Monday, April 30, 2012

உழைப்பாளர் தினம்

உழைத்திடு மனிதா உழைத்திடு
உழைப்பின் உன்னதம் புரியும் வரை
உழைத்திடு;

உழைத்து உழைத்து ஓடாய்த்
தேய்ந்திடு மனிதா
உழைத்து உழைத்து ஓடாய்த்
தேய்ந்திடு, ஆனாலும்
உழைத்திடு;

உண்டு
உட்கார்ந்து
உறங்கி
உருண்டையாய்
உருமாறுவதை விட
உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்வது
உன்னதம் என்பதை
உணர்ந்திடு;

உழைத்து வாழ்வோர் சிலர்;
உட்கார்ந்து அந்த
உழைப்பின் பலனை
உறிஞ்சுவோர் பலர்; எனினும்
உழைப்பை
உதறாதே, என்றும் மறவாதே;

உழைத்தவர்
உயர நாளாகும், ஆனால்
உயர்வார் ஒருநாள்;
உழைப்பை உறிஞ்சியோர்
உடனே உயர்வர்; ஆனால்
உயரத்திலிருந்து உடனே வீழ்வர்;


உழைப்பே
உன் இலக்கு; அதுவே
உனக்கு விடியல் தரும்
கிழக்கு;
உழைப்பதில் இல்லை
இழுக்கு;
உழைத்து உழைத்து
வாழப் பழகு;


உழைத்திடு மனிதா உழைத்திடு
உழைப்பின் உன்னதம் புரியும் வரை
உழைத்திடு;

Monday, April 23, 2012

தெரு பிச்சைக்காரர்

காற்றில் கடும் இசை;

அழகழகாய் ஆடைகள்
ஆயிரமாயிரம்; 

அச்சம் நாணமேதுமில்லாது
ஆடவர் பெண்டிர்;

காசு ஒன்றே குறியாய்க்
கல் நெஞ்சத்தோடு கனவான்கள்;

ஆடம்பரமும்,
அத்தனையையும் தெரிய
செல்வச் செழிப்பில்
சீமாட்டிகள்;

உயிரற்ற பொம்மைகளோடு மட்டும் 
விளையாடும் 
உயிருள்ள குழந்தைகள்;

விரைந்து செல்ல 
வாகனங்கள்;

இனி அடுத்தத் திருமணம்
இங்கே எப்பொழுதோ
எனத் தெரியாத
ஏக்கத்தில்,
வீசப்பட்ட இலையை
விரைவாய் மேயும்
தெரு பிச்சைக்காரர்;

Friday, April 20, 2012

அது ஒரு காலம்

கருப்பாய் நீ தரும் காபி;
இனிப்பாய் நான் தரும் சாக்லேட்ஸ்;
பல வண்ணத்தில் நீ செய்யும் அன்னங்கள்;
கை வண்ணத்தில் நான் வரைந்த கிறுக்கல்கள்;
என் சீண்டல்களும், உன் சிணுங்கல்களும்;
கோபப் பார்வை நான் பார்க்க, கண் உருட்டி நீ முறைக்க,
ஆசையாய் நான் கண் நடிக்க,
அதிர்ந்து நீ எழுந்து ஓட

உம்ம்ம் ...
அது ஒரு காலம்;
இனி கனவுகளில் மட்டும்;

Monday, April 16, 2012

ஏனாதிநாத நாயனார் - 3

                                    ஏனாதிநாத நாயனார்

வரைமுறைகள் வகுக்கப்பட்டது;
வாள்வீசிப் போர் புரிய
தேதி குறிக்கப்பட்டது;

தன் நெற்றியில் இதுவரை
திருநீறு அணியாதத்
தீயவன் ஆதிநாதன்,
திருநீறு அணிந்த எவரையும்
தீங்கு செய்யார் ஏனாதிநாதர் என்றறிந்திருந்ததால்,
தன் நெற்றியில்
திருநீறு அணிந்துகொண்டான்;
கேடயத்தால் திருநீறு வெளியே தெரியாது மறைத்துக் கொண்டான்;

