Thursday, December 26, 2019

பொன்மாலைப் பொழுதில் 68

527. சில விஷயங்கள் படிப்படியாய்,
பிறை வளர்ந்து வளர்ந்து முழு நிலவு ஆவதுபோல்.
சில விஷயங்கள் சடாரென்று மாறும்.
செடிக்கு நீரூற்றிவிட்டுத் திரும்ப, பூ பூத்து 'அட' என சொல்ல வைக்கும்.
இராமன் காலடிக்காக எத்தனை வருடமோ, காத்திருந்தாள் அகலிகை.
ஆரவாரமின்றி வந்து அலேக்காக தூக்கிச்சென்றான் சீதையை.
கூந்தல் முடியக் காத்திருந்தாள் த்ரௌபதி.
பகலோடு பகலாக பணக்காரர் ஆனார் சுதாமா.
இத்தனை கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க ...
முன்னறிவிப்பு ஏதுமின்றி
*வெண்ணிலாவின் தேரிலேரி காதல் தெய்வம் நேரில் வந்தாளே*


524. பஞ்சவடியில் லக்குமன் சீதையிடம் சொன்னது,
'ராமனை வீழ்த்த யாராலும் முடியா என்பது உங்கட்குத் தெரியாதா?'
சமாதானம் பேச சம்மதித்தானே, போர் நிகழும், அதர்மம் அழியும்
என்று கண்ணனுக்கு  தெரியாதா?
காய்ந்த அவலைத் தந்ததும் தம் நிலை பரந்தாமனுக்கு புரிந்திடும்
என்று கல்யாணிக்கு தெரியாதா?
பறவைகளை விரட்டுவாள், காட்டு யானையைக் காண அலறுவாள்
என்பது முருகனுக்கு தெரியாதா?
நெஞ்சில் கை வைக்க, பதட்டத்தில் ராம் மயங்கி விழுவான் என்பது ஜானுவிற்கு தெரியாதா?
நீ பார்க்காது போனாலும்
பேச்சு தவிர்த்தாலும் ...
எனக்கு உன் மனம் தெரியாதா; அட
*வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?*


523. யாருக்கு தான் ப்ரச்சனையில்லை
எதை எடுத்தாலும் ஏற்ற இறக்கம் இருக்கும் தானே.
பிடித்திருந்தது பழகினோம், விதி விளையாட விலகியிருக்கோம்.
எனை எண்ணியபடி நீ அங்கு.
உன் கொஞ்சல் கெஞ்சல் கோபம் தாபம் அனைத்தையும் அசை போட்டபடி நான் இங்கு.
சம்பாதி சேமி காலம் கனியும் வரை காத்திரு, உன்னிடத்தில்.
உனை எதிர்பார்த்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உனக்காக ... நான் என்னிடத்தில். 
உருவம் மாறினும்
ஊர் உலகம் எதிர்த்து நின்றிடுனும்
உனை விட்டுத் தர மாட்டேன்
விலகிப் போக மாட்டேன்.
நேரம் கிட்டும் போது,
நீ இந்தப் பக்கம் வரும் போது ...
போதும், *ஒரே ஒரு கண் பார்வை*


521. ராவணனை வென்ற ராமன் சொன்னது, 'சீதையை இங்கழைத்து வா'.
துரியோதனன் கர்ணனிடம் 'முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா?'.
கிழம் வள்ளியிடம் 'தாகம் நீங்கியது மோகம் பொங்குது, என்னருகே வா'.
கல்யாணி கணவனிடம் சொன்னது 'கண்ணனை தரிசித்து விட்டு வா'.
எல்லாம் இழந்து கோவலன் சொன்னது 'பிழைக்க மதுரை போம் வா'.
மோடி சீன அதிபரிடம் சொன்னது 'மகாபலிபுரம் செல்வோம் வா'.
ஜானு ராமிடம் 'இன்று உறங்காது எங்காவது சுற்றித் திரிவோம் வா'.
நீ மட்டும் ... தள்ளித் தள்ளி நின்று கண்ணாலே பேசியது போதும்
*பூமாலையே ... தோள் சேர வா*


520. தினம் தினம் மன அழுத்த வேலை
காலநேரமின்றி ஆட்டணும் வாலை
மாட்டிக்கிட்டோம், வேறு வழி இலை
தப்பித்து ஓட தைரியமுமில்லை
சகதியில் குதித்த வராக நிலை
பணம் பதவி பாசம் எல்லாம் வலை
தீரும் தொல்லை? மாறுமா கவலை?
இதற்கில்லையா ஒரு எல்லை ?
என்று இதிலிருந்து விடுதலை?
உலக வாழ்க்கையோ கடல் அலை
அல்லல்களே நம் லீலையின் விலை
காத்திருக்க, வரும் அவன் ஓலை
அது தரும் வேண்டிய ஆறுதலை
சரி போகட்டும், இப்பொழுது மாலை
கேட்கவும் இன்றைய பாடலை
காயட்டும் கண்களின் திவலை
இது *கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை*


519. பசிக்கும், உண்ணத் தோன்றாது
இரவு வரும், உறக்கம் வராது
இப்ப என்ன செய்யணும் என்று எப்போதும் எண்ணி குழம்பும் மனம்
*
தனக்குள் தானே பேச நேரிடும்
காணும் வரை கலவரம்
கண்டதும் பேசப் பிரியப்படும்
கண்கள் மோத எல்லாம் மறந்திடும்
*
கவிதை சுரக்கும், அன்பு பெருகும்
யாரைப் பார்த்தாலும் சிரிக்கத் தோணும்.
புயல் பூவாய் மாறி பொருமை காக்க நேரும்.
*
எல்லாம் காதல் செய்யும் மாயம்
தூக்கம் தூர விலகி நிற்க, உன்
*விழிகளின் அருகினில் வானம்*


518. கிடைக்குமென்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்திடும்.
கண்ணால் கண்டு, கேட்ட பொன் மான் சீதைக்குக் கிட்டவில்லை.
சபரி ப்ரார்த்தித்துக் கேட்டது போலவே ராம தரிசனம் கிட்டியதே.
உலகை சுற்றி வந்து பழம் கேட்டும் முருகனுக்குக் கிடைக்கவில்லை.
கர்ணன் கேட்கவில்லையே, விஸ்வரூப தரிசனம் வியாபித்ததே.
அள்ளித் தந்தானே கண்ணன், குசேலன் கேட்டானா என்ன?
ஆண்டாள், 'கண்ணனன்றி வேறு யாரும் எனைத் தீண்டல் தகா மன்மதா' எனக் கேட்டுப் பெற்றாள்.
ராம் பலமுறை கேட்டும் ஜானு யமுனை ஆற்றிலே பாடலையே.
அட சும்ஸி ஆயில் அனுப்பக் கேட்டும் இன்னும் வரவில்லையே.
எனக்கு மட்டும் ... *கேளாமல் கையிலே வந்தாயே காதலே*

No comments:

Post a Comment