Wednesday, June 27, 2018

பொன்மாலைப் பொழுதில் 28


217. நான் சொல்லுமெதையும் நீ காதில் வாங்கிக் கொள்வதில்லை
என் எண்ணப்படி எதையும் செய்வதில்லை.
என் ஆசைக்கு மதிப்பு தருவதில்லை
நான் எது செய்தாலும் நீ இஷ்டப்படுவதில்லை.
என் மனம் புண்படும்படி எதாவது நக்கல் செய்ய மறப்பதில்லை.
இத்தனைக்குப் பிறகும் எனக்குப்
*பிடிக்குதே, திரும்ப திரும்ப உன்னை*

216. பசித்தவனுக்கு அறுசுவை விருந்து கிடைத்ததுபோலே,
வெயிலில் அலைந்து திரிந்தவனுக்கு மரநிழல் கிட்டியதுபோலே,
பணத்தாசை கொண்டவனுக்கு ஒரு சில லட்சம் பரிசு கிட்டியதுபோலே,
கடினமாய் உழைத்தவனுக்கு வெற்றி கிட்டியதுபோலே
என்னைக் காண, நீ
*மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே*


215. வெயில் குறைவாய் இருக்க,
சுற்றுச்சூழல் மாசுபடாதிருக்க
போதுமான அளவு மழை பொழிய
கட்டிடங்களால் காற்றன் வீச்சு தடைபடாதிருக்க
போக்குவரத்து நெரிசல் இல்லாதிருக்க
விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்க
வாழ்க்கை நிதானம் நிரம்பியிருக்க
இன்னும் என்னென்னவோ ஆசை எல்லாருக்குமிருக்கு.
எனக்கோ
*உன்கூடப் பேசத்தானே ஆசை*

214. பார்க்கும் திரைப்படங்களில் நாயகி நீ, நாயகன் நான்.
ஒலிக்கும் பாடல்களில் பெண் குரல் நீ, ஆண் குரல் நான்.
கடிகாரத்தில் வேகமாய் ஓடும் நிமிடமுள் நீ, மணி காட்டும் சின்னமுள் நான்.
ஸ்வரங்களில் சரிகம நீ, பதநி நான்.
கவிதைகளின் கருப் பொருள் நீ, எதுகை மோனை நான்.
கார்காலத்தின் இடி மின்னல் நீ, மேகம் மழை நான்.
நம் வீட்டின் *ஒரு பாதிக் கதவு நீயடி, மறுபாதிக் கதவு நானடி*


213. பிரிந்திருந்தாலும் வெறுப்பில்லை
மறைந்திருந்தாலும் மறக்கவில்லை
உன் கள்ளச் சிரிப்பும் எள்ளல் பேச்சும் இன்றுமெனைச் சுற்றி ஒலிக்கிறது.
காது கடித்து வறுக்கும் உன் குட்டிச் செய்திகள் இன்னும் இனிக்கிறது.
இதழில் எழுதியக் கவிதைகளும்
இடையில் வரைந்தக் கோலங்களும்
இன்றளவும் எண்ணி மகிழ்கிறேன்.
வாழ்க்கையின் ஓட்டத்தில் வழிமாறிப் பிழைக்க நேர்ந்தாலும்,
காலம் நமைக் காணமுடியாதபடி  விலக்கி வைத்திருந்தாலும்,
உனையெண்ணி ஏங்கும் என்னைக்
காண எண்ணும் *உன்னை நானறிவேன்*


212. சோகமெதற்கு இப்போது ?
புலம்புவதை முதலில் நிப்பாட்டு.
என்ன செய்தாய், கிட்டவில்லை என்று கலங்குகிறாய்.

களைத்தவனுக்குத்தான் ஓய்வு
பசித்தவனுக்குத்தான் உணவு
உழைத்தவனுக்குத்தான் வெற்றி.