போர் புரியக் குறிக்கப்பட்ட இடம் நோக்கிச் சென்றான்;
ஏனாதிநாதர் தன்
எதிரியை
எதிர்பார்த்துக் காத்திருந்தார்;

போர் துவங்கியது;
வீரம் கை ஓங்கியது;
தன்னால் இதற்குமேல்
தாங்க முடியாதென்ற நிலை வந்ததும்,
தன் கேடயத்தை விலக்கி
திருநீறு அணிந்தத் தன் நெற்றியைக்
காண்பித்தான்;


       கைவா ளுடன் பலகை நீக்கக் கருதியது
       செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனுந்தீமை
       எய்தாமை வேண்டும் இவர்க்கென் றிரும்பலகை
       நெய்வா ளுடன்அடர்த்து நேர்வார்போல் நின்றார்


ஏனாதிநாதர் அதிர்ந்தார்;
போர் புரியாது சிலையாய் நின்றார்;
கைவாள் கீழே வீசினால்
நிராயுதபாணியைக் கொன்ற பலி
சிவவேடம் தரித்தவனுக்கு வருமென்பதால்
போர் புரிவது போல் நடித்தார்;

இதுவே தக்கத் தருணம்
என்றெண்ணி ஆதிசூரன்
ஏனாதி நாதரை வாளால் குத்திக் கொன்றான்;
எதிரியை வென்றேன்
என வீறு கொண்டு சொன்னான்;

தீயவன் எனினும்
திருநீறு அணிந்தவனுக்கு
தீங்கு ஏதும் நேராது
தயை புரிந்த ஏனாதி நாதருக்கு
எம்பெருமான் சிவன் பார்வதியோடு
தரிசனம் தந்து
தன் வசம் கொண்டார்;


                                                                        ஓம் நமசிவாய

Saturday, April 14, 2012

ஏனாதிநாத நாயனார் - 2

                                    ஏனாதிநாத நாயனார்

வாள் பயிற்சியால்
வந்த வருமானம் எல்லாவற்றையும்
வரும் போகும் சிவனடியார்களுக்கு
வாரிவழங்கினார்; இவ்வாறவர்
வாழும் ஊரிலே
வாழ்ந்து வந்தான்
ஆதிசூரன் எனும்
அயோக்கியன்;
அவனும் சொல்லித்தந்தான்
அண்டியோர்க்கெல்லாம் வாள்பயிற்சி;
ஆனாலும் அவனை நாடிச் சென்றோரில்லை;
சுத்தமில்லா நீரைச் சுவைப்பாரில்லை;

நாளுக்கு நாள்
தனக்கு வருவாய் வராது குறைவதையும்,
தான் வறுமையில் வாடுவதையும்,
தன் எதிரி ஏனாதி நாதருக்கு வருவாய் அதிகரிப்பதையும்
அறிந்த ஆதிசூரன்,
ஏனாதி நாதரை
எதிர்த்து போர் புரிந்து வீழ்த்திட
எண்ணினான்;
தன்னோடு சிலரைக் கூட
அழைத்துக்கொண்டான்;
ஏனாதி நாதரைப் போருக்கு
அழைத்தான்;
அவ்விருவருள் எவர் வலியவரோ
அவரே போர் வாள் பயிற்சி
அளிக்கத் தகுந்தவர் என்று சொன்னான்;

ஏனாதிநாதர் இசைந்தார்;
எதிரியோடு போர் புரிந்தார்;
போரில் தோற்றான்;
புறமுதுகு காட்டிப் பறந்தான்;
எண்ணியப்படி நேரெதிர் போர் புரிந்து
ஏனாதினாதரை வீழ்த்த முடியாதென்பதை
அறிந்து கொண்டான்
ஆதிசூரன்;

நயவஞ்சகன்
குறுக்கு வழியில்
எதிர்க்கத் துணிந்தான்.
எப்படி என்ன செய்வதென்று
யோசித்தான்;


       சேட்டாருங் கங்குல்
         புலர்காலைத் தீயோனும்
       நாட்டாரைக் கொல்லாதே
         நாமிருவெம் வேறிடத்து
       வாட்டாயங் கொள்போர்
         மலைக்க வருகவேனத்
       தொட்டார்பூந் தாரார்க்குச்
         சொல்லி வரவிட்டான்.


