Thursday, February 8, 2018

மேகா 4



4
recap: மும்பையில் வசிக்கும் சுந்தர் சென்னையிலிருந்த வந்த மேகாவை விமான நிலையத்தில் பார்த்து, தன்னோடு தங்கிக்கொள்ள அடைக்கலம் தந்தான். அவளின் ஒவ்வொரு செயலிலும் ஈர்க்கப்பட்டும், காதல் கல்யாணம் என்று வாழ்க்கையின் ஓட்டத்தில் சேர்ந்துக் கொள்ளத் தயங்கினான். மேகா மும்பையிலிருந்து திரும்பிச் சென்று ஒருமாதத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மும்பை வந்து சுந்தரோடு தங்கினாள். இருவரும் மஞ்சள் ஆடையில் மங்களகரமாய் அலுவலகம் வந்தனர்.

x-x-x-x-x

எனக்குப்பிடித்த மஞ்சளாடையில் மேகாவைப் பார்த்ததும் கொஞ்சம் மயங்கி, கிறங்கித்தான் போனேன். மேகாவின் அருகிலே இருக்கவேண்டுமென்றுத் தோன்றியது. மேகாவை அழைத்துக் கொண்டு மதியச்சாப்பாட்டுக்குப் போனாலென்ன;  இன்றொரு நாள் வெளியில் போய் சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது. பசியில்லை ஆனால் பாவையைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம். ஒரு அரைமணிநேரம் முன்னதாகவே மேகாவின் இருப்பிடம் சென்றேன். எனக்காக அவள் காத்திருக்கவேண்டும், நான் வரும் பாதை பார்த்துக் கொண்டிருந்தாளோ என்று தோன்றியது.

'பசிக்குது' எனைப் பார்த்ததும் பேசினாள்.

'லெட்ஸ் கோ' என்றவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

'வெளியே எங்கேயாச்சும் போய் சாப்பிடலாமா ?' மேகா கேட்டதும் வேறேதும் பேசாது சம்மதித்தேன். பழம் நழுவி பால்ல விழும் பழமொழி யின் அர்த்தம் புரிந்தது.

ஒரு தந்தூர் உணவகத்திற்குள் நுழைந்து மூலையிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டோம். அவ்வளவு கூட்டம் ஒன்றும் இல்லை. இப்படியே ஆளில்லாதிருந்தால் நல்லாயிருக்குமென்ற எண்ணம் என்னுள். மெதுவாய் மேகாவை நோட்டம் விட்டேன். மிக அழகாகத் தெரிந்தாள். மஞ்சள் நிற உடையில் தேவதையாய்த் தோன்றினாள். நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அய்யோ ... இரு கைகளையும் உயர்த்தி கூந்தலை இருக்கக்கட்டுவதுபோல் என்னவோ செய்தாள். என் மூச்சு அப்படியே நின்றுபோயிருந்தது. பார்வை மாற்றாது பார்த்தபடி இருந்தேன்.

'நல்லாயிருக்குல்லா ?' கேட்டாள்.

'ஆகா ... அபாரம் ... அருகில் அழைக்குதுன் பாரம் ... கையை இறக்கு, இப்போதைக்கு அது போதும்' மனதில் ஒரு சத்தம் .... காதலா காமமா ..... புரியாது ஒரு யுத்தம்;

'ம் ... சாரி ... என்ன மேகா ?' குறலத்தொடங்கினேன்.

'நல்லாயிருக்குல்ல ன்னு கேட்டேன் ?'

'செம்ம, எல்லோ லவ்லி'

'எல்லோ ? ' திரும்பியும் மேலும் ஒருமுறை பார்த்து.... 'எல்லோ எது?'

கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு 'சீலிங்' மேலே கையைக் காட்டி வழிந்தேன்.

'எங்கூர்ல இந்த கலரை ரெட் ன்னு சொல்லுவாங்க'

'ஹிஹிஹி'

மறுபடியும் கையையுயர்த்தி கூந்தலை சரிசெய்வதுபோல் 'எல்லோ லவ்லின்னு சொன்னியே எது அது?' கையை கீழே இறக்காமலேயே பேசினாள். சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் எங்களைப் பார்ப்பதுபோல் தெரியவில்லை. இதுதான் பொஸசிவ்வா? என்று என்னுளொரு கேள்வி.

'எல்லோ லவ்லின்னு சொன்னியே எது அது? ' விடாது கேட்டாள்.

