Thursday, February 15, 2018

கலாட்டா கல்யாணம் 1
இதோ நமக்கு எதிர்த்தாப்புல கருப்புக் கண்ணாடியோட கொஞ்சமா மீசை, தாடி ட்ரிம் பண்ணிக்கிட்டு, கருப்பு தான், இருந்தாலும் களையா இருக்குறமாதிரி நெனச்சுக்கிட்டு, ஸ்டைலா நிக்குறாரே ...

இவருதாங்க சசி, என்ற சசீந்திரன். பெரிய பண்ணை ... பல தலைமுறைக்கு முன்னால. இப்போ ஒன்னும் இல்லே. அட்லீஸ்ட்  அப்படித்தான் அவரு வெளியில சொல்லிக்கிட்டுத் திரியறாரு. நல்ல பையன். காசுல கெட்டி. 5 பைசா வீணா செலவு பண்ண மாட்டாரு. கெட்ட சகவாசமெல்லாம் கெடையாது. அதான் பணம் செலவு பண்ணமாட்டாருன்னு சொல்லிட்டேனே, அப்புறம் எப்படி இருக்கும் கெட்ட சகவாசம்.  MCA படிச்சிமுடிச்சிட்டு ஏதோ கம்ப்யுட்டர் கம்பெனில என்னவோ வேலை பாத்துகிட்டு, பணம் சேத்து வச்சி, வேறெதுக்கு ... கல்யாணம் கட்டிக்கத்தான், அதுவரைக்கும் காதலிக்க ஆள் தேடுற வேலையும் சைடுல பார்க்கறாரு.

ஒருநாள் ... நம்ப சசி ஆபிஸ்லேர்ந்து கிளம்பி, வீட்டுக்கு வர்ற வழியில, பணம் எடுக்கலாம்னு ஒரு ATM சென்டருள் நுழைய, கதவு ஆட்டோமாட்டிக்கா மூடத்தொடங்க, கதவு மூடுவதைக் கவனிக்காது போன் பேசியபடியே பின்னாலேயே நுழைந்தாள் சுகன், என்ற சுகன்யா. மயிரிழையில் மூடும் கதவைப் பிடித்து நிறுத்தி அவள் உள்ளே நுழைய வாகாய்த் திறந்துவைத்தான் சசி.

'தேங்க்ஸ்' என்றவள் சொல்ல, சின்ன சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டான்.

இருவரும் தங்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தம்தமது வழியே சென்றனர்.

---

வண்டியில் செல்லும் போதெல்லாம் அந்த 'தேங்க்ஸ்' ஒலி மட்டும் சசியின் காதினுள் ஒலித்தப்படியே இருந்தது. கனவுலகத்தில் மேகங்களுக்கிடையில் அருகில் அந்தப்பதுமை அமர்ந்திருக்க தேர்மேல் பவனி வந்துகொண்டிருந்த நம் சசியை 'சாவுகிராக்கி எப்டிப் போவுது பாரு?' என்று ரோட்டில் ஒருவர் திட்டிய சொல் மண்ணுலகிற்கு இழுத்து வந்தது. அவருக்குத் 'தேங்க்ஸ்' சொல்லி விட்டுத் தன் பாதையில் தொடர்ந்தான். சிக்னலில் வண்டியை நிறுத்த பக்கத்தில் பார்த்தால் .... சுகன்யாவும்  சிக்னல் ல பக்கத்துல வண்டிய நிறுத்துனா ன்னு நான் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்தீங்கன்னா தப்புங்க; ஏன்னா பக்கத்துல யாருமில்ல. நம்ப சசியோட மனசுல 'அவளும் இப்போ இங்கே இருந்தா நல்லா இருந்திருக்கும்ல' அப்டின்னு ஒரு நெனப்பு, 'அவ பின்னாலேயே போயிருக்கலாமோ' என்ற எண்ணம்.

