Thursday, May 3, 2018

பொன்மாலைப் பொழுதில் 21

160. கண்டதும் காதல் பிறந்திட
யாரென்ற ஆர்வம் எழுந்திட
பேசிப்பழகப் பிடித்துப் போகிட
கன்னி மனது கனிந்திட
வாழ்வில் வசந்தம் வீசிட
நாட்கள் நிமிடங்களாய் நகர்ந்திட
நாளும் கனவுகள் மலர்ந்திட
நெஞ்சில் கவிதைகள் சுறந்திட
உறக்கம் வர மறுத்திட
உண்ணாதே பசி பறந்திட
ஊடல் இடையில் புகுந்திட ... டாட்

ஓடியொழிந்தது போதும் நிறுத்திவிடு
சஞ்சலம் வேண்டாம் மறந்துவிடு
என்விழி பார்த்துப் பேசிவிடு
ஒரேயொரு வார்த்தை சொல்லிவிடு
*மந்திரம் சொன்னேன் வந்துவிடு*

*****

159. தினம் உன்னைக் காண ஆசைப்பட்டேன்
நீ என்னோடு பேசிச் சிரித்துப் பழக
ஆசைப்பட்டேன்
நீ ரசிப்பதையெல்லாம்
உன்னோடு சேர்ந்து ரசித்திட ஆசைப்பட்டேன்
காதுக்குள் முத்தமிட
உன் கண்ணுக்குள் வெடிவெடிப்பதைப் பார்க்க ஆசைப்பட்டேன்
உன்னைப்போலொரு குரங்கையும்
என்னைப்போலொரு எழிலையும் ஈன்றெடுக்க ஆசைப்பட்டேன்
என் கட்டழகை உன் கவிதை வரிகள் வர்ணிக்க ஆசைப்பட்டேன்
கட்டுக்கதை பல சொல்லி
என்னோடு நீ காமுற ஆசைப்பட்டேன்
*ஆத்தோரம் தோப்புக்குள்ளே ... ஆசை வச்சேன்*

*****

157. உன் குறுகுறுப் பார்வை
என்னுலொரு கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறது.
தள்ளி நின்று நீ பார்க்கையில்
அருகில் அழைக்க ஆசையாயிருக்குது.
கிட்டநின்று நீ கண்ணடித்துப் பார்த்தால்
தொட்டுத் தழுவ தேகம் துடிக்குது.
பார்த்துக் கொண்டேயிருக்க பிரியமாய் இருக்குது,
பரவசம் பிறக்குது
பார்க்காது போனால் பாவை நெஞ்சம் பதறுது,
படபடக்குது, பரிதவிக்குது.
இருந்தும் ...  இருந்தும்
*பார்க்காதே  பார்க்காதே ... ஐயையோ பார்க்காதே*

*****

156. இப்பொழுதெல்லாம் படங்களின் காதல் காட்சிகளை
கவனமாய் ரசிக்கிறேன்.
சித்திரம் வரைவதிலும் நடனமாடுவதிலும்
ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வெட்கம் புரிகிறது, சிரிப்பும் என் உதட்டைக் கவ்விக்  கொள்கிறது.
அந்த ம் இல் உனக்குக் கோபம் வருமோ என்றெண்ண,
இன்னும் சிரிப்பு வருகிறது.
எங்கும் எதிலும் உன் முகம் தெரிய,
'அப்போ இது அதானே ?' என்ற கேள்வி எழுகிறது.
இன்னும் என்ன சொல்ல ?
என்னைக் கேட்காமலேயே,  என்
*இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது மெல்ல*.

