Thursday, December 26, 2019

பொன்மாலைப் பொழுதில் 68

527. சில விஷயங்கள் படிப்படியாய்,
பிறை வளர்ந்து வளர்ந்து முழு நிலவு ஆவதுபோல்.
சில விஷயங்கள் சடாரென்று மாறும்.
செடிக்கு நீரூற்றிவிட்டுத் திரும்ப, பூ பூத்து 'அட' என சொல்ல வைக்கும்.
இராமன் காலடிக்காக எத்தனை வருடமோ, காத்திருந்தாள் அகலிகை.
ஆரவாரமின்றி வந்து அலேக்காக தூக்கிச்சென்றான் சீதையை.
கூந்தல் முடியக் காத்திருந்தாள் த்ரௌபதி.
பகலோடு பகலாக பணக்காரர் ஆனார் சுதாமா.
இத்தனை கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க ...
முன்னறிவிப்பு ஏதுமின்றி
*வெண்ணிலாவின் தேரிலேரி காதல் தெய்வம் நேரில் வந்தாளே*


524. பஞ்சவடியில் லக்குமன் சீதையிடம் சொன்னது,
'ராமனை வீழ்த்த யாராலும் முடியா என்பது உங்கட்குத் தெரியாதா?'
சமாதானம் பேச சம்மதித்தானே, போர் நிகழும், அதர்மம் அழியும்
என்று கண்ணனுக்கு  தெரியாதா?
காய்ந்த அவலைத் தந்ததும் தம் நிலை பரந்தாமனுக்கு புரிந்திடும்
என்று கல்யாணிக்கு தெரியாதா?
பறவைகளை விரட்டுவாள், காட்டு யானையைக் காண அலறுவாள்
என்பது முருகனுக்கு தெரியாதா?
நெஞ்சில் கை வைக்க, பதட்டத்தில் ராம் மயங்கி விழுவான் என்பது ஜானுவிற்கு தெரியாதா?
நீ பார்க்காது போனாலும்
பேச்சு தவிர்த்தாலும் ...
எனக்கு உன் மனம் தெரியாதா; அட
*வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?*


523. யாருக்கு தான் ப்ரச்சனையில்லை
எதை எடுத்தாலும் ஏற்ற இறக்கம் இருக்கும் தானே.
பிடித்திருந்தது பழகினோம், விதி விளையாட விலகியிருக்கோம்.
எனை எண்ணியபடி நீ அங்கு.
உன் கொஞ்சல் கெஞ்சல் கோபம் தாபம் அனைத்தையும் அசை போட்டபடி நான் இங்கு.
சம்பாதி சேமி காலம் கனியும் வரை காத்திரு, உன்னிடத்தில்.
உனை எதிர்பார்த்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உனக்காக ... நான் என்னிடத்தில். 
உருவம் மாறினும்
ஊர் உலகம் எதிர்த்து நின்றிடுனும்
உனை விட்டுத் தர மாட்டேன்
விலகிப் போக மாட்டேன்.
நேரம் கிட்டும் போது,
நீ இந்தப் பக்கம் வரும் போது ...
போதும், *ஒரே ஒரு கண் பார்வை*


521. ராவணனை வென்ற ராமன் சொன்னது, 'சீதையை இங்கழைத்து வா'.
துரியோதனன் கர்ணனிடம் 'முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா?'.
கிழம் வள்ளியிடம் 'தாகம் நீங்கியது மோகம் பொங்குது, என்னருகே வா'.
கல்யாணி கணவனிடம் சொன்னது 'கண்ணனை தரிசித்து விட்டு வா'.
எல்லாம் இழந்து கோவலன் சொன்னது 'பிழைக்க மதுரை போம் வா'.
மோடி சீன அதிபரிடம் சொன்னது 'மகாபலிபுரம் செல்வோம் வா'.
ஜானு ராமிடம் 'இன்று உறங்காது எங்காவது சுற்றித் திரிவோம் வா'.
நீ மட்டும் ... தள்ளித் தள்ளி நின்று கண்ணாலே பேசியது போதும்
*பூமாலையே ... தோள் சேர வா*


