Tuesday, February 6, 2018

மேகா 3




3



recap: மும்பையில் வசிக்கும் சுந்தர் சென்னையிலிருந்த வந்த மேகாவை விமான நிலையத்தில் பார்த்து, தன்னோடு தங்கிக்கொள்ள அடைக்கலம் தந்தான். அவளின் ஒவ்வொரு செயலிலும் ஈர்க்கப்பட்டும், காதல் கல்யாணம் என்று வாழ்க்கையின் ஓட்டத்தில் சேர்ந்துக்கொள்ளத் தயங்கினான். மேகா மும்பையிலிருந்து திரும்பிச் சென்று ஒருமாதத்திற்கு பிறகு ஒருநாள் அலைபேசியில் அழைத்தாள்.
x-x-x-x-x

'ஹாய் மேக்ஸ்' ஒரு சந்தோசத்தில் மேகாவை மேக்ஸ் என்று அழைத்தேன்.
'சுந்தர் ஹவ் ஆர் யூ ?' கேட்டாள்.
இதையே தமிழில் கேட்டிருந்தால் 'நல்லா இருக்கியா' என்று ஒருமையில் உரிமையில் அழைத்திருப்பாளா இல்லே 'நல்லா இருக்கீங்களா ?' என்று அழைத்திருப்பாளா என்ற சிந்தனை என்னுள்.

'நாளைக்கு வரலாமா ?' அவளே தொடர்ந்து கேட்டாள்.
'வாவ், ப்ளீஸ் கம், எந்த ப்லைட் ?'

இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு மனசே இல்லாது போனை வைத்தேன். 'அய்யய்யய்யோ ஆனந்தமே' என்று என்னுள் பாடல், எனக்கு மட்டுமே கேட்டது. ஒரு இன்பச் சூழல், படபடக்கும் பட்டாம்பூச்சி, ஒரே சமயத்தில் ஆயிரம் வயலின் இசை ... இதுபோல் நிறைய படித்திருப்பீர்கள், அதே உவமை, அதே உணர்ச்சி, ஆனால் ஒவ்வொருவருக்கும் இது புதுசு. இன்றைய நாள் எப்பொழுதுமுடியும் என்று எண்ணத்தொடங்கினேன். வீட்டிற்கு சென்று மேகாவின் அறையை சுத்தம் செய்து வைத்தேன். அவள் விமானம் இறங்கும் நேரத்திற்கு முன்னதாகவே சென்று அதே எங்கள் இடத்தில் காத்திருந்தேன். சுகமாய் இருந்தது. என்னையே நான் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன், இது எதுவும் கனவில்லையே என்று உறுதிப்படுத்திக்கொள்ள. கனவில் கிள்ளிக்கொண்டால் வலிக்காது என்று எப்படி உனக்குத் தெரியும் என்று நெஞ்சில் எழுந்தக் கேள்வியை இப்பொழுதெல்லாம் எப்பொழுதும்போல் புறக்கணித்தேன்.

விமானம் இறங்கி பயணிகள் வெளிவருகையில் 'இவளா ? இவளா ?' என்று கண்கள் மேகாவைத் துழாவத்தொடங்கியது. மேகா எப்படியிருப்பாள் என்று மீண்டுமொருமுறை யோசிக்கத்தொடங்கினேன். புடவையோ, இல்லை சுடியா, ஜீன்ஸ் நோ நோ மனதுள் சொல்லிக்கொண்டேன். வாட்சாப் எடுத்து அவள் போட்டோவை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். என்னைவிட அவள் குறும்புக்காரியாய் இருக்கவேண்டும், மெதுவாய் மறைந்து மறைந்து என் பின்னாலிருந்து கண் பொத்தினாள். புரிந்தது. ஒருவேளை நான் அவளை மும்முரமாகத் தேடியதை பார்த்திருப்பாளோ ? ரசித்திருப்பாளோ ? எனக்கு வெட்கமாய் இருந்தது. அனுபவித்தேன்.