சசி இதற்கு முன்னால், காதலென்று அவற்றைச் சொல்லமுடியாதென்றாலும், சில பல பெண்களோடு பழகியிருக்கிறான். கல்லூரி வாழ்க்கையின் போது பஸ்ஸில் கூடவே பயணித்த பவானி, பக்கத்து வீட்டு ஹேமா, என்று பலரோடு பேசியிருக்கிறேன். இருந்தாலும் மின்னல் வேகத்தில் ATM மிலும் தன் நெஞ்சிலும் நுழைந்து மறைந்துவிட்டவளை, பணத்தையும் இதயத்தையும் ஒருசேர எடுத்துச் சென்றவேளை இனி எங்கே எப்போது காண்பேனோ என்று எண்ணியபடியே தன் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தான். ஒருநாளைக்கு எவ்வளவு மனிதர்களைப் பார்க்கிறோம். இப்படியா எல்லாரையும் நெனச்சி ஏங்குறோம் ? இதுதாங்க ‘எதுஎது எப்பப்போ நடக்கணுமோ அதுஅது அப்பப்போ நடக்கும்’னு சொல்லுவாங்க. கண்ணைத் திறந்து கொண்டே கனவு பல கண்டபடியே காலை விடியும்வரை கண் திறந்திருந்தப்படியே கட்டிலில் கிடந்தான், நம் கதையின் நாயகன்.

யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டது. 'அவளாயிருக்குமோ, ஆனா அவளுக்கு வீடு எப்படி தெரியும், ஒருவேளை இந்த ஆண்டவன் ... ஆண்டவன் ... ன்னு சொல்றாய்ங்களே .... அவரு ஏதாச்சு மாஜிக் பண்ணி ... ' இப்படியே சசி அவளைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கையில் கதவு மீண்டும் பலமாய்த் தட்டப்பட, திறந்து யாரென்று பார்த்தான்.

'பால் பாக்கி 1200/-, தர்றீங்களா? காலை நேரம், நாலு எடத்துக்குப் போகணும், கொஞ்சம் சீக்கிரம்' பால்காரர் படபடவென்று பேசியபடியே நிற்க, நேற்று இரவு எடுத்தப்பணத்தில் அவருக்குக் கொடுக்கவேண்டியதைக் எண்ணிக்  கொண்டிருக்கையில், பூட்டியிருந்த எதிர் வீட்டு வாசலில் ... தொடைச்சி ... கோலம் போட்டு, சுப்ரபாதம் பாட்டு பாடிக்கிட்டே ... ன்னு நா சொல்லுவேன்னு எதிர்ப்பாத்தீங்கன்னா ... நீங்க நினைக்கிறது தப்பு; இப்போல்லாம் யாருங்க கோலம் போடுறாங்க, சுப்ரபாதம் கேட்குறாங்க; எதிர்த்த வீட்டு வாசல்ல பால் பாக்கெட் மட்டும் கெடக்குது. 'யாரு வந்திருக்காங்களா?' என்று கேட்டபடியே பணம் கொடுத்தான். 'தெரிலீங்க, இன்னிலேர்ந்து பால் போடச் சொன்னாங்க, போட்டேன், வரேங்க' என்று சொல்லிவிட்டுப் பால்காரர் கிளம்பினார்.

சிறிது நேரத்தில் ஒரு ஓலா வந்து நிற்க அதிலிருந்து இரண்டு பெரிய சூட்கேஸ் இறக்கப்பட்டு வாசலில் வைக்கப்பட்டது, 'தேங்க்ஸ் ண்ணா ' என்று சொல்லிக்கொண்டே அவள் வீட்டைத் திறக்க .... 'தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்' அந்த ஒரு வார்த்தை மட்டும் சசியின் மூளையுள் நுழைந்து எல்லா நரம்புகளிலும் மோதி அவனைக் கதவை நோக்கித் தள்ளியது.  படாரென்று தன் வீட்டு கதவைத் திறந்து யாரென்று பார்த்தால் ....

[ கல்யாணம் ... இன்னும் முடியலை ] 

3 comments: