காலையில் எப்பொழுதும் போல் ஆறு மணிக்கு
எழுந்து காஃபி கலந்து தயாராய் வைத்து விட்டு, யோகா எக்ஸர்சைஸ் என்று என் பணிகளைச் செய்தேன்.
ஏழு மணிக்கு குட் மார்னிங் சொல்லிக்கொண்டே மேகா தன் அறையிலிருந்து வெளியில் வந்தாள், குளித்திருந்தாள், இன்னும்
அழகாய்த் தெரிந்தாள்; கையில் காஃபி தந்து குளிக்கச்சென்றேன். நான் வரும்போது இருவருக்கும்
ப்ரட் டோஸ்ட் செய்து தயாராய் வைத்திருந்தாள்.
'உங்களைக் கேட்காம நானே பண்ணிட்டே, உங்களுக்குப்
பிடிக்குமா இல்லையான்னு கூட தெரியாது'
'மேகா தேங்க் யூ, அருமையா இருக்கு, நன்றி,
ஆபிஸ் கிட்ட எல்லாம் கிடைக்கும், இன் பாஃக்ட்
பணம் இருக்கிறவங்களுக்கு எப்போவுமே எல்லாமே கிடைக்கும்'
சிரித்துக் கொண்டே சொன்னேன், சிரித்தாள்
மேகா, எனக்கு மிகவும் பிடித்திருந்தது;
என் காரிலே இருவரும் அலுவலகம் வந்தோம்.
மேகா யாரைப் பார்க்கவேண்டுமோ அவரிடம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்துவைத்தேன். மதியஉணவிற்கு
ஒரு மணிக்குச் செல்வோம் என்று சொல்லிவிட்டு வந்தேன். என் எண்ணம் சிந்தனை எல்லாவற்றிலும்
மேகா நிறைந்திருந்தாள். இதுதான் காதல் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நான் அதை ஒத்துக்கொள்ளவோ
ஏற்றுக்கொள்ளவோ தயாராயில்லை. என்னவோ என்னைத் தடுக்கிறது, வாழ்க்கையை அடகு வைக்க மனம்
மறுக்கிறது. எத்தனை பேர் எத்தனை தலைமுறை கல்யாணம் செய்துகொண்டு வாழவில்லையா என்று பலபேர்
என்னைக் கேட்டபொழுதிலும் ... நான் தயாராயில்லை என்பதில் உறுதியாகவே இன்னும் இருந்தேன்.
இன்னொரு காரணம் நான் மேகா போன்று பல பெண்களோடு பழகியிருக்கிறேன். ஏன் என் வீட்டிற்கு
சமைக்கவரும் பெண் கூட, ஏழைதான், ஆனால் நன்றாய்
அழகாய் சிக்கென்று, நான் அவளை அந்தக் கண்ணோட்டத்திலெல்லாம் பார்த்ததில்லை, நம்புங்கள்.
ஒரு ஐந்து நாள் மேகா என் வீட்டில் தங்கினாள்.
என்னுள் என்னவோ ஒரு ... அது என்னென்று தெரியவில்லை, நன்றாய் இருந்தது, அமைதி .... அதே
சமயம் உள்ளே ஒரு சத்தம், கூச்சல் .... காதலில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன்,
பொய் பொய் என்று உள்ளே எழுந்தச் சத்தத்தை புறக்கணித்தேன்.
'இன்னிக்கி வேலை முடிஞ்சிருச்சி, நாளைக்குக்
கிளம்பணும்' அலுவலகத்திலிருந்து மாலையில் காரில் வீடு திரும்பும்போது சொன்னாள்.
'இன்னும் ரெண்டு நாள் எக்ஸ்டண்ட் பண்ணவேண்டியதுதானே
?'
'ஆல்ரெடி இன்னிக்கு எக்ஸ்டண்ட் பண்ணித்தான்
ஸ்டே பண்ணியிருக்கே'
'எந்த ப்லைட் நாளைக்கு ?'
'இனிமேதான் புக் பண்ணனும்'
மேகாவிற்கு ஒரு ப்லைட் புக் செய்துக் கொடுத்து,
இரவில் தூக்கமில்லாது விழித்திருந்து, பேசி சிரித்து, அடுத்த நாள் கொஞ்சம் ஷாப்பிங்
சென்று, மேகாவிற்கு சில பரிசுப்பொருட்கள் வாங்கித்தந்து, காதல் இல்லையென்றால் இப்படி
மனது துடிக்கத்தேவையில்லையே என்று ஒரு எண்ணம் ... வேண்டாம் மற ... நீ பார்க்காததா
... என்று ஒரு எண்ணம்; எங்கிருந்து அவளை சிலநாட்கள் முன் பிக்கப் செய்தேனோ, எங்கே அவளை
முதல்முறை பார்த்தேனே அதே இடத்தில் மேகாவை இறங்கிவிட்டேன்.
'தேங்க்ஸ், சுந்தரை மறக்கவேமுடியாது'
என்னடி செய்தாய் என்னை .... மனதுள் தோன்றியக்
கவிதையை மடக்கி உள்ளேயே அழுத்தி வைத்தேன்.
