690. நினைந்த முனி பகர்ந்த எலாம்
நெறி உன்னி, அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கி
போர் ஏற்றின் முகம் பார்த்தான்;
வனைந்தனைய திருமேனி
வள்ளலும், அம் மா தவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து, அந்த
நெடுஞ் சிலையை நோக்கினான்.
சதானந்த முனி வில்லின் பெருமையையெல்லாம் கூறியது கேட்டு,
ஞானி விசுவாமித்திரன் சிந்தித்து
தன் சடைமுடி நெறிப்படுத்தியபடியே
போர்த் திறம் மிகுந்த , காளை ராமனைப் பார்க்க,
வரைந்த ஓவியம் போன்ற இராமன்
முனிவன் பார்வையைப் புரிந்து கொண்டு
நெடிய அந்த சிவதனுசை
நோக்கினான்.
699. தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.
இமை மூடித் திறப்பதற்கும் மறுத்து
சபையிலிருந்தோர் அமர்ந்திருந்தனர்.
இராமன் தன் திருவடியை
வில்லின் ஒரு முனையில் வைத்து
மற்றொரு முனையில் நாண் ஏற்றிய வேகத்தைக்
காண முடியாது பரிதவித்தனர்.
இப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என்று
யோசிக்கும் திறனில்லாது வருந்தினர்.
வில்லை இராமன் கையில் எடுத்ததைப் பார்த்தனர்.
அது முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டனர்.
722. வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;
அந்தம் இல் உவகையள், ஆடிப் பாடினள்;
'சிந்தையுள் மகிழ்ச்சியும், புகுந்த செய்தியும்
சுந்தரி! சொல்' என, தொழுது சொல்லுவாள்.
(வில்லுடைந்த சேதி சொல்ல நீலமாலை என்ற தோழி ஓடிவந்தாள்)
வந்தவள் சீதையின் அடி விழுந்து வணங்கவில்லை;
ஆரவாரம் செய்தாள்
எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவளாய்
ஆடினாள், பாடினாள்;
'அடி அழகானவளே,
உன் மட்டற்ற மகிழ்ச்சியின் காரணத்தை,
கொண்டுவந்த சேதியைச் சொல்'
என்று சீதை கூறியதும்
தோழி, தொழுது பேசத் தொடங்கினாள்.
728. 'இல்லையே நுசுப்பு' என்பார்
'உண்டு, உண்டு' என்னவும்
மெல்லியல் முலைகளும்
விம்ம விம்முவாள்;
'சொல்லிய குறியின், அத்
தோன்றலே அவன்;
அல்லனேல் இறப்பேன்' என்று
அகத்துள் உன்னினாள்.
(செய்தி கேட்டதும் மகிழ்ந்த சீதை)
இடை இல்லை என்று சொன்னவர்,
இப்பொழுது மகிழ்ச்சியில் இடை பெருக்க,
உண்டு என்று ஒப்புக் கொள்ளவும்,
தனங்கள் பருக்க, உடல் பூரிக்க,
நீலமாலை சொன்ன அடையாளங்களால்
வில்லை முறித்தவன், கன்னி மாடத்திலிருந்து கண்டவன்
அப்படி இல்லாதிருந்தால் நான் உயிரை மாய்த்துக்கொள்வேன்
என்று மனதில் உறுதி கொண்டாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment