Wednesday, May 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 22

170. உனை எண்ணாத நாளெல்லாம்
நான் எனை மறந்து வாழ்ந்த நாட்களே.
உன் விழியீர்ப்பு விசையிலிருந்து விலகியிருந்த நாட்களெல்லாம்
வீணாய்ப்  பொழுது போக்கிய நாட்களே.
உன் புகழ் பேசா நிமிடங்களெல்லாம்
என் நா அசையா நிமிடங்களே.
கனவில் நீ காட்சி தரா
இரவெல்லாம் நான் உறங்காதிருந்த இரவுகளே.
கருப்பொருளாய் நீ இல்லாவிடில்
என் கவிதைகள் வெறும் வார்த்தைகளே.
*உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே*

*****

169. அழகின் உருவம் அன்பின் வடிவம்
சிந்தை கவரும் செம்பொன் சிலை
நினைவலைகளில் நின்றாடும் நுரை
லயம் தவறாது நர்த்தனமாடும் மயில்
சுரம் பிசகாது கூவித்திரியும் குயில்
விடிகாலை வெயில்
மெல்ல வீசும் தென்றல்
~அமுத~கவிதைசுரபி சாந்தஸ்வரூபி
சிற்றிடை மோகினி
செவ்விதழ்க் காமினி
இரவில் கனவில், பகலில் எதிரில்  காட்சிதரும் கன்னி நீ,
என்னுயிரே, நிழலே, எழிலே
*மணியே, மணிக்குயிலே, மாலையிளங் கதிரழகே*

*****

168. கோவில்ல வச்சிப் பார்த்தானாம் ஒருநாள்
பார்த்ததும் பிடிச்சிப் போயிடிச்சாம்.
குளத்தாங்கரையில் பார்த்தானாம்,
குளிக்கரச்ச பார்த்திருப்பானோ ? களவானிப்பய.
பரவால்ல, பார்க்க சுமாராயிருக்காப்ல,
அமைதியாய் இருக்கா அலட்டாது பேசுறா
வாலி வைரமுத்து கணக்கா கவிதை சொல்றா
கண்களை இங்க அங்க மேயவுடாது கண்ணியமாப் பாக்குறா.
பயபுள்ள, என் நெஞ்சைக் களவாடிட்டானே,
மனசு இப்டி இறக்கை கட்டுன மாறிப் பறக்குதே
*அடி ஆத்தாடி ...*

*****

167. புடவையில் பவனி வரும் தெய்வீகம்
பார்வையில் தெரியும் சாத்வீகம்
பார்க்கப் பார்க்க நெஞ்சில் பரவசம்
பழகினால் புரியும் கம்பீரம்
பேசும் பாஷையில் வீசும் பரிமளம்
கருணை பிரதானம்
பகட்டில்லா யவ்வனம்
புரவியின் வேகம்
புவியின் நிதானம்
நடக்கும் போதி மரம்
நமக்குக் கிடைத்த வரம்
பட்டுப்போன்ற பாதம்
பாவை சொல்வதெல்லாம் வேதம்
*
மண்ணிலுன்னைப் போலே
இன்னொருத்தி இல்லையே,
*ஏய் மாண்புமிகு மங்கையே ....*

*****

166. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஒரு மதிப்பு மரியாதை
உன்னைப் பார்க்கையில் மட்டும் தான் ஈர்ப்பு ஆசை  எல்லாம்

இரக்கம் நெஞ்சில் ஏராளம் தாராளம்
நீ அருகிலிருந்தாலோ கிறக்கம் நெருக்கம் இறுக்கம் எல்லாம் இருக்கும்

எந்த உடையின் நிறத்தையும் பகுத்துரைக்கும் திறமையிருக்கு.
நீ எதிரில் நின்று கேட்கையில் மேனி நிறம் மட்டுமே தெரிய முழிக்கவேண்டியிருக்கு.

