Sunday, April 22, 2018

பொன்மாலைப் பொழுதில் 20

149. என்னருமைக் காதலா,
எந்நாளுமெனக்குத் துணையாய் இருப்பாயா
நான் பயணிக்கையில் கூடவே பயணத்திடு.
உன்னோடு வருவேன், எனை அனுமதித்திடு.
உனக்கென்ன வேண்டுமோ சொல், எனக்கென்ன வேண்டுமென்றுக் கேள்.
உண்ணும்போதும் உறங்கும்போதும் எனையுன் நெஞ்சில் எண்ணிக்கொள்.
எனைக் கெஞ்சிக் கொஞ்சி ரசித்திடு நீ.
உனைப் பரவசத்தில் ஆழ்த்திப் பயனடைவேன் நான்.
தூக்கத்தில் எனைத் தொந்தரவு செய்
ஏக்கத்தில் இருக்கையில் ஆதரவு தா.
கோபத்தில் திட்டிடு, சல்லாபத்தில் தண்டனை பெற்றிடு.
கை இணைத்துக் கொள்
காதல் கவிதைகள் தினம் சொல்.
தினம் ஒரு பத்து நிமிடம் எந்தச் சிந்தனையும் நெஞ்சில் கொள்ளாது அமர்.
வாழ்க்கை முழுதும் கூட வரும் வரம் கொடு.
எல்லா உரிமைகளும் உனக்குண்டு உணர்ந்திடு.
இன்னும் கொஞ்சம் என்னுளுண்டு,
சின்னச் சின்னதாய்க் கோரிக்கைகள் செவிகொடு
*சிநேகிதனே ... சிநேகிதனே*

***

148. வானம் வாழ்த்தவே பூமி செழிக்கவே
மண்ணில் பொழியும் மழையே.

வயிறு நிறையவே பசி அடங்கவே
உடலை வளர்க்கும் உணவே.

வாசம் வீசவே நாசி நுகரவே
பூத்துக் குலுங்கும் மலரே.

வருக வருகவே கவிதை தருகவே
*சங்கத் தமிழ்க் கவியே*

***

147. கண்கள் மூடக் கனவில் தினமும்
காதல் வளர்க்கும் இரவே;
இரவில் நெருங்கி இதழில் தொடங்கி
பகலில் விலகல் சுகமே;
சுகமாய் இருக்கும் உந்தன் நெருக்கம் தினமும் வேண்டும் அன்பே;
அன்பில் கரைந்து அழகில் மயங்கி
மனதுள் ஒளிரும் நிலவே;
நிலவே உன்னைக் காணும் வரையில்
உறங்கா தெந்தன் விழியே;
*விழியில் விழுந்து இதயம் நுழைந்து*
*உயிரில் கலந்த உறவே*.

***

146. எனதருமைக் காதலா,
தனிமையில் எனைத்
தவிக்க விட்டுச் சென்றதேனடா ?
விவரமேதும் தெரிவிக்காது
விலகிச் சென்றதேனடா ?
*
ஆரம்பத்தில்
காதலிப்பதாய்ச் சொன்னாய்
கண்ணே என்றாய்,
உயிர் நீ என்றாய்
கவிதை சொன்னாய்
சிரிக்க வைத்தாய்
ரசிக்க வைத்தாய்;
*
இதனைத் தொடர்ந்து
காதலின் பெயரில்
கங்கையைக் கூவமாக்கினாய்.
வாசம் மட்டும் நுகர்ந்துவிட்டு
பூவைக் கசக்கி எறிந்து விட்டாய்.
மீன் சிக்கியதும் தூண்டிலை மறப்பதுபோல்
கன்னி சிக்கியதும் காதலை மறந்தாய்.
தழைவாழையிலையில் விருந்துண்டு எச்சிலிலையாயெனை வீசிவிட்டாய்.
*
இப்பொழுதெல்லாம்
நெருங்கும்போதெல்லாம் நழுவி,
காணாதது போல் நடித்து,
கண்டுகொள்ளாது தவிக்கவிட்டு,
காய்ந்த நிலமாய் நான் காத்திருக்க
*சற்று முன்புப் பார்த்த மேகம் மாறிப் போக ...*