'ஹாய் மேகா' என்றேன்.
'ஹாய் சுந்தர்' நல்லவேளை மேகா தான் அது. ட்விஸ்ட் கொடுக்கிறேன் என்று அந்த சமயத்தில் சிவபூஜையில் கரடியாய் வேறாரும் வராதிருந்தது மனதிற்கு நிம்மதியாய் இருந்தது. கட்டிக்கொள்ளலாமா ? முத்தம் தரலாமா ? என்று ஒரு போராட்டம். ஆனால் மேகா அதற்குள் என்னை மெல்லக்கட்டிக்கொண்டு ... கன்னத்தில் ஒரு ஈரம் ? முத்தமிட்டாளா என்ன ? சே ... இதைக்கூட கவனிக்காது என்ன ... கெட்டவார்த்தை மனதினுள்.

ஒரு வேளை மழை பெய்ததோ ? மழை நீர் கன்னத்தில் விழுந்ததோ ? என்று கன்னத்தைத் தடவிக்கொண்டே மேலே பார்த்தேன். 'சாரி' என்று மேகா தன் கைக்குட்டை எடுத்து என் கன்னத்தில் துடைத்தாள். சந்தன வாசம் அவள் கைக்குட்டையிலிருந்து.

'தட்ஸ் ஓகே, கெட் இன், போவோம்' மேகாவை ஏற்றிக்கொண்டு பறந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். வீட்டிற்குள் சென்றவுடன் சோபாவில் அருகருகே உட்கார்ந்துக்கொள்ள, என் உள்ளங்கை எடுத்து மேகா தன் உள்ளங்கையோடு இணைத்துக்கொண்டாள். இதைத்தானே எதிர்பார்த்தாய் ... இந்த நெருக்கத்திற்காகத்தானே காத்திருந்தாய் ... அதுதானே இது .... இதுதானே அது ? என்ன செய்ய போகிறாய் ? சும்மா இருப்பது எத்தனை சுகம், அதுவும் மனதிற்குப் பிடித்த பெண்ணுடன் தனியே இருப்பது ... ம்ம்ம்; உள்ளே நுழைந்தவுடன் ஆன் செய்த ப்ளேயர் 'இதுபோதும் எனக்கு, இதுபோதுமே' கடல் படத்தின் பாடல் பாட ஆரம்பித்தது.

'எவ்ளோ நாள் ?' கேட்டேன்.
'ஜஸ்ட் ஒரு மூன்று நாள்'
'முப்பத்தி ஏழு நாள் நான் பட்டத்துன்பத்திற்கு மூன்று நாள் மருந்து .... தருவாயா ?' மனதுள் நினைத்துக்கொண்டேன். சொல்லத்தான் தைரியம் இல்லையே,

'ஸ்டே பண்ணலாம்ல ?' பெட்டியைத் திறந்துகொண்டே கேட்டாள்.
'கண்டிப்பா, கேட்கத் தேவையேயில்லை'
'ஓ மை காட்'
'என்னாச்சி ?'
'பெட்டி, திறக்கமுடியலை'
'நம்பர் கரெக்ட்டா ? நான் ட்ரை செய்யட்டா ?'
'ப்ளீஸ்' பெட்டியை என்பக்கம் தள்ளினாள்.
'திறந்துட்டா என்ன தருவே ?' மனது கேட்கவேண்டாமென்று சொன்னது, ஆசை கேட்டுவிட்டது.
'ஒரு டீ-ஷர்ட்'

ஏற்கனவே என்னுடைய ஒரு நம்பர் லாக் சூட் கேஸ் திறக்கமுடியாது போக, யூ ட்யூபில் எப்படித் திறப்பது என்பதைப் பார்த்துத் திறந்திருக்கிறேன். அதே நம்பிக்கையில் மேகாவின் மெட்டியின் லாக் சிஸ்டத்திடம் கொஞ்சம் விளையாடித் திறந்தேன்.

