Saturday, January 18, 2020

கம்பராமாயணம் 12



அகலிகைப் படலம்

457.  பள்ளி நீங்கிய, பங்கயப்
                பழன நல் நாரை,
          வெள்ள வான் களை களைவுறும்
                 கடைசியர் மிளிர்ந்த
          கள்ள வாள் நெடுங் கண் நிழல்   
                 கயல் எனக் கருதா
          அள்ளி, நானுறும் அகன் பணை
                மிதிலை நாடு அணைந்தார்.


உறக்கம் நீங்கிய வெள்ளை நாரைகள்
தாமரைகளுடைய வயல்களில்
களை பறிக்கின்ற பெண்களின்,
கள்ளத்தனமாக பார்க்கும் கண்களின்
நிழலை, கயல் மீன்கள் என்று கருதி,
குத்தி, ஏமாந்து, வெட்கி ...
அத்தகைய அகன்ற வயல் சூழ்ந்த
மிதிலை நாடு சென்று சேர்ந்தனர் மூவரும்.


465.  கண்ட கல்மிசைக் காகுந்தன் 
              கழல் துகள் கதுவ 
         உண்ட பேதைமை மயக்கு அற 
               வேறுபட்டு, உருவம் 
         கொண்டு, மெய் உணர்பவன்
               கழல் கூடியது ஒப்ப  
          பண்டை வண்ணமாய் நின்றனள்;
               மா முனி பணிப்பான்;


கண்படு தூரத்தில் இருந்த 
கல்லின்மேல், இராமனது 
கால் தூசி பட 
மனதின் அறியாமை மறைந்து 
தத்துவ ஞானம் பெற்றவன்,
பரமனது திருவடிகளை அடைவது போல,
உருவம் மாறி, பெண்ணாகி 
எழுந்து நின்றாள்,
முனிவன் அவள் கதை சொன்னான்.


475. இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் 
                 இனி இந்த உலகுக்கு எல்லாம்  
         உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் 
                 துயர் வண்ணம் உறுவது உண்டோ?
         மை வண்ணத்து அரக்கி போரில்  
                  மழை வண்ணத்து அண்ணலே! உன் 
         கை வண்ணம் அங்குக் கண்டேன் 
                  கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

(அகலிகை கதை கூறி)
இவ்வாறு நடந்தது முன்னர்.
இனி, இவ்வுலகிலுள்ளோர் உன்னால் நலம் பெறுவர் 
துன்பம் கடலில் யாரும் பரிதவிப்பாரோ ?
கரிய நிறத்து அரக்கியுடன் 
மேக நிறத்தை ஒத்தவனே,
நீ செய்த போரில் 
உன் கையின் திறமையை அங்கு கண்டேன்.
காலின் பெருமையை இங்கு கண்டேன்.

 
479. குணங்களால் உயர்ந்த வள்ளல் 
               கோதமன் கமலத்தாள்கள் 
         வணங்கினன், வலம்கொண்டு ஏத்தி 
               மாசு அறு கற்பின் மிக்க 
         அணங்கினை அவன்கை ஈந்து, ஆண்டு  
                அருந்தவனோடும், வாச 
         மணம் கிளர் சோலை நீங்கி 
                 மணி மதில் கிடக்கை கண்டார்.

அனைத்து நற் குணங்களிலும் மேம்பட்ட இராமன்,
கௌதம முனி கால்களில் விழுந்து வணங்கி 
வலம் வந்து துதி செய்து 
குற்றமற்ற கற்பு நெறி மாறாத அகலிகையை 
முனிவன் கையில் ஒப்படைத்து 
அப்பொழுதே தவ முனியோடும்,
வாசம் வீசும் மலர்ச்சோலையிலிருந்து கிளம்பி 
அழகிய நவமணிகள் கொண்டமைக்கப்பட்ட 
மிதிலை நகரின் புறமதிலைக் கண்டனர்.


( தொடரும் )

No comments:

Post a Comment