Thursday, January 9, 2020

கம்பராமாயணம் 5



நகரப் படலம் 

93.   செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின்
             சீரிய கூரிய தீம் சொல்
        வவ்விய கவிஞர் அனைவரும், வடநூல்
             முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
        எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து
             ஏறுவான் ஆதரிக்கின்ற
        அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி
             புரிகின்றது - அயோத்தி மா நகரம்.


அழகான இனிமையான
சிறந்த நுட்பமான
சொற்களைளைக் கொண்டு
பல கவிஞர்களும், வால்மீகியும்
பாடிப் புகழ்ந்துரைத்த நகரம்,
வேறு பல உலகத்தில்,
வேறு ஊரில், நாட்டில் வசிப்போர்
தவம் செய்து, வாழ விரும்பும் நகரம்,
விண்ணுலகத்தாரும்
மண்ணில் இறங்கி வந்து வசிக்க ஏற்ற நகரம்,
எனக்கும் மிகவும் பிரியமான நகரம்
-  இந்த அயோத்தி மாநகரம்.

97.  'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்'
            என்னும் ஈது அரு மறைப் பொருளே;
       மண்ணிடை யாவர் இராகவன் அன்றி
             மா தவம் அறத்தோடும் வளர்த்தார்?
       எண் அருங் குணத்தின் அவன், இனிது இருந்து, இல்
             ஏழ் உலகு ஆள் இடம் என்றால்,
       ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம்
            உறைவு இடம் உண்டு என உரைத்தல்?

புண்ணியம் செய்தார் சொர்கம் அடைவார்
இது வேதம் உரைக்கும் கருத்தாம்.
இராமபிரான் அன்றி வேறார்
அறத்துடன் புண்ணியம் செய்தார் ?
இவ்வாறு எல்லா நற்குணங்களும் கொண்ட
இந்த இராமபிரான் இருந்து
ஏழுலகத்தையும் ஆள ஏற்ற இடம் அயோத்தி என்றால்,
இதனின் நல்ல இடம்
இன்னொன்று உண்டென்று உரைக்க முடியுமா என்ன?

131.   பொன் திணி மண்டபம் அல்ல; பூத்தொடர் 
          மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
          குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
          முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.

நகரம் எங்கும் 
பொன்னால் கட்டிய மண்டபம், 
அப்படியல்லாதவை 
மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையாம் 
பலர் கூடி  வாழும் பொது மன்றங்கள் 
அப்படியல்லாதவை 
மேல் மாடியோடு அமையப்பெற்ற மாளிகைகள் 
இரத்தினங்கள் கொண்டமைக்கப்பட்ட முற்றங்கள் 
அப்படியல்லாதவை 
முத்துப்பந்தல்கள்.

( தொடரும் )


No comments:

Post a Comment