தொடர்ந்து முயல்.
தோல்வி தந்தப் பாடத்தைப் பயில்.

வெற்றி போதையேற்றும்.
தோல்வி நல்வழிப்படுத்தும்.

ஒவ்வொரு முறை நீ முயன்று தோற்கும் போதும்
உன் இலக்கு உனை நோக்கி நகர்கிறது.
தோல்வி கண்டு நீ நகைக்குப் போதெல்லாம்
வெற்றி உன்இருப்பிடம் தேடி வருகிறது.

இன்று இல்லையேல் நாளை.
இனிதாய் விடியும் உன்வேளை.
இன்னும் என்ன கவலை ?
*மயக்கமா ? தயக்கமா ?*


211. நீ என்ன உண்டாயென்று ஒரு நாளும் நான்  யோசித்ததில்லை, ஆனால் எனக்கு மட்டும் தினம் அறுசுவை விருந்து தந்ததை மறக்கவில்லை.
உனக்கென்ன வேணுமென்று ஒருநாளும் நான் கேட்டதில்லை. ஆனால் நான் கேட்குமுன்னே எனக்கு வேண்டியதை நீ எடுத்துத் தர மறந்ததில்லை.
உனக்கு எப்பொழுதாவது உடம்பு சுகமில்லாது போனதுண்டா என்றெனக்கு நினைவில்லை. நீ கூடயிருக்கும் வரை ஒரு நோயும் எனை நெருங்கியதில்லை.
என் அழுகைக்கும் சிரிப்புக்கும் அர்த்தம் தெரிந்தவளே,
எதற்கு ஆத்திரமடைவேன் எப்போது பாச மழை பொழிவேன் என்றறிந்தவளே,
உன்னைப்பற்றி ஏதுமறியுமுன் காணமுடியாதூரம் சென்றுவிட்டாயே
*கள்ளிக்காட்டில் பிறந்தத் தாயே*

210. உன்னால் தானே நான்,
நீயில்லையேல் ஏது நான் ?
கண்ணின் மணியாய் எனைக் காத்து வந்தாய்.
அமுதூட்டும் போதே அன்பு பண்பு எல்லாம் சொல்லித்தந்தாய்.
என் சுடு சொற்கள் பொருத்தாய்.
உன் சொல் கேளாது உனை மதிக்காத போதும் என கூட நின்றுக் காத்தாய்.
வாழ்வில் நான் உயர உயர நீ மகிழ்ந்தாய்.
என் வெற்றியே உன் கனவு இலட்சியம்
என்றெண்ணி வாழ்ந்தாய்.
இதோ இன்று ஒரு நிலைக்கு வந்த பின் திரும்பிப் பார்க்கிறேன்.
உன் சிரித்த முகம் எங்கும் தென்படாது தவிக்கிறேன்.
இன்று இன்பக்கடலில் நான் நீந்தி விளையாட அன்று நீ எதிர்கொண்ட இன்னல்களை எண்ணித் தவிக்கிறேன்.
இன்று நான் விருட்சமாய் வளர்ந்து நிற்க என் விதைக்கு நீ நீரூற்றியதை நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.
உனை என்றும் மறக்க முடியாது வாழ்ந்து வருகிறேன.
என் *உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீ தாயே*

209. எத்தனையோ நாள் காத்திருந்தேன்.
அவள் செல்லுமிடமெல்லாம் நிழலாய்ப் பின்தொடர்ந்தேன்.
அவளுக்குப் பிடித்த எல்லாவற்றையும்  பிடித்தவாறே செய்துவந்தேன்.
உள்ளதை உள்ளபடி வர்ணித்து ஓரிரு  கவிதைகள் அனுப்பினேன்.
என் அழகையும் அறிவையும் கண்டு மயங்காதவள் என் எழுத்தில் ஈர்க்கப்பட்டு எனை ஏற்றுக்கொண்டாள்.
கன்னியவள் எனைக் காதலிப்பதாய் ஒத்துக்கொண்டாள்.
காலமெல்லாம் கூட வருவதாய் வாக்கு தந்தாள்.
இதோ என் விடாமுயற்சி வெற்றிக்கனி ஈன்றது.
இனியென்றும் *காதல் வைபோகமே*

Monday, June 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 27

208. பெண் :
அன்பாய் அக்கறையோடு குடும்பம் காப்பவள்,
கலகம் செய்வோரைக் கண்டால் காளியாய் மாறத் தயங்காதவள்.

