Friday, January 24, 2020

கம்பராமாயணம் 18


1045.    எய்த, அத் திரு நெடுந் தேர் இழிந்து, இனிய தன்
             மொய் கொள் திண் சேனை பின் நிற்க, முன் சேறலும்,
             கையின் வந்து, 'ஏறு' என, கடிதின் வந்து ஏறினான்;
             ஐயனும், முகம் மலர்ந்து, அகம் உறத் தழுவினான்.

தசரதன் தேர் அருகே வந்து,
தன் அழகிய பெரிய தேரிலிருந்து இறங்கி
வலு கொண்ட சேனை பின்னே தள்ளி நிற்க,
ஜனகன் முன் செல்ல
தசரதன் கையை நீட்டி 'தேரில் ஏறிக் கொள்' என்றதும்
விரைந்து வந்து அவ்வண்ணமே செய்தான்.
தசரதனும் அகம் முகம் மலர
ஜனகனை ஆரத் தழுவிக்கொண்டான்.


1105.   திருவின் நாயகன் மின் திரிந்தாலெனத் 
            துருவு மா மணி ஆரம் துயல்வர 
            பருவ மேகம் படிந்ததுபோல் படிந்து 
            இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான்.


திருமகளின் நாயகன் 
மின்னல் உலாவுவது போல் 
மார்பில் அணிந்த மணி மாலைகள் ஒளிவீச 
கார் மேகம் தரையில் படிந்தது போல தாழ்ந்து 
வசிட்டன் விசுவாமித்திரன் இரண்டு முனிவர்களின் 
திருவடிகளை வணங்கினான்.


கோலங் காண் படலம் 

1117.  தேவியர் மருங்கு சூழ 
               இந்திரன் இருக்கை சேர்ந்த 
           ஓவியம் உயிர் பெற்றென்ன  
                உவந்து அரசு இருந்தகாலை 
           தா இல் வெண் கவிகைச் செங்கோல் 
                 சனகனை இனிது நோக்கி 
          'மா இயல் நோக்கினாளைக் 
                கொணர்க!' என வசிட்டன் சொன்னான்.

உயிர்பெற்ற ஓவியம் போன்ற 
மனைவியர் சூழ, 
தேவேந்திரன் போன்ற தசரதன் 
மகிழ்ச்சி பொங்க ஆசனத்தில் அமர்த்திருக்கும் போது,
வெண்கொற்றக் குடையின் கீழ் 
செங்கோல் தாங்கி அமர்ந்திருக்கும் சனகனைப் பார்த்து 
'மான் விழி மங்கை சீதையை அழைத்து வருக'
என வசிட்ட மாமுனி சொன்னான்.


1144.   பொன்னின் ஒளி, பூவின் வெறி 
                   சாந்து பொதி சீதம்,
            மின்னின் எழில், அன்னவள்தன்
                   மேனி ஒளி மான,
            அன்னமும், அரம்பையரும்
                   ஆர் அமிழ்தும், நாண
            மன் அவை இருந்த மணி
                   மண்டபம் அடைந்தாள்.


பொன்னின் ஒளியையும்,
பூவின் மணத்தையும்,
சந்தனத்துக் குளிர்ச்சியையும்
மின்னலின் அழகையும்
ஒப்புச் சொல்லுமாறு
சீதையின் மேனி எழில் இருக்க,
அன்னப்பறவை நடையில் தோற்று நாண
தேவ மங்கையர் அழகில் தோற்று நாண
அரிய அமுதம் இனிமையில் தோற்று நாண
அரசவை மணி மண்டபம் வந்தாள்.


1153. எய்ய வில் வளைத்தும், இறுத்ததும் உரைத்ததும் 
          மெய் விளைவு இடத்து, முதல் ஐயம் விடாலுற்றாள்,
          ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும் 
          கைவளை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்.

இலக்கை அடைய வில்லை வளைத்தும், 
அது முறிந்தது என பிறர் உரைக்கக் கேட்டும் 
உண்மையாக இருந்ததால் 
கன்னிமாடத்திலிருந்து கண்டவன் இவன் என்ற 
முதல் சந்தேகம் தீர,
அன்று முதலே தன்னுள் இராமனின் உருவத்தை 
தரிசித்து வந்தவள்
இன்று, நேருக்கு நேர் காண முடியாது 
கைவளையலை சரிசெய்யும் விதமாய் 
கடைக்கண்ணால் கண்டு மகிழ்ந்தாள்.

( தொடரும் )

No comments:

Post a Comment