Wednesday, June 27, 2018

பொன்மாலைப் பொழுதில் 28


217. நான் சொல்லுமெதையும் நீ காதில் வாங்கிக் கொள்வதில்லை
என் எண்ணப்படி எதையும் செய்வதில்லை.
என் ஆசைக்கு மதிப்பு தருவதில்லை
நான் எது செய்தாலும் நீ இஷ்டப்படுவதில்லை.
என் மனம் புண்படும்படி எதாவது நக்கல் செய்ய மறப்பதில்லை.
இத்தனைக்குப் பிறகும் எனக்குப்
*பிடிக்குதே, திரும்ப திரும்ப உன்னை*

216. பசித்தவனுக்கு அறுசுவை விருந்து கிடைத்ததுபோலே,
வெயிலில் அலைந்து திரிந்தவனுக்கு மரநிழல் கிட்டியதுபோலே,
பணத்தாசை கொண்டவனுக்கு ஒரு சில லட்சம் பரிசு கிட்டியதுபோலே,
கடினமாய் உழைத்தவனுக்கு வெற்றி கிட்டியதுபோலே
என்னைக் காண, நீ
*மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே*


215. வெயில் குறைவாய் இருக்க,
சுற்றுச்சூழல் மாசுபடாதிருக்க
போதுமான அளவு மழை பொழிய
கட்டிடங்களால் காற்றன் வீச்சு தடைபடாதிருக்க
போக்குவரத்து நெரிசல் இல்லாதிருக்க
விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்க
வாழ்க்கை நிதானம் நிரம்பியிருக்க
இன்னும் என்னென்னவோ ஆசை எல்லாருக்குமிருக்கு.
எனக்கோ
*உன்கூடப் பேசத்தானே ஆசை*

214. பார்க்கும் திரைப்படங்களில் நாயகி நீ, நாயகன் நான்.
ஒலிக்கும் பாடல்களில் பெண் குரல் நீ, ஆண் குரல் நான்.
கடிகாரத்தில் வேகமாய் ஓடும் நிமிடமுள் நீ, மணி காட்டும் சின்னமுள் நான்.
ஸ்வரங்களில் சரிகம நீ, பதநி நான்.
கவிதைகளின் கருப் பொருள் நீ, எதுகை மோனை நான்.
கார்காலத்தின் இடி மின்னல் நீ, மேகம் மழை நான்.
நம் வீட்டின் *ஒரு பாதிக் கதவு நீயடி, மறுபாதிக் கதவு நானடி*


213. பிரிந்திருந்தாலும் வெறுப்பில்லை
மறைந்திருந்தாலும் மறக்கவில்லை
உன் கள்ளச் சிரிப்பும் எள்ளல் பேச்சும் இன்றுமெனைச் சுற்றி ஒலிக்கிறது.
காது கடித்து வறுக்கும் உன் குட்டிச் செய்திகள் இன்னும் இனிக்கிறது.
இதழில் எழுதியக் கவிதைகளும்
இடையில் வரைந்தக் கோலங்களும்
இன்றளவும் எண்ணி மகிழ்கிறேன்.
வாழ்க்கையின் ஓட்டத்தில் வழிமாறிப் பிழைக்க நேர்ந்தாலும்,
காலம் நமைக் காணமுடியாதபடி  விலக்கி வைத்திருந்தாலும்,
உனையெண்ணி ஏங்கும் என்னைக்
காண எண்ணும் *உன்னை நானறிவேன்*


212. சோகமெதற்கு இப்போது ?
புலம்புவதை முதலில் நிப்பாட்டு.
என்ன செய்தாய், கிட்டவில்லை என்று கலங்குகிறாய்.

களைத்தவனுக்குத்தான் ஓய்வு
பசித்தவனுக்குத்தான் உணவு
உழைத்தவனுக்குத்தான் வெற்றி.

தொடர்ந்து முயல்.
தோல்வி தந்தப் பாடத்தைப் பயில்.

வெற்றி போதையேற்றும்.
தோல்வி நல்வழிப்படுத்தும்.