பயங்கொள்ளாள், பாசாங்கு இல்லாள். பக்தி நெறியில் தர்மவழியில் வந்தச் செல்வம் காத்து தனலக்ஷ்மியாகிறாள்.

பண்பானவள், பணிந்து நடப்பவள், அபயம் கேட்டால் ஆதரித்து ஆனந்தலக்ஷ்மி ஆகிறாள்.

நெஞ்சில் வீரமேற்றி சாதிக்கவைத்து வீரலக்ஷ்மியாகி வெற்றிக்கு வழிகாட்டும் விஜயலக்ஷ்மி ஆகிறாள்.

தான் கற்றதைக் கற்பித்துக் கலைவாணியாய்க் காட்சிதருகிறாள்.
அனைவர்க்கும் அருசுவை அன்னம் உண்ணத் தந்து அன்னபூரணியாய் அவதாரமெடுக்கிறாள்.

வாழ்க்கையை வாசம் மிக்கப் பூச்சோலை ஆக்குவாள்.
சாதாரண ஆளையும் சாதனையாளனாக்கி சரித்திரம் படைப்பாள்.
இயற்கையோடு இணைந்து வாழ்கிறாள்.
காற்றாய் மலையாய் கடலாய் நதியாய் எல்லாமுமாய் எங்கும் நிறைகிறாள்.

அப்பெண்மையைப் போற்றுவோம்.
பாரினில் புகழ் பெறுவோம்.



207. விடிகாலையில் விடியும் வேளையில் பாடுவது பூபாளம்.
அம்சமாய் ஆண்டவன் முன் நீ ஆட பாடப்படுவது ஹம்சத்வனி.
மதிய வேலையில் மதுவந்தியும், மத்யமாவதி ராகமும்.
முன் மாலை வேளைக்குத் தாளமிட்டுப் பாட, ரசிக்க தர்பார்.
சாயங்காலத்தில் சவுகரியமாய்ப் பாட ஷண்முகப்ரியா, கல்யாணி.
இரவை ஆனந்தமாக்கிட ஆனந்த பைரவி, நீலாம்பரி.
எல்லா நேரத்திலும் பாட சங்கராபரணம், கரகரப்ரியாவும்.

இதெல்லாம் சரி,
பூமி வாழ மழை பொழிகையில்
*சின்ன சின்ன மேகம் பாடுவது தேவராகமோ?*



206. நமக்குள் இல்லை உறவு
தாமரையிலைமேல் தண்ணீராய்
சேராதும் பிரியாதும் நம் வாழ்வு
இருந்தும் எனக்குண்டு உன் தயவு
உன்மேல் எனக்குப் பரிவு
நம் காதலுக்கில்லை பிரிவு
தினம் வரும் உன்  நினைவு
கண்மூடினால் கனவிலுன் வரவு
கண்டுரசிப்பதுன் முகப் பொலிவு
அவ்வமயம் வானில் தெரியும் நிலவு
இது *பனி விழும் இரவு*


