Wednesday, May 30, 2018

பொன்மாலைப் பொழுதில் 24

186. படைப்பவன் நானே
பசிக்க, அழ வைப்பவன் நானே
பால் நானே, பால் தருபவள் நானே
பாவங்கள் நானே, பாவம் செய்யப்
பாதை வகுத்துத் தருபவன் நானே
பாவத்திற்குத் தண்டனை தந்துப் பாடம் புகட்டுபவன் நானே
பாதம் பணிந்தார்க்குப் பரிகாரம், பாபவிமோசனம் எல்லாம் நானே
பாரபட்சம் பாராது பாருலகைப் பாதுகாப்பவன் நானே
பந்தம் நானே, பகையும் நானே
பரந்து விரிந்த வானம் நானே
பருக வானம் தரும் பானம் நானே
பரவசம் தரும் பண்ணிசை நானே
பாடவைப்பவன் நானே
பாடப்படும் அந்தப் *பாட்டும் நானே, bபாவமும் நானே*

^பாவம் - bavam - expression

185. பூ சூடி, பொட்டிட்டு, புன்னகை புரிந்தபடியே வலம் வருவேன்.
தவறாய் யாரும் பார்க்க முடியாது நடந்து கொள்வேன்.
அப்படி நடக்க ஆரும் நினைத்தால் தடையிடத் தயங்கேன்.
ஆசையெதுவும் நெஞ்சில் நுழையாது வளர்ந்து வந்தேன்.
ஒருமுறை தானே பார்த்தோம்,
ஓரிரு வார்த்தை பேசினோம்.
இதுதான் ஜென்ம பந்தம் என்பதா ? தொடருதோ ?
இதுவரை இப்படி நடந்ததில்லையே.
ஏன் என்றெனக்குப் புரிந்தும் நம்ப முடியாது தவிக்கிறேனே.
உங்கள் ஒரு்சிறுப் பார்வையில், புன்சிரிப்பில் மெல்ல கரைகிறேனே
*துளி துளியாய், பனித்துளியாய்*.

184. சொன்னால் செய்கிறாய் நீ
சொன்னபடியே செய்கிறாய் நீ
என் எண்ணப்படி இசைகிறாய் நீ
கனவின் உருவாய்,கதைக் கருவாய் கவிதைப் பொருளாய் எல்லாம் நீ
நீயில்லாதிடமேயில்லை என்பதாய் எல்லாவிடத்திலும் என்னோடு நீ  தேவலோகத்து மங்கையர் போல் நர்த்தனமாடுவதிலும் நிபுணி நீ
இன்று இத்தினம் என்னோடு இணைந்துப் பாட வா நீ
இரவிலும் கனவிலும் பாட வா நீ
எல்லா ராகமும் நீயறிந்த போதிடினும் என்னோடு பாடு நீ *கீரவாணி*


183. பிள்ளையாரப்பா
கயிலைமலையானே
தினமொருக் கவிதை புனையக் கருணை புரியும் கனல்விழியானே
மாதொருபாகனாய் நின்றென் மனங்கவர்ந்த மகாதேவா,
பாதம் பற்றினார்ப் பாவம் போக்கும் பரமேஷ்வரா,
நினை நினையாத நாளில்லை நீலகண்டா,
திருவிளையாடல் பலபுரிந்த தியாகேசா,
தில்லை நடராஜா,
பிள்ளையின் பிழையெதுவாயினும் பொருத்தருளும் தாயுமானவா,
தயை புரிந்திடு வா.
சங்கரா, சாம்ப சதாசிவா,
சம்போ சிவசம்போ
இக்கணமே வந்து சக்தி தந்து விட்டுப்போ
*சக்தி கொடு*


182. பஞ்சகச்சத்தில் நான்
மடிசாரில் நீ
ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறேன்
மடியினில் படர்ந்திருக்கிறாய்
வெற்றிலை நான் போட
உன் வாய் சிவப்பேற
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

