Sunday, January 12, 2020

கம்பராமாயணம் 7



207. அருள் தரும் கமலக்கண்ணன்
           அருள்முறை, அலர் உளோனும்
        இருள் தரும் மிடற்றினோனும்,
            அமரரும் இனையர் ஆகி
        மருள் தரும் வனத்தில், மண்ணில்,
             வானரர் ஆகி வந்தார்;
         பொருள்தரும் இருவர் தம்தம்
             உறைவிடம் சென்றுபுக்கார்.

கருணையே வடிவான
தாமரைக் கண்ணன் திட்டப்படி,
பிரம்மனும், சிவனும், மற்ற தேவர்களும்
சொன்ன முறைப்படி,
இருண்ட வனங்களிலும், நிலத்திலும்
வானரர்களாய் வடிவெடுத்தார்கள்,
பிரம்மனும் சிவனும் தங்கள் தங்கள்
உறைவிடம் போய்ச்சேர்ந்தார்கள்.

208.   ஈது, முன் நிகழ்ந்த வண்ணம், என, முனி இதயத்து எண்ணி,
          'மாதிரம் பொருத திண் தோள் மன்ன ! நீ வருத்தல்; ஏழ் - ஏழ் 
          பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி 
          தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும் என்றான்.

இவ்வாறு முன்னம் மால் சொன்னதை 
இதயத்துள் எண்ணிப்பார்த்தபடியே, வசிட்ட முனி,
'வலிய தோள்களை உடைய வேந்தே, 
நீ வருந்த வேண்டா;
ஈரேழு உலகையும் காக்கும் 
புத்திரரைத் தரவல்ல வேள்வியைச் செய்,
குறையேதுமின்றி செய்,
உன் மனத்துயர் விலகும், இது மெய்' என்றான்.

254.  அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்  
         முடியுடை வேந்தன், அம் முனிவனோடும், ஓர் 
         கடிகையின் அடைந்தனன் - கமல வான் முக 
         வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே,

முரசு ஒலிக்க, தாமரை 
முகத்தையொத்த பெண்கள் வாழ்த்து பாட,
மணிமுடி தரித்த மன்னன் தசரதன்,
கலைக்கோட்டு முனிவனோடு 
ஒரு நாழிகையில் 
மாநகர் அயோத்தி வந்தடைந்தான்.


261. என்றலும், 'அரச! நீ இரங்கல்; இவ் உலகு 
        ஒன்றுமோ? உலகம் ஈர்-ஏழும் ஓம்பிடும்
        வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
        இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு!' என்றான்.

தசரதன் தன் கோரிக்கையைச் சொன்னதும்,
'அரசன் வருந்தாதே, 
இவ்வுலகு மட்டுமின்றி ஈரேழு உலகையும் 
பாதுகாத்து ஆளும்  
வல்லமை பொருந்திய மைந்தர்களை 
கொடுத்தருளக்கூடிய வேள்வி ஒன்றை 
இன்றே செய், எழு' என்றுரைத்தான்.

267.   மா முனி அருள் வழி, மன்னர் மன்னவன் 
          தூம மென் கரி குழல் தொண்டைத் தூய வாய்க் 
          காமரு கோசலை கரத்தில், ஓர் பகிர்,
          தாமன் உற அளித்தனன், சங்கம் ஆர்த்து எழ.

மாமுனி கலைக்கோட்டு முனிவன் சொன்னபடி,
(வேள்வியின் பிரசாத அமுதத்தை)
அரசனுக்கரசன் தசரதன் 
சுருண்ட கூந்தல், சிவந்த வாய் உடைய 
அழகிய கோசலையின் கைகளில், 
சங்குகள் முழங்க, 
ஒரு பாகத்தை தந்தருளினான்.

 
( தொடரும் )


No comments:

Post a Comment