Friday, July 29, 2022

தமிழமுது 7

திருக்குறள்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

----------------------------------------------------------------------------

நாலடியார்

மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று. (61)

தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே. (5)

அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.

--------------------------------------------------------------------------------

தேவாரம்

ஊர்திரை வேலையுள் ளானு முலகிறந் தொண்பொரு ளானும்
சீர்தரு பாடலுள் ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை மருவி யுடன்வைத் தவனும்
ஆர்திரை நாளுகந் தானு மாரூ ரமர்ந்தஅம் மானே. (4.4.6)

பரவும் அலைகளை உடைய பாற்கடலில் உள்ளவனும், உலகுக்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பொருளாவானும், சிறந்த பாடல்களில் உள்ளவனும், சிவந்த கண்களை உடைய திருமாலாகிய காளையின் வடிவம் எழுதிய கொடியை உடையவனும், நீண்ட பொலிவு பொருந்திய கூந்தலை உடைய பார்வதியைத் தழுவி ஒருபாகமாக வைத்தவனும், திரு ஆதிரை நாளை விரும்பி ஏற்றவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான்.

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்
   
கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான்
   
மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேஎம்
   
பெருமான்எம்
மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே
   
வருந்துவனே (8.5.12)

நான் பிறவித் துன்பத்துக்கு அஞ்ச மாட்டேன். இறப்புத் துன்பத்துக்கு அஞ்சுகின்றிலேன். மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஆளவிரும்பேன். உன் திருவருளுக்கு உரியே னாகுங் காலம், எக்காலமோ என்று வருந்துவேன். ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.
--------------------------------------------------------------------------------

திருமந்திரம்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே  (10.4.5)

சூரிய காந்தக் கற்கள் தனியே நிற்கும் பொழுது தம்மை மூடியுள்ள பஞ்சு களைச் சுடமாட்டா. அது போலப் பசுக்கள் தனியே நின்று தம்மைப் பிணித்துள்ள பாசங்களை நீக்கமாட்டா. ஆயினும், அச்சூரிய காந்தக் கற்கள் சூரியன் வந்தபொழுது அதன் கிரணத்தைப் பெற்றுத் தம்மை மூடியுள்ள பஞ்சுகளைச் சுட்டெரிக்குமாறுபோல, சிவன் ஞானாசிரிய னாய் வந்த பொழுது பசுக்கள் அக்குருவின் அருளைப் பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள பாசங்களை அகன்றொழியச் செய்யும்.

--------------------------------------------------------------------------------

( தொடரும் )

copy right to the respective web sites.

Thursday, July 14, 2022

தமிழமுது 6

திருக்குறள்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

----------------------------------------------------------------------------

நாலடியார்

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும். (59)

மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பெயர் பெற்ற ஐந்து புலன்களை அடக்கி, அவற்றின் வழியாக வரும் மிகுந்த ஆசையை மனக் கலக்கமின்றித் தன்னிடம் சேராமல் பாதுகாத்து, நல்லொழுக்கத்தில் செலுத்தும் வல்லமையுடையவனே தவறாமல் வீடுபேறு அடைவான். (ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனே வீடு பேறு அடைவான்.)

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

4. மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.

--------------------------------------------------------------------------------

தேவாரம்

வேயி னார்பணைத் தோளியொ டாடலை வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமு
தாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனே
தீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த செம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம்
மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே. (3.1.8)

மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியொடு திருக்கூத்தாடுதலை விரும்பினவனே, விகிர்தனே, வணங்கிய உயிர்கட்கு அருளமுதமாகியவனே, இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே, தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையனே, திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திருநடங் கொள்ளும் இடமாக விரும்பியவனே, நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம்.