*****

155. ஆசை கோபம் விட்டுத்தள்ள
வாழ்வில் வலிகள் இருப்பதில்லை

ஆற்றல் அமைதி அகத்திலிருக்க
வெற்றி விலகிப் போவதில்லை

சிந்தையில் கருணை நிரம்பியிருக்க
செய்கையில் தவறு நேர்வதில்லை

நெஞ்சில் உன்னை எண்ணிக்கொள்ள
கற்பனை வற்றிப் போவதில்லை

*காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை*

*****

154. பேசிச் சிரித்ததுண்டு
ஊடல் கொண்டு ஒதுங்கியிருந்ததுண்டு
இடையணைத்துக்கொண்டு  இணைந்திருந்ததுண்டு
*
இதுவரை செய்யாத ஒன்று இன்று.
உனக்காக ஒரு தாலாட்டு.
தாய் மட்டுந்தான் தாலாட்டு பாடவேணுமென்று சட்டமில்லையே.
தலைவன் தாலாட்டு பாடக் கூடாதென்று எந்த இலக்கியமும் சொன்னதில்லையே.
*
வா ... அருகில் வா
என் மடியில் தலை சாய்த்துப்படு
கால் நீட்டிக்கொள்
தலைப்பிடித்து விடுகிறேன்,
மெல்ல கண் வளர்,
காதினுள் கேட்கிறதா ?
*லாலி ... லாலி ... லாலி ... லாலி*


*****

153. தோகை விரித்திடும் மயிலைப் பார்த்தப் பரவசம்
கண்விழிக்கையில் குயிலின் கானம் கேட்ட பரவசம்
பறந்துத் திரியும் பஞ்சவர்ணக்கிளியைக் கொஞ்சி ரசித்தப் பரவசம்
அழைத்ததும் ஓடி வந்து கட்டிக்கொள்ளும் குழந்தை தரும் பரவசம்
கடலலை தெறித்து ஒரு துளி கன்னத்தில் பட்டுப் பிறக்கும் பரவசம்
படைப்பைப் படித்து யாரேனும் பாராட்டும் போது வரும் பரவசம்
இவையெல்லாம் சேர்ந்தும்கூட ஈடாகா,
அன்று என்னுளெழுந்த பரவசம், உனைப்
*பார்த்த முதல் நாளில்*

*****

152. எந்த விதை விருட்சமாகுமோ
எந்த மொட்டு முதலில் பூக்குமோ
எந்தப் பாடல் மனதை ஈர்க்குமோ
எந்த மரம் எந்தப் பறவைக்கு இடம்தருமோ
எந்த நினைவு கவிதையாகுமோ
என்று நீயெனை ஏற்றுக்கொள்வாயோ
காத்திருப்பேன், அதுவரை என்நிலை
*அனல் மேலே பனித்துளி*

*****

151. விளக்கணைத்து விழிமூடி உறங்கும் வேளையில்
கண்ணடித்துக் கனவினில் காட்சி தந்தக் காதலன்
கண்ணே கற்கண்டே என்றெல்லாம் கொஞ்சி எனையெழுப்பி
வளைகரம் பற்றி விரல் வருடி கவிதை சொல்லக் கெஞ்ச
என்ன சொல்ல எப்படித் தொடங்கவெனத் தெரியாது
முத்தைத்தரு என்று முதலடி தந்த முருகனைத் துதிக்க
அவ்வமயம் *காற்றில் ஓர்வார்த்தை மிதந்து வரக் கண்டேன்*

*****

150. நீ ...
நான் காதல் விதைத்த நிலம்
எனக்கு நிழல் தந்த ஆலம்
கவிதைகள் அறுவடை செய்யும் வயல்வெளி
கல் எனைச் சிலையாக்கிய உளி
என் சிற்றறிவு வளர்த்த வாசகசாலை
கனவுகளின் தொழிற்சாலை
கண்மூட மனக்கண்ணில் விரியும் காட்சி
உறக்கத்தின் பின் பிறக்கும் புத்துணர்ச்சி
தியானத்தின் அமைதி
பொறுமையின் வெகுமதி
தேடாது கிடைத்தப் புதையல் 
ஓடாதுப் பெற்றப் பதக்கம்
மண்ணில் மலர்ந்தத் தாமரை
*நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை*

*****

No comments:

Post a Comment