Monday, April 16, 2018

பொன்மாலைப் பொழுதில் 18

என்னெருமைக் காதலா,
சிலநாள் நீ சிரிப்பாய் நான் முறைப்பேன்;
பேச வருவாய் விலகிச் செல்வேன்.
சிலநாள் நான் சிரிக்க கண்பார்க்க மறுப்பாய்
தொலைபேசியில் அழைப்பாய்
தொல்லையோவென்று பேசத் தயங்குவேன்.
மறுநாள் நான் காத்திருப்பேன்
காணாததைப் போல் நீ எனைத் தவிர்ப்பாய்.
ஒருசிலநாள் சீக்கிரமே வந்து நீ நிற்பாய்
பாதை மாற்றி நான் பயணிப்பேன்.
சிலநாளே உன் சிறையில்,
பலநாள் திரை மறைவில்.
பாசத்தில் பிணைந்திருந்த  நாட்களை விட
கோபத்தில் விலகியிருந்த நாட்களே அதிகமெனினும் ... இன்னும்
மனம் விரும்புதே ... உன்னை ... உன்னை

***

எல்லா மரங்களும் பூத்துக் காய்த்துக்
கனி தரவேண்டுமென்பது கட்டாயமில்லை.
உடல் வளர உணவு உதவும் என்று
எந்த உத்திரவாதமும் இல்லை.
நித்திரையெல்லாம்  நிம்மதி தருமென்று
எந்த நூலிலும் சொல்லப்படவில்லை.
குளிகைகள் எல்லாவற்றிலும் குறை தீர்க்கும் குணம்
குடியிருக்குமென்று கூறமுடியாது
எல்லா வகையான நீரும்
தாகம் தணிக்கும் இயல்புடன் இருப்பதில்லை
காதல் இணையத்தான் வேண்டுமென்று
எந்த அவசியமுமில்லை.
நெஞ்சே ... நெஞ்சே ... மறந்து விடு

***

கண்ணால் காணும் முன்பே காதலிக்கத் தொடங்கியவள்.
பெற்ற அன்று மட்டும் பிள்ளை அழுகையில் ஆனந்தப்பட்டவள்.
கண்ணே மணியே என்று கொஞ்சி பொத்திப் பொத்தி வளர்த்தவள்.
விழிக்கையில் விழித்து சிரிக்கையில் ரசித்து அழுகையில் அரவணைத்து அல்லல் பல பொருத்து ஆளாக்கியவள்.
இல்லை என்று எப்பொழுதும் சொல்லாது இருப்பதை அள்ளித்தந்து மகிழ்பவள்.
எல்லாம் கிட்ட ஏற்பாடு செய்து விட்டு நீ  அனுபவிக்க அதைப்பார்த்து ஆனந்திப்பவள்.
அன்னை அருகிலிருந்தால் அதிர்ஷ்டம் இருப்பதாய் அர்த்தம்.
அவள் பாதம் தொட்டு வணங்க அனைத்துப் பலனும் தானாய்க் கிட்டும்
 ஆசை தீர அழைத்து மகிழுங்கள்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே

***


அடியென் இனிய சிநேகிதி, சொல்கிறேன்
இந்த ராதையின் மனவருத்தம், கேளு நீ.

என் மடியில் படுத்திருந்தபடிக் குழலூதிய கோவிந்தனே இக்கோதையின் மணாளன் என்றெண்ணினேன்.

அவன் கண்களில் படாது தனித்து நான் இருக்கும் பொழுதெல்லாம் எனைக் காணாது கண்ணன் தவிப்பானோ என்று தவிப்பேன்.

அவன் கவிதைகளின் கருவாய், கனவுகளின் பொருளாய்  நானிருக்க ஆசைப்பட்டேன் 

பேசுவதும், வாய்மூடிக் கிடப்பதும், புலம்பலும் புரியாத பார்வையும், மயங்கிக் கிடப்பதும், எழுந்து சிரிப்பதும் எல்லாமந்த மாதவனின் மாயை என்று நம்பினேன்.

எனைக் காண வருவான், காயம் ஆற்றுவான் தனித்து எனைத் தவிக்கவிடாது துணை இருப்பான் என்றெண்ணினேன்.

இன்னும் ... இன்னும் என் நெஞ்சில்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

***

முன்பெல்லாம் காலையில் குறித்த நேரத்தில் எழுவதுண்டு
இப்பொழுதெல்லாம்  இமையின் இடையில் நீ இருக்க இல்லை உறக்கம்.
தினம் காலை ஓட்டப்பயிற்சி செய்வதுண்டு
இப்பொழுதெல்லாம் என் கூடவே நீயும் பறந்து வந்து வேர்வை துடைத்து விடுகிறாய்.
முன்பெல்லாம் கண்மூடி தியானத்தில் எனைமறந்து ஆழ்ந்ததுண்டு.
இப்பொழுதெல்லாம் விழிமூடியிருந்தாலும் திறந்திருந்தாலும் உன் திருமுகம் மட்டும் என்கண்முன் தெரிகிறது.
முன்பெல்லாம் நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்ததுண்டு
இப்பொழுதெல்லாம் உனை எண்ணிக் கிடப்பதே என் முழுநேரப்பணியாயிருக்கிறது
அனாயாசமாய்ச் செய்து முடித்த பல வேலைகளை இப்பொழுதெல்லாம் எங்கிருந்துத் தொடங்க எனப்புரியாது முழிக்கிறேன்.
ம்ம்ம் ...*ஒன்னும் புரியல சொல்லத்தெரியல*

***

பார்வையில் தெய்வீகம்
   பேச்சினில் சாத்வீகம்
நெஞ்சினில் சத்தியம் 
   நிறைய சாமர்த்தியம்
செய்வதெல்லாம் மகத்துவம்
   சிந்தனையில் தானதர்மம்
நாவசைந்தால் திருவாசகம்
   அகம் சுத்தம் முகம் கமலம்
நடையில் நிதானம்
   உடையில் உத்தமம்
கண்டதில்லை அகங்காரம்
   தேவையில்லை அலங்காரம்
செய்ததில்லை அதிகாரம்
   செய்வதெல்லாம் உபகாரம்
நடக்கும் நந்தவனம்
   அழகு  வதனம்
*காதல் ஓவியம்*
   *பாடும் காவியம்*

***

எல்லாப்பொழுதும் பாதுகாப்பாய் நிற்கிறாய்
நல்லதெது கெட்டதெது என்று புரிய வைக்கிறாய்
பசித்து உண்ணப் பழக்குகிறாய்
சிரித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறாய்
தோளில் தாங்கி ஆறுதல் அளிக்கிறாய்
பக்தி மணம் பரப்புகிறாய்
பரந்த மனம் கொண்டிருக்கிறாய்
நானெது செய்தாலும் ஏதாவதோர் வகையில் என் எண்ணத்துள் நுழைந்து விடுகிறாய்.
நீயில்லாது எதுவுமென்னால் முடியும் என்று தோன்றவில்லை
உனைப்பார்க்காதிருந்தால் என் நெஞ்சில் அமைதியில்லை
*என்னவோ என்னவோ என்வசம் நானில்லை*

***

No comments:

Post a Comment