Wednesday, January 8, 2020

கம்பராமாயணம் 4


77. காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
      போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
      நீரோடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
      ஊரோடு நிகர்வன, இமையவர் உலகம்.

கோசல நாட்டில் -
பூஞ்சோலைகள் மேகங்களுக்கு ஒப்பாகும்
நெற்போர் கழனிகள் மலைகளுக்கு ஒப்பாகும்
அணை சூழ்ந்த நீர்நிலைகள் கடலுக்கு ஒப்பாகும்
செல்வ வளம் நிறைந்த ஊர்கள் தேவலோகத்துக்கு ஒப்பாகும்.


84.  வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
       திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
       உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
       வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்;

கோசல நாட்டில் - 
வறுமையே இல்லாததால், தானம் தர, பெற வழியில்லை 
போர் புரிய எதிரிகள் இல்லாததால், உடலுறுதியை நிரூபிக்க வாய்ப்பில்லை;
யாரும் பொய் உரைப்பதில்லை என்பதால் உண்மை என்று தனியே ஏதும் இல்லை;
அறியாமை இல்லவே இல்லை, கேள்வி எழுப்பி எல்லாரும் அறிவை பெருக்கிக்கொள்வதால்;


87.  கூறு பாடலும், குழலின் பாடலும்,
       வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
       'ஆறும் ஆறும் வந்து எதிர்த்த ஆம்' என,
       சாறும் வேள்வியும் தலைமயங்குமே.

இரு வேறு திசையிலிருந்து வரும் ஆறுகள் 
ஒன்றோடொன்று  கலந்திடுவது போல்,
இசை வல்லுனரின் பாடலும்,
புல்லாங்குழலின் பாடலும்,
வேறு வேறு விழாவில் ஒலிக்க 
மக்கள் கூட்டம் ஒன்றுகூடி மகிழ்ந்தனவே.

( தொடரும் )

No comments:

Post a Comment