவின் திருமணம் மிக விரைவில், தேதி அறிவிக்கப்படும்; மறக்காமல் கலந்து கொள்ளவும்.

-சுபம்-

Monday, February 19, 2018

கலாட்டா கல்யாணம் 3


முன்கதைச் சுருக்கம்: சசி ATM ல் சுகன்யாவைப் பார்த்தான். கண்டதும் காதல். காதலுக்கு வீட்டில் சம்மதம் வாங்குவது எப்படி என்று சசி யோசிக்கலானான்.

x-x-x-x-x

சசியின் அலுவலகம்

அலுவலகத்தில் கூட பணிபுரியும் யோகியை சந்தித்துத் தன் காதலுக்கு வீட்டில் சம்மதம் வாங்குவது பற்றி பேச எண்ணி அவரைத் தொலைபேசியில் அழைத்தான், சசி. பார்த்தவுடன் ஒரு மரியாதை தோன்றுமே, நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை, பருத்தி ஆடை, ஆடம்பரமில்லாது அமைதியான  உருவம், அவர்தான் யோகி. தொலைபேசியில் அழைத்த கொஞ்சநேரத்தில் யோகியே சசியைத் தேடி வந்தார்.

'என்ன சசி, மிஸ்டு கால் குடுத்தீங்க?'

'அதுஒண்ணுமில்ல சார் ...'

'ஏங்க ஆபிஸ் போன்ல தானே கூப்பிடுறீங்க, அப்புறம் ஏன் மிஸ்டு கால் கொடுக்கறீங்க ?'

'சார் ... மிஸ்டு கால் லா ஒண்ணுமில்ல சார் ... டக்குன்னு கட்டாயிடுச்சி'

'சரி எதுக்குக் கூப்டீங்க?'

'சார் ... நீங்க ஒரு யோகி ... பலவிதப் பிரச்சனைகளை சமாளிச்சிருப்பீங்க, நல்லவரு, வல்லவரு'

'காதல் என்ற மாய வலையில் மாட்டிக்கிட்டீங்க, கரெக்ட்டா ?'

'எப்டி சார்?'

'பின்ன உளர்றீங்களே, தண்ணி போட்டுருக்கணும், இல்லேன்னா கண்ணு மண்ணு தெரியாம காதல்ல மூழ்கியிருக்கணும்'

'தண்ணி பழக்கம் கெடையாது ன்னு ஒங்களுக்குத் தெரியும்'

'செலவு அதிகமாகுமே'

'சார் ... வாங்கித் தர்றாங்க சார் ... நான்தான் குடிக்கறதில்லை '

'சரி எதுக்குக் கூப்டீங்க ? பணம் வேணுமா ?'

'சார் ... பணம்லா இல்லே சார் ... காதல் சம்மந்தமா கொஞ்சம் ஐடியா சொல்லுங்க சார்'

'நான் யோகிங்க, வாழ்க்கைத்தத்துவம் கேட்டீங்கன்னா ஏதாவது சொல்லலாம், காதல்ல நான் என்ன ஐடியா தர முடியும்?'

'சார் ... எங்க வீட்டுல காதலுக்கு ஒத்துக்கமாட்டாங்க, இருந்தாலும் காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதம் வாங்கறது?'

'அப்பாம்மா சம்மதம் முக்கியம்ன்னு நெனச்சீங்கன்னா ... காதலுக்கு அவங்க ஒத்துக்கமாட்டாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டே ஏன் காதலிக்கறீங்க?'

'சார் ... இப்போ  கல்யாணத்துக்கு எப்படி சம்மதம் வாங்கறது ... அதுக்கு வழி சொல்லுங்க சார்?'

'உம்ம்ம் ... இருகோடுகள் வழி ஃபாலோ பண்ணுவோமா?'

'என்னோட வலி தீருமா ?'

'இப்போ தீரும், ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியும் அடி இருக்கும்?'

'அது எல்லாருக்கும் விழுகிறது தானே சார், எனக்கு மட்டும் ஸ்பெஷல் லா ?'

'தெரிஞ்சிக்கிட்டே குதிக்கறீங்க ?'

'ஆமா சார்'

'கையும் காலும் மூக்கும் கொண்டு ஆடவந்தக் காரணம் ஆடித்தானே சேர்த்து வச்ச பாவம் யாவும் தீரணும் '

'நீங்க யோகி சார் … ஒண்டிக்கட்டை ... தாமரை மேல் தண்ணீர்னு வாழுறீங்க .... நம்மால முடியுதா ? அந்த இருகோடுகள் பத்திச் சொல்லுங்க சார்'

'சொல்றேன், ஒங்க வீட்டுல எப்டி ஜாதகம் பார்ப்பார்களா? '

'வெறும் மனப்பொருத்தம் தான் சார்'

'அப்புறம் என்ன, எங்க மனம் பொருந்தியிருக்குன்னு சொல்லிடுங்க'

'அவங்க பாத்து அடக்கஒடுக்கமா, சொல்பேச்சைக் கேட்குற பொண்ண கட்டிவைக்கணும்னு எதிர்பார்ப்பாங்க சார்'

'அடக்கஒடுக்கமா, சொல்பேச்சைக் கேட்குற ? ஒங்களுக்குக் கல்யாணம் பண்ற ஐடியா அவங்களுக்கு இல்லியோ என்னவோ?'

'சார் நான் காதலிக்கிற சுகன்யாவக் கல்யாணம் பண்ணிக்க என்ன பண்ணனும்?'

'சொல்றேன், வீட்ல எப்படி ஜோசியர் பொண்ணைக் காமிப்பாறா இல்லே கல்யாண ப்ரோக்கர் வருவாரா ?'

'ஜோசியர் ஒருத்தர் இருக்காரு சார், எனக்கு அவரைத் தெரியும்'

'குட், இப்போ இந்த சுகன்யா, ஒரு 60% நல்ல பொண்ணுன்னு வச்சிக்கலாமா ?'