நெஞ்சமெல்லாம் காதல்,
தேகமெல்லாம் காமம்
*உண்மை சொன்னால் ... நேசிப்பாயா ?*

*****

165. உன் ஒருசிறுப்பார்வையில்
காதல் செடி முளைக்கத் தொடங்கிய நேரம்
கவலைகள் எனைவிட்டுக் காதாதூரம்
விலகி நின்ற நேரம்
நெஞ்சிலிருந்த பாரம் இலவம்பஞ்சாய் மாறிப்
பறந்து மறைந்த நேரம்
கண்ணனும் ராதையும் கண்முன் வந்து நின்றுக்
காதல் பாடம் கற்பிக்கும் நேரம்
வானின்தேவதைகள் பக்கம் வந்து நலம் விசாரித்து
வரம் தரும் நேரம்
முகிலாய் மாறி நான் வானில்
மிதக்க ஆரம்பித்த நேரம்
*தொடுதொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்*

*****

164. ஏறெடுத்துப் பாக்கலேன்னா ...
எப்படி இருக்கியன்னு தெரியாமயாப்போவும் ?
போறச்சே வாரச்சே சிரிக்கலையின்னா ...
கவனிக்கலேன்னு சொல்வியலா ?
பதில் தரலேன்னா ... பிடிக்கலையோன்னு ஏன் சந்தேகப்படணு ?
ஏடி வாடி போடின்னு சொல்லும்யா,
இங்கனகுள்ள அங்கனகுள்ள சுத்தும்யா
தவிக்கவுட்டு சோலிபாக்க தூரப் போறேன்னு
சொல்லுதியளே நாயமா?
செத்த நேரம் இங்க கிட்ட வாரும்
இந்தக் கிறுக்குப் ~பொட்டச்~ மொல்லச் சொல்றத
செவில்ல போடும்
மக்கா ஒமக்காவ இம்பட காத்து நிப்பே
ஏமாத்திப்போட்டு போயிடாதிய, சரியா
என் சுவாசமா நெனச்சிருக்கே
நேசமானவரே
*நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கே*

*****

163. வானவில் உன் புருவம்
போலிருக்காவெனச் சோதிப்பேன்.
வண்ணத்துப்பூச்சியில்
உன் தாவணி வர்ணத்தைத் தேடிப்பார்ப்பேன்.
கூட்டத்தில் உன் பார்வை தென்படுதா
என்று தேடித்தோற்பேன்.
பாராட்டுக்களில் உன் பெயர் இல்லாதது கண்டு ஏமாறுவேன்.
*பூக்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாக தேடிப்பார்த்தேன்.*

*****

162. வாய் விரிக்காது விரல் வருடி நகத்தால் கீறி
விடயமறிந்துக்கொள்வது அடுத்து நிகழும்.
இடை இழுத்து இதழ் இணைத்து
இறுக்கிக்கொள்வது இன்னொரு தினம்.
உடை பாரம் என்றுணர்ந்து, தவிர்த்து
உயிர் மாற்றிக்கொள்வது பின் நிகழும் சம்பவம்.
இன்று இங்கு இப்பொழுது இவ்வமயம்
ஆரம்பநிலையின் அடுத்தக்கட்டம்.
என்னுள் பாதி நீயாகும் விதம்
உன்னுள் நான் ஒன்றாகும் விதம் ஒரு வார்த்தை சொல்லு நீ,
*சுந்தரி, கண்ணால் ஒரு சேதி*

*****

161. வஞ்சி உறங்குகிறாள்
சாய்ந்தபடியே சகி சயனிக்கிறாள்
கனவுகள் கண்டபடி கண்மூடியிருக்கிறாள்
துயரங்களை மறந்துத் தோகை துயில்கிறாள்
நயனங்களை இழுத்து மூடி நங்கை நல்லுறக்கத்தில் இருக்கிறாள்.
வெண்ணிலவே நீ வேறு திசை விரைந்து உன் ஒளி பொழி
இடியோ மழையோ இரண்டும் இந்தப் பக்கம் வராதிரு.
பொன்மாலைப்பொழுதே மெல்லிசைப் பாடலையே எப்பொழுதும்போல் ஒலி.
*தென்றலே ... தென்றலே மெல்ல நீ வீசு*

*****

No comments:

Post a Comment