Sunday, March 31, 2019

பொன்மாலைப் பொழுதில் 51

386. மறுபடி மறுபடி அதைப் பற்றியே சொல்ல, என்செய்ய உங்கள் சினம் கூடலாம்.
வாலிக்கு, அவன் முன் நிற்பவர் வீரத்தில் பாதி, அவன் வீரத்தில் கூடிடுமாம்.
சீதை மறுக்கும் போதெல்லாம் அரக்கனுக்கு அவள் மேல் ஆசை கூடியதாம்.
கயிறு எடுத்து உரலோடு கட்டக் கட்ட கண்ணனின் வயிறு அளவு கூடியது.
துணி எடுத்துச் சுற்ற சுற்ற வானரத்தின் வால் நீள அளவு கூடியது.
காதலில் நாம் கலந்த பிறகு,
உனக்கெப்படியோ தெரியவில்லை
*மாலையென் வேதனை கூட்டுதடி*

385. டேய் நண்பா, கொல்லாதேப்பா
எதற்கெடுத்தாலும் புராணம் பற்றிக் கதைக்கிறாயே,
கோசலராமனுக்கு கோதண்டம், பரசுராமன் கையில் கோடாரி,
பலராமன் கையில் வேறு பொருள்.
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
தரையில் ஓடும் எலி அண்ணனுக்கு
வானில் பறக்கும் மயில் தம்பிக்கு;
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
இரு வேறு லோக சண்டை, க்ருதா யுகம் (அமிர்தம் கடைதல்).
பூலோகத்தில் இரு வேறு நாட்டு
சண்டை, த்ரேதா யுகம் (ராமாயண்)
ஒரே நாட்டு மக்களிடையே சண்டை, கலியுகம் (பாரதம்).
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
முதலிலெல்லாம் ஆணோடு பேசார், அதன்பின் கதவு மறைவிலிருந்து, அப்பறம் கால் மேல் கால் போட்டு;
இப்போதோ பேசவே பயப்படும் ... ஆடவர்.
உலகம் மாறிவிட்டதைக் காட்டுது.
*
நீ மட்டும் ... இன்னும் மாறாது,போன ஜென்மத்து நினைவலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறாயே.
தம்பி, என்னை இந்த க்ருப்பை விட்டு ஓட வைக்காதே.
பழைய பாட்டே போட்டு கொல்லாதே
போதும் *புதிய பாடல் ~பாடு~* போடு.


384. பாற்கடலில் பாம்பு மெத்தையில்
பள்ளி கொள்பவன்;
பாவங்கள் பரவும் பொழுதெல்லாம்
பாருலகைப் பாதுகாக்கப்
பிறவியெடுப்பவன்;
*
அயோத்தியில் அவதரித்து
அரசகுமாரனாய் வளர்ந்து
ஆரண்யம் புகுந்து
அத்திரம் தொடுத்து
அரக்கர்களை அழித்து
அனைத்தும் அழகுற
ஆண்ட ஆண்டவன்.
*
மயிற்பீலி சூடி
மாடு மேய்த்து
மாயம்பல புரிந்து
மங்கையர் மனங்கவர்ந்து
மாமனையே கொன்று
மகாபாரதத்தில் தேரோட்டி
மாகீதை சொன்னவன்.
*
தானே தெய்வம் என்றவனைக் கொல்ல தூணை பிளந்து வந்தவன்
மூன்றடி மண் கேட்டு முக்தி தந்தவன்.
*
ஸ்ரீநிவாசனாய் கோவிந்தராஜனாய் நாராயணனாய் ராகவனாய்
கிருஷ்ணனாய் வெங்கடேசனாய்
கோபாலனாய் ஆராவமுதனாய்
பெயரெதுவான போதும் பொருள்
ஒன்றாய் விளங்கும் அந்தத்
*திருமால் பெருமைக்கு நிகரேது?*

