Wednesday, January 1, 2020

பொன்மாலைப் பொழுதில் 69

536. பார்த்துப் பரவசிக்க ஆளில்லை எனினும்
நிலவு தினம் ஒளிரும்.
கேட்டு ரசிக்க ஆளில்லை எனினும்
பறவைகள் தினம்  பாடும்.
ஓடி ஆடி விளையாட ஆருமில்லை எனினும்
கரை மேல் முட்டி மோதி விட்டுத் திரும்பும் அலைகள்.
நுகர்ந்து ரசிக்க சூடி மகிழ ஆளில்லாப்போதும்
தினம் பூக்கும் பூக்கள்.
கூட இருந்து கவனிக்க  ரசிக்க பாராட்ட ராதை கோதை இல்லை எனினும்
*கண்ணன் வந்து பாடுகின்றான் காமெல்லாம்*


534. தமிழ் மாதம் மொத்தம் 12.
அழகர் ஆற்றில் இறங்க, கூடவே தேரோடும் திருவிழா, மதுரையில், சித்திரையில்.
விசாகம், முருகப் பெருமானுக்கு ஏற்ற மாதம், வைகாசி.
நடராஜருக்கு திருமஞ்சனம் நடக்கும் ஆனி மாதம்.
ஆடிப்பெருக்கு நடக்கும், மனைவியை பிரிந்து கணவன் மகிழ்ந்திருக்கும் மாதம்,  ஆடி.
விநாயக சதுர்த்தி கொண்டாடப் படும் மாதம் ஆவணி.
நவராத்திரி விஜயதசமி எல்லாம் கொண்டாடப்படும் புரட்டாசி.
தமிழ்நாட்டில் மழை பொழியும், தீபாவளியும் வரும், ஐப்பசி மாதம்.
தீபம் ஏற்றி சிவனை வழிபட, கார்த்திகை மாதம்.
திருவாதிரை கழி, பரமபத வாசல் திறப்பு, ஆண்டாள் திருப்பாவை பாடப்படும் இது மார்கழி மாதம்.
சிவராத்திரி கொண்டாடும் மாசி மாதம்.
உத்திரம் முருகனுக்கு உகந்த நேரம், இது பங்குனி மாதம். 
11 தானே வந்திருக்கு, இன்னும் ஒன்னு ... என்னது... ம்ம்ம்,
பொங்கல், கரும்பு கூடவே
*பூ பூக்கும் மாசம் தை மாசம்*


533. முதல் நாள்,
சிரித்தாய், சிரித்து வைத்தேன்.
பிரிதொரு நாள் மணி கேட்க, சொன்னேன்.
டெய்ரி மில்க் சாக்லேட் தர, வாங்கி வைத்துக் கொண்டேன்.
கை நீட்டச் சொல்லி லட்டு பாதி பிட்டுத் தந்தாய், பிடித்திருந்தது.
பிறந்த நாள் பரிசாய் கடிகாரம் தர, கையில் மருதாணி வைத்திருந்த- தால் 'கட்டி விடு' என்றேன்.
கார்த்திகை நன்னாளில், மல்லிப்பூ வாங்கித் தந்தாய்.
கூந்தலில் சூடி விட ஏதுவாய் திரும்பி நின்றேன்.
எல்லாம் சரி, படுபாவி, இப்படியா ...
ஐயோ, உதடு எரிகிறதே. இவ்வளவு காரமா?
எந்தக் கடையில் மிளகாய் பஞ்சி தின்றாயோ,
*மலைக் கோவில் வாசலில் ...*


532. உறக்கம் கலைய, கனவு மறக்குது.
உணவு உண்ண, பசி மறையுது.
பகலவன் வர, பனி விலகுது.
கவலை சூழ காரியம் தாமதமாகுது.
காலம் சாதகமானாலோ, நினைத்த- தெல்லாம் நடக்குது.
வெற்றி, நெஞ்சில் ஒரு தைரியம் விதைக்குது.
குழப்பங்கள் குறையுது, அமைதி நிறையுது.
இதற்கெல்லாம் காரணம் நீயென்று உணர உன்மேல் ஆசை பிறக்குது.
நீ என்னிடம் பேசியவற்றை எண்ணி எண்ணி உள்ளம் பூரிக்குது
கூடவே, *பொல்லாத என் இதயம் ... ஏதோ சொல்லுது*

531. சொன்னது ஒன்று செய்தது வேறு என பல இடங்களில் நடந்திருக்கு.
*
சீதையைத் தேடு என்றால் தீயவன் தீவில் தீ வைத்தான் அநுமன்.
மந்திரம் தேவையெனில் மட்டும் பயன்படுத்த சொன்னால், உடனே உபயோகித்தாள் குந்தி.
நெஞ்சுக்கு குறி வை என்றால் தலை நோக்கி அம்பெய்து ஏமாந்- தான் அர்ச்சுனன் அண்ணன்.
பரி வாங்கப் பணம் தந்தால், இவர் கோவில் கட்ட செலவிட்டார்.
மிருதங்கம் கற்க அனுப்பினால் நாதஸ்வரம் கற்றுத் திரும்பினார்
*
நீ இதுல இன்னொரு கேசு, லூசு.
அறிவில்லே, காது கேட்காது? நான்
என்ன கேட்டே, நீ என்ன தர்றே?
*மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை?*


529. மாலை வீடு திரும்பும் போது
'அப்...பா' என்று ஆசையாய் அழைக்கிறாய்.
பளிச்சென்று முகம் கழுவி பூ சூடி ஸ்வாமி அறையில் ஊதுபத்தி ஏற்றி வைத்து
பக்தி மணம் பரப்புகிறாய்..
அம்மா தந்த காபியை கொண்டு வந்துத் தந்து
'சூடா இருக்கா?' என்று தலை ஆட்டி வினவுகிறாய்.
சொல்லத் தேவையேயில்லாது நீயே அமர்ந்து பாடங்களை படிக்கிறாய்.
தொலைக்காட்சி ஓசை கூட்டினால் 'அப்பா ...' என்று கூவி
இடையில் கை வைத்து நின்றபடி  அதட்டுகிறாய்.
கூட அமர்ந்து மூச்சுப் பயிற்சி செய்கிறாய்.
பரதம் ஆடுகிறாய்; தேவாரம் திருப்புகழ் எதைக் கேட்டாலும் சலிக்காது பாடுகிறாய்.
சமைத்தவைகளை வரிசையாய் கொணர்ந்து பரிமாறுகிறாய்.
இரவு மணி பத்து ஆனால் போதும்,
எனை உறங்கச் சொல்லி அருகிலமர்ந்து *ஆனந்த யாழை மீட்டுகிறாய்.*

528. ராமன் வரும் வரை இவ் அரக்கன் தனை அண்டாதிருக்க
வழி வினவினாள் சீதை த்ரிசடையிடம்.
போர் வேண்டாம், சரிபங்கு அரசு கிட்ட
வேறு வழி உண்டா என வினவினான் தருமன்.
மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று மடியும் தனை இதிலிருந்து விடிவிக்க
வழி வினவினார் பட்டினத்தார்.
வீடு வாசல் சொத்து இழந்த கோவலன்
பிழைக்க வழி தேடி மதுரை போவோமா என்று வினவினான்.
நல்வழியை இத்தனைப் பேர் தேட
பூவே, மேகமாய் மாறி நான் அருகே வர
உன் தாகம் தீருமா? சோகம் மாற இதுவே நல்வழி ஆகுமா?
செவ்வாய் திறந்து சொல்வாயா? *செம்பூவே ... பூவே*

No comments:

Post a Comment