'சார் ... 50% நல்ல பொண்ணு சார்'

'அவ்ளோதானா ? '

'சார் ... நீங்க தானே சார் அதிகமா எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணக்கூடாதுன்னு அடிக்கடி சொல்வீங்க ? '

'சரி, 50% நல்ல பொண்ணு, ஒரு 30% நல்ல பொண்ண ஜோசியர் கிட்ட ஒங்க அப்பாம்மாவுக்குக் காட்டச் சொல்லுவோம், பொண்ணை ஒங்க வீட்டுல ரகளை பண்ண சொல்லுவோம், அப்பாம்மா முடியாது ன்னு சொல்லுவாங்க, மூட் அவுட் ஆவாங்க, அடுத்து ஒங்க 50% பொண்ணு விவரத்தை கொடுத்துக் காட்ட சொல்லுவோம், வேற பொண்ணே இல்லீங்க ன்னு ஜோசியரை சொல்லச் சொல்லுவோம், கெடச்சது போதும் ன்னு நீங்க ஒத்துக்கறமாதிரி ஓத்துக்கோங்க ... ஓகே வா?'

'ஓகே மாதிரிதான் சார் இருக்கு, அந்த 30% ... ஒங்களுக்கு யாராச்சு தெரியுமா?'

'என்னைப் பாத்தா உங்களுக்கு என்ன பொம்பளை ப்ரோக்கர் மாதிரி தெரியுதா?'

'அதில்ல சார்'

'ஆரம்பத்துல நீங்க ஒரு யோகி, நல்லவரு வல்லவரு ன்னு சொன்னீங்க, வேலை முடிஞ்ச உடனே ....'

'சாரி சார், நான் பார்த்துக்கறேன், நன்றி சார்'

'வாழ்க வளமுடன்'



[ கல்யாணம் ... இன்னும் முடியலை ]

Saturday, February 17, 2018

கலாட்டா கல்யாணம் 2


recap: சசி ATM ல் சுகன்யாவைப் பார்த்தான். கண்டதும் காதல். கனவுகளோடு பலவோடு கதவு திறக்கையில் எதிர்வீட்டில் ...

x-x-x-x-x

எதிர்வீட்டுக்கு சுகன்யா குடிவருவதைப் பார்த்ததும், சசியின் மனதிற்குள் பத்து கதவுகள் ஒன்றன் பின் ஒன்றாய்த் திறந்து கடைசியில் சுகன்யா நின்று இவனைப் பார்த்துச் சிரித்து வெட்கிப்பது போல... அதே தாங்க ... பாரதிராஜா படத்துல ... தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் ... அந்த எபெக்ட்;

'ஹலோவ்' சசி பேசத்தொடங்கினான்.

'ஹலோ’

‘புதுசா குடிவந்திருக்கீங்களா ?'

'ஆமா இன்னிலேர்ந்து'

'ஞாபகமிருக்கா ?'

'நல்லா ஞாபகமிருக்கு, இந்த வீடுதான்'

'அட அதில்லேங்க, நேத்து ATM ல பார்த்தோமே .... சசி'

'இல்லே சுகன்யா ... சுகன் ன்னு கூப்பிடுவாங்க'

'என்னோட பேரு சசிங்க ... சுருக்கமா சசீந்திரன்னு கூப்பிடுவாங்க'

'யு மீன் .... பேரு சசீந்திரன் ... சசி ன்னு கூப்பிடுவாங்க'

'அதானே நான் சொன்னே, இல்லியா?'

'நைஸ் மீட்டிங்'

'இருங்க நான் காஃபி போட்டுக் கொண்டுவர்ரேன், ஒன் நிமிட்'

'தேங்க்ஸ் ... நான் இப்போதா குடிச்சிட்டு வந்தேன், பத்து நிமிசத்துல ஆபிசுக்குக் கெளம்பணும், அப்புறம் பார்ப்போம்'

'எங்கே போகணும்?'

'தரமணி'

'நானும் ...' சசி முடிப்பதற்குள் சுகன்யா உள்ளே சென்றிருந்தாள்;

அய்யய்யோ நெஞ்சு கெறங்குதடி
ஆகாயம் இப்போ வலையுதடி

அவன் நெஞ்சத்து எண்ணங்களை உள்வாங்கி ரேடியோ பாடத்தொடங்கியது.

---------

இப்படியாக இருவரும் ... ஒரே இடத்தில் எதிர் எதிர் வீட்டில் வசித்து ... ஒரே இடத்தில் தரமணியில் வேறு வேறு கம்பெனியில் பணி புரிந்து ... தம் தமது வண்டியில் ஒன்றாய்ச் சென்று ..... முடிந்தவரை ஒன்றாய்த் திரும்பி வந்தனர்;

அடுத்தென்ன ... காதல் தான்.

'சுகன் ... ஒருகவிதை'

'சொல்லேன்'

     'அலையாய் நான் படகாய் நீ 
     ஆடித்திரிவோமா ?
     மழையாய் நான் முகிலாய் நீ 
     கொட்டித் தீர்ப்போமா ?
     குரலாய் நான் குயிலாய் நீ 
     பாடிப் பறப்போமா ?
     உடையாய் நான் இடையாய் நீ 
     ஒட்டிக்கிடப்போமா ?
     விதையாய் நான் நிலமாய் நீ 
     செடியாய் முளைப்போமா ?
     கவியாய் நான் தமிழாய் நீ 
     கவிதை புனைவோமா ?
     கண்ணன் நான் ராதை நீ 
     காதல் செய்வோமா ?'

'லவ்லி, சசி, ஐ லவ் யு'

'ஐ டூ ... சுகன்'

'அடுத்து ?'

'கல்யாணம் பண்ணிப்போமா ?'

'இன்னும் கொஞ்சம் காதலிப்போமே சசி'

'தனித்தனியா இருக்கணும், ரெண்டு பேரும் வாடகை தரணும், வேஸ்ட் இல்லியா?'

'அடப்பாவி, அப்போ வாடகை மிச்சப்படுத்தத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா?'

'அப்டி ஏன் யோசிக்கறே நீ, இப்போ ஒரு வீடு வெக்கேட் பண்ணிட்டா வேற யாராவது வாடகைக்கு வரலாம், அப்டி வர்றவங்களுக்காக யாராச்சும் காத்திருக்கலாம் ... அவங்களும் காதலர்களா மாறலாம் … இப்டி என்னென்னவோ நடக்கலா … இல்லியா ?'

'சரி ஒங்க வீட்டுல காதலுக்கு ஒத்துப்பாங்களா?'

'ஒதப்பாங்க, சமாளிப்போ, ஒங்க வீட்டுல ?'

'பிரச்சனை இருக்காது சசி, எப்டி சமாளிக்கப்போறே ஒங்க வீட்டுல?'

'தெரிஞ்ச ஒரு சார், யோகி இருக்காரு ஆபிஸ்ல, அவர்ட்ட ஐடியா கேக்குறே, ஏதாச்சும் சொல்லுவாரு'

'ஓகே, பேசிட்டுச் சொல்லு, போலாமா ? ஓலா புக் பண்ணே ?'

'நடந்துப் போவோமே, ஈவினிங் வாக் ஈஸ் குட் பார் ஹெல்த்'

'டேய், நான் பணம் தரேன், வாப்பா'

'ஆட்டோ ரெடியா இருக்கே, போலாமா? '

'டின்னர் வாங்கித்தறியா? ஆட்டோல போகலாம்'

'இதோ ஓலா புக் பண்றே'

'நாயி, கல்யாணம் ஆகட்டும், ஒன்னைப் பாத்துக்குறேன்'

'ஹிஹிஹி'

[ கல்யாணம் ... இன்னும் முடியலை ]

Thursday, February 15, 2018

கலாட்டா கல்யாணம் 1




இதோ நமக்கு எதிர்த்தாப்புல கருப்புக் கண்ணாடியோட கொஞ்சமா மீசை, தாடி ட்ரிம் பண்ணிக்கிட்டு, கருப்பு தான், இருந்தாலும் களையா இருக்குறமாதிரி நெனச்சுக்கிட்டு, ஸ்டைலா நிக்குறாரே ...

இவருதாங்க சசி, என்ற சசீந்திரன். பெரிய பண்ணை ... பல தலைமுறைக்கு முன்னால. இப்போ ஒன்னும் இல்லே. அட்லீஸ்ட்  அப்படித்தான் அவரு வெளியில சொல்லிக்கிட்டுத் திரியறாரு. நல்ல பையன். காசுல கெட்டி. 5 பைசா வீணா செலவு பண்ண மாட்டாரு. கெட்ட சகவாசமெல்லாம் கெடையாது. அதான் பணம் செலவு பண்ணமாட்டாருன்னு சொல்லிட்டேனே, அப்புறம் எப்படி இருக்கும் கெட்ட சகவாசம்.  MCA படிச்சிமுடிச்சிட்டு ஏதோ கம்ப்யுட்டர் கம்பெனில என்னவோ வேலை பாத்துகிட்டு, பணம் சேத்து வச்சி, வேறெதுக்கு ... கல்யாணம் கட்டிக்கத்தான், அதுவரைக்கும் காதலிக்க ஆள் தேடுற வேலையும் சைடுல பார்க்கறாரு.

ஒருநாள் ... நம்ப சசி ஆபிஸ்லேர்ந்து கிளம்பி, வீட்டுக்கு வர்ற வழியில, பணம் எடுக்கலாம்னு ஒரு ATM சென்டருள் நுழைய, கதவு ஆட்டோமாட்டிக்கா மூடத்தொடங்க, கதவு மூடுவதைக் கவனிக்காது போன் பேசியபடியே பின்னாலேயே நுழைந்தாள் சுகன், என்ற சுகன்யா. மயிரிழையில் மூடும் கதவைப் பிடித்து நிறுத்தி அவள் உள்ளே நுழைய வாகாய்த் திறந்துவைத்தான் சசி.

'தேங்க்ஸ்' என்றவள் சொல்ல, சின்ன சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டான்.

இருவரும் தங்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தம்தமது வழியே சென்றனர்.

---

வண்டியில் செல்லும் போதெல்லாம் அந்த 'தேங்க்ஸ்' ஒலி மட்டும் சசியின் காதினுள் ஒலித்தப்படியே இருந்தது. கனவுலகத்தில் மேகங்களுக்கிடையில் அருகில் அந்தப்பதுமை அமர்ந்திருக்க தேர்மேல் பவனி வந்துகொண்டிருந்த நம் சசியை 'சாவுகிராக்கி எப்டிப் போவுது பாரு?' என்று ரோட்டில் ஒருவர் திட்டிய சொல் மண்ணுலகிற்கு இழுத்து வந்தது. அவருக்குத் 'தேங்க்ஸ்' சொல்லி விட்டுத் தன் பாதையில் தொடர்ந்தான். சிக்னலில் வண்டியை நிறுத்த பக்கத்தில் பார்த்தால் .... சுகன்யாவும்  சிக்னல் ல பக்கத்துல வண்டிய நிறுத்துனா ன்னு நான் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்தீங்கன்னா தப்புங்க; ஏன்னா பக்கத்துல யாருமில்ல. நம்ப சசியோட மனசுல 'அவளும் இப்போ இங்கே இருந்தா நல்லா இருந்திருக்கும்ல' அப்டின்னு ஒரு நெனப்பு, 'அவ பின்னாலேயே போயிருக்கலாமோ' என்ற எண்ணம்.