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

புகவே தகேன்உனக் கன்பருள் யான்என்பொல்
   
லாமணியே
தகவே எனைஉனக் காட்கொண்ட தன்மைஎப்
   
புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண்
   
ணாஅமுதே
நகவே தகும்எம் பிரான்என்னை நீசெய்த
   
நாடகமே
 (8.5.10)

என் தொளைக்காத மாணிக்கமே! நான் உன் அடியார்களுக்கு இடையே வாழவும், தகுதி உடையவன் அல்லன். அங்ஙனமாக அடியேனை உனக்கு ஆளாக்கிக் கொண்ட தன்மை யானது தகுதியோ? எவ்வகைப் புன்மையோரையும் மிகவும் உயர்வித்துத் தேவர்களைப் பணியச் செய்கிறாய். கிடைக்கலாகாத அமிர்தமே! எம்பிரானே! என்னை நீ செய்த கூத்து நகைப்பதற்கு உரியதே ஆகும்.

--------------------------------------------------------------------------------

திருமந்திரம் 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. (10.1)

ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

( தொடரும் )

copy right to the respective web sites.

Sunday, July 10, 2022

தமிழமுது 5

 திருக்குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு (21)

தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

----------------------------------------------------------------------------

நாலடியார்

கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
பிணியோடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.   55

இளமைப் பருவமும் வீணாகக் கழிந்துவிட்டது. இப்பொழுதே நோயும் முதுமையும் வந்து சேரும்; ஆதலால் துணிவுடன், என்னோடு ஆராயாது புலன்வழி செல்லும் மனமே! நமக்கு நல்வழி உண்டாக நீ என்னுடன் வருவாயாக! (புலன் வழி செல்லாது அறிவுவழி செல்வாயாக! என ஆத்மா, மனத்தை நோக்கிக் கூறியது இது.)

----------------------------------------------------------------------------

தேவாரம்

ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே
பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்
சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே. (3.1.1)

நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப் பெற்றவனே! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே! நறிய கொன்றைப் பூமாலையை நயந்து (விரும்பிச்) சூடியவனே! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே! பலவாகிய சடைமேல், குளிர் பனியைச் சொரிகின்ற வெண்ணிலவை யுடைய இளம் பிறையைச் சூடியவனே! எம் தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க.

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே
பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்
சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே. (3.1.1)

நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப் பெற்றவனே! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே! நறிய கொன்றைப் பூமாலையை நயந்து (விரும்பிச்) சூடியவனே! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே! பலவாகிய சடைமேல், குளிர் பனியைச் சொரிகின்ற வெண்ணிலவை யுடைய இளம் பிறையைச் சூடியவனே! எம் தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க.

( தொடரும் )

copy right to the respective web sites.

Tuesday, July 5, 2022

தமிழமுது 4

 திருக்குறள்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் (17)

பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்

----------------------------------------------------------------------------

நாலடியார்

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது. (51)

விளக்கொளி வர, அங்கே இருந்த இருள் அகல்வது போல, ஒருவன் செய்த தவத்தின் முன்னே பாவம் விலகும், விளக்கில் எண்ணெய் குறையும்போது, இருள் பரவுவது போல் நல்வினை நீங்குமிடத்துப் பாவம் நிலைத்து நிற்கும்

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. ( 3 )

அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.

--------------------------------------------------------------------------------

தேவாரம்

நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே . (2.11.1)

நன்மையே வடிவானவன். நான்கு மறைகள், அவற்றோடு இயலும் ஆறு அங்கங்கள் ஆகியனவற்றில் வல்லவன். அவற்றைக் கற்றுணர்ந்த அந்தணர்பால் நிறைந்து அவர்கள் ஓதும் துதிகளைத் தன் வடிவாகக் கொண்டவன். பழமையான மதில்கள் சூழ்ந்த காழிப்பதியில் விளங்கும் கோயிலைத் தனது வீடாகக் கொண்டவன். அத்தகையோனை ஏத்துவோர்க்கு இன்பம் உண்டாம்.

--------------------------------------------------------------------------------

( தொடரும் )

copy right to the respective web sites.