ஒவ்வொரு முறை நீ முயன்று தோற்கும் போதும்
உன் இலக்கு உனை நோக்கி நகர்கிறது.
தோல்வி கண்டு நீ நகைக்குப் போதெல்லாம்
வெற்றி உன்இருப்பிடம் தேடி வருகிறது.

இன்று இல்லையேல் நாளை.
இனிதாய் விடியும் உன்வேளை.
இன்னும் என்ன கவலை ?
*மயக்கமா ? தயக்கமா ?*


211. நீ என்ன உண்டாயென்று ஒரு நாளும் நான்  யோசித்ததில்லை, ஆனால் எனக்கு மட்டும் தினம் அறுசுவை விருந்து தந்ததை மறக்கவில்லை.
உனக்கென்ன வேணுமென்று ஒருநாளும் நான் கேட்டதில்லை. ஆனால் நான் கேட்குமுன்னே எனக்கு வேண்டியதை நீ எடுத்துத் தர மறந்ததில்லை.
உனக்கு எப்பொழுதாவது உடம்பு சுகமில்லாது போனதுண்டா என்றெனக்கு நினைவில்லை. நீ கூடயிருக்கும் வரை ஒரு நோயும் எனை நெருங்கியதில்லை.
என் அழுகைக்கும் சிரிப்புக்கும் அர்த்தம் தெரிந்தவளே,
எதற்கு ஆத்திரமடைவேன் எப்போது பாச மழை பொழிவேன் என்றறிந்தவளே,
உன்னைப்பற்றி ஏதுமறியுமுன் காணமுடியாதூரம் சென்றுவிட்டாயே
*கள்ளிக்காட்டில் பிறந்தத் தாயே*

210. உன்னால் தானே நான்,
நீயில்லையேல் ஏது நான் ?
கண்ணின் மணியாய் எனைக் காத்து வந்தாய்.
அமுதூட்டும் போதே அன்பு பண்பு எல்லாம் சொல்லித்தந்தாய்.
என் சுடு சொற்கள் பொருத்தாய்.
உன் சொல் கேளாது உனை மதிக்காத போதும் என கூட நின்றுக் காத்தாய்.
வாழ்வில் நான் உயர உயர நீ மகிழ்ந்தாய்.
என் வெற்றியே உன் கனவு இலட்சியம்
என்றெண்ணி வாழ்ந்தாய்.
இதோ இன்று ஒரு நிலைக்கு வந்த பின் திரும்பிப் பார்க்கிறேன்.
உன் சிரித்த முகம் எங்கும் தென்படாது தவிக்கிறேன்.
இன்று இன்பக்கடலில் நான் நீந்தி விளையாட அன்று நீ எதிர்கொண்ட இன்னல்களை எண்ணித் தவிக்கிறேன்.
இன்று நான் விருட்சமாய் வளர்ந்து நிற்க என் விதைக்கு நீ நீரூற்றியதை நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.
உனை என்றும் மறக்க முடியாது வாழ்ந்து வருகிறேன.
என் *உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீ தாயே*

209. எத்தனையோ நாள் காத்திருந்தேன்.
அவள் செல்லுமிடமெல்லாம் நிழலாய்ப் பின்தொடர்ந்தேன்.
அவளுக்குப் பிடித்த எல்லாவற்றையும்  பிடித்தவாறே செய்துவந்தேன்.
உள்ளதை உள்ளபடி வர்ணித்து ஓரிரு  கவிதைகள் அனுப்பினேன்.
என் அழகையும் அறிவையும் கண்டு மயங்காதவள் என் எழுத்தில் ஈர்க்கப்பட்டு எனை ஏற்றுக்கொண்டாள்.
கன்னியவள் எனைக் காதலிப்பதாய் ஒத்துக்கொண்டாள்.
காலமெல்லாம் கூட வருவதாய் வாக்கு தந்தாள்.
இதோ என் விடாமுயற்சி வெற்றிக்கனி ஈன்றது.
இனியென்றும் *காதல் வைபோகமே*

No comments:

Post a Comment