'கையை இறக்குடி சொல்றே' மனதிற்குள் சொல்லிக்கொண்டே, 'தெரியாத மாதிரி கேட்பது மேகாவிற்குப் பிடிக்குமோ ?'

'ஆமான்னு வச்சுக்கோ, லவ்லின்னு சொன்னியே, அது எது ?'

'மேகா மஞ்சள் ஆடையில அழகா அற்புதமா தெரிவதைத்தான் சொன்னேன்' AC யிலும் எனக்கு வேர்த்துவழியத் தொடங்கியது.

'தேங்க் யூ' சொல்லிக்கொண்டே என்னருகில் வந்து உட்கார்ந்துக்கொண்டாள். மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டேன். வெய்ட்டர் தூரத்தில் நிற்பது தெரிந்தவுடன் கை உயர்த்த, அருகில் வந்தார்.

'என்ன ஆர்டர் ...' என்று மேகாவிடம் கேட்பதற்குள்

'நாண், பன்னீர் பட்டர் மசாலா, சூப், தேங்க்யூ .... வேறேதாவது ?' என்று என்னைப்பார்த்துக் கண் சிமிட்டினாள் மேகா.

சிரித்துத் தலையாட்டினேன். வெய்ட்டர் போனதும் 'அதிகப்பிரசங்கித் தனமா ஆர்டர் பண்ணிட்டேனா ?' கேட்டாள்.

'நானும் இதையேத்தான் சொல்லயிருந்தே'

'பட் நீ என்கிட்டே கேட்டுட்டு ஆர்டர் பண்ணிருப்பேல்ல ?' பேசிக்கொண்டே என் உள்ளங்கையைத் தன் உள்ளங்கையால் பிடித்து அழுத்திக்கொண்டாள்.

'தட்ஸ் ஓகே ... டியர்' கடைசி வார்த்தையை முழுங்கிக்கொண்டேன்.

'யு லுக் கிரேட் சுந்தர்'
'யு டூ மேக்ஸ்'

'மேக்ஸ் - நல்லாயிருக்கு, நமக்குப் பிடிச்சவங்க என்ன சொன்னாலும் செய்தாலும் நல்லாத்தான் இருக்கும், இல்லியா சுந்தர் ?'

சிரித்துவைத்தேன்.

நிறைய பேசினோம், அவள் குடும்பத்தைப் பற்றி, என்னைப் பற்றியும், படித்தது வளர்ந்தது எல்லாம் ... பேச்சும் பேச்சும் பேசிக்கொண்டது, விரலும் விரலும் பேசிக்கொண்டது, கண்கள் கண்களைப் பார்த்து சிரித்துக்கொண்டது, இதழ்கள் .... ம்ம்ம் அதற்குள் உணவு வந்துவிட, எதிர் இருக்கைக்கு அவள் மாறிக்கொள்ள உண்டு முடித்தோம். அங்கிருந்துக் கிளம்பி ... மேகாவிற்கு ஏதாவது பரிசு அளிக்க விரும்பினேன்.

'எதற்கு இப்போது, புதியதாய் என்ன செய்தாய் இன்று' என்றென் உள்மனம் கேட்க
'புதிதுதானே இது … இது …?'
'எது ?'
'ஒரு அழகானப் பெண்ணோடு ... அருகருகே அமர்ந்து ... எல்லாமே புதிது தானே ... கொண்டாடினால் என்ன ?'
'அதற்கு .... நகையா ?'
'நகை என்று நான் எப்பொழுது சொன்னேன் ?'
'சரி சரி இந்த கார்மெண்ட்ஸ் கடையில் வண்டியை நிறுத்து' உள்மனதின் கட்டளைப்படி நிறுத்தினேன்.

'என்ன ?' மேகா கேட்டாள்.

சிரித்து 'வா' என்றழைத்து உள்ளே சென்றேன்.

வா என்று ஒருமையில் அவளை அழைப்பதற்கு நான்பட்ட பாடு இருக்கே ...

கடைக்குள் சென்றோம்.

'என்ன வேணும், எடுத்துக்கோ' என்றேன்
'இப்போ எதுக்கு, வேணா'

'ப்ளீஸ் ... சாடி சுடி ஜீன்ஸ் டாப்ஸ் ? ஷார்ட்ஸ் நீ யூஸ் பண்ணமாட்டேல்ல' குனிந்து காதினருகில் கேட்க, என் கையில் கிள்ளினாள்.

'வலிக்குது'

'நல்லா வலிக்கட்டும்' என்று சொல்லிக்கொண்டே டாப்ஸ் இருக்கும் செக்சன் செல்ல,  தொடர்ந்தேன்.

