Monday, June 11, 2018

பொன்மாலைப் பொழுதில் 26

201. வெள்ளைத் தாளில் கவிதை போன்ற ஏதோவொன்றை எழுதினேன்.
உன் சொற்படி வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்துக் கொண்டேன்.
வெள்ளைக் காரனாய்த் தெரிகிறேன் என்று சொன்னபோது சிரித்து நகர்ந்தேன்.
வெள்ளை நிறத்தில் ஒரு வாகனம் வாங்க முடிவெடுத்தேன்.
வெள்ளைப் பூசணி விரும்பித் தின்பேன்.
வெள்ளைப் பூண்டு உனக்குப் பிடிக்காததால் உண்ணாது தவிர்க்கிறேன்.
வெள்ளை யானையைக் காண ஆவலாய்  இருக்குது.
எல்லா வரியிலும் வெள்ளை வர கனவு மட்டும் கருப்பாகவா வரும் ?
மனதில் *வெள்ளைக் கனவொன்று உள்ளே நுழைந்தது*

200. தொடி அணிந்தத் தோகையே,
கயல் விழிக் கண்களால் எனைக் கவர்ந்தக் காரிகையே.
களிரு போல் தெரிந்தேன், கட்டுப்பாடின்றித் திரிந்தேன்.
என்றுனைக் கண்டேனோ அன்றே நானுன் மேல் மையல் கொண்டேன்.
என் உள்ளத்தின் உள்ளே உள்ள உருவம் உன்னதுதானடி உயிரே.
உன் கருங்கூந்தலின் ஆட்டத்திற்கு இணையாய்க் கவி பாடவா ?
உன் பொற்பாதச் சிலம்பொலிக்கு ஜதி சொல்லவா ?
எந்த விதத்தில் உனைக் கவர ? சொல்லிடு வா.
நழுவுகிறாயே, பசலை பயமா ? நாணமா? கோபமா?
இன்னும் நாம் பேசவேயில்லையே, ஊடலெதற்கு உயிரே ?
நில்லாயொரு நாளிகை, நங்கையே
*நறுமுகையே நறுமுகையே*

199. அவனுக்குப் பிடித்த நீல நிறத்தில் புடவை அணிந்துக் கொண்டேன்.
குந்தவையைக் காணப் பயணித்த  வந்தியத்தேவன் பழைய கதை.
மன்னவனைக் காண மங்கை நான் பயணிப்பது புதிய கதை.
எனைக் கண்டதும் ஆச்சரியத்தை மறைத்தபடி கோபத்தில் குதிப்பான்.
பயப்படுவதாய் நடிக்க குலைவான்.
மல்லிகை மணத்தில் மயங்குவான்.
வெட்கிக் சிரிக்கக் கிறங்குவான்.
மடியிலெனைக் கிடத்திக் கவிதை மழை பொழிந்திடுவான்.
இந்த எண்ணங்களெல்லாம் எனை அவனைநோக்கி நகர்த்துகின்றன.
ஒரு முடிவோடு கிளம்பிட்டேன்.
இனி யார் சொல் பேச்சும் கேளேன்.
*என் ஆளை பாக்கப் போறேன்*.

198. இதுவரை இத்தனை விஷயங்கள் எனைச் சுற்றியிருப்பதை உணர்ந்ததில்லை.
உன்னோடுப் பழகிய பின்பு தான் எல்லாம் ரசிக்க எண்ணம் ஏற்படுது.
பரந்து விரிந்த புல்வெளியில் நடந்திடப் புத்துணர்ச்சி பிறக்குது.
புல்லின்மேல் பனி இட்டப் பொட்டு எனை வியப்பிலாழ்த்துது.
பல வண்ணங்களில் பூத்திருக்கும் பூக்களெல்லாம் பரவசமளிக்குது.
படபடவென்று பறக்குமிந்தப் பட்டாம்பூச்சி ரம்மியமாய்த் தோன்றுது.
கீச்சு கீச்சென்றுக் கூவுமிந்தப் பறவைகளின் இன்னிசை அனுபவித்தறியாதது.
இத்தனையேன் என்னைய மெல்ல வருடும் இந்தப் *பூங்காற்று புதிதானது*