இருவருள் ஒருவர் உயிரோடு
இருக்கும்வரை,
இடைவிடாது போர் புரிய வேண்டும்,
இம்முறை தனியே ஓரிடத்தில்
அப்போர் நிகழ வேண்டும்;
அயலார் யாரும்
அவ்விடத்தே வருதல்
தவிர்க்கப்பட வேண்டும்;

வரைமுறைகள் வகுக்கப்பட்டது;
வாள்வீசிப் போர் புரிய
தேதி குறிக்கப்பட்டது;


                                                                        ( தொடரும் )

Thursday, April 12, 2012

ஏனாதிநாத நாயனார் - 1

                                    ஏனாதிநாத நாயனார்

சோழ நாட்டில்,
சோலைகள் நிறைந்த
மலர்கள் மலர்ந்து மனம் வீச,
வண்டுகள் ரீங்காரமிட,
வயல்கள் நிறைந்த,
குளுமையான ஒரு ஊர்
எயினனூர்.

உயரமாய்
வளர்ந்து நிற்கும் கரும்புகளின்
உயரத்தை விட
உயர்ந்து வளரும்
நெற்பயிர்கள்
நிறைந்த அவ்வூரில்
செல்வச் சிறப்பொடு
அடியார்களுக்குத் தொண்டு செய்து,
வாழ்ந்து வந்தார்
ஏனாதி நாதர்.


       தொன்மைத் திருநீற்றுத்
         தொண்டின் வழிபாட்டின்
       நன்மைக்கண் நின்ற
         நலமென்றும் குன்றாதார்
       மன்னர்க்கு வென்றி
         வடிவாள் படைபயிற்றும்
       தன்மைத் தொழில்
         விஞ்சையில்தலைமை சார்ந்துள்ளார்.


நெற்றியில் திருநீறு பூசி,
நெஞ்சில் சிவபூசை செய்து,
வாயில் சிவநாமம் சொல்லி, மன்னனின்
படை வீரர்களுக்கு
வாள்போர் பயிற்சி
தந்து வந்தார்;

வாள் பயிற்சியால்
வந்த வருமானம் எல்லாவற்றையும்
வரும் போகும் சிவனடியார்களுக்கு
வாரிவழங்கினார்; இவ்வாறவர்
வாழும் ஊரிலே
வாழ்ந்து வந்தான்
ஆதிசூரன் எனும்
அயோக்கியன்;
அவனும் சொல்லித்தந்தான்
அண்டியோர்க்கெல்லாம் வாள்பயிற்சி;
ஆனாலும் அவனை நாடிச் சென்றோரில்லை;
சுத்தமில்லா நீரைச் சுவைப்பாரில்லை;


                                                                        ( தொடரும் )

Friday, April 6, 2012

சிவபுராணம் - 11

                                    பசுபதாஸ்திரம்

தன்னை எண்ணித்
தவமியற்றும் அர்ச்சுனனை
சோதிக்க எண்ணினான்
சிவன்;
ஒரு வேடன் வடிவம் எடுத்தான்
அவன்;
அவன் வைக்கும் சோதனையிலிருந்து
தப்பிக்க முடிந்தவன் எவன்;

வேடனாய் உருவெடுத்து
வேகமாய் வந்தான்,
பார்த்திபன் கொல்ல எண்ணிய
பன்றியின் மேல்
பானம் விடுத்தான்;
இருவரின் கணையும்
இரையைத் தாக்க
அக்கணமே
அப்பன்றி
அசைய முடியாது உயிர் விட்டது;

பன்றி இறந்த இடத்திற்கு
பரமேஸ்வரனும் வந்தான்,
பார்த்திபனும் வந்தான்;
இறந்தது எனக்கே சொந்தமென்று
இருவரும் வாதிட்டனர்;
இதனைத் தொடர்ந்து
இருவரும் அம்பெடுத்துச் சண்டையிட்டனர்;
இரு தரப்பிலும் அம்பு
இல்லாது போகவே,
மல்யுத்தச் சண்டை இட்டு ஒருவர்
மற்றவரைச் சாய்த்து விட எண்ணினர்;

மலைக்காது போரிட்டான் குந்தி
மைந்தன்;
சளைக்காது அவனை எதிர் கொண்டான்
சர்வேஸ்வரன்;

சிறிது நேரம் கழித்து
தன் வேடம் மறைத்து
சுய உருவம் எடுத்தான்;

ஆரண்யத்தில் எவனை எண்ணி தவம் செய்தென
அவனிடமே சண்டை இட்டதை அறிந்து
அர்ச்சுனன் வருந்தினான்,
தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்;

'கவலை எதற்கு அர்ச்சுனா,
உன் பானங்கள் எல்லாம்
என்மேல் மாலைகளாகவே விழுந்தன; எனவே
வருத்தம் விடு,
பசுபதாஸ்திரம் பிடி,
எல்லாப் புகழும் பெறு;'



வாழ்த்தி மறைந்தான் விஷ்வேஷ்வரன்.
வணங்கி நின்றான் விஜயன்.

                                                                        ( தொடரும் )

Wednesday, April 4, 2012

சிவபுராணம் - 10

                                    பசுபதாஸ்திரம்


மகாபாரதக் காலம்;
துரியோதனன் பாண்டவர்களை
கானகத்திற்குத் துரத்தியக் காலம்;
பாண்டவர்கள் காட்டில்
வாழ்ந்து வந்தக் காலம்;

அப்பொழுது ஒருநாள்,
வியாசமுனி வந்தார்;
பாண்டவர்களைச் சந்தித்தார்;
சிவனைச் சிந்தனையில் வைத்துத்
தவம் செய்ய
அர்ச்சுனனுக்கு அறிவுறுத்தினார்;
அதற்கென ஒரு
அரிய மந்திரத்தை
அவனுக்கு ஓதினார்;
பாகிரதி நதி கரையிலுள்ள
இந்திரகிலா மலைக்குச் சென்று
இத்தவம் இயற்ற
இயம்பினார்;

அர்ச்சுனனும் தவம் செய்யச்
அம்மலை அடைந்தான்;
களிமண்ணால் சிவலிங்கம்
செய்தான்;
சிவனை எண்ணித் தவம்
செய்தான்;
வியாசர் விவரித்த மந்திரத்தை
இடைவிடாது சொல்லி வந்தான்;
அர்ச்சுனன் தவம் செய்த இடத்திற்கு
பன்றி ஒன்று வந்தது;
தன் தவத்தை கலைக்க வந்த
பன்றியோ ?
தன் எதிரியால்
ஏவப்பட்ட பன்றியோ ?
ஏதாவது அசுரன் பன்றி வடிவில்
வந்திருக்கிறானோ ?
என்று பலவாறு எண்ணினான்;
பன்றியை தன்னிடம் விட்டுத்
துரத்த முயற்சித்தான்;
முடியாது போகவே,
ஒரு அம்பு எடுத்து விடுத்தான்;
பன்றியை ஒரே அடியில்
கொன்றுவிடத் துடித்தான்;


தன்னை எண்ணித்
தவமியற்றும் அர்ச்சுனனை
சோதிக்க எண்ணினான்
சிவன்;
ஒரு வேடன் வடிவம் எடுத்தான்
அவன்;
அவன் வைக்கும் சோதனையிலிருந்து
தப்பிக்க முடிந்தவன் எவன்;

                                                                        ( தொடரும் )

Monday, April 2, 2012

வாழ்க பூமி !

வெண்மை நிறம் ஒளிரட்டும்,
அமைதி எங்கும் நிலவட்டும்,
அன்பாய் மக்கள் இருக்கட்டும்,
ஆனந்தம் எங்கும் பரவட்டும்,
கூடி ஆடி குதுகளிக்கட்டும்,
இருண்ட இரவு முடியட்டும்,
சச்சரவின்றி பொழுது விடியட்டும்,
மண் மணம் வீசட்டும்,
மழை தவறாது பொழியட்டும்,
வயல் விழையட்டும்,
உலகம் சிறக்கட்டும்,

வாழ்க பூமி !