205. அடி எங்கள் அன்பின் ராதே,
கண்ணனைக் காணச் சென்றாயே
கண்டாயா? கண்டு பேசினாயா?
ரகசியமாய்ச் சிரிக்கிறாயே, கொஞ்சம் விவரம் சொல்லப் புரிந்துக் கொள்வோமே.
*
இடை சிறுத்தவளே,
அவன் நடை உடை உருவம் செப்பு, எம்செவி இன்புறவே.
காதலனவன் கள்ளப் பார்வையில் உனை மறந்து நின்றிருப்பாயே.
அவன் கொஞ்சல் பேச்சில் கோலமயில் நீ சொக்கிப்போனாயா?
குழலூதுகையிலும் உன் குழல் கலைத்து விளையாடினானா ? விவரம் சொல்லடி.
*
நயனங்களாலேயே நடனமாடும் நங்கையே நடந்ததை நவின்றிடு.
கண்ணே என்றழைத்தானா ? கட்டிப்பிடித்தானா? இதழில் இல்லை இடையில் எதையாவது தேடினானா?
எங்கே ஓடி ஒளிகிறாய்,
*சுந்தரி பெண்ணே ... சுந்தரி பெண்ணே நில்லு நில்லு*


204. எது என்றுத் தெரியவில்லை.
உனையொரு விநாடி எண்ணியவுடன் கவிதை பிறக்குதே, அதுவா ?
அழகென்று எவர் எதைச் சொன்னாலும் உன் ஞாபகம் வருகுதே, அதுவா ?
நீர் அருந்தும் போதும் நிலவைக் காணும் போதும் நீ என்ன செய்துகொண்டிருப்பாய் என்றெண்ணத் தோன்றுதே, அதுவா ?
'நாராசமான கவிதை, சொல்லவா' என்றதும் காது அடைத்துக்கொண்டு 'ஜொல்லு' என்பாயே, அதுவா ?
அழைத்தவுடன் வருகிறாய், உதவக் கேட்டால் உடனே செய்கிறாயே, அதுவா ?
கொஞ்சமாய்ப் பேசுகிறாய், ஒரு சின்னச் சிரிப்புடன் எப்பழதும் வளைய வருகிறாயே, அதுவா ?
ஏதோ ஒன்று ...
*எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று*

203. நேற்று அப்படியானதே, இன்று என்னாகும் என்ற சிந்தனை;
'எசககுபிசகாய் ஏதும் ஆகாதே' நப்பாசையோடு அச்சம் எழும்.
எல்லா நாளும் சலங்கை சத்தம் தொடர்ந்து  ஒலிக்கும் ... ஜல்.
சிலநாள்...இருளில்...கூட்டத்தின் இடையே தேடியலைவேன் ... ஜல்.
சிலநாளோ தேடத்தேவையேயின்றி எதிரில் நின்று சிரிப்பாய் ... ஜல்.
புடவையில் நான் ...ஜல்... இடையில் கோலம் வரையும் நீ ...ஜல்... அடுத்த இலக்காய் ~வயிறு நோக்கி நகரும்~
புல்மேல் நீ, மடியில் நான், பரவும் இருள், விலகும் நாணம் ...ஜல்.
சிலசமயம் எனை தொட நீ துரத்த இருளில் நான் விரைய ...ஜல்.
~படுக்கையில் என் மேல் புரளும் நீ ... ஆடையின் தேவையின்றி~
பகலில் நீ காக்கும் கண்ணியத்தை இரவில் காற்றில் பறக்க விடுமென்
*ரகசியக் கனவுகள் ஜல் ஜல் ஜல்*

202. தினம் உன்னைப் பார்க்க வேண்டும்.
உன்னோடு பேசிச் சிரிக்க வேண்டும்.
காதல் ரசம் சொட்டும் கவிதைகளை காதில் நீ சொல்ல வேண்டும்.
நாணத்தோடு நான் அவற்றைக் கேட்டு ரசிக்க வேண்டும்.
விரலிணைத்து வீதியுலா செல்ல வேண்டும்.
பார்க்குமெல்லாவற்றையும் கேட்க, நான் கேட்குமெல்லாவற்றையும் நீ வாங்கித் தர வேண்டும்.
எல்லாப்பொழுதும் என் மேல் உன் வாசம் வேண்டும்.
நீ இல்லாப்பொழுதே இல்லாதிருக்க வேண்டும்.
அன்பு காதல் காமம் என்றும் நம்மோடு  கலந்திருக்கவேண்டும்.
என் உடல் சிலிர்க்க உன்னோடு கூடி மகிழ  வேண்டும்.
அவ்வமயம் *அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்*

