Monday, January 20, 2020

கம்பராமாயணம் 14


521. நோம்; உறும் நோய் நிலை நுவலகிற்றிலள்;
        ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள்;
        காமனும் ஒரு சரம் கருத்தின் எய்தனள்
        வேம் ஏரி அதனிடை விறகு இட்டென்னவே.

(கண் பார்வையிலிருந்து ராமன் அகன்றதும்)
சீதை வருந்தினாள்;
தன் உள்ளத்து நிலையை யாரிடமும் சொல்லமுடியாது தவித்தாள்;
ஊமைகள் போல் மனதிற்குள்ளேயே தேம்புவாள்;
எரிகிற நெருப்பில் விறகு இட்டது போல்
அவ்வமயம் மன்மதன் அம்பு எய்தான்.


529. சொரிந்தன நறு மலர் சுறுக் கொண்டு ஏறின 
         பொரிந்தன கலவைகள், பொரியின் சிந்தின 
         எரிந்த வெங் கனல் சுட, இழையில் கோத்த நூல்,
         பரிந்தன, கரிந்தன பல்லவங்களே.


படுக்கையில் பரப்பப்பட்ட வாசமிக்க பூக்கள் 
அவள் உடம்பைத் தைத்தன;
உடல்மேல் பூசப்பட்ட சந்தனங்கள் 
தீயிலிட்டது போல் பொரிந்தது, உதிர்ந்தது;
காமத் தீ எரிய, அணிகலன்களைக் கோர்த்த நூல், 
அறுந்து விழுந்தது.
தளிர்கள் கரிந்து போயின.


547. 'வெளி நின்றவரோ போய் மறைந்தார்;
              விலக்க ஒருவர்தமைக் காணேன்;
         'எளியள், பெண்' என்று இரங்காதே 
               எல்லியாமத்து இருளூடே,
         ஒளி அம்பு எய்யும் மன்மதனார்,
              உனக்குஇம் மாயம் உரைத்தாரோ ?
         அளியென் செய்த தீவினையோ !
              அன்றில் ஆகி வந்தாயோ?

(ஓ, பறவையே)
பார்த்துக்கொண்டிருக்கும்போதே மறைந்துவிட்டார்
அவ்வாறு விலகிப் போவதை வழி மறிக்க யாருமில்லை;
'இவள் எளியவள், பெண்' என்ற இரக்கம் இல்லாது,
இருட்டில் ஒளிந்திருந்து அம்பு எய்தும் மன்மதன் 
உனக்கும் இந்த வஞ்சகச் செயலை சொல்லித்தந்தானோ ?
இல்லை, முற்பிறப்பில் நான் செய்த பாவமோ ?
அன்றில் பறவை யாய் மாறி எனை வருத்த வந்தாயோ?


562. ஏகி, மன்னனைக் கண்டு எதிர் கொண்டு அவன் 
         ஒகையோடும் இனிது கொண்டு உய்த்திட 
         போக பூமியில் பொன்னகர் அன்னது ஓர் 
         மாசு மாடத்து, அனைவரும் வைகினார்.

(முனிவன் உட்பட மூவரும்)
அரண்மனைக்குள் நுழைய 
ஜனக மன்னன் எதிர்கொண்டு அழைத்து 
வரவேற்று உபசரித்து 
அந்த இன்ப பூமியில் 
சிறந்த ஓர் வானளாவிய மாளிகையில் 
தங்கவைத்தான்.


( தொடரும் )

No comments:

Post a Comment