'எது எடுத்துக்கட்டும் ?'

'நான் செலக்ட் செய்தால் ஏற்கனவே இதுலல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குமோ ன்னு நீ நெனைச்சிப்பே, சோ ...'

'சரி நானே செலக்ட் செய்றேன், நல்லா இருக்கான்னு மட்டும் சொல்லு, ஓகே வா ?'

ஒரு நாலைந்து வண்ணங்களில் உடைகளை எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூம் நோக்கிச் சென்றவள் என்னையும் வரச்சொல்லி அழைத்தாள்.

'நான் எதுக்கு ?' என்று கேட்டுக்கொண்டே அவள் பின்னே சென்றேன்.

கதவு திறந்தேயிருக்க, ஓரக்கண்ணால் நோட்டமிட்டேன்; அணிந்திருந்த உடையின் மேலே கையிலிருந்த உடையையும் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

'அவ்வளவுதானா ?'

'என்ன அவ்வளவுதானா ?'

'இல்லே ... மேலே அப்டி வச்சி சரியாயிருக்கான்னு பார்த்திடுவியா ?'

'பின்ன ?' என் வயிற்றில் ஒரு குத்து விட்டு 'இந்த மூன்றையும் எடுத்துக்கறேன்' என்றாள்.

பில் செட்டில் செய்துவிட்டுக் கிளம்பினோம். அலுவலகம் வந்து, வேலை பார்ப்பது போல் ஒரே இடத்தில் அமர்ந்து, முதுகுவலியும் பணமும் சம்பாதித்ததுக்கொண்டு, மாலையில் வீடுவந்து சேர்ந்தோம். வந்தவுடன் ம்யூசிக் ப்ளேயரை ஒலிக்கவிட 'அன்பே அன்பே கொல்லாதே' பாடல்; இந்தப் பாடலுக்கு ஏற்றவாறு அன்றைய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஒரு கவிதை மனதுள் தோன்றியது.

மஞ்சளாடையில்
மங்களகரமாய் வந்தென்முன் நின்றாள்.
வாவ் என்று சொல்ல வாய் திறந்து
மூட மறந்து வசிகரிக்கப்பட்டு நின்றேன்.
கை இரண்டையும் உயர்த்திக்
கூந்தலைச் சரி செய்வது போல் நடித்து
'எப்படியிருக்கு ?' என்று கண்ணால் கேட்டாள்.
'அபாரம் அருகில் அழைக்குதுன் பாரம்' என்றேன்.
சட்டென்று முன்பக்கம் மறைத்துக்கொண்டு
'ஹேர் க்ளிப் டைட் பண்ணிவிடு' என்று திரும்பி நின்றாள்.
'பழக்கமில்லேடி' என்றேன்
'படுத்திக்கோ' என்றாள்.
பின்கழுத்து தடவி காது மடல் வருடி சிற்றிடையில் கிள்ளி
'டைட் ஆயிடுச்சி போ' எனச் சொல்லி விலகினேன்.
டிரஸ் வாங்கணும் என்றாள்
கடைக்கு அழைத்துச் சென்றேன்
'ஹாஃப் மிடி, ஸ்லீவ்லெஸ்' கேட்க, வந்தது
'எதை எடுக்க ?' என்றெனைப் பார்த்தாள்.
'நீ எது அணிந்தாலும் அழகாய்த்தானிருக்கும்,
ஏதும் அணியாதிருந்தால் இன்னும் அழகாய் இருக்கும்'  என்றேன்
வயிறில் குத்தினாள்,
பர்ஸ் எடுத்தேன்
'போட்டுப் பார்க்க வேணாமா, ட்ரையல் ரூம்?'  கடைப்பெண் கை காமிக்க
'நானெதுக்கு?' என்ற என் கேள்வியை
காதில் போட்டுக் கொள்ளாது இழுத்துச்சென்றாள்.
நெற்றியை வழித்தபடி நின்றிருந்தேன்
முதுகால் எனை முட்டினாள்
'என்ன?' கண்ணாடியில் பார்த்துக் கேட்டேன்
'ஹூக்கு மாட்டியிருக்கு, மெல்ல கழட்டு, பிச்சிடாதே' என்றவளிடம் சொன்னேன்
அன்பே ... அன்பே ... கொல்லாதே


'நல்லாயிருக்கா ?'

மேகாவின் குரல் கேட்டு கவிதை மறந்து கனவுலகம் துறந்து நினைவுலகம் வந்தேன்.