197.
_16 வயதினிலே_யே பழுத்து, பலமுறை ரசிக்க வைத்த மயிலு நீ.
ஏய் சிகப்பு ரோஜாவே, நாங்கள் தேடியக் கைகுட்டை விற்றவள் நீ.
'சீனு சீனு' என்று நீ கொஞ்சி நடித்த _மூன்றாம் பிறை_ பார்க்காதார் இலை, இருந்தால் அது அவர் பிழை.
வசதியாய் வாழ்ந்து _ஜானி_யோடு என் வானிலே ... பாடினாய் நீ, _வறுமையின் நிறம் சிவப்பு_ என்று வாழ்ந்தாய் நீ.
_வாழ்வு மாயம்_ என்றுப் புரிய வைத்தாய் நீ.
_மூன்று முடிச்சோ_ முப்பது முடிச்சோ எங்கள் முதல் கனவுக்கன்னி நீ.
யாருக்கும் _நான் அடிமை இல்லை_ என்றெண்ணும் _போக்கிரி ராஜா_வையும் _கல்யாணராமனா_ய் மாற்றக்கூடியவள் நீ.
எங்கள் _தர்மயுத்த_த்தின் _குரு_ நீ.
கலையுலகின் _அடுத்த வாரிசா_ய் வலம் வந்தக் _கவிக்குயில்_ நீ.
அடி _கோகிலா_, சொல்ல வெட்கினும்
*சின்னஞ் சிறு வயதில் ...*

196. அடக்கமாய்த் தான் இருப்பேன்
நெஞ்சை இறுக்கிப் பிடித்து தான் வைத்திருந்தேன்.
என்று உனைப் பார்த்தேனே அன்றே எனை நான் மறந்தேன்.
அதெப்படி பார்த்ததும் பற்றும் என்றுப் பலரை  பகடி செய்ததுண்டு.
பாவி, பாவை நெஞ்சுள் புகுந்து பித்து பிடிக்க வைத்திட்டாய்.
அய்யகோ என்னையும் கவிதை மொழியில் சிந்திக்க வைத்திட்டாய்.
இனியெதுவும் செய்யமுடியாது என்பது மட்டும் புரிகிறது.
என் வசம் ஏதுவுமில்லை என்பதைத் தவிர வேறெதுவும் புரியவில்லை.
சரியென்று சொல்லிவிடவா ?
இன்னும் கொஞ்சம் பழகவா ?
அருகில் சென்றுப் பேசவா ?
*அம்..மாடி அம்மாடி ... நெருங்கி ஒருதரம் பார்க்கவா ?*

195. நீ நீயாகவே இருக்கிறாய்
நான் நானாகவே இருக்கிறேன்
நாம் இணையவுமில்லை பிரியவுமில்லை.
நம் ஊடல் முடியப் போவதுமில்லை.
அதனாலென்ன ?
காதல் கசந்திடுமா இல்லை கன்னி முகந்தான் வெறுத்திடுமா ?
காணுமெல்லாவற்றிலும் உனை இணைத்துப் பார்க்க முடிகிறதே.
சிரிக்கும் குழந்தையும் பூத்துக் குலுங்கும் பூவும் உன்னை ஞாபகப்படுத்துகிறது.
மெல்லிசை கேட்கையில் மடியில் நீ படுத்திருப்பதாய் மனதுள் படுகிறது.
பொட்டு பூ புடவையில் யாரைப் பார்த்தாலும் உன் பெயர் சொல்லி அழைக்கத் தோன்றுகிறது.
இதோ *அந்திமழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது*

No comments:

Post a Comment