எழுச்சிப் படலம்
733. முகந்தனர் திருவருள், முறையின் எய்தினார்;
திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது, செல்வனைப்
புகழ்ந்தனர்; 'அரச! நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது' என, நெடிது கூறினார்.
அயோத்தி வந்த மிதிலை தூதுவர்
அரசனின் அனுமதி பெற்று
கண்டு, தொழுது, அவன் அடி வணங்கி,
'அரசே உன் மைந்தர் இங்கிருந்து கிளம்பிய பிறகு
நடந்தது இது' என்று விரிவாக உரைத்தனர்.
803. நித்திய நியமம் முற்றி
நேமியான் பாதம் சென்னி
வைத்த பின், மறை வல்லோர்க்கு
வரம்பு அறு மணியும் பொன்னும்
பத்தி ஆன் நிரையும் பாரும்
பரிவுடன் நல்கி போனான்
முத்து அணி வயிரப் பூணான்
மங்கல முகிழ்த்த நல் நாள்.
தினப் பூஜைகளை முடித்துவிட்டு,
சக்கரம் தாங்கிய திருமாலின் பாதங்களில்
தலை வைத்து வணங்கிவிட்டு
வேதங்களைக் கற்றறிந்தவர்களுக்கு
வரம்பின்றி மணியும் பொன்னும்,
பசுக்கூட்டங்களையும் நிலங்களையும்
மகிழ்வுடன் தானம் தந்த பின்,
முத்துக்களும் வைரங்களும்
ஆபரணமாய் அணிந்த தசரதன்
மங்கள நாளில் மிதிலை நோக்கிப் பயணப்பட்டான்.
எதிர்கொள் படலம்
1029. அடா நெறி அறைதல்செல்லா
அரு மறை அறைந்த நீதி
விடா நெறிப் புலமைச் செங்கோல்
வெண்குடை வேந்தர் வேந்தன்
படா முக மலையில் தோன்றிப்
பருவம் ஒத்து அருவி பல்கும்
கடா நிறை ஆறு பாயும்
கடலொடும் கங்கை சேர்ந்தான்.
தவறான வழி என்று
வேதங்கள் உரைத்த வழியில் செல்லாது
சரியானது என்று சொன்னவற்றை விலக்காது
வெண்கொற்றக் குடையின் கீழ் ஆட்சி செய்யும்
மன்னர் மன்னன் கடல் போன்ற தன் சேனைகளுடன்
கங்கை வந்து சேர்ந்தான்.
1032. 'வந்தனன் அரசன்' என்ன
மனத்து எழும் உவகை பொங்க
கந்து அடு களிறும் தேரும்
கலின மாக் கடலும் சூழ
சந்திரன் இரவி தன்னைச்
சார்வது ஒரு தன்மை தோன்ற
இந்திர திருவன் தன்னை
எதிர் கொள்வான் எழுந்து வந்தான்.
'தசரதன் வந்துவிட்டான்' என்று செய்து கேட்டான் ஜனகன்.
மனதுள் ஆசை இன்பம் பொங்கக் கண்டான்.
தடைகள் யாவையும் உடைக்க வல்ல யானைகளும்
தேரும் குதிரைகளும் கடல் போல் சூழக் கிளம்பினான்.
சந்திரக்குலத்தவன் சூரியக்குலத்தவனைக் காணக் கிளம்பினான்.
இந்திர லோகத்து செல்வங்களை ஒத்துடைய
தசரதனை வரவேற்க கிளம்பினான்.
( தொடரும் )
No comments:
Post a Comment