***

145. இன்று எழும் போதே
நெஞ்சிலொரு பரவசம் புத்துணர்ச்சி.
நேற்றிரைத்தப் பச்சரிசியைத் தின்ன
புதிதாய் வந்திருக்கும் பச்சைக்கிளி.
காயத்தொடங்கியச் செடியில்
அழகாய்ப் பூத்திருக்கு மூன்று பூ.
கண்ணாடியில் கடிகாரத்தில்
காணும் எல்லாப் பொருளிலும்
~காதல~ கள்வனவன் திருமுகம்.
எந்த முயற்சியுமின்றி என்னுள்
எதுகை மோனையோடு கவிதை.
நான் யார் எங்கிருக்கிறேன் என்பதை
எனக்கு நானே ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.
என்ன செய்தாய் என்னை
ஏதுமறியாதிப் பெண்ணை ?
எப்படி எனைக் கவர்ந்தாய் ?
என்னுள் ஒரு...ஒரு
*நேற்று இல்லாத மாற்றம் என்னது ?*

***

144. வயதுக்கு வந்தாகிவிட்டாது
கன்னியரைக் கண்டதும்
கனவில் மனம் மிதக்க ஆரம்பித்துவிட்டது
நோக்கும் எல்லாவற்றின் மீதும்
நேசம் நெஞ்சில் நிறைகின்றது
காதலென்று இதைப்பெயரிட்டுக்கொள்ள ஆசையாயிருக்கிறது
கற்பனைக் குதிரையைக்
கொஞ்சம் சுண்டிவிட்டால் போதும்
கவிதை அருவியாய்க் கொட்ட வாய்ப்பிருக்கிறது.
எல்லாம் தயார்,
கூடக் கொஞ்சி விளையாட
ஜோடி மட்டும் வேண்டும்
மண்ணிலிருக்கும் எவரும்
எனை மதிப்பதில்லை, எனவே
*வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?*

***

143. ஈகை குணம் நெஞ்சில் நிறைய வேண்டும்
கொடுத்துப் பழக வேண்டும்
பெருவதை விட தருவதில் தான்
ஆனந்தம் அதிகம் என்பது புரிய வேண்டும்
எதைச் செய்தாலும் ஆர்வம் வேண்டும்
காமம் கருணையாய் மாறவேண்டும்
ஆசை நெஞ்சை அண்டாதிருக்க வேண்டும்
*மனதில் உறுதி வேண்டும்*
போதுமென்ற மனம் வேண்டும்

***

142. கவிதையின் பெயரில் கண்டதையும் எழுத
அதைப் படித்து வெறுத்தவர்க்கு நன்றி
படிக்காது தப்பித்தவர்க்கும் நன்றி
விமர்சனம் அளித்தவர்க்கு நன்றி
விமர்சிக்காது விலகிச்சென்றவர்க்கும் நன்றி
*
வண்ணங்கள் இறைத்து ஓவியம் என்றவுடன் ஒத்துக்கொண்டவர்க்கு நன்றி
ஓவியமா என்று கேட்க நினைத்தவர்க்கும் நன்றி
மாடர்ன் ஆர்ட் போலிருக்கு என்று மனதில்  நினைத்துக் கொண்டவர்க்கு நன்றி.
*
என் நக்கல் விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டவர்க்கு நன்றி
மனதில் கொள்ளாது மன்னித்தவர்க்கு நன்றி
மறக்க முடியாது ஆப்பு அடிக்கக் காத்திருக்கும் அனைவர்க்கும் நன்றி
*
இன்னும்...இன்னும்...சுருக்கமாய்
எது செய்தாலும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டவர்க்கு நன்றி
எது செய்தாலும் பாரபட்சமின்றி நிராகரித்தவர்க்கும் நன்றி
*
முக்கியமாய்
*நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி*
*

***

No comments:

Post a Comment