Wednesday, February 28, 2018

பொன்மாலைப் பொழுதில் 14

இப்போல்லாம் தினம் பல்துலக்குகிறேன்
தீவாளியோ பொங்கலோ மார்கழியோ
நாளெதுவாகினும் தினம் குளிக்கிறேன்.
எண்ணையில் ஊறவைத்துத் தலை சீவிக்கொள்கிறேன்.
அழகாய் உடுத்த ஆசைப்படுகிறேன்
இருப்பதை துவைத்துக் கசக்கி காயவைத்து
இடையிருக்கிக் கட்டிக்கொள்கிறேன்
இருப்பு ஏதுமில்லையென்றாலும் ஈகை செய்வதில்
முழுமனதோடு ஈடுபடுகிறேன்
மெல்லிசைப்பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்கிறேன்
துள்ளிசைத் தகடுகளைத் தூக்கியெறிந்து விட்டேன்
நல்லவனாகவே இருந்து விடுகிறேன்,
இன்னொருமுறை ... இன்னும் ஒரு முறை...
மெல்..ல ... தலைசாய்த்து ... கண் சிமிட்டி ...
கன்னத்தில் குழி விழ ... ஒரு  சிறு புன்னகை

ஐயையோ நெஞ்சு அலையுதடி ஆகாசம் இப்போ வளையுதடி

***

இப்பொழுதெல்லாம் என் இதயம்
எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது.
கண் திறந்திருந்தாலும் மூடியிருந்தாலும்
காணும் காட்சி உன்முகமாகவே இருக்கிறது.
தூரத்திலிருந்த வட்ட நிலவு வான் விட்டு
என் ஐன்னல் பக்கம் வந்து நின்றுப் பேசுகிறது.
இதுநாள்வரை தழுவிக்கிடந்த உறக்கம்
எனைவிட்டு எங்கோ தூரம் சென்று விட்டது.
என் சிந்தனை, செயல், சொற்கள் எல்லாம் இன்று உனைச்சுற்றியே இருக்கையில்
நேற்று வரை வேறென்னெல்லாம் செய்து வந்தேன் என்று எனக்கேப் புரியாதிருக்கிறது
எல்லாம் காதல் செய்த மாயமோடி ?
நீ ஆனாய் என் உயிரடி, சந்தேகமா ?
ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்துக் கேளடி

***

கவலை எதற்கு கலக்கம் எதற்கு
எல்லாம் மாறும் என்பது தெரியாதா உனக்கு
ஏறியது இறங்குவதும்
இறங்கியது ஏறுவதும் இயற்கை
இதற்கிடையில் எதற்கு அழுகை ?
வென்றால் குதிக்காதே
தோற்றால் குமுறாதே
முயன்று செய் எதிர்பார்த்து ஏமாறாதே
உனைச் செய்யவைப்பவன் அவனே
நீ வெல்ல வழிசெய்துத் தருபவன் அவனே
தோற்றாயெனில் குழிவெட்டியவன் அவனே
உனக்கென்று ஒரு காலம் உண்டு
அக்காலத்தில் உனக்கு வெற்றி உண்டு
அதுவரை காத்திரு பொருமை கொண்டு.
கனவு கண்டிரு
கடவுளைத் துதித்திரு
காலம்கனியும் வரை கண்திறந்துக் காத்திரு
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே

***

No comments:

Post a Comment