Sunday, January 26, 2020

கம்பராமாயணம் 19




கடிமணப் படலம்


1162.  "'உரவு ஏதும் இலார் உயிர் ஏதும்' எனா
           கரவே புரிவார் உளரோ? கதிரோன்
           வரவே, எனை ஆள் உடையோன் வருமே!
           இரவே! கொடியாய் விடியாய்" எனுமால்.

வலிமையற்ற பெண்ணிற்கு
வாழ்வளிப்போம் என்றெண்ணாது
வஞ்சனை செய்வார் உன்னைப்போல் வேறார்?
கதிரவன் துயிலெழ
எனையாளும் எம்பெருமான் என்னிடம் வந்திடுவான்.
கொடிய இரவே,
சீக்கிரம் விடியாய்.


1167.   'தெருவே திரிவார், ஒரு சேவகனார், 
            இரு போதும் விடார், இது என்னை கொலாம்!
            கரு மா முகில் போல்பவர், கன்னியர்பால் 
            வருவார் உளரோ, குல மன்னவர்?

வீரர் ஒருவர், தெருவில் திரிகின்றார் 
காலை மாலை எந்நேரமும் 
எனை விட்டும் அகல்வதில்லை,
இது என்ன மாயம் ? எப்படி சாத்தியம் ?
கரு முகில் நிறத்தவர்,
மன்னர் குலத்தவர்,
இப்படி கன்னியர் பால் வந்து செல்வர் உளரோ ?



1169.  பண்ணோ ஒழியா, பகலோ புகுதாது;
           எண்ணோ தவிரா, இரவோ விடியாது;
           உள் நோவு ஒழியா, உயிரோ அகலா;
           கண்ணோ துயிலா, இதுவோ கடனே?

பாடல் இசை நிற்காது,
பகல் விடியாது 
எண்ணங்கள் எனை விட்டு நீங்காது 
இரவும் முடியாது 
உள்ளத்தின் ஏக்கங்கள் ஒழியாது 
உயிரும் போகாது 
உறக்கம் வராது, 
பெண்ணாய்ப் பிறந்ததே இங்ஙனம் துன்பப்படத்தானோ ?



1244.    மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
             வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து 
             இன் துணைஅன்னமும், எய்தி இருந்தார்;
             ஒன்றிய போகமும் யோகமும் ஓத்தார்.

இராமனும் 
மண்டபம் வந்து, 
திருமணத்துக்குரிய ஆசனங்களில் ஏறி
பல பெருமைகளுடைய வெற்றி வீரன் இராமனும் 
அவன் இனிய துணையான அன்னம் போன்ற சீதையும் 
அருகருகே நெருங்கி அமர்ந்திருந்தார்கள்.
ஒன்றோடொன்று இணைந்த பேரின்பமும், 
அதற்குபாயமான யோக நிலையினையும் ஓத்திருந்தார்கள்.


1248.   வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்          
            மை அறு மந்திரம் மும்மை வழங்கா 
            நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான் 
            தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்.

சுடும் தீயின் முன் 
வீரன் இராமன் அவ்வமயம் 
தவறின்றி மூன்று முறை மந்திரங்களைச் சொல்லி 
நெய்யோடு கூடிய அவிர்பாகங்களை தீயிலிட்டான்.
அதன்பின் சீதையின் தளிர் போன்ற மெல்லிய கரத்தினை 
தன் அகன்ற திருக்கரத்தால் பற்றினான்.


( தொடரும் )


No comments:

Post a Comment