520. தினம் தினம் மன அழுத்த வேலை
காலநேரமின்றி ஆட்டணும் வாலை
மாட்டிக்கிட்டோம், வேறு வழி இலை
தப்பித்து ஓட தைரியமுமில்லை
சகதியில் குதித்த வராக நிலை
பணம் பதவி பாசம் எல்லாம் வலை
தீரும் தொல்லை? மாறுமா கவலை?
இதற்கில்லையா ஒரு எல்லை ?
என்று இதிலிருந்து விடுதலை?
உலக வாழ்க்கையோ கடல் அலை
அல்லல்களே நம் லீலையின் விலை
காத்திருக்க, வரும் அவன் ஓலை
அது தரும் வேண்டிய ஆறுதலை
சரி போகட்டும், இப்பொழுது மாலை
கேட்கவும் இன்றைய பாடலை
காயட்டும் கண்களின் திவலை
இது *கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை*


519. பசிக்கும், உண்ணத் தோன்றாது
இரவு வரும், உறக்கம் வராது
இப்ப என்ன செய்யணும் என்று எப்போதும் எண்ணி குழம்பும் மனம்
*
தனக்குள் தானே பேச நேரிடும்
காணும் வரை கலவரம்
கண்டதும் பேசப் பிரியப்படும்
கண்கள் மோத எல்லாம் மறந்திடும்
*
கவிதை சுரக்கும், அன்பு பெருகும்
யாரைப் பார்த்தாலும் சிரிக்கத் தோணும்.
புயல் பூவாய் மாறி பொருமை காக்க நேரும்.
*
எல்லாம் காதல் செய்யும் மாயம்
தூக்கம் தூர விலகி நிற்க, உன்
*விழிகளின் அருகினில் வானம்*


518. கிடைக்குமென்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்திடும்.
கண்ணால் கண்டு, கேட்ட பொன் மான் சீதைக்குக் கிட்டவில்லை.
சபரி ப்ரார்த்தித்துக் கேட்டது போலவே ராம தரிசனம் கிட்டியதே.
உலகை சுற்றி வந்து பழம் கேட்டும் முருகனுக்குக் கிடைக்கவில்லை.
கர்ணன் கேட்கவில்லையே, விஸ்வரூப தரிசனம் வியாபித்ததே.
அள்ளித் தந்தானே கண்ணன், குசேலன் கேட்டானா என்ன?
ஆண்டாள், 'கண்ணனன்றி வேறு யாரும் எனைத் தீண்டல் தகா மன்மதா' எனக் கேட்டுப் பெற்றாள்.
ராம் பலமுறை கேட்டும் ஜானு யமுனை ஆற்றிலே பாடலையே.
அட சும்ஸி ஆயில் அனுப்பக் கேட்டும் இன்னும் வரவில்லையே.
எனக்கு மட்டும் ... *கேளாமல் கையிலே வந்தாயே காதலே*

Thursday, December 19, 2019

பொன்மாலைப் பொழுதில் 67

515. தினமும் காலையில் கௌசல்யா சுப்ரஜா ... விஸ்வாமித்ரர் பாடியது.
கண்ணனின் எல்லாமே மதுரம் என வல்லபர் பாடியதே மதுராஷ்டகம்.
தேவராய ஸ்வாமிகளின் கந்த சஷ்டி கவசம் உங்கட்குத் தெரிந்திருக்கும்.
ஜெயதேவரின் கீத கோவிந்தம், ராதை, கண்ணனின் காதலை கொஞ்சம் பச்சையாய்ப் பேசும்.
குருவாயூரில் நாராயண பட்டத்ரி இயற்றியது நாராயணீயம்.
ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம்; சௌந்தர்ய லஹரியும் அவரே.
பார்வதி தேவி நதியில் அலைகள் இடையில் நீராடும் அழகை ....
என்ன, லஹரி தெரியாதா ? இதோ
*அவித்யானாம் அந்தஸ் திமிர மிஹிர தீப நஹரி*

514. உண்மை தான், உனைக் காண விரும்பவில்லை,
ஆனால் எந்நாளும் வெறுத்ததில்லையே.
ஆம் சுமுகமாய்ப் பேசத் தெரியலை,
எனினும் வம்பெதற்கு என்று ஒரு போதும் எண்ணியதில்லை.
நீ எழுதியவற்றை தினம் பலமுறை படிப்பதுண்டு.
பதிலனுப்பணும் என்று ஏனோ தோன்றியதில்லை.
ஆனால், மறுக்க முடியாது.
நிதம் கவிதை நெஞ்சில் சுரக்குது,
கண்முன் உனைக் காணும் போது.
வானவில் என வர்ணிக்க ஆசை இருக்கு,
வண்ண உடைகளில் உலவும் உனைப் பார்க்கும் போது.
மனதுள் ஒரு புத்துணர்ச்சி ... உதடு *உன் பேரைச் சொல்லும் போது*