கால் கொலுசை நீ சப்திக்க
அர்த்தம் புரிந்து நான் முத்தமிட
கண்ணால் நீ கெஞ்ச
நான் காலமுக்கிவிட
ஆரிராரிரோரோ என நீ இழுக்க
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

அருகில் வந்து முறைக்கும் நீ
அலட்டாது அமர்ந்திருக்கும் நான்
'அறிவில்லை' என்கிறாய் நீ
காதில் கொள்ளாது நான்
குளிக்கப்போகிறாய் நீ
சரி போ என்றபடி நான்
'துண்டு ப்ளீஸ்' கேட்கிறாய் நீ
துண்டோடு கதவு தள்ளும் நான்
என் துண்டை உருவும் நீ
பிறந்த மேனியாய் நாம்
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

*சம்போ சம்போ சம்போ சம்போ*




181. ஏன் இத்தனை சந்தோஷம் என்றா கேட்கிறாய், என்னுயிர்த் தோழா,
எதைச் சொல்ல எதை மறைக்க என்ற குழப்பமிருந்திடினும் எல்லாம் சொல்கிறேன் கேளடா.
*
நேற்றவள் நேரில் வந்தாள்,
தென்றலாய், மழைச்சாரலாய், இளவெயிலாய், புதுப் புனலாய்,
மாலையில் நீல நிறச் சேலையில்,
கண்ணில் மையோடு,
வாயில் புன்னகையோடு
நெஞ்சில் காதலோடு.
அவள் கூந்தல் மணத்தை நுகர்ந்து மல்லிகைப்பூ மணம் வீச;
*
நிறையப் பேசினாள்.
காத்திருக்கக் கேட்டுக்கொண்டாள்.
தமக்கையின் திருமணம் தந்தையின் சில கடமை முடிய வேண்டுமென்றாள்.
என்னைச் சிநேகிக்க ஏழெட்டுக் காரணங்கள் எடுத்துரைத்தாள்.
அதையும் தொடர்ந்து, முத்தமழை பொழிந்து காதினுள் மெல்லச் சொன்னாள்
*கொஞ்ச நாள் பொறு தலைவா*

180. மெல்லப் பேசி புன்னகைத்து நலம் கேட்டதன் பொருள் அறிவேன்.
உபத்திரவமில்லாது ஓடியோடி உதவி செய்ததன் உள்ளர்த்தம் அறிவேன்.
கலங்கி நின்ற கணத்தில் கைதூக்கி விட்டதன் காரணம் அறிவேன்.
மாணிக்கவாசகம் பாடி மனபாரம் குறைய  மார்க்கம் காட்டியதன் மாண்பு அறிவேன்.
ஒருகுறிப்பும் உணர்த்தாது கன்னி நெஞ்சைக் களவாடியது மட்டும் அறியேன்.
காரணம் சொல்வீரா ...
*கள்வரே ... கள்வரே*


179. உழைத்து உழைத்து மனம் உடல் களைத்துவிட்டேன்.
பணம் தேடிப் பல பயணம் செய்து ஓய்ந்துவிட்டேன்.
பணமே வாழ்க்கை என்றெண்ணி இருந்துவிட்டேன்.
பலதும் பெற்றும் போதுமென்று எண்ணாது நெஞ்சமின்னும் அல்லாடுது.
வாழ மறந்த வாழ்க்கை விழி முன் வந்து நின்று பழித்துக்காட்டுது.
பெற்றதையும் இழந்ததையும் நிறுத்திப் பார்த்தால் என்ன கிழித்தோமென்று கோபம் வருகிறது.
எந்த திசையிலும் நகர முடியாது வாழ்க்கை கட்டுண்டுக் கிடக்கிறது.
அலையினிடையில் அகப்பட்ட படகு, கரைசேர  துடுப்பைத் தேடுகிறது.
தாமரை இலைமேல் தண்ணீராய் பற்றற்று வாழ மனம் விரும்புகிறது.
இதோ உன் வாசல் வந்துவிட்டேன்
துணை நீயம்மா, வழிகாட்டம்மா.
*நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா*

No comments:

Post a Comment