Thursday, December 5, 2019

பொன்மாலைப் பொழுதில் 66

507. சிவன் வீற்றிருப்பது கைலாய மலையிலே
பெருமாள் பாற்கடலிலே, பாம்புப் படுக்கையிலே
அடுத்த நாற்பது வருடம் அத்தி வரதரோ நீரின் அடியிலே
பிள்ளையார் ஆல, அரச மரத்தின் நிழலிலே
நபிகள் நாயகம் அரேபியாவிலே
இயேசு பிறந்தது ஜெருசலத்திலே
ம்ம்ம் ... அதெல்லாம் விடுலே
போன செமஸ்டர் வரை கூட என் கவனம் படிப்பிலே
இப்போல்லாம் எதைப் பார்த்தாலும் கவிதை வருதே தப்பில்லைல,
படுபாவிப்பய என்று  எனைப் பார்த்துச் சிரித்தானோ,
அன்று முதலே என் *நெஞ்சினிலே நெஞ்சினிலே ... ஊஞ்சலே*


506. அதெல்லாம் ