631. பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின்
பொருள் வயினின் பிரிந்து போன
வண்டு தொடர் நறுந் தெரியல் உயிர் அனைய
கொழுநர் வர மணித் தேரோடும்
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து
மெலிவு அகலும் கற்பினார்போல்,
புண்டரிகம் முகம் மலர, அகம் மலர்ந்து
பொலிந்தன - பூம் பொய்கை எல்லாம்.
தலைவியைப் பிரியும் முன்
திரும்பி வரும் நாள் உரைத்து,
போருக்கோ, பொருள் தேடவோ
பிரிந்து சென்ற தலைவன்
வண்டுகள் மொய்க்கும் மாலை அணிந்து
தேரின் மீதமர்ந்து உயிருக்குயிரான
தலைவன் திரும்புகையில்
மனம் மகிழ்ந்து தளர்வு நீங்கி பொலிவு கூடும்
கற்புள்ள மங்கையர் போல்
காலையில் குதிரையின் மீதமர்ந்து
கதிரவன் திரும்ப வர,
தாமரை மலர்கள் மலர
அழகிய பொய்கைகள் மீண்டும் பொலிவுற்றன.
636. இருந்த குலக் குமரர்தமை, இரு கண்ணின்
முகந்து அழகு பருக நோக்கி,
அருந் தவனை அடி வணங்கி, 'யாரை இவர்?
உரைத்திடுமின், அடிகள்!' என்ன,
'விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி
காணிய வந்தார்; வில்லும் காண்பார்;
பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர்' என,
அவர் தகைமை பேசலுற்றான்.
தன் அருகில் அமர்ந்திருந்த
இரு குமரர்களின் அழகைக்
கண்களால் பருகியபடி
தவமுனியை வணங்கி 'யார் இவர்கள்' என்று ஜனகன் கேட்க,
'உன் பக்கம் புதியவர்கள்,
வேள்வி காண வந்தவர்கள்,
உன் சிவதனுசு வில்லையும் காண்பார்கள்
பெரும் பண்புள்ள தசரதன் புதல்வர்கள்'
என்று கூறி ராமனின் பெருமைகளை
உரைக்கத்தொடங்கினான் முனிவன்..
கார்முகப் படலம்
*கார்முகம் - வில்
666. 'மாற்றம் யாது உரைப்பது?
மாய விற்கு நான்
தோற்றனென் என
மனம் துளங்குகின்றதால்;
நோற்றனள் நங்கையும்
நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல், இடர்க் கடல்
ஏற்றும்' என்றனன்.
'தங்கள் வார்த்தைக்கு மாற்று இல்லை;
தாங்கள் கூறியபிறகு நான் பேச ஏதுமில்லை;
மாய வில்லை திருமணத்திற்கு காரணமாய் வைத்து தோற்று
வருந்துகின்றேன், மனம் கலங்குகின்றேன், வேறு குறை இல்லை;
வியத்தகு பண்புகளுடைய இக் குமரன்
விரைவாய் வில்லை வளைத்து நாணேற்றினால்
என் துயர் தீரும், சந்தேகமில்லை;
என் மகளும் தவப்பேறு பெறுவாள், ஐயமில்லை'
என்று கூறினான் ஜனகன்.
679. தாளுடை வரி சிலை, சம்பு உம்பர்தம்
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இக்
கோளுடை விடை அனான் குலத்துள் தோன்றிய
வாளுடை உழவன் ஓர் மன்னன்பால் வைத்தான்.
( தன் மனைவியை அவமதித்த தட்சனின் வேள்வியை அழித்து)
வலிய அடித்தண்டுடைய தன் கை வில்லை,
சிவன், தேவர்கள் பயந்து நடுங்குவதைப் பார்த்து,
மனம் மாறி சினம் தணிந்து
காளை போன்ற சனகன் குலத்தில் பிறந்த
வலிய வாள் உடைய, ஏர் கொண்டு உழும் ஒரு மன்னனிடம் கொடுத்தான்.
(என்று சிவதனுசின் வரலாற்றை சதானந்த முனிவன் உரைத்தான்)
( தொடரும் )
No comments:
Post a Comment