Monday, June 11, 2018

பொன்மாலைப் பொழுதில் 26

201. வெள்ளைத் தாளில் கவிதை போன்ற ஏதோவொன்றை எழுதினேன்.
உன் சொற்படி வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்துக் கொண்டேன்.
வெள்ளைக் காரனாய்த் தெரிகிறேன் என்று சொன்னபோது சிரித்து நகர்ந்தேன்.
வெள்ளை நிறத்தில் ஒரு வாகனம் வாங்க முடிவெடுத்தேன்.
வெள்ளைப் பூசணி விரும்பித் தின்பேன்.
வெள்ளைப் பூண்டு உனக்குப் பிடிக்காததால் உண்ணாது தவிர்க்கிறேன்.
வெள்ளை யானையைக் காண ஆவலாய்  இருக்குது.
எல்லா வரியிலும் வெள்ளை வர கனவு மட்டும் கருப்பாகவா வரும் ?
மனதில் *வெள்ளைக் கனவொன்று உள்ளே நுழைந்தது*

200. தொடி அணிந்தத் தோகையே,
கயல் விழிக் கண்களால் எனைக் கவர்ந்தக் காரிகையே.
களிரு போல் தெரிந்தேன், கட்டுப்பாடின்றித் திரிந்தேன்.
என்றுனைக் கண்டேனோ அன்றே நானுன் மேல் மையல் கொண்டேன்.
என் உள்ளத்தின் உள்ளே உள்ள உருவம் உன்னதுதானடி உயிரே.
உன் கருங்கூந்தலின் ஆட்டத்திற்கு இணையாய்க் கவி பாடவா ?
உன் பொற்பாதச் சிலம்பொலிக்கு ஜதி சொல்லவா ?
எந்த விதத்தில் உனைக் கவர ? சொல்லிடு வா.
நழுவுகிறாயே, பசலை பயமா ? நாணமா? கோபமா?
இன்னும் நாம் பேசவேயில்லையே, ஊடலெதற்கு உயிரே ?
நில்லாயொரு நாளிகை, நங்கையே
*நறுமுகையே நறுமுகையே*

199. அவனுக்குப் பிடித்த நீல நிறத்தில் புடவை அணிந்துக் கொண்டேன்.
குந்தவையைக் காணப் பயணித்த  வந்தியத்தேவன் பழைய கதை.
மன்னவனைக் காண மங்கை நான் பயணிப்பது புதிய கதை.
எனைக் கண்டதும் ஆச்சரியத்தை மறைத்தபடி கோபத்தில் குதிப்பான்.
பயப்படுவதாய் நடிக்க குலைவான்.
மல்லிகை மணத்தில் மயங்குவான்.
வெட்கிக் சிரிக்கக் கிறங்குவான்.
மடியிலெனைக் கிடத்திக் கவிதை மழை பொழிந்திடுவான்.
இந்த எண்ணங்களெல்லாம் எனை அவனைநோக்கி நகர்த்துகின்றன.
ஒரு முடிவோடு கிளம்பிட்டேன்.
இனி யார் சொல் பேச்சும் கேளேன்.
*என் ஆளை பாக்கப் போறேன்*.