383. ராமனின் பாதத்துகள் கல்லின் மேல் பட அகலிகை உருவானாள்.
காந்தாரியின் கரு பானைகளில் நிரப்பப்பட  கௌரவர் உருவானர்.
காக வடிவிலிருந்து கமண்டலத்தை கவிழ்க்க காவிரி உருவானது.
சிவனின் நெற்றிக் கனலிலிருந்து வடிவேலன் உருவானான்.
விந்தைகளே வரமான போது அதை வெல்ல நரசிம்மம் உருவானது.
அவள் ... பஞ்சு போன்று, இத்தனை மென்மையாய், ஒருவேளை ...
*வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?*


382. ச்சே, இப்படி ஒரு கேள்வி கேட்டு,
இதற்கு நான் என்ன சொல்வேன், எதைச் சொல்லி புரிய வைப்பேன்.
முழிக்கிறேன் தவிக்கிறேன் தத்தளிக்கிறேன் தடுமாறுகிறேன்;
இதுவரை என்னிடம் யார் யாரோ என்னென்னவோ கேட்க,
எதையோ எப்படியோ சொல்லி சமாளித்திருக்கிறேன்;
பணம் பாசம் கல்வி நட்பு போன்று பல தலைப்புகளில் பொய் பேசி,
ராமன் ஆடிய சூதாட்டம், தருமரின் சூழ்ச்சி, கர்ணனின் கஞ்சத்தனம் பற்றியெல்லாம் பலவாறு கதை அளந்து சமாளித்திருக்கிறேன்.
ஆனால் ... ஆனால் ... நீ இப்படி ஒரு கேள்வி கேட்டாயே, இதற்கென்ன சொல்ல, எப்படி விளக்க; புரியாது ...
ம்ம்ம் ... காதல் என்பது ...
*கண்மணியே, காதல் என்பது ...*


381. குரங்கு தானே, என்ன செய்து விட முடியும் என்று குறைத்து எண்ணி
     ராவணன் ஏமாந்தான்.
அழகு மோகம் மயக்க மணந்து பிள்ளையரை கங்கையில் இழந்து
     சந்தனு ஏமாந்தான்.
கர்ணன் இருக்க கவலை எதற்கு என்று எண்ணி பீஷ்மரை பகைத்து
     துரியோதனன் ஏமாந்தான்.
கண்ணன் தனை மறந்திருப்பான் என்று எண்ணி தயங்கியே வந்த
     சுதாமா ஏமாந்தான்.
தவ வேடம் தரித்தவன் தவறேதும் செய்யான் என்று நம்பி அழைத்து
     மெய்ப்பொருளான் ஏமாந்தான்.
வந்தது யாரென்று விளங்கிக் கொள்ளாது தந்ததையும் பார்க்காது
     பாண்டியன் ஏமாந்தான்.
இளம் கன்னியரை மலர் என்று எண்ணிக் கற்பனை செய்துப் பாடி
     *கம்பன் ஏமாந்தான்*.


380. பிடித்திருக்கிறது.
உன்னைப் பார்த்தாலே ஒரு பரவசம் குதூகலம் பற்றிக் கொள்கிறது.
*
தலை குளித்து, கூந்தலிலிருந்து நீர் முதுகுப்பக்கம் சொட்ட,
நெற்றியில் குங்குமம், சவ்வாது வீபுதி; கொல்லையில் பறித்த மல்லி தலையில்;
ஒற்றைக் கண்ணால் எனைப் பார்த்தபடி துளசி சுற்றி, தேவாரம் பிரபந்தம் பாடி, பாதி காஃபி தந்து மீதி நீ குடித்து தாவணியில் (உன்) வாய் துடைத்து சொருகிக் கொல்லும் நேர்த்தி;
கதை கவிதைகளில் நாட்டம், வீடு முழுதும் வண்ணக்கோலம்.
*
ம்ம்ம் ... மகிழ்ச்சியாக இருக்கிறது. மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறது.
உன்னாலே உன்னோடே ~என்~ நம் வாழ்வு நலம்பெற வேண்டுமென்று ஆண்டவனை வேண்ட, அவ்வமயம்
*டிங்டாங் கோவில் மணி நான் கேட்டேன்*

