Thursday, April 19, 2018

பொன்மாலைப் பொழுதில் 19


141. மேகம் போலே வானின் மேலே
பறந்துக் கிடந்தேனடி
மழையாய் நீ பொழிந்து
எனக்குப் பெருமை சேர்த்தாயடி

மண்ணில் முளைக்கும் செடியாய்
நெஞ்சில் முளைத்ததுன் நேசமடி
பூவாய்ப் பூத்து வாசம் வீசி
என் மேல் பாசம் பொழிந்தது நீயடி

அலையின் இடையில் அலைகழித்துக் கிடந்தேனடி
காதலென்னும் விளக்கேற்றி கரைசேர்த்தது நீயடி

எழுத்துக்களை எடுத்து வைத்து என்ன எழுத என்று தெரியாது இருந்தேனடி
என் எண்ணங்களில் நுழைந்து
எழுத்துக்களை கவிதையாக்கியது நீயடி.

கண்ணாலே பேசியவள் உள்ளம் புரியாதா ?
விலகி இருப்பதன் விவரம் விளங்காதா ?
*வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா ?*

***

140. பாற்கடலில் பாம்பு மெத்தையில்
பள்ளி கொள்பவன்;
பாவங்கள் பரவும் பொழுதெல்லாம்
பாருலகைப் பாதுகாக்கப்
பிறவியெடுப்பவன்;
*
அயோத்தியில் அவதரித்து
அரசகுமாரனாய் வளர்ந்து
ஆரண்யம் புகுந்து
அத்திரம் தொடுத்து
அரக்கர்களை அழித்து
அனைத்தும் அழகுற
ஆண்ட ஆண்டவன்.
*
மயிற்பீலி சூடி
மாடு மேய்த்து
மாயம்பல புரிந்து
மங்கையர் மனங்கவர்ந்து
மாமனையே கொன்று
மகாபாரதத்தில் தேரோட்டி
மாகீதை சொன்னவன்.
*
ஸ்ரீநிவாசனாய் நாராயணனாய்
ராகவனாய் மதன கோபாலனாய்
கிருஷ்ணனாய் வெங்கடேசனாய்
கோவிந்தராஜனாய் ஆராவமுதனாய்
பெயர் எதுவான போதும்
பொருள் ஒன்றாய் விளங்கும் அந்த
*ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்குவோம்*


***

புரியவில்லை
எதற்கென்றுத் தெரியவில்லை
*
உன்னிடமிருந்து ஒரு தொடர்புமில்லை
மின்னஞ்சலில்லை
குறுஞ்செய்தியில்லை
*
என்ன கேட்டாலும் எறிந்து விழுவதைத் தவிர நல்லதாய் நீயாய் எதுவும் சொல்வதில்லை
*
கனவில் வரவில்லை
கவிதை பாராட்டுவதில்லை
கதை எதையும் படிக்க உனக்கு நேரமில்லை
*
இருந்தும்
எனக்குப் புரியவில்லை
எதற்கென்றுத் தெரியவில்லை
*
நெஞ்சமே
*இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே !*

***

139. என்னருமைத் தோழா,
என்னவாயிற்று என்று நீ சோகத்தில் ஆழ்ந்திருக்கிறாயடா ?
எதையும் இழக்கவில்லை நீ
இன்றில்லையேல் நாளை
வெற்றி உனைத் தேடிவரும் வேளை

தோல்வியில் துவள்வது உனக்கழகா?
என் தோள்பிடித்து எழு, வா
தோல்வி சொல்லித் தரும் பாடத்தைப் படி
போனதைப் பார்த்துப் புலம்புதலை விடு  வந்ததை வரவேற்று வாரியணைத்திடு

விடியாத இரவிருக்கா ?
முடியாதத் துயரிருக்கா ?
காலம் ஆற்றாத காயமிருக்கா ?
சோகம் மற, *கண்களில் என்ன ஈரமா ?*

***

138. எனக்கில்லை அருகதை, இருந்தும் கூட
அவளைப்பற்றியொரு அறிக்கை
நயனம் நோக்கினால் இளநகை
நங்கை நெஞ்சம் நிறைய ஈகை
மண்ணில் மலர்ந்த விந்தை
மங்கை மனதளவில் குழந்தை
உள்ளங்கையே மயிலிறக்கை
உள்ளத்தில் மலைமலையாய் மரியாதை
சிந்தையில் சிறிதுமில்லை மமதை
சிலைபோன்றதவள் ஆக்கை
சந்தன நிறத்தில் சிற்றிடை
சகலரும் விரும்பிடும் பூக்கடை
வஞ்சியைக் காணும் வரை வதை
வந்தபின் நெஞ்சிலெழும் வாஞ்சை
என் அபிமானத் தாரகை
*அவளொரு மேனகை*

***

137. மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவன்
மதம் பிடித்த மனிதர்கள் மத்தியில் அன்பையே மதமாக்கியவன்.

அன்று ஜெருசலத்தில் வசித்தவன்
இன்று ஜெகம் முழுதும் வாழ்பவன்

அன்னை மேரியின் அன்பில் வளர்ந்தவன்
ஆட்டை மேய்த்து வாழ்க்கை நடத்தியவன்

நம்பி வந்தாரைக் கரையேற்றியவன்
நாளும் ஒருதிரு நாடகம் நிகழ்த்தியவன்

சிலுவை சுமந்திடினும் சிந்தனை மாறாதவன்
ரத்தம் சிந்திடினும் தன் எண்ணம் கூறத் தயங்காதவன்

பாதம் பணிந்தவர் பாவம் போக்கியவன்
பார்வையாலேயே பரிசுத்தமாக்கியவன்

*அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே தோன்றியவன்*

***

136. ஆசைப்படலாம் அதற்காக உழைக்கலாம்
கிட்டவேண்டுமென்று கட்டாயமில்லை.
ஏன் கை கூடவில்லை என்ற கேள்வி எழும்.
சிலசமயம் சிரமம் ஏதுமின்றி ஈடேறும் காரியங்கள் ஆச்சரியமளிக்கும்.
எப்படியிது சாத்தியமானது என்று சந்தோசத்திலும் சந்தேகமெழும்.
எல்லாவற்றிலும் ஏதோவொரு சக்தி இருந்து கொண்டு இயக்குவது புரியும்.
எது எப்போது நடக்க வேண்டுமோ அது அப்போது நடந்தேறுகிறது.
தடுக்கவும் முடியாது துணை புரியவும் தேவையிருக்காது.
அங்கே ஒருவன் இருந்துகொண்டு ஆட்டிவிக்கிறான்.
அவன் மேல் நம்பிக்கை வையுங்கள்
அவன் பாதம் பணியுங்கள்
கருணை கொண்டு காத்திடுவான்
*கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே*

***

135. நல்லொளி வீசும் நட்சத்திரங்கள் நாற்புரமும்
நங்கையுன் பொலிவைக் கூட்ட
மேகம் கொண்டு நெய்யப்பட்ட பஞ்சுமெத்தை
தேகம் நீட்டி தோழி நீ கண்ணுறங்க
நீ வரும் பாதையெங்கும் பூக்களால் நிரப்பி
பூவையுன்னை பரவசத்திலாழ்த்த
*வேறென்ன ... வேறென்ன வேணும்
ஒருமுறை சொன்னால் போதும்*

***

No comments:

Post a Comment