513. முதலில் வேலை என்று தான் எண்ணினேன்.
பின் பணத்தின் பின்னே பறந்தேன்
நல்ல இடம், வருமானம் என்பதை உணர்ந்தேன், எனை மறந்தேன்.
கார் பங்களா என்று வசதியோடு வாழத் தொடங்கினேன்
அகப்பட்டுக் கொண்டதை உணரவே  மறுத்தேன், பணத்தால் மறைத்துக் கொண்டேன்.
போதும் என்று மனம் எண்ணும் போது திரும்பி வர முடியாதுத் தவித்தேன்.
என்னை விடு, நீ பாடு ஆடு கொண்டாடு
ஆனால் ... மறவாதிரு
உனக்கென்றோர் வீடு, உன்னுடைய மக்கள், உன் நாடு
உனை எதிர்பார்த்தபடி,
எங்கோ தூரத்திலிருந்து உனை அழைத்தபடி
கேட்குதா ...
*உந்தன் தேசத்தின் குரல்*

512. எல்லாம் நீ செய்த மாயம்,
இது உன்னால் மட்டும் முடியும் மகத்துவம்
என்னுள் வேண்டுமுன் ஆதிக்கம்
நீ கூட இருந்தால் போதும், என் இலட்சியம் எளிதாய் நிறைவேறும்
உன் சகவாசம் என் வெகுமானம்
அநுதினம் நான் உன் வசம்
என் மேல் வீசும் உன் வாசம், நீ
சொல்வதே எனக்கு திருவாசகம்
உன்னருகில் எனககோர் ஆசனம்
போதும், எனை அணுகாது சோகம்
பக்கமாகிப் போகும்  வானம்
இன்று
நான் *காணும் யாவிலும் இன்பம்*

511. பெருமாள் அவதாரங்கள் பத்து
நவராத்திரி நாட்கள் ஒன்பது
திசைகள் எட்டு
உலகில் கண்டங்கள் ஏழு
முருகனுக்கு முகங்கள் ஆறு
பஞ்ச பூதங்கள் ஐந்து
இந்து மதத்தில் வேதங்கள் நான்கு
சாஸ்த்ரி பிறந்தது அக். இரண்டு
*கற்பூர பொம்மை ஒன்று*

510. காலை சீக்கிரம் விழித்திடுவேன்.
இப்போல்லாம் 7 மணி ஆனாலும் கட்டிலை விட்டு எழ முடிவதில்லை.
புத்தகத்தை தலை கீழாய் வைத்துப் படிக்கக் கூடாதாமே.
உணவு பரிமாறிய பிறகே உண்ண வேண்டுமென்பது சட்டமா என்ன?
குடிக்கத்தந்த தண்ணிய ஏதோ ஞாபகத்துல தலைல ஊத்திக்கிட்டா அவ்ளோ பெரிய தப்பா என்ன?
இரவாடையில் வரக் கூடாதாம், உடை மாற்ற மறந்துட்டேன் என்றால் மன்னிக்க வேண்டியது தானே.
ம்ம் ... என்னவோ ஆகப்போறேன்னு அப்போவே நெனச்சே ...
உன்னை எப்போ பார்த்தேனோ ...
'எப்போ?'
*'அதுவா ... அதுவா ...'*

509. கூனி உண்மையில் கைகேயிக்கு தோழியா எதிரியா?
இள இராமனை தன்னோடு அனுப்ப மகரிஷி கேட்டது முறையா, தவறா?
தன் பிழை உணராது கௌதமர் அகலிகையை சபித்தது சரியா?
சூர்பனகை திட்டம் ராமனை அடைவதா தமையனை மாட்டுவதா?
துர்வாசரை  சகுந்தலை கவனிக்- காதது காதலாலா மோகத்தாலா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றமே என்றது ஆணவமா அகங்காரமா ?
நாலு பேர் நல்லாயிருக்க என்ன வேணா செய்யலாமா கூடாதா?
சரி சரி கடைசியாய் ஒரு கேள்வி
*உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?*

508. அடி என் ப்ரிய சகி,
அருகில் வந்துன் செவி மடி.
நேற்று நவராத்திரிக்கு முதல் நாள்.
நான் அவனைக் கண்ட நன்னாள்.
நீல தாக்ஷாயிணி கோவிலுக்குப் போயிருந்தேனடி.
என் நெஞ்சு களவு போகுமென்று அறியேனடி.
நீலச் சட்டை, நெற்றியில் திருநீறு, சாந்தப் பார்வை.
பார்த்ததுமே தன் நிலை மறந்து சரிந்தாள் இப்பாவை.
என் நிறம் ஒத்தவன்; இந் நங்கை நெஞ்சில் காதல் தீயை வைத்தவன்
தேவாரமா பாடினான்? தேனை அல்லவா என் காதில் ஊற்றினான்;
கூச்சமில்லாது என் கரம் பிடித்து சுண்டல் தந்ததாய் நினைவு.
உறங்கவிடாது இரவில் கனவில் கூட அவன் வரவு.
யார் என்ன என்றறிய ஒர் உபாயம் சொல்லடி.
*என் நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி?*

Thursday, December 5, 2019

பொன்மாலைப் பொழுதில் 66

507. சிவன் வீற்றிருப்பது கைலாய மலையிலே
பெருமாள் பாற்கடலிலே, பாம்புப் படுக்கையிலே
அடுத்த நாற்பது வருடம் அத்தி வரதரோ நீரின் அடியிலே
பிள்ளையார் ஆல, அரச மரத்தின் நிழலிலே
நபிகள் நாயகம் அரேபியாவிலே
இயேசு பிறந்தது ஜெருசலத்திலே
ம்ம்ம் ... அதெல்லாம் விடுலே
போன செமஸ்டர் வரை கூட என் கவனம் படிப்பிலே
இப்போல்லாம் எதைப் பார்த்தாலும் கவிதை வருதே தப்பில்லைல,
படுபாவிப்பய என்று  எனைப் பார்த்துச் சிரித்தானோ,
அன்று முதலே என் *நெஞ்சினிலே நெஞ்சினிலே ... ஊஞ்சலே*


506. அதெல்லாம் ஒரு காலம் ...
தாமதமானால் அபராதம் தருவதும்,
ஆளில்லா நேரத்தில் கடனடைத்து கணக்கு நேர் செய்து கொள்வதும்
வட்டி கேட்டு வாதிடுவதும் ... ம்ம்ம்
*
அதெல்லாம் ஒரு காலம் ...
விரல்படாது வாயிலிருந்து வாய்க்கு பண்டமாற்று பரிவர்த்தனையும்,
நிராகரிக்கப்பட்டது திரும்பப் பெற்று நிலுவையில் வைக்கப்படுவதும் ...
*
அதெல்லாம் ஒரு காலம் ...
பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து, முகர்ந்து ரசித்து, சிரித்து,
படிப்பதாகக் கூறிவிட்டு அதை மட்டும் செய்யாது ஊர்க்கதை எல்லாம் ரகசியமாய்ப் பேசி ... ம்ம்ம்
*
இப்போது இணைந்தில்லாவிட்டால் என்ன? எப்படியிருக்கிறாய் என்று கூடவா கேட்கக்கூடாது, உன் தோழன் கேட்கிறேன் சொல்லிடு
எப்படியிருக்கிறாய் ...  *இணையே, என் உயிர்த் துணையே ...*


505. ஔவையார் கேட்டதோ பிறவாமை வேண்டும்
இல்லையேல் சிவமே உமை மறவாமை வேண்டும்.
கும்பகர்ணன் இராமனிடம் கேட்டுக் கொண்டது
தன் தலை கொய்து கடலில் வீசப்பட வேண்டும்.
தூதில் கண்ணன் துரியோதனிடம் கேட்டது
பாண்டவர்க்குப் பாதி அரசுரிமை வேண்டும்.
பெரியாழ்வார் பெருமாளை வாழ்த்திப் பாடியது
பல்லாண்டு பல்லாண்டு நீர் வாழ வேண்டும்.
ஆண்டாள் ப்ரார்த்தித்ததோ மழை பொழிய, மாடு கன்று நிறைய, வயல் விழைய வேண்டும்.
பாரதியார் பராசக்தியிடம் கேட்டது
தென்னை தென்றல் கேணியோடு காணி நிலம் வேண்டும்.
எல்லாரும் தமக்கு வேண்டியதை கேட்க ... ம்ம்ம், நானும் ... எனக்கு ...
*ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்*


504. காலை கண் விழிக்கும் போதே இன்று நல்ல நாள் என்று உணர்ந்தேன்.
பறவைகள் இரண்டு  கொஞ்சி விளையாடுவதை சாளரத்தின் வழியே கண்டேன்.
காய்ந்து போனச் செடியில் ஒரு ரோஜா மொட்டு விட்டிருப்பதை ரசித்தேன்.
மெல்லிய சாரல் மழையில் காடு வீடு எல்லாம் நனைய மனம் மகிழ்ந்தேன்.
அருகிலெங்கோ கோவில் மணி ஒலிக்க நல்ல சகுனம் என்பதை உணர்ந்தேன்.
கொஞ்ச தூரத்தில், மழலையரோடு மழலையாகிக் கொஞ்சிப் பேசும்  பெண்ணே உன்னை ...
நிஜத்தைச் சொல்லவா, *நிலத்தில் நடக்கும் நிலவைக் கண்டேன்*.


503. இப்பொழுதெல்லாம் ...
கண்ணாடி முன்னாடி நொம்ப நேரம் நிற்கிறேனாம்.
அழகாயிருக்கேனா என்று ஆயிரத் தெட்டு முறை கேட்கிறேனாம்.
பொறாமையில் என் அறைத்தோழி தினம் தினம் புலம்புகிறாள்.
கல்லூரியில் நுழைந்ததும் என் கண்கள் உனைத் தேடுவதை மறைக்க முடியாது தவிக்கிறேன்,
உனைப் பார்த்தவுடனேயே என்னுள் தோன்றும் அச்சம் மடம் நாணத்தை ரசிக்கிறேன்.
நீ அருகில் வந்து பேசமாட்டாயா என்று ஏங்குகிறேன், இறைவனை வேண்டுகிறேன்.
நீ சம்மந்தப்படாத எதையும் செய்ய என் மனம் விரும்புவதில்லை.
உன்னோடு சேர்த்து ஊர் சுற்ற நான் தயங்குவதில்லை.
ம்ம்ம், இப்போதெனக்குப் புரிகிறது
இந்தக் காதல் என்பது
*இதுதான் இதுதான் இதுதான்*


502. புத்தகம் படிக்கும் தோரணையில் ஒருநாள்  அமர்ந்திருந்தேன்.
பூவை அவள் புன்சிரிப்போடு எனை நோக்கி வந்தாள்.
கண் சிமிட்டி வரவேற்க, காற்றில் முத்தமிட்டபடி அருகிலமர்ந்தாள்.
என்ன புத்தகமெனக் கேட்டவளுக்கு அட்டையைக்^  காட்டினேன்.
'ஓ, வாலி எழுதியதா, சரி அவதாரம் ன்னா என்ன?' வினவினாள்.
'கடவுள், ஒரு பெரிய சக்தி, எல்லாம் அறிந்தவர்' விடையுரைத்தேன்.
'பொய், கப்சா, ரீலு' என்றவள் இடை கிள்ளினேன்.
விரல்கள் வழி மறிக்கப்படும் என எதிர்பார்த்து ஏமாந்தேன்.
'டேய் சின்ன வயசுல உங்கம்மா உன்னை அவதாரம்னு தானே திட்டுவாங்க' என்றவள் நக்கலடிக்க
நான் முறைக்க, அவள் ஓட,
நான் துரத்த, அவள் நழுவ
நான் விரட்டி மடக்க, அவள் எனைக் கட்டியணைத்து மித்தமிட ...
ம்ம்ம் ... இதெல்லாம் நடந்ததே
இன்று இந் நாளிலே
என் கனவிலே
*புலராத காலைதனிலே ...*


501. சேதி வந்ததும் கிளம்பிவிட்டேன், எனக்காக நீ காத்திருப்பதால்.
குங்குமச் சிவப்பு நிறப் புடவை, உனக்குப் பிடிக்குமதனால்.
கொலுசு தேடி எடுத்து அணிந்து கொண்டேன், நீ தந்ததென்பதால்.
மல்லிகை சந்தனத்தோடு எனைக் கண்டதும் நீ கவிதை சொல்லலாம். 
மருந்தால் சரியாகா விஷயங்கள் மறந்தால் சரியாகும் தானே.
அந்த சண்டையெல்லாம் மறந்து விட்டேன், நீயும் மன்னித்துவிடு.
பாவை என்னோடு பழையபடி பழகு. பேசிச் சிரித்துச் சிநேகி.
கூடலில் முடியுமெனில் ஊடல் கொள்.
இனி உயிருள்ள வரை ... நான்
*உனக்காக வாழ நினைக்கிறேன்*