'ஐ மிஸ் யூ மேகா' மெல்ல கட்டிப்பிடித்துக்கொண்டேன்.
'ஐ டூ மிஸ் யூ சுந்தர்'
'மறுபடியும் வரணும், என் வீடு உனக்காகத்
திறந்தே இருக்கும்'
'கண்டிப்பா வரேன்'
கை குலுக்கி விட்டு உள்ளே சென்றாள். காத்திருந்தேன்.
அவள் ப்லைட் ஏறும் வரை காத்திருந்தேன், 'ப்லைட் கிளம்பிடுச்சி' என்று மெசேஜ் செய்தாள்,
ஹாப்பி ஜெர்னி பதில் அனுப்பிவிட்டு திரும்பிப் போக மனதின்றி அந்த இடத்திலேயே ஒரு அரைமணிநேரம்
காத்திருந்தேன்.
வீட்டிற்கு திரும்பி வந்து மேகாவின் அறையிலேயே,
அவள் படுத்திருந்த கட்டிலில் படுத்துக்கொண்டேன், சாப்பாடு பசி எதையும் பொருட்படுத்தாது
என்னவோ இழந்த மாதிரி படுத்துக்கிடந்தேன். 'மின்னலே நீ வந்ததேனடி ?' பாடல் ஒலித்துக்
கொண்டிருந்தது. சென்னை போய் சேர்ந்தவுடன் மேகா மெசேஜ் அனுப்பியிருந்தாள். காத்திருந்தேனே
... இதற்காகத்தானே … மனது கதறினாலும் ஹாப்பி என்று மட்டும் பதில் அனுப்பிவிட்டுத் தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள், எப்பொழுதும்போல் எழுந்துவிட்டாலும்
மனது என்னவோ சுறுசுறுப்பாகவேயில்லை. காஃபி குடித்து, பிரட் டோஸ்ட் செய்தேன். ஆனால் அவள் செய்வதுபோல் சாஃப்டாய் இல்லை.
டோஸ்ட் செய்கையில் இன்னும் என்னவோ செய்கிறாள், அடுத்தமுறை கேட்கவேண்டும் என்று எண்ணுகையிலேயே
... 'அடுத்தமுறையா ? அப்போ மறுபடியும் வருவாளா ? ' என்றெண்ணுள் கேள்வி, 'வருவாள்'
என்று சொல்லிக்கொண்டேன். அதே சமயம் 'அவள் வருவாளா' என்று என் ஆடியோ பிளேயர் பாடிக் கேட்டது. கவிதைக்கனல் மனதுள் தோன்றியது. அலுவலகம் செல்லும்
வழியில் அந்தக் கனலை ஊதிஊதி காதல் தீ ஆக்கினேன்.
இப்பொழுதெல்லாம் எண்ணம் எதுவாயினும்
அது பறந்து வந்துப் படுத்துக் கொள்கிறது அவளிடம்.
அது பறந்து வந்துப் படுத்துக் கொள்கிறது அவளிடம்.
எப்படியோ என் உறக்கத்தினுள் புகுந்து
கனவுகளுக்கும் வர்ணமடித்து விடுகிறாள்.
அவள் பெயரைச் சொன்னாலும் கேட்டாலும்
ஒரு பரவசம் பிறக்கிறது என்னுள்.
*
காத்திருக்கையில்
கருமேகத்தைக் காண்கையில்
மழையில் நனைகையில்
எல்லா சமயத்திலும் கவிதை சுரக்கிறது.
*
மென்மையான பாடல்களையே மனம் விரும்புகிறது.
புவியீர்ப்பு விசையில் புரியாதது அவள்
விழியீர்ப்பு விசையில் புரிகிறது.
காளையென் கர்வத்தை ஆற்றினாளே தன் வாஞ்சையில்
காதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சினில்
*
அலுவலகத்தில் சோம்பலாய் அமர்ந்திருந்தேன்.
மேகா அலுவலகம் வந்து சேர்ந்ததும் சேட் செய்து நலம் விசாரித்தேன். கமிட்மென்ட் எடுத்துக்கொள்ளும்
தைரியம் இல்லாதப்பொழுது மேலும் மேலும் நெருங்கிப் பழகுவது எதற்கு என்று நினைத்து ஒதுங்கியே
இருந்தேன். அவளுக்குள்ளும் ஒரு எண்ணம் விதைத்துவிட்டு அது செடியாய் மரமாய் வளரவிட்டு
பின்னொரு சமயம் புறம்தள்ளுவதில் என்ன ப்ரயோஜனம் என்று எண்ணினேன். கொஞ்சம் கொஞ்சமாய்
மேகா என்னும் ஒரு மாயப்புகையிலிருந்து மீண்டு வரத் துவங்கினேன், மேகா தொலைபேசியில்
என்னை அழைக்கும் வரையில்; சரியாய் ஒரு மாதம் இருக்கும்.
[ மேகா ... இன்னும் வருவாள் ]
No comments:
Post a Comment