Monday, March 18, 2019

பொன்மாலைப் பொழுதில் 50

379. பிடித்திருக்கப் பழகினோம்.
விரும்பியே இணைந்திருந்தோம்.
சிரித்துப் பேசுகையில் கிடைக்கும் பரவசம்,
கை பற்றி நடக்கையில் பரவும் மின்சாரம்,
காணாப் பொழுதினில் உள்ளே எழும் ஓலம் விரும்பியே அனுபவித்தோம்.
ஒருநாள் ... தவறு என்னுடையதே.
புரியாது உளறியது உண்மையே.
வேலை அதிகம், இரவு நேரம்,
வெளியே மழை, தனியே பயம்.
வீடு வரை துணையாய் வந்தாய்
விரல் பற்றிக் கவிதை சொன்னாய்.
பாராட்டி ரசிக்க, 'பரிசு?' என்றாய்.
உள்ளே வந்தால் தேநீர் என்றேன்.
தயங்கியே நீ வெளியில் நின்றாய்.
கையில் இருந்த சாவியைக் காட்ட
ஓகோவென்று நீ விசிலடிக்க
சாதாரணமாகவே வெடவெட என்று சுற்றித் திரிபவன்
*யாருமில்லாத் தனியரங்கில் ...*


378. கர்ணன் எப்பவுமே துரோகத்துக்கு துணை போகணுமா என்ன?
சண்டைன்னா முறைச்சுக்கணும் அடிச்சுக்கணும்னு அவசியமில்லை.
ஆள் சண்டியரானாலும் சத்தியம் தர்மம் தவறாம இருப்பது சாத்தியம்.
சகுனியோ கூனியோ சமரசமாய் வாழ வழி சொல்லலாம்.
அதனால, சொல்வது என்னன்னா ...
ரொம்ப வருஷமாச்சி, பார்க்கலை பேச்சு வார்த்தை இல்லை.
அதற்காக, மறந்துடணும்னு அவசியமில்லை.
அட ___ நாதரே, இந்த உலகத்தின் தோழரே, மறவாதீரும், இந்தப் பொட்டை சிறுக்கி *நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கே*


377. கையில் வில் இல்லை, எனவே நீ இராமனோ அர்ச்சுனனோ  இல்லை.
ஹிஹி, என்னதான் ஜாடை நிறைய ஒத்துப்போனாலும், வால் இல்லையே, எனவே நீ ___ இல்லை.
வள்ளி தெய்வானை பற்றித் தெரியவில்லை கையில் வேல் இல்லை, எனவே முருகன் இல்லை.
வர்ணமிரைத்து வரைந்திடினும் அவ்வளவு தத்ருபமில்லை, எனவே நீ ராஜா ரவிவர்மா இல்லை.
வெட்டி அதிகாரம் மட்டும் தூள் பறக்கிறது. கொஞ்சம் கருப்பு தான் என்றாலும் கையில் ...
ஒருவேளை... *அன்பே நீ என்ன அந்தக் கண்ணனோ மன்னனோ ?*

376. வெளிச்சம் நுழைய முயன்றுத் தோற்கும் அடர்ந்த ஒரு வனம்.
மனிதக் கால்கள் இதுவரை படாது, இப்புவியில் புனிதமான ஒரு இடம்.
இது பறவை விலங்குகளுக்கு இறைவன் தந்த வரம்.
உள்ளே நாம் நுழைந்துவிட்டோம் அன்றோ, இனி அவைகள் பாவம்.
கிடக்கட்டும், கண் முன் தெரியுதா, அற்புதமான ஒரு அருவி.
இங்குமங்கும் சிறகடித்துப் பறக்கும் பலவிதமானப் பறவைகளின் ஒலி.
சுழன்றடிக்கும் சுத்தமான காற்று,
மனதைக் கிறங்கடிக்கும் பூ வாசம்
இதமான தட்பவெட்ப நிலை.
இயற்கையோடு இணைந்து வாழ, ஏகப்பட்ட சுகமுண்டு;
நகர வாழ்வு நரக வாழ்வானதற்கு நம் பங்கு நிறைய உண்டு.
பேராசைக்கு விலையுண்டு என்று சொல்லுதோ, அருகில் மரத்தில்
*நீலக்குயில்கள் (இ)ரண்டு*


