Monday, January 13, 2020

கம்பராமாயணம் 8


282.   ஒரு பகல் உலகு எலாம்
                   உதரத்துள் பொதிந்து,
          அரு மறைக்கு உணர்வு அரும்
                  அவனை, அஞ்சனக்
          கரு முகிற் கொழுந்து எழில்
                   காட்டும் சோதியை,
          திரு உறப் பயந்தனள் -  திறம்
                   கொள் கோசலை.

பிரளயத்தின் போது
உலகை எல்லாம் தன் வயிற்றில் வைத்துக் காத்தவனை,
வேதங்களும் விவரிக்க முடியாத அப் பரம்பொருளை,
கரு மேகத்தின் அழகைக் காட்டும் ஒளி வடிவாய்த் திகழ்பவனை
உலகம் சிறக்க வேண்டி அவதரிப்பவனை
கோசலை பெற்றெடுத்தாள்.


286.  ஆடினர், அரம்பையர்; அமுத ஏழ் இசை
          பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
          'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்
          ஓடினர், உலாவினர், உம்பா முற்றுமே;

ரம்பை போன்ற தேவ மங்கையர் ஆடிக் கொண்டாடினர்;
அமுதம் போன்ற ஏழு வகை இசை மீட்டிப் பாடினர் ;
பல்வேறு வாத்தியங்கள் முழங்கி ஓசை எழுப்பி மகிழ்ந்தனர்;
'அரக்கர் அழிந்தனர்' என்று ஆடி வான வீதியெங்கும் ஓடித் திரிந்தனர்;


289.  'இறை தவிர்ந்திடுக, பார் யாண்டு ஓர் ஏழ்; நிதி
          நிறைதரு சாலை தாள் நீக்கி, யாவையும்
          முறை கெட, வறியவர் முகந்து கொள்க' எனா
          அறை பறை' என்றனன் - அரசர் கோமகன்.

ஏழாண்டுகள் சிற்றரசர்கள் திறை செலுத்துவதைத் தவிர்க்க;
செல்வம் சேர்த்து வைக்கப்பட்டுள்ள அறையின் தாழ்பாள் அகற்றுக;
வரைமுறை இல்லாது வறியவர் வேண்டிய அளவு அள்ளிக் கொள்க;
இதை உடனே பறை அடித்து தெரியப்படுத்துக; 
   - என்று மன்னர் மன்னன் அறிவித்தான்;


296. கரா மலைய, தளர் கைக் கரி எய்த்தே,
        'அரா-அணையில் துயில்வோய்!' என, அந் நாள்,
        விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
        'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே.

ஒரு முதலை காலைக் கவ்வி வருத்த,
சோர்வுற்ற யானை கஜேந்திரன்,
பாம்புப் படுக்கையில் படுத்திருந்தவனை அழைக்க
அக்கணமே விரைந்து வந்து அருள் செய்த அந்த மெய்ப்பொருளுக்கு
'இராமன்' என்று பெயர் சூட்டினான்.

308.  வீரனும், இளைஞரும் வெறி பொழில்களின்வாய்
          ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்,
          சோர் பொழுது, அணிநகர் துறுகுவர்; எதிர்வார்,
          கார் வர அலர் பயிர் பொருவுவர், களியால்.

மாவீரன் ராமனும் அவர் தம்பியரும்
மணம் வீசும் சோலைகளைக் கண்டு களிப்பர்;
வந்தாரோடு அன்போடு உரையாடும்
முனிவரிகளிடம் பேசி மகிழ்வர்;
மாலையில் அரண்மனை வாயில் வந்தடைவர்;
வரும்போதும், போகும்போதும் நால்வரையும் நோக்கும் நகரத்தார்
'மழை வர மகிழும் பயிர் போல்' ஆனந்தம் கொள்வர்;

( தொடரும் )

No comments:

Post a Comment