'வாவ், தேங்க்யூ' உள்ளிருந்து ஒரு டீ-ஷார்ட் 'உனக்கு' என்று சொல்லி எடுத்துத்தந்தாள்.
'எனக்கு ரொம்பப் பிடிச்சக் கலர், தேங்க் யூ'
'போனதடவை எனக்கு மஞ்சள் சுடிதார் எடுத்துத் தரும்போதே நினைத்தேன், சுந்தர்க்கு  இந்தக்கலர் பிடிக்கும்னு'
'யெஸ் தேங்க் யூ'

விரல் இணைத்துக்கொண்டு டீவி பார்த்துக்கொண்டு அவ்வப்பொழுது கொஞ்சமாய்ப் பேசி, நிறைய நேரம் மௌனமாய் இருந்து, அவள் பார்க்கும்போது நான் பார்த்துச் சிரித்து, நான் பார்க்கும் போது அவள் சிரித்து ... டின்னர் உண்டு, மெத்தையில் படுத்துக்கொண்டே பேசி, மெல்ல அவள் உறங்கத் தொடங்க நான் என் அறைக்கு வந்து மனதிற்குள் சிரித்தபடிக் கிடந்தேன்.

அடுத்தநாள் சீக்கிரம் எழுந்து, குளித்து மேகா தந்த மஞ்சள் டீ-ஷர்ட்டை அணிந்துக்கொண்டு, என் தேவதையின் அறைக்கதவு திறப்பதற்காக, அவள் வருகைக்காகக் காத்திருந்தேன். நேரம் வந்தது, கதவு திறந்தது, அவளும் மஞ்சள் சுடிதாரில் வந்து நிற்க,  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் சிரித்துவிட்டோம்.

'வாவ் … டீ-ஷர்ட் நல்லாயிருக்கா ? நான் வேற மாத்திக்கறேன்' என்று என் அறை உள்ளே செல்ல முயன்றேன்.
'இருக்கட்டுமே, இரண்டு பேரும் மஞ்சள் போட்டுக்கக்கூடாது ன்னு சட்டமா என்ன, சேம் பின்ச்' என்  முழங்கையைக் கிள்ளினாள்.

'அப்டின்னா ?'
'ஒரேமாதிரி இல்லே ஒரே கலர்ல டிரெஸ் போட்டுக்கிட்டா - அதுதான் சேம் பின்ச், எப்டியிருக்கு  ?' ஒரு சுற்று சுற்றினாள்.
'தேவதையாட்டம் இருக்கே' மனதுள் சொல்லிக்கொண்டேன் என்று நினைத்திருப்பீர்கள், அதுதான் இல்லை, அவளுக்குக் கேட்கும்படிதான் சொன்னேன்.
'நீ வாங்கித்தந்தது, இப்போத்தான் போட்டுக்கறேன்'

'ப்ரிட்டி, அழகு' யாருக்குக் குடுத்து .... என்று மனதிற்குள் நினைக்குமுன், அந்த யார் ஏன் நானாய் இருக்கக்கூடாது என்று மோதல், எனக்கும் எனக்குமே. வேறு திசை திரும்பிக்கொண்டேன். கொஞ்சம் காதில் புகை மொமண்ட், இன்னும் கை விட்டுப் போகவில்லையே அப்புறம் என்ன என்று உள்ளேயொரு சத்தம். நான் அவளிடம் விழுந்துவிட்டேன், என்றாலும் .... இன்னும் என்னவோ ஒரு ... தயக்கம் .... வெட்கமா ?
அலுவலகத்திற்கு போகும் வழியெல்லாம் மேகாவும் மஞ்சளும் மாறிமாறி மனதுள் வந்துபோக, சிக்னலெல்லாம் மஞ்சள் நிறத்தில் ஒளிர்வதாய் எனக்குத் தோன்ற, அலைபாயுதே படத்தில் பச்சை நிறமே பாட்டில் மஞ்சளுக்கு வைரமுத்து என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்துக்கொண்டே அலுவலகம் வந்து சேர்ந்தோம். எங்கள் இருவரையும் மஞ்சள் நிறத்தில் எவ்வளவு பேர் பார்த்தார்களோ, என்ன நினைத்தார்களோ, ஹு கேர்ஸ்.

மஞ்சள் பத்திரிகை என்றால் என்ன ? பெண்கள் மஞ்சள் பூசுவது எதற்கு ? மேகா விற்கு மஞ்சள் பூசிக்கொள்ளும் பழக்கம் இருக்கா இல்லியா ? கேட்கலாமா வேணாமா ? இன்னும் என்னென்னவோ மஞ்சளைச்சுற்றியே மங்களகரமான எண்ணங்கள் மனது முழுதும்.
 

[ மேகா ... இன்னும் வருவாள்  ]

No comments:

Post a Comment