317. மடங்கள்போல் மொய்ம்பினான்
முன்னர், 'மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு
அமைத்து, தேவரோடு
இடம் கொள் நான்முகனையும்
படைப்பென் ஈண்டு' எனாத்
தொடங்கிய துனி உறு
முனிவன் தோன்றினான்.
சிங்கம் போன்று அமர்ந்திருந்த மன்னன் முன்,
உயிர்கள் எல்லாம் வாழ ஓர் உலகையும்,
தேவர்களோடும் இன்னொரு பிரம்மனையும்
படைக்கத் துணிந்த முனிவன் (விஸ்வாமித்திரன்)
அங்கு வந்து நின்றான்.
324. தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு
இடையூறா, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என
நிருதர் இடை விலக்கா வண்ணம்,
'செருமுகத்துக் காத்தி' என, 'நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி' என உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.
மரங்கள் நிறைந்த வனம்,
வனத்தினிடையில் செய்கிறோம் வேள்வி, தவம்,
அவ்வாறு தவம் செய்வோர் அஞ்சா வண்ணம்,
எங்கள் பணிக்கு இடையூறு நேரா வண்ணம்,
காமம் வெகுளி தடை ஏதும் வராது,
அரக்கர் கூட்டம் எங்களை அணுக முடியாது,
எதிர்த்து நின்று போர் புரிந்திட வேணும்,
அதற்கு உன் பிள்ளையருள் கரிய நிறத்தினன் வேணும்,
அவனை நீர் எமக்கு தந்திட வேணும்,
உயிர் வேணும் எனக் கேட்காது கேட்டான் முனிவன்
மன்னன் மனம் வருந்தினான்.
326. தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான்
ஒருவண்ணம் துயர் நீங்கி,
'படையூற்றம் இலன், சிறியன் இவன்; பெரியோய்!
பணி இதுவெள் பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும்
நான்முகனும் புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பேன்;
பெரு வேள்விக்கு எழுக!' என்றான்.
தேன் சொட்டும் புது மலர் மாலை அணிந்த மன்னவன்
தன் மனதை தேற்றிக்கொண்டு, துயரம் நீங்கி
'படை நடத்துவதில் பயிற்சி அற்ற சிறுவன் இராமன்,
எல்லா வல்லமையும் நிறைந்த பெரியவர் நீங்கள்,
தாங்கள் இடும் கட்டளை இதுவெனில்
சடையில் கங்கை பெருகும் சிவனும்,
பிரம்மனும், இந்திரனும்
அவ்வரக்கர்கட்கு துணையாய் நின்று
தீங்கு செய்ய வந்தால்
அவர்கட்கு தடையாய் நின்று நான் காக்கிறேன்;
பெரு வேள்வி தொடங்கட்டும், எழுக' என்றான்.
328. கறுத்த மா முனி கருத்தை உன்னி, 'நீ
பொறுத்தி' என்று அவற் புகன்று, 'நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?' எனா வசிட்டன் கூறினான்.
சீற்றம் கொண்ட விஸ்வாமித்திரன்
எண்ணத்தை உணர்ந்து
'நீ பொறுத்தருள்' என்றுரைத்து
'உன் மகனுக்கு அடைவதற்கரிய நன்மைகள்
வந்து கூடும் நாளை வேண்டாமென நீ மறுத்துக் கூறுவாயோ
என்று வசிட்டன் மன்னனுக்கு உரைத்தான்.
331. வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, 'நல்
தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு;
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!' என்றான்.
தம்பியோடு, அழைத்தவுடன் வந்த ராமனை,
வேதங்கள் அனைத்தும் அறிந்த முனிவருக்குக் காட்டி,
'இனி இவர்கட்கு தாய் தந்தை நீங்கள் தான்,
எந்தையே, இவர்களைத் தங்களிடம் தந்தேன்;
இயன்ற காரியத்தை நிறைவேற்றுக' - என்றான்.
( தொடரும் )
No comments:
Post a Comment