Monday, June 4, 2018

பொன்மாலைப் பொழுதில் 25

194. அழகு கண்டிருக்கிறேன்.
அழகுடி நீயென்று பலபேரிடம் பொய்யுரை சொல்லியிருக்கிறேன்.
ஆனால் உனைப்போல் ஒருத்தியை இதுவரை கண்டதில்லை,
இப்படி வியந்து நின்றதில்லை.
*
பாற்கடலிலிருந்து பரிமாறப்படும் பாலில் பாவை நீ நீராடுவாயோ  ? கும்குமப்பூவிலிருந்து குதித்திருப்பாயோ ?
இத்தனை சிவப்பா, அடடடடா.
மின்னல் கீற்றாய், பார்த்ததும் பளிச்சிடும் சிற்றிடை.
மெல்லிய தேகம், செயலில் வேகம்
அடர்ந்தக் கூந்தல், காந்தக் கண்கள்,
கண்ணிய உடை தரை பார்த்த நடை
மொத்தத்தில் மண்ணுலகில் மிதக்கும் தேவலோக மங்கை
*
இத்தனை அழகு என்றால் யாருக்குப் பிடிக்காது போகும்?
வீதியெல்லாம் உனை ரசிக்குது.
உனக்குத் தெரியுமா ?
இந்த *ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா ?*

193. எங்கிருக்கிறோம் என்பதையே மறந்து சில நொடிகள் சிரித்து விடுகிறேன்.
எனை வசீகரிக்க நீ செய்தவைகளை எல்லாம் எண்ணிப்பார்க்கிறேன்.
எனைச் சுற்றிச்சுற்றி வந்து நீ பேசிப் பழகியதில் பெருமை கொள்கிறேன்.
உன் சேட்டைகளையும் லீலைகளையும் மறக்காது நினைத்து மகிழ்கிறேன்.
உன்னோடு இன்னும் கொஞ்சம் நாட்கள் சேர்ந்திருக்க எண்ணி ஏங்குகிறேன்.
இடையூறுகள் இருந்தும் உனை எண்ணாத நாளில்லை என்பதை ஏற்கிறேன்.
இருக்கும் வரையிலும் உன் நினைவு இறவாதிருக்க ஆசைப்படுகிறேன்.
*உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே*

192. காதினில் வைரக் கடுக்கண், கப்பலில் வந்ததாம்.
நீலநிற நெத்திச்சுட்டி என் தேகநலம் காத்திடவாம்.
பாண்டியநாட்டில் பயணிக்கையில் கிட்டியதாம் இச் சந்திரப்பிறை.
*
அரசகுடும்பத்தார் அணியும் அட்டிகையும் ஆரமும் அன்புப் பரிசு.
சிலம்பின் சிவப்புக் கல்லில் என் சிரித்த முகம் தெரிகிறதாம், நல்ல கதை.
*
என் சொல் கேளாது மாட்டிவிட்டது இந்த ஒட்டியானம்.
என் இடை பெருக்கவைக்க அவர் நெஞ்சில்  திட்டமிருக்கும் ?
*
இத்தனையும் ஏதென்றா கேட்கிறாய்,
அடி என் கிறுக்கு,
எனை இத்தனை நாள்
சிந்தையில் சித்ரவதை செய்த என்...
தூர நின்றுத் துயரம் தந்த என்...
யாருக்காகக் காத்திருந்தேனோ அம்
*மன்னவன் வந்தானடி தோழி*

191. அனலிலிருந்து அவதரித்து
ஆறுகமலங்களில் வந்தமர்ந்து
ஆறுமுகனென்றப் பெயர் பெற்று
அசகாயசூரனாய் வளர்ந்து
அரிய பழம் கேட்டு ஆத்திரமடைந்து
அரையாடையோடு அகம் துறந்து
ஆவினன்குடியில் வந்து நின்று
அன்னை சொல்ல சமாதானமாகி
அவ்வையின் அகந்தையழித்து
அரக்கனோடு போரிட்டு வென்று
அப்பாவம் நீங்க அப்பனை வேண்டி
அலைகடலருகில் நின்றருள்புரியும்
ஆண்டவா செந்தில் நாதா
அபயமளித்துக் காத்திடைய்யா
அப்பா *சரவணபவ குக வடிவழகா*

190. சிரிக்கிறாய், மனம் துள்ளிக் குதிக்கிறது.
காதினுள் கதைக்கிறாய், நெஞ்சில் கவிதை நிறைந்து வழிகிறது.
இரு புருவத்தையும் மாற்றி மாற்றி நீ ஏற்றி இறக்க, அதிசயிக்கிறேன்.
கண்ணடித்து உன் உதடுகளை இறுக்கி மூடித் தலையாட்ட, ஆனந்தமடைகிறேன்.
வேகமாய் அருகில் வந்து எனை முகரவைத்து முத்தமிட்டு பரவசத்திலாழ்த்துகிறாய்.
பெண்ணாகவும் ஆணாகவும் நமைப்படைத்த ஆண்டவனுக்கு நன்றி நவில்கிறேன்.
அழகு அறிவு என்ற இரு சொல்லுக்கு ஒரேப் பொருளாய்த் திகழும்
*ஏய் மாண்புமிகு மங்கையே*

189. கடவுளருள் நிறைய கிட்டிடவே
நற்சிந்தனைகள் நெஞ்சில் நிறைகவே
நீ நினைப்பதெல்லாம் நடந்திடவே
தொட்டதெல்லாம் துலங்கிடவே
சொல்வதெல்லாம் பழித்திடவே
நீயிருக்குமிடமெல்லாம் செழிக்கவே
உன்பாதம்பட்ட இடமெல்லாம் பொழிவுறவே
உன்னாலெல்லாரும் வளம் நலம் பெறவே
என்றும் நீ நலமாய் வாழ்க வாழ்கவே
*கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே*


188. காற்றில் கலையாக் கூந்தல்
கவிதை சுரக்காக் காதல்
*
வாசம் வீசாப் பூக்கள்
நிறைந்து வழியும் நதிகள்
*
நிலத்தில் நீந்தும் மீன்
சுவைக்கப் புளிக்கும் தேன்
*
நீரின் மேல் நடனம்
காலால் ஆடும் கரகம்
*
படுத்ததும் உறங்கும் பணக்காரர்
மனைவிக்கு அஞ்சாக் கணவர்
*
கவிதைக்குக் கிட்டும் பாராட்டு
*குழந்தை பாடும் தாலாட்டு*
*

187. கண்கள் பேசும் மொழி பார்த்து பார்த்துக் கற்றுக்கொண்டேன்.
கவிதைகள் தானே சுரப்பதால் அதிலெந்தப் பிரச்சனையுமில்லை.
அடிக்கடி ஏதாவது குளறுபடி செய்து சிரிக்கவைத்து, தினமொருமுறை லவ்யூ சொல்லி இதுவே பாலபாடம்.
வேறெந்தப் பாவை மீதும் பார்வை படரக்கூடாதென்பது காதல் வேதம்.
விரல் நீட்டி விளையாடும் சேட்டைகள் பழகவில்லை இன்னும்.
இதழில் கதை எழுத வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை.
சம்மதமெனில் சீதாராமனாய் இல்லையேல் கோபிகிருஷ்ணனாய்
*காதலெனும் தேர்வெழுதிக் காத்திருக்கும் மாணவன் நான்*

No comments:

Post a Comment