மிதிலைக் காட்சிப் படலம்
481. நிரம்பிய மாடத்து உம்பர்
திரை மணிக் கொடிகள் எல்லாம்
'தரம் பிறர் இன்மை உன்னி,
தருமமே தூது செல்ல
வரம்பு இல் பேர் அழகினாளை
மணம் செய்வான் வருகின்றான்' என்று
அரம்பையர் விசும்பின் ஆடும்
ஆடலின், ஆடக் கண்டார்.
அந் நகரில் பெரிய பெரிய மாடங்கள் நிறைந்த,
வீடுகளின் மேல் கட்டப்பட்ட கொடிகள் யாவும்,
'(சீதையை மணக்க) வேறாருக்கும் தகுதி இல்லாததால்
அறக்கடவுளே தூது சென்று தெரிவிக்க,
பேரழகியான சீதையை மணந்து கொள்ள
இராமன் வருகின்றான்' என்று
தெய்வ மங்கையர் வானத்தில் ஆடுவது போல்
கொடிகள் ஆடுவதை மூவரும் கண்டனர்.
487. நெய் திரள் நரம்பின் தந்த
மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகர வீணை
தண்ணுமை தழுவித் தூங்க
கை வழி நயனம் செல்ல
கண் வழி மனமும் செல்ல
ஐய நுண் இடையார் ஆடும்
ஆடக அரங்கு கண்டார்.
தேன் போன்ற யாழிசை நரம்பு மீட்டும் இனிமையும்
மழலைச் சொற்கள் கொண்டு பாடப்பெறும்
வாய்ப்பாட்டு இசையும்
விரல் மீட்ட எழும் வீணை இசையும்
மத்தளத்தின் ஓசையும்
ஒன்றோடொன்று ஒத்து ஒலிக்க
கைகள் செல்லும் வழியே தன்
கண்களின் குறிப்புப் பார்வை செல்லவும்
அக் கண்களின் வழியே
மனதின் குறிப்பு செல்லவும்
இருக்கா இல்லையா என்று காண்போர் சந்தேகிக்கும்படி
மெல்லிடை மகளீர் நடனமாடும் அரங்கம் பார்த்தனர்.
510. பொன் சேர் மென் கால் கிண்கிணி
ஆரம், புனை ஆரம்,
கொன் சேர் அல்குல் மேகலை
தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில்
காண, சத கோடி
மின் சேவிக்க மின் அரசு
என்னும்படி நின்றாள்.
பொன்னாலாகிய கால் சலங்கைகளையும்
இரத்தின மாலைகளையும்
பூ மாலைகளையும்
இடையில் அணியும் மேகலை யையும்
அணியும் தோழியர் பலர்
அவள் அழகைப் பார்த்து ரசித்து நிற்க,
நூறுகோடி மின்னல்கள் சுற்றி நின்று வணங்கிப் பணி புரிய,
அவற்றிற்கிடையில் மின்னல்களின் அரசி யாய் '
சீதை நின்றிருந்தாள்.
514. எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.
இதுதான் அழகின் எல்லை என்று எண்ணக் கூட முடியாத
அழகு நிறைந்த சீதை, மாடத்தில் நின்றிருந்தபொழுது
இருவர் கண்களும் பற்றிக்கொண்டன,
ஒன்றையொன்று சுவைத்து உண்டன,
உணர்வுகள் ஒன்றுபட்டன,
இராமன் சீதையைக் காண, சீதையும் இராமனைக் கண்டாள்.
517. மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்,
கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ?
இடை இல்லாத நங்கை சீதையும்
குற்றம் இல்லாத இராமனும்
(பார்த்த அந்த ஒரு பார்வையிலேயே)
இரண்டு உடல், ஒரு உயிராய் மாறினர்.
பார் கடலில் பாம்புப் படுக்கையில்
கலந்து, பின் பிரிந்து,
மீண்டும் ஓரிடத்தில் சேர்ந்தால் பேசத் தேவையா ?
( தொடரும் )
No comments:
Post a Comment