சசி இதற்கு முன்னால், காதலென்று அவற்றைச் சொல்லமுடியாதென்றாலும், சில பல பெண்களோடு பழகியிருக்கிறான். கல்லூரி வாழ்க்கையின் போது பஸ்ஸில் கூடவே பயணித்த பவானி, பக்கத்து வீட்டு ஹேமா, என்று பலரோடு பேசியிருக்கிறேன். இருந்தாலும் மின்னல் வேகத்தில் ATM மிலும் தன் நெஞ்சிலும் நுழைந்து மறைந்துவிட்டவளை, பணத்தையும் இதயத்தையும் ஒருசேர எடுத்துச் சென்றவேளை இனி எங்கே எப்போது காண்பேனோ என்று எண்ணியபடியே தன் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தான். ஒருநாளைக்கு எவ்வளவு மனிதர்களைப் பார்க்கிறோம். இப்படியா எல்லாரையும் நெனச்சி ஏங்குறோம் ? இதுதாங்க ‘எதுஎது எப்பப்போ நடக்கணுமோ அதுஅது அப்பப்போ நடக்கும்’னு சொல்லுவாங்க. கண்ணைத் திறந்து கொண்டே கனவு பல கண்டபடியே காலை விடியும்வரை கண் திறந்திருந்தப்படியே கட்டிலில் கிடந்தான், நம் கதையின் நாயகன்.

யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டது. 'அவளாயிருக்குமோ, ஆனா அவளுக்கு வீடு எப்படி தெரியும், ஒருவேளை இந்த ஆண்டவன் ... ஆண்டவன் ... ன்னு சொல்றாய்ங்களே .... அவரு ஏதாச்சு மாஜிக் பண்ணி ... ' இப்படியே சசி அவளைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கையில் கதவு மீண்டும் பலமாய்த் தட்டப்பட, திறந்து யாரென்று பார்த்தான்.

'பால் பாக்கி 1200/-, தர்றீங்களா? காலை நேரம், நாலு எடத்துக்குப் போகணும், கொஞ்சம் சீக்கிரம்' பால்காரர் படபடவென்று பேசியபடியே நிற்க, நேற்று இரவு எடுத்தப்பணத்தில் அவருக்குக் கொடுக்கவேண்டியதைக் எண்ணிக்  கொண்டிருக்கையில், பூட்டியிருந்த எதிர் வீட்டு வாசலில் ... தொடைச்சி ... கோலம் போட்டு, சுப்ரபாதம் பாட்டு பாடிக்கிட்டே ... ன்னு நா சொல்லுவேன்னு எதிர்ப்பாத்தீங்கன்னா ... நீங்க நினைக்கிறது தப்பு; இப்போல்லாம் யாருங்க கோலம் போடுறாங்க, சுப்ரபாதம் கேட்குறாங்க; எதிர்த்த வீட்டு வாசல்ல பால் பாக்கெட் மட்டும் கெடக்குது. 'யாரு வந்திருக்காங்களா?' என்று கேட்டபடியே பணம் கொடுத்தான். 'தெரிலீங்க, இன்னிலேர்ந்து பால் போடச் சொன்னாங்க, போட்டேன், வரேங்க' என்று சொல்லிவிட்டுப் பால்காரர் கிளம்பினார்.

சிறிது நேரத்தில் ஒரு ஓலா வந்து நிற்க அதிலிருந்து இரண்டு பெரிய சூட்கேஸ் இறக்கப்பட்டு வாசலில் வைக்கப்பட்டது, 'தேங்க்ஸ் ண்ணா ' என்று சொல்லிக்கொண்டே அவள் வீட்டைத் திறக்க .... 'தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்' அந்த ஒரு வார்த்தை மட்டும் சசியின் மூளையுள் நுழைந்து எல்லா நரம்புகளிலும் மோதி அவனைக் கதவை நோக்கித் தள்ளியது.  படாரென்று தன் வீட்டு கதவைத் திறந்து யாரென்று பார்த்தால் ....

[ கல்யாணம் ... இன்னும் முடியலை ] 

Monday, February 12, 2018

மேகா 6



recap: மும்பையில் வசிக்கும் சுந்தர் சென்னையிலிருந்த வந்த மேகாவை விமான நிலையத்தில் பார்த்து, தன்னோடு தங்கிக்கொள்ள அடைக்கலம் தந்தான். அவளின் ஒவ்வொரு செயலிலும் ஈர்க்கப்பட்டும், காதல் கல்யாணம் என்று வாழ்க்கையின் ஓட்டத்தில் சேர்ந்துக் கொள்ளத் தயங்கினான். மேகா மும்பையிலிருந்து திரும்பிச் சென்று ஒருமாதத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மும்பை வந்து சுந்தரோடு தங்கினாள். காதலை வெளியில் சொல்லமுடியாது தவிக்கும் சுந்தர், காதலைச் சொல்லுவான் என்று எதிர்பார்த்தாளோ மேகா ?  மும்பையில் வேலை முடித்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்பிச் செல்ல, குழப்பத்துடன் இருந்த சுந்தர் யோகியைச் சந்தித்து, வாழ்க்கை பற்றிக்கொஞ்சம் பேசி உணர்ந்துக் கொண்டான்.

x-x-x-x-x

யோகியின் கால்தொட்டு வணங்கி வீட்டிற்குள் நுழைந்தேன், வாழ்வென்றால் போராடும் போர்க்களமே என்று ப்ளேயர் பாடத்தொடங்கியது, மோதிப்பார்த்துவிடுவோம் என்று ஒரு வீரம் பிறக்க, ஒரு கவிதை எழுதி என் காதலை, காத்திருப்பதை கொஞ்சம் கோடிட்டுக் காட்டினால் என்ன என்றுத் தோன்றியது. வஞ்சியின் கொஞ்சு வதனத்தைக் கொஞ்சம் நினைத்தால் கொட்டுமே கோடிக் கவிதை என்ற நம்பிக்கையுடன் எழுத ஆரம்பித்தேன்.

