Sunday, January 5, 2020

கம்பராமாயணம் 1


பாயிரம்

1.
     உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
     நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
     அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
     தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

படைப்பான்
படைத்ததைக் காப்பான்
காத்ததை அழிப்பான், இதையே  விளையாட்டாய் தொடர்ந்து செய்யும்  எங்கள் தலைவன் அடி பணிகிறோம் நாங்கள்.

4.
     ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
     பூசை, முற்றவும் நக்குபு புக்கென
     ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று, இக்
     காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!

பாற்கடல் முழுதையும்
பருகப் புகுந்த பூனை போல்,
ஆசையாலே இராமன் கதை உரைக்க விரும்பினேன்.

8.
     முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
     உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:
     'பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
     பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?'

எல்லாமறிந்த மக்கள் நிறைந்த இச் சபையில், ஒன்று சொல்கிறேன். பைத்தியத்தின் பேச்சும், அறிவில்லாதார் அறிக்கையும்,
பக்தர்களின் பரவசப் பேச்சும் ஆராய்தல் முறையன்று.

11.
     நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
     இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
     தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
     சடையன் வெண்ணெய்நல்லூர் வயின் தந்ததே.

இராமாவதாரம் என்ற பெயரில் பாடப்பட்ட இக் காப்பியம் தோன்றிய களம் சடையப்பரின் திரு வெண்ணைநல்லூர் ஆகும்.

( தொடரும் )

No comments:

Post a Comment