198. இதுவரை இத்தனை விஷயங்கள் எனைச் சுற்றியிருப்பதை உணர்ந்ததில்லை.
உன்னோடுப் பழகிய பின்பு தான் எல்லாம் ரசிக்க எண்ணம் ஏற்படுது.
பரந்து விரிந்த புல்வெளியில் நடந்திடப் புத்துணர்ச்சி பிறக்குது.
புல்லின்மேல் பனி இட்டப் பொட்டு எனை வியப்பிலாழ்த்துது.
பல வண்ணங்களில் பூத்திருக்கும் பூக்களெல்லாம் பரவசமளிக்குது.
படபடவென்று பறக்குமிந்தப் பட்டாம்பூச்சி ரம்மியமாய்த் தோன்றுது.
கீச்சு கீச்சென்றுக் கூவுமிந்தப் பறவைகளின் இன்னிசை அனுபவித்தறியாதது.
இத்தனையேன் என்னைய மெல்ல வருடும் இந்தப் *பூங்காற்று புதிதானது*

197.
_16 வயதினிலே_யே பழுத்து, பலமுறை ரசிக்க வைத்த மயிலு நீ.
ஏய் சிகப்பு ரோஜாவே, நாங்கள் தேடியக் கைகுட்டை விற்றவள் நீ.
'சீனு சீனு' என்று நீ கொஞ்சி நடித்த _மூன்றாம் பிறை_ பார்க்காதார் இலை, இருந்தால் அது அவர் பிழை.
வசதியாய் வாழ்ந்து _ஜானி_யோடு என் வானிலே ... பாடினாய் நீ, _வறுமையின் நிறம் சிவப்பு_ என்று வாழ்ந்தாய் நீ.
_வாழ்வு மாயம்_ என்றுப் புரிய வைத்தாய் நீ.
_மூன்று முடிச்சோ_ முப்பது முடிச்சோ எங்கள் முதல் கனவுக்கன்னி நீ.
யாருக்கும் _நான் அடிமை இல்லை_ என்றெண்ணும் _போக்கிரி ராஜா_வையும் _கல்யாணராமனா_ய் மாற்றக்கூடியவள் நீ.
எங்கள் _தர்மயுத்த_த்தின் _குரு_ நீ.
கலையுலகின் _அடுத்த வாரிசா_ய் வலம் வந்தக் _கவிக்குயில்_ நீ.
அடி _கோகிலா_, சொல்ல வெட்கினும்
*சின்னஞ் சிறு வயதில் ...*

196. அடக்கமாய்த் தான் இருப்பேன்
நெஞ்சை இறுக்கிப் பிடித்து தான் வைத்திருந்தேன்.
என்று உனைப் பார்த்தேனே அன்றே எனை நான் மறந்தேன்.
அதெப்படி பார்த்ததும் பற்றும் என்றுப் பலரை  பகடி செய்ததுண்டு.
பாவி, பாவை நெஞ்சுள் புகுந்து பித்து பிடிக்க வைத்திட்டாய்.
அய்யகோ என்னையும் கவிதை மொழியில் சிந்திக்க வைத்திட்டாய்.
இனியெதுவும் செய்யமுடியாது என்பது மட்டும் புரிகிறது.
என் வசம் ஏதுவுமில்லை என்பதைத் தவிர வேறெதுவும் புரியவில்லை.
சரியென்று சொல்லிவிடவா ?
இன்னும் கொஞ்சம் பழகவா ?
அருகில் சென்றுப் பேசவா ?
*அம்..மாடி அம்மாடி ... நெருங்கி ஒருதரம் பார்க்கவா ?*

195. நீ நீயாகவே இருக்கிறாய்
நான் நானாகவே இருக்கிறேன்
நாம் இணையவுமில்லை பிரியவுமில்லை.
நம் ஊடல் முடியப் போவதுமில்லை.
அதனாலென்ன ?
காதல் கசந்திடுமா இல்லை கன்னி முகந்தான் வெறுத்திடுமா ?
காணுமெல்லாவற்றிலும் உனை இணைத்துப் பார்க்க முடிகிறதே.
சிரிக்கும் குழந்தையும் பூத்துக் குலுங்கும் பூவும் உன்னை ஞாபகப்படுத்துகிறது.
மெல்லிசை கேட்கையில் மடியில் நீ படுத்திருப்பதாய் மனதுள் படுகிறது.
பொட்டு பூ புடவையில் யாரைப் பார்த்தாலும் உன் பெயர் சொல்லி அழைக்கத் தோன்றுகிறது.
இதோ *அந்திமழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது*