375. என்ன இது, எதற்காக, ஏன் இப்படி ?
பிடித்திருக்கு என்று மட்டும் தானே சொன்னான், அதற்கு?
பார்த்த இடத்திலெல்லாம் அவன் முகம் தெரியணுமா என்ன?
இத்தனை குழப்பம் இதுவரை என்னுள்ளே இருந்ததில்லையே;
ஐயகோ, இன்றென்ன வியாழனா திங்களா, I mean வெள்ளியா?
வேதியல் தேர்வு இன்றா நாளையா?
H2O வின் ஃபார்முலா என்ன?
காப்பர் சல்ஃபேட் கருப்பா சிவப்பா?
பல் தேய்த்தேனா? டம்ளர் இருக்கே, அப்போ காஃபி ஆச்சா, பசிக்குதே;
இந்த ஆடை இன்று அணிந்ததா ? நேற்று என்ன அணிந்தேன் ?
கண்ணாடி பார்க்க பயமாயிருக்கு; பின்னாடி அவனுருவம் ஒருவேளை தெரிந்திடுமோன்னு பதட்டமிருக்கு;
இது ஆசையா ஏக்கமா தேடலா? இல்லை எதிர்பார்ப்போ?
அந்தந்த சமயத்தில் அந்தந்த எண்ணம் தானே வந்து விடுகிறதே.
ஓ அப்போ இது..இதுதான்..அதுவா?
*என்ன இது ... என்ன இது என்னைக் கொல்வது?*

374. முதல் நாள் கல்லூரியில் எனைப் பார்த்ததும் மறைந்து கொண்டாய்.
மெல்ல மெல்ல பயந்து பயந்து ஓரிரண்டு வார்த்தைகள் பேசினாய்.
அன்பு அறிவு அடக்கம் நளினம் எல்லாம் இணைந்த அதிசயமாம் நீ.
உன் அடாவடி ரகளை அத்துமீறல் எல்லாம் என்னிடம் மட்டும் தானோ?
நான் வாங்கி வைத்த உணவை கேட்காது உண்பதும்,
டீ சுவைத்து விட்டு முகம் சுளிப்பதும் ...
சத்தமின்றி என் அறையினுள் நுழைந்து அரட்டை அடித்து உறக்கம் கலைத்து ...
பேனா பென்சிலில் ஆரம்பித்து ஷூ
ஜீன்ஸ் கேட்பதும் அடுத்து என்ன
கேட்பாயோ என நான் விழிப்பதும்
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது,
மெல்ல மெல்ல நீ என்னை, என் உடைமைகள் எல்லாம்
*ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்*

373. குந்தி மந்திரம் சொல்லி அழைக்க உடன் வந்தவன் பகலவன்.
அபயமென்று பாஞ்சாலி கை கூப்பி  அழைக்க, வந்தானே பரந்தாமன்.
பசியென்று பாலகன் அழ பால் தர வந்தாளே பார்வதி.
ஆறுமுகன் அண்ணா என்றழைக்க அக்கணமே வந்தான் ஆனைமுகன்.
நீ மட்டும் ... இத்தனை தாமதம் ...
இன்றுதானே வருவதாய்ச் செய்தி அனுப்பினாய், காத்திருக்கேன் வா.
அப்பம் அக்காரவடிசல் பருப்பு உசிலி தயார், ஆறிப்போகுமுன் வா.
உன்னோடு உறவாட உறங்காதுத் தவமிருக்கிறேன், வா.
இதோ ... இதோ ... காலடிச் சத்தம் ... நீ தான், இது நீ தான்
*வா வா வா ... கண்ணா வா*