Tuesday, June 30, 2015

மழை



மழை
இதே மழை தான்
இந்த மழை நாளில் தான்
ஒரு நாள் ...

என் வேலையில் நான் மூழ்கியிருக்க
எந்த சத்தமும் செய்யாது அவள் வந்து நிற்க
கன்னி வந்தது தெரியாது
காளை நான் கருமமே கண்ணாகக் கிடக்க
கால்மணி நேரம் கழிந்தபின் (பின்னால் சொன்னாள்)
'நாவென்னா நாளைக்கு வரவா' என்றவள் சொல்ல,
'எப்போ வந்தே' என்று நான் வினவ,
கோபப்பார்வை வீசிவிட்டு விருட்டென்று அவள் செல்ல,
பின்னாலே கெஞ்சி கொஞ்சியப்படி நான் ஓட,
கோவிலுக்குள் அழைத்துச்சென்று
மன்னிப்பு கேட்கச் சொல்ல,
சூடம் உள்ளங்கையில் கொளுத்தி
மன்னிப்பு கேட்க,
'எரியுது' என்று நான் கெஞ்ச,
கன்னியவள் கண் கலங்கி
கோவிலென்றும் பாராது
உள்ளங்கையில் முத்தமழை பொழிய
உடனே இன்னொரு சூடம் வாங்கி ஏற்றி,
மங்கை பார்க்கையிலே
அப்படியே அதை முழுங்கி
'ஐயோ' என்றவள் அலற
எரியுது' என்று நான் மீண்டும் கெஞ்ச,
கோவிலென்றும் பாராது .....

இந்த மழை நாளில் தான்
ஒரு நாள் ...

Monday, June 22, 2015

மழை



மழை
இதே மழை தான்
இந்த மழையில் தான் ஒரு நாள் ....

நானும் அவளும்
நாணல் காற்று போல
நான் சாயும்போதெல்லாம் அவளும் சாய
நான் நிமிரும்போதேல்லாம் அவளும் நிமிர,

ஒருவரோடொருவர் ஒன்றிக்கிடக்க, அவ்விடம்
வேறொருவரும் இன்றிக்கிடக்க

'மேகம் நான் மழை நீ' என்று சொல்ல,
'எப்படி' என்றவள் வினவ,
'நான் முகம் கருக்கும் போதெல்லாம் நீ அழுது ஓடிவிடுகிறாயே' என்று விளக்க,

 'அலை நீ, கரை நான்' என்றவள் சொல்ல
'நானுனைத்தேடி ஓடி வரும்போதெல்லாம்
நீ எனைத் தடுத்து அணைத்துக்கொள்கிறாயே அதனாலோ?' என்று பதிலுரைக்க

'மலர் நீ மணம் நான்' என்றவள் சொல்ல 
 'மணம் இன்று கம்மி, குளிக்கலையோ ?' என்று கமண்ட,
'எருமை எருமை' என்று செல்லமாய் அழைத்து
முத்தம் பல தந்துவிட்டு ஓடிவிட்டாள்.

இதே மழை நாளில் தான்
ஒரு நாளில்  ....