Monday, June 4, 2018

பொன்மாலைப் பொழுதில் 25

194. அழகு கண்டிருக்கிறேன்.
அழகுடி நீயென்று பலபேரிடம் பொய்யுரை சொல்லியிருக்கிறேன்.
ஆனால் உனைப்போல் ஒருத்தியை இதுவரை கண்டதில்லை,
இப்படி வியந்து நின்றதில்லை.
*
பாற்கடலிலிருந்து பரிமாறப்படும் பாலில் பாவை நீ நீராடுவாயோ  ? கும்குமப்பூவிலிருந்து குதித்திருப்பாயோ ?
இத்தனை சிவப்பா, அடடடடா.
மின்னல் கீற்றாய், பார்த்ததும் பளிச்சிடும் சிற்றிடை.
மெல்லிய தேகம், செயலில் வேகம்
அடர்ந்தக் கூந்தல், காந்தக் கண்கள்,
கண்ணிய உடை தரை பார்த்த நடை
மொத்தத்தில் மண்ணுலகில் மிதக்கும் தேவலோக மங்கை
*
இத்தனை அழகு என்றால் யாருக்குப் பிடிக்காது போகும்?
வீதியெல்லாம் உனை ரசிக்குது.
உனக்குத் தெரியுமா ?
இந்த *ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா ?*

193. எங்கிருக்கிறோம் என்பதையே மறந்து சில நொடிகள் சிரித்து விடுகிறேன்.
எனை வசீகரிக்க நீ செய்தவைகளை எல்லாம் எண்ணிப்பார்க்கிறேன்.
எனைச் சுற்றிச்சுற்றி வந்து நீ பேசிப் பழகியதில் பெருமை கொள்கிறேன்.
உன் சேட்டைகளையும் லீலைகளையும் மறக்காது நினைத்து மகிழ்கிறேன்.
உன்னோடு இன்னும் கொஞ்சம் நாட்கள் சேர்ந்திருக்க எண்ணி ஏங்குகிறேன்.
இடையூறுகள் இருந்தும் உனை எண்ணாத நாளில்லை என்பதை ஏற்கிறேன்.
இருக்கும் வரையிலும் உன் நினைவு இறவாதிருக்க ஆசைப்படுகிறேன்.
*உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே*

192. காதினில் வைரக் கடுக்கண், கப்பலில் வந்ததாம்.
நீலநிற நெத்திச்சுட்டி என் தேகநலம் காத்திடவாம்.
பாண்டியநாட்டில் பயணிக்கையில் கிட்டியதாம் இச் சந்திரப்பிறை.
*
அரசகுடும்பத்தார் அணியும் அட்டிகையும் ஆரமும் அன்புப் பரிசு.
சிலம்பின் சிவப்புக் கல்லில் என் சிரித்த முகம் தெரிகிறதாம், நல்ல கதை.
*
என் சொல் கேளாது மாட்டிவிட்டது இந்த ஒட்டியானம்.
என் இடை பெருக்கவைக்க அவர் நெஞ்சில்  திட்டமிருக்கும் ?
*
இத்தனையும் ஏதென்றா கேட்கிறாய்,
அடி என் கிறுக்கு,
எனை இத்தனை நாள்
சிந்தையில் சித்ரவதை செய்த என்...
தூர நின்றுத் துயரம் தந்த என்...
யாருக்காகக் காத்திருந்தேனோ அம்
*மன்னவன் வந்தானடி தோழி*