'வாவ் வெரி நைஸ்'

'அடுத்ததும் போட்டுக்காட்டணுமா ?'

பதில் சொல்வதற்குள் உள்ளே ஓடினாள், அடுத்ததை அணிந்துக்கொண்டு வெளியே வந்தாள். சிரித்தேன். அருமை என்று இரண்டு விரலினைத்து O காட்டினேன்.
மீண்டும் அடுத்தப் புத்தாடை அணிந்துகொண்டு வெளியே வந்தாள், மீண்டும் சிரித்தேன். ஓடிவந்து என்னைக்கட்டிக்கொண்டாள்; முத்தமிட்டேன். உள்மனது உறுமியது. போதும் என்று எச்சரித்தது.

இருவரும் சோபாவில் அமர்ந்துகொள்ள, மேகா ஒரு கவிதை சொன்னாள்.

பார்க்கையில் பார்க்கிறாய்
சிரிக்கையில் சிரிக்கிறாய்
நலம் கேட்கிறாய்
நீ நலமா என்றால் கவிதையில் பதில் தருகிறாய்
என்ன அணிந்திருந்தாலும் அழகாய் வர்ணிக்கிறாய்
பிடிக்காது முறைக்கையில்
காது மடல் பிடித்திழுத்து மன்னிப்புக் கேட்கிறாய்
பூ வாங்கித் தருகிறாய்
புடவை பரிசு தருகிறாய்
சினிமா என்றால் சம்மதிக்கிறாய்
கோவிலென்றாலும் கூட்டிச்செல்கிறாய்
ம்ம்ம்
சொல்லவா ? சொல்லிவிடவா ?
மெதுவாகத்தான் ... மெதுவாகத்தான் ... எனை ஈர்க்கிறாய்
அருகில் நீ இல்லாப்பொழுது நான் தவிக்கிறேன்.


'அருமை, இதே மாதிரி நான் ஒன்னு எழுதியிருக்கேன்'

'நீ எழுதுனதுதான் இது ... அங்கே ஒரு நோட்டுல எழுதியிருந்துச்சி ... சாரி உன்னைக் கேட்காம எடுத்துப் ... படிச்சி ... மனப்பாடம் கூடப் பண்ணிட்டேன்'

மெதுவாய் அவள் இடுப்பைக் கிள்ளினேன். என் கையைப் பிடித்துக்கொண்டாள். மார்போடு அணைத்துக்கொண்டாள், உள்ளங்கையில் முத்தம் தந்தாள். உள்மனது மீண்டும் உறுமியது. என்ன நேரம், என்ன பொழுது, மாலையா, மதி மிதக்கும் இரவா ஏதும் புரியாது அப்படியே அமர்ந்திருந்தோம். அடுத்த நாள் தான் சென்னைக்கு கிளம்பவேண்டியதை ஞாபகப்படுத்தினாள்.

'இங்கேயே இருந்துடேன்'

'இருந்து ?'

'என்னோட ... என் ... என் ...'

'மனைவி ? மனைவி மாதிரி ?'

'...'

'கல்யாணம் பண்ணிக்கலாமா ?'

'...'

'சும்மா ... தொட்டுக்கிட்டு ... முத்தம் குடுத்துக்கிட்டு .... கொஞ்சி விளையாடி ...'

'கல்யாணம் ன்னா நிறைய ப்ரச்சனை வரும்'

'எதுலதான் பிரச்சனை வராது ?'

'காதலிக்கும்போது இருக்கும் நெருக்கம் ... கல்யாணத்தின் பிறகு இருப்பதில்லை'

'அதுக்காக ... இப்டியே வாழலாமா ? நாலு பேரு என்ன சொல்லுவாங்க'

மேகா தோல் தொட்டு அசைத்த பின்புதான் உணர்ந்தேன் இவ்வளவு நேரம் மனசாட்சியோடு பேசிக்கிட்டிருந்தேன் என்பது.

'என்னாச்சி ? நாளைக்குக் கிளம்பணும் ன்னு சொன்னேன்'

'ஓகே, டிக்கெட் பார்ப்போம், டின்னர் ?'

பேசிக்கொண்டே உணவு முடித்து, அடுத்த நாளைக்கு டிக்கட் புக் செய்தோம். அடுத்தநாள் அலுவலகம் சென்று பின் மாலையில் மேகாவோடு விமானநிலையம் வந்தேன். மனதின் ஓலம் வெளியே தெரியாது, ஏதும் பேசாது நின்றிருந்தேன்.

[ மேகா ... இன்னும் வருவாள்  ]


No comments:

Post a Comment