இடை அளக்க வருவேனென்று
இமை மூடாது காத்திருக்காயோ !
விரலிணைத்து விளையாட வருவேனென்று
விழி மூடாது காத்திருக்காயோ !
காதல் கவிதைகள் சொல்லியுனை
பரவசப்படுத்துவேனென்று
கனவுகளோடு பலவோடு காத்திருக்காயோ !
கண்களால் அழைத்து, காதினுள் முத்தமிட்டு
கேட்டுத் தொட்டு, கேட்காது முட்டி ..... ம்ம்ம்
இன்னும் என்னெல்லாம் செய்வேனென்று எண்ணிக் காத்திருக்காயோ !
நானுந்தானடி காத்திருக்கேன்
நாளை வரும் நாளை எண்ணிக் காத்திருக்கேனடி
காத்திருந்து காத்திருந்துக் காலங்கள் போகுதடி

வாட்ஸாப்பில் அனுப்பிவிட்டேன். பதிலுக்காகக் காத்திருந்தேன். நெடிகள் யுகமாய்த் தோன்றும், வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை உருளும் என்றெல்லாம் படித்ததை அனுபவிக்க ஆரம்பித்தேன், சுகமாகத்தான் இருந்தது. போன் வேலைசெய்கிறதா என்று நொடிக்கொருமுறை சோதித்துப் பார்த்துக்கொண்டே, மொபைலின் டிங்க் ஒலிக்காகக் காத்திருந்தேன். கொஞ்சநேரத்திலெல்லாம் .... மனது திக் திக் என்று அடித்துக்கொண்டது. வந்த செய்தி மேகாவிடமிருந்தா ? படிப்போமா, காலம் தாழ்த்துவோமா ? என்ன எழுதியிருப்பாள் ? சம்மதமென்றா ? நான் அப்படியெல்லாம் உன்னை ... இருக்காது, இந்த பதில் இருக்காது, இருக்கக்கூடாது, இன்னும் என்னென்னவோ எண்ணங்கள் என்னுள்; யோகி சொல்லிய விசயங்களையெல்லாம் ஒருமுறை மனதுள் நினைத்துக்கொண்டு, மொபைலைத் திறந்தேன். மேகாவிடமிருந்துதான் பதில் வந்திருந்தது ... கவிதையில் ... கவிதையாக …ஒரு கவிதையே கவிதை எழுதியிருக்கிறதே ... அடடே ... என்றெண்ணிக்கொண்டே எழுதியதைப் படித்தேன்.

கண்ணா, இப்போது சொல்கிறாய்
காத்திருப்பதாய்க் கதறுகிறாய் 
கன்னியுன் அருகிலிருக்கும்போது
கல்மனதைத் திறக்க மறுத்தாய்
காளையின் மனசஞ்சலத்திற்குக் காரணம் தெரியாது,
காலத்தின் கையிலென்
காதலை ஒப்படைத்துவிட்டுக்
கனியும் வரை காத்திருப்பேன்
காதலா - உன் மேகா.

படித்தவுடன் கண்களில் ஈரம். மேகாவும் என்னைக் காதலிக்கிறாள் என்ற சந்தோசம், மனதினுள் விம்மத் தொடங்கினேன். இந்தக் கண்ணீர் என் நெஞ்சிலிருந்து பயத்தைக் கரைத்துவிடும் என்று தோன்றியது. எல்லாம் நடக்கவேண்டிய நேரத்தில் தானே நடந்தேறியது. மேகா போன்றொரு நல்லப்பெண் கிடைக்கும்வரை என்னுள் அந்த பயம் ஒளிந்திருந்ததோ என்று தோன்றல் எனக்கு, இல்லையென்றால் இந்த மும்பையில் நான் கெட்டுப்போயிருக்க பல வாய்ப்புகள் உண்டு. என் பயமே என்னை இத்தனை காலம் பாதுகாத்துவந்திருக்கிறது.

ஒருமுடிவோடு இரவோடு இரவாக சென்னை பறந்தேன். நான் சென்னை வரும் விஷயம் மேகாவிடம் சொல்லாது, திடுதிடுமென்று அவள் எதிரில் சென்று நிற்க திட்டமிட்டேன். நான் காதல் சொல்வேன் என்று எதிர்பார்த்து ஏமாந்தவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும், செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும், என்ன செய்யலாம் என்று யோசித்தப்படியே சென்னை வந்து சேர்ந்தேன்.

விமானநிலையத்திலிருந்தே நானே ஒட்டுச்செல்லும் கார் ஒன்று எடுத்துக்கொண்டு, ஹோட்டலில் அறையெடுத்து கொஞ்சநேரம் உறங்கி ... காலை ஒரு 11 மணிக்கு எங்கள் சென்னை அலுவலகம் வந்தடைந்தேன். கம்பெனியின் ஐடி கார்ட் இருந்ததால் உள்ளே நுழைவது ஒன்றும் சிரமமில்லை. நேராக இரண்டாவது தளம் வந்து, மேகாவின் இருப்பிடம் தேடினேன். நான் சென்னையில், அதே அலுவலகத்தில், அவள் இருப்பிடத்திற்கு அருகிலிருப்பதை அறியாமலேயே 'காலை வணக்கம், எப்படியிருக்கே ?' என்று எனக்கு வாட்ஸாப்பில் செய்தி அனுப்பியிருந்தாள். தமிழில் அலுவலகத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும் இடத்திலிருந்து ஒரு செல்பி எடுத்து லவ் யு என்றெழுதி பதிலனுப்பினேன். 'எங்கே இருக்கே, இந்த இடம் பார்த்தமாதிரி இருக்கே, வாவ், நானும் இன்று ப்ளூ நிறம்' பதிலனுப்பினாள்.

'ஓ அப்படியா ?' என்று சொல்லிக்கொண்டே அவள் எதிரில் வந்து நின்றேன்.

என்னை நேரில் பார்த்ததும் ஒரு சிலவிநாடி மலங்க மலங்க விழித்து, கண்ணில் நீர் நிறைய இருவரும் அந்த நிலையில்தான் இருந்தோம். கண்கள் பேச முடியாது கண்ணீர்த் துளி மறைக்க, கை விரல்கள் இறுக்கிக்கொண்டோம். மேகா என்னைக் கேண்டினுக்கு அழைத்துவந்தாள், ஒரு ஓரத்தில் அமர்ந்துக்கொண்டோம். அவள் என்னைப் பார்க்க, நான் அவளைப் பார்க்க .......

'சாரி மேகா ... காத்திருக்க வச்சிட்டேன்'

'அதான் வந்துட்டியே, அப்புறமென்ன ?' கண்ணைத் துடைத்துக்கொண்டே பதில் சொன்னாள்.

'சேம் பின்ச்' அவள் முழங்கையைக் கிள்ள, அழுத முகம் சிரித்தது.

'எப்படி கரெக்ட்டா ரெண்டு பேரும் இன்னிக்கு ப்ளூ கலர்?'

'இன்னிக்கு நீ என்ன கலர்ன்னு பார்க்க உன் வீட்டு வாசல்ல 8 மணியிலிருந்து காத்திருந்தேன்'

'அடப்பாவி' என் கையில் செல்லமாய்த் தட்டினாள்.

'ப்ளூ சுடி பார்த்ததும் கடைக்கு ஓடிப்போய் ப்ளூ சட்டை வாங்கிக்கிட்டு ஆபிசுக்கு வந்து ...'

'ரொமாண்டிக் ... எனக்காகவா ?'

'யெஸ்' அவள் கன்னத்தைத் தடவி தலை முடி கோதிவிட்டேன்.

'கல்யாணம் பண்ணிப்போமா ?' என் உள்ளங்கையில் முத்தமிட்டப்படியே கேட்டாள்.

'இங்கேயே தாலி கிடைக்குமா ? அதெல்லாமா உங்க கான்டின்ல விக்கறாங்க ?'

'சீ போய் அப்பாம்மா வை பார்த்து சம்மதம் வாங்குவோம் முதல்ல'

'நான் பார்த்து பேசிட்டேன்'

'அப்பாம்மாவை ? வீட்டுக்குப் போயிருந்தியா ?'

'யெஸ் ... சொன்னேன்ல'

'எப்போ சொன்னே ?'

'காலைல ... 8 மணிக்கு ... வீட்டு வாசல்ல காத்திருந்தே ... இப்போ சொன்னேனே'

'டிரஸ் கலர் பார்க்க காத்திருந்தேன்னு சொன்னே '

'காத்திருந்தேனா ...'

நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டே என் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்துக் கொண்டாள்.

'நீ கிஸ் அடிக்கிற மூடுல இருக்கேன்னு நினைக்கிறேன்'

மேலும் கீழும் தலையாட்டினாள்.

'வா எங்கேயாச்சும் வெளில போவோம்'

மேகா என் தோளில் சாய்ந்தபடியே வர ....... காருக்கு வந்து வெளியே கிளம்பினோம்.

'காத்திருந்தே ... ப்ளூ கலர் பார்த்துட்டே ... அப்புறம் என்னாச்சி ?' கேட்டுக்கொண்டே என் காதினுள் ஒரு முத்தம் தந்தாள்.

'நீ கிளம்பிப்போனதும் ... வீட்டுக்குள்ள போனேன் ... சுந்தர் மும்பாய் ன்னு சொன்னேன், அவங்களுக்கு ஏற்கனவே தெரியும் போலிருக்கு, நீ சொன்னியா ?'

'ஆமா ... ஏர்போர்ட்லேர்ந்து ஆரம்பிச்சி ... உன்னோட தங்கி ... என்னை நீ நல்லபடியா பார்த்துக்கிட்டது ... சூட்கேஸ் லாக் திறந்தது ... லஞ்ச் சாப்பிட்டது, டிரஸ் எடுத்துத்தந்தது … எல்லாம் எல்லாம்'

'நான் மேகாவை கல்யாணம் செய்துகொள்ள விரும்புறேன், உங்க சம்மதம் வேண்டும் ன்னு கேட்டேன்'

'என்ன சொன்னாங்க ?'

'உன்கிட்டே பேசிட்டு சொல்றேன்னாங்க'

ஒரு ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தோம். என் பையிலிருந்து ஒரு ப்ரஸ்லெட் எடுத்துத் தந்து, பல சினிமாக்களில் பார்த்திருப்பீர்களே, ஆண் ஒரு காலை முட்டி போட்டு மடக்கி 'வில் யு மாரி மீ ?' என்று பெண்ணைக் கேட்பானே, அந்தக் காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கண்ணில் நீர் வழிய என்னைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள், இதழில்.

சுபம்

Saturday, February 10, 2018

மேகா 5





recap: மும்பையில் வசிக்கும் சுந்தர் சென்னையிலிருந்த வந்த மேகாவை விமான நிலையத்தில் பார்த்து, தன்னோடு தங்கிக்கொள்ள அடைக்கலம் தந்தான். அவளின் ஒவ்வொரு செயலிலும் ஈர்க்கப்பட்டும், காதல் கல்யாணம் என்று வாழ்க்கையின் ஓட்டத்தில் சேர்ந்துக் கொள்ளத் தயங்கினான். மேகா மும்பையிலிருந்து திரும்பிச் சென்று ஒருமாதத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மும்பை வந்து சுந்தரோடு தங்கினாள். காதலை வெளியில் சொல்லமுடியாது தவிக்கும் சுந்தர், காதலைச் சொல்லுவான் என்று எதிர்பார்த்தாளோ மேகா ?  மும்பையில் வேலை முடித்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்ப விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.

x-x-x-x-x

'சுந்தர் கெளம்பட்டா ?'
'இன்னும் அரைமணி நேரம் இருக்கே'
'மூன்று நாள்ல சொல்லாததை, இன்னொரு அரைமணி நேரத்துல சொல்லப்போறியா ?'
'என்ன ... சாரி ஹாப்பி ஜேர்னி'
'சொல்ல வேறவொண்ணுமில்லையா ?'
புரியாது பார்த்தேன், மெல்லச் சிரித்தாள்.

அவள் தோளில் தட்டிக்கொடுத்தேன்.

'சுந்தர்'
'...'
'ஆக்சுவலி எனக்கு மும்பைல வேலையேயில்லை, நான் சும்மா இது பெண்டிங் அது பெண்டிங் ன்னு சொல்லிட்டு வந்தேன்'
'ஓ, ஏன் ?'
'உன்னை பார்க்கணும்னு, உன்னோட பழகனும்னு'
'தேங்க்யூ'
' நான் வந்தது சுந்தருக்கு சந்தோசம் தந்ததா இல்லே ஒரு வித்தியாசமும் இல்லையா ?'
'சே, மேகாவை இரண்டாவது முறை பார்த்தது, பேசிப்பழகியது பரம சந்தோஷம்'
'அவ்வளவுதானா ?'

புரியாது பார்த்தேன்.

'எனக்கு சுந்தரை ரொம்பப் பிடிச்சிருக்கு'
'எனக்கும்தான் ... மேகாவை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு, ஐ ... லைக்  யூ'

லவ் யூ என்று சொல்ல விருப்பம் இருந்தும், தைரியம் இல்லை. லைக் யு ... லவ் யு என்ன வித்தியாசம் என்று கேட்டால் ... என்னிடம் பதிலில்லை.

'போகட்டா ?'
தயக்கம், பேசமுடியாது தடுமாற்றத்தில் இருந்தேன்.
'கிளம்பட்டா ?' என்னை அணைத்து கன்னத்தில் ஒரு முத்தம் தந்து, நடக்கத் தொடங்கினாள்.

'மேகா' மெல்ல அழைத்தேன், திரும்பாது நடந்தாள். மீண்டும் அழைத்தேன். குரல் வெளியே வந்தால்தானே, எனக்குள்ளே கதறிக்கொண்டிருந்தேன். உள்ளிருந்து கையசைத்தாள். புரியாது பார்த்துக்கொண்டிருந்தேன். திரும்ப கை அசைக்கவேண்டுமென்பதும் தெரியாது நின்றிருந்தேன். ஏன் நான் இப்படியிருக்கிறேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

இதற்கெல்லாம் காரணமான ஃப்ளாஷ் பேக் கதையை … பயப்படாதீர்கள், சொல்லப்போவதில்லை. ஒரே ஒரு விஷயத்தைத்தவிர; என் சின்னவயதில், விவரம் புரியாத வயதில், ஏன் எதற்கு என்று ஏதும் தெரியாத வயதில், பலமுறை என் அன்னை என் கண்முன்னாலேயே அழுதிருக்கிறார்; தான் கல்யாணமே செய்திருக்கக்கூடாது என்று புலம்புவார். இந்தச் சொற்கள் தான் எனக்குள் பதிந்து கல்யாணம் என்பதையே வெறுக்கத் தொடங்கினேன்.

கொஞ்சநேரம் கழித்து, ஒருவாறு சமாளித்துக்கொண்டு, வீடு வந்து சேர்ந்தேன். அதற்குள் மேகாவிடமிருந்து 4 அழைப்புகளும், 2 'பை பை' செய்தியும், 3 'என்னாச்சி ?' செய்திகளும் வந்திருந்தன. தவறெல்லாம் என்னுடையதடி, எனை மன்னித்துவிடடி என்று சொல்லிக்கொண்டே, ஒரு நல்ல தூக்கம் எல்லாப் பிரச்சனைகளையும் புதுவழியில் சிந்திக்க உதவும் என்றெண்ணித் தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் அலுவலகம் சென்றேன். நான் அழைப்பேன் என்று அவள் காத்திருந்தாலோ, அவள் அழைப்பாள் என்று நான் காத்திருந்தேன். கொஞ்சம் ஒருவாறு அசுவாசப்படுத்திக்கொண்டு மேகலாவை போனில் அழைத்தேன்.

'ஹாய் சுந்தர்' மகிழ்ச்சியாகத்தான் பேசுவதாய்ப் பட்டது.
'சாரி மேகா, கொஞ்சம் என்னவோ குழப்பங்கள் ... சென்னை பத்திரமா போய்ச் சேர்ந்தாச்சா ?'
'ப்லைட் கிளம்பும்முன்னர் போன் ல கூப்பிட்டேன், வாட்ஸாப் மெசேஜ் எதற்கும் பதில் இல்லை'
'சாரிப்பா .... ரிப்ளை செய்ய … போன்ல என்னவோ பிரச்சனை … சாரி'
'என்னால எந்தப் பிரச்சனையுமில்லையே ?'
'சே, மேகா அருமையான ... ஐ மிஸ் யு, ரொம்ப'
'ஐ டு மிஸ் யு சுந்தர்'

இன்னும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு போனை வைத்தேன். ஒருவாறு மனதில் நிம்மதியாய் இருந்தது, ஆனால் மேகாவை பிரிந்திருக்கமுடியாது என்ற உண்மையும் புரிந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே இருந்தேன். மாலையில் அலுவலகம் முடிந்து வீடு வந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தும்போது பார்த்தேன், பூங்காவில் காகிதங்கள் காற்றில் பறந்தபடி இருப்பதையும், ஒருவர், யோகி என்று அழைப்போம் அவர் அவை ஒவ்வொன்றையும் ஓடிச்சென்று எடுத்துக்கொண்டிருப்பதையும் பார்த்து, நானும் இரண்டு மூன்று காகிதங்களைப் பொருக்கி அவரிடம் கொடுத்தேன்.

'நன்றி' யோகி பேசினார்.
'நீங்க தமிழ்ல பேசுறீங்க ?'
'உங்களுக்கு மராத்தி தெரியாதே' சிரித்தார், சிரித்தேன்.
'உங்களை இங்கே பார்த்திருக்கே, ஆனால் தமிழ் ன்னு தெரியாது … சுந்தர்' கை நீட்டினேன்.
'யோகேஷ்வர், யோகி ன்னு எல்லோரும் கூப்பிடுவாங்க, மதுரைல ஒரு பத்து வருஷம் இருந்தேன், அதான் தமிழ் தெரியும்'
அவர் கையிலிருந்த காகிதங்களில் இருந்த ஓவியங்களைப் பார்த்தேன். 'பாருங்க' என் கையில் தந்தார்.
மேலாலிருந்த ஓவியத்தை வாங்கிப் பார்த்தேன். என்னை ஈர்க்கவில்லை, திருப்பிக்கொடுத்தேன்.
'சுந்தருக்கு பிடிக்கலை போலிருக்கு'
'ஓவியத்துல அந்தப் பெண் ரொம்ப பயப்படறாங்க, இது ஆணா ? கையில குச்சி, ஒரு விளக்கு ? துன்பப்படும் படம், பாவம்'

யோகி சிரித்துக்கொண்டே 'உட்காரலாமா, நேரமிருக்கா ?' என்று கேட்க, பக்கத்துல இருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்தோம்.

'நீங்க கொஞ்சம் குழம்பிப்போயிருக்கீங்களோ ?'
புரியாமல் பார்த்தேன்.
'ஒரு பக்கம் மட்டும் பார்த்துட்டு, இது தான், எப்பவும் இப்படித்தான் ன்னு நினைப்பீங்க போலிருக்கு'
'குழம்பத்துல தான் இருக்கேன், ஆனால் நான் சொன்னது தப்பா ?' அந்த ஓவியத்தை எடுத்து பெண்ணையும், ஆண் போல் தெரிந்த உருவத்தையும் காட்டினேன்.

'இந்த ஓவியத்தை வேற கோணத்துல பார்க்கலாமா ? '
'...'
'அதாவது சரியான கோணம் ?'

படத்தைத் தலைகீழாகத் திருப்பிக் காண்பித்து, 'இது ஒரு நீர்வீழ்ச்சி, மரக்கிளை, இங்கே காதலர்கள், குளிச்சிட்டு குளிர் நடுக்கத்துல, பக்கத்துல நெருப்பு குளிர்காய - ரொமான்டிக் சீன், நீங்க பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்களே' யோகி விளக்க புரிந்தது.

'சாரி தப்பா பார்த்து தப்பா புரிஞ்சிகிட்டு …'
'தப்பை சரிபண்ணிக்கிட்டா தப்பு தப்பேயில்ல'
'பட் நான் தப்பா சொன்னதும் ஒருவிதத்துல சரிதானே'
'நாம எப்படி எண்ணுகிறோமோ உலகம் நமக்கு அந்தமாதிரியே தெரிகிறது'

புரிந்தமாதிரி இருந்தும் அவர் பேசட்டும் என்று காத்திருந்தேன்.

'மகாபாரதத்துல ஒரு சின்னக்கதை வருமே, துரியோதனன் ஊர் சுத்திட்டு எல்லாரும் கெட்டவங்களாகவே இருக்காங்க ன்னு சொல்ல; அதுவே தருமன் அதே ஊரை சுத்திப்பார்த்துட்டு எல்லாரும் நல்லவங்களாகவே இருக்காங்க, அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் ஒருவனே மிகக் கெட்டவன் ன்னு சொன்னான் ... சுந்தர் கேள்விப்பட்டதுண்டா ?'

'அப்போ மேகாவோட பழகலாமா ? கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒன்னும் பிரச்சனை ஆகாதா ?'
'மேகா ... ஓ, உங்களோட ஒருசிலநாள் வந்து போனாங்களே, அவங்களா ?'

ஆம் என்று தலையாட்டினேன்.

'பார்க்கும்போது எனக்கொண்ணும் தப்பாத் தெரியலை'
'கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒன்னும் பிரச்சனை ஆகாதா ?'
'எதில்தான் பிரச்சனை இல்லை சுந்தர் ... இதோ இந்தக் கார் ... மூன்றாவது மாடில இருக்காரு, போனமாசம் பிரேக் பிரச்சனை, ஆக்சிடண்ட், அதுக்காக அவரு இந்த வண்டியை மீண்டும் எடுப்பதில்லையா ... பிரச்சனை வரும், தள்ளிப் போடாது எதிர்த்து நின்று சமாளிக்கணும், பயந்து விலகி, ஓட  ஆரம்பிச்சா சாகும்வரை ஓடிக்கிட்டே இருக்கணும், நிக்கவேமுடியாது'

பேசாதிருந்தேன்.

'கடற்கரைலேயே இருந்தா எல்லாக் கப்பலும் பத்திரமா தான் இருக்கும், பட் கப்பல் செய்வது கடற்கரைல கட்டிவைக்கறதுக்கா ?'
'டைட்டானிக் மூழ்கினாலும் இப்பவும் மக்கள் பயணம் செய்துக்கிட்டுதானே இருக்காங்க'
'ரொம்பச்சரி, நல்லதை நினைப்போம், நல்வழியில் சிந்திப்போம், நல்லதே நடக்கும்'

யோகியின் கால்தொட்டு வணங்கி, விடைபெற்று என் வீட்டிற்குள் நுழைந்தேன்.


[ மேகா ... இன்னும் வருவாள் ]