191. அனலிலிருந்து அவதரித்து
ஆறுகமலங்களில் வந்தமர்ந்து
ஆறுமுகனென்றப் பெயர் பெற்று
அசகாயசூரனாய் வளர்ந்து
அரிய பழம் கேட்டு ஆத்திரமடைந்து
அரையாடையோடு அகம் துறந்து
ஆவினன்குடியில் வந்து நின்று
அன்னை சொல்ல சமாதானமாகி
அவ்வையின் அகந்தையழித்து
அரக்கனோடு போரிட்டு வென்று
அப்பாவம் நீங்க அப்பனை வேண்டி
அலைகடலருகில் நின்றருள்புரியும்
ஆண்டவா செந்தில் நாதா
அபயமளித்துக் காத்திடைய்யா
அப்பா *சரவணபவ குக வடிவழகா*

190. சிரிக்கிறாய், மனம் துள்ளிக் குதிக்கிறது.
காதினுள் கதைக்கிறாய், நெஞ்சில் கவிதை நிறைந்து வழிகிறது.
இரு புருவத்தையும் மாற்றி மாற்றி நீ ஏற்றி இறக்க, அதிசயிக்கிறேன்.
கண்ணடித்து உன் உதடுகளை இறுக்கி மூடித் தலையாட்ட, ஆனந்தமடைகிறேன்.
வேகமாய் அருகில் வந்து எனை முகரவைத்து முத்தமிட்டு பரவசத்திலாழ்த்துகிறாய்.
பெண்ணாகவும் ஆணாகவும் நமைப்படைத்த ஆண்டவனுக்கு நன்றி நவில்கிறேன்.
அழகு அறிவு என்ற இரு சொல்லுக்கு ஒரேப் பொருளாய்த் திகழும்
*ஏய் மாண்புமிகு மங்கையே*

189. கடவுளருள் நிறைய கிட்டிடவே
நற்சிந்தனைகள் நெஞ்சில் நிறைகவே
நீ நினைப்பதெல்லாம் நடந்திடவே
தொட்டதெல்லாம் துலங்கிடவே
சொல்வதெல்லாம் பழித்திடவே
நீயிருக்குமிடமெல்லாம் செழிக்கவே
உன்பாதம்பட்ட இடமெல்லாம் பொழிவுறவே
உன்னாலெல்லாரும் வளம் நலம் பெறவே
என்றும் நீ நலமாய் வாழ்க வாழ்கவே
*கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே*


188. காற்றில் கலையாக் கூந்தல்
கவிதை சுரக்காக் காதல்
*
வாசம் வீசாப் பூக்கள்
நிறைந்து வழியும் நதிகள்
*
நிலத்தில் நீந்தும் மீன்
சுவைக்கப் புளிக்கும் தேன்
*
நீரின் மேல் நடனம்
காலால் ஆடும் கரகம்
*
படுத்ததும் உறங்கும் பணக்காரர்
மனைவிக்கு அஞ்சாக் கணவர்
*
கவிதைக்குக் கிட்டும் பாராட்டு
*குழந்தை பாடும் தாலாட்டு*
*

187. கண்கள் பேசும் மொழி பார்த்து பார்த்துக் கற்றுக்கொண்டேன்.
கவிதைகள் தானே சுரப்பதால் அதிலெந்தப் பிரச்சனையுமில்லை.
அடிக்கடி ஏதாவது குளறுபடி செய்து சிரிக்கவைத்து, தினமொருமுறை லவ்யூ சொல்லி இதுவே பாலபாடம்.
வேறெந்தப் பாவை மீதும் பார்வை படரக்கூடாதென்பது காதல் வேதம்.
விரல் நீட்டி விளையாடும் சேட்டைகள் பழகவில்லை இன்னும்.
இதழில் கதை எழுத வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை.
சம்மதமெனில் சீதாராமனாய் இல்லையேல் கோபிகிருஷ்ணனாய்
*காதலெனும் தேர்வெழுதிக் காத்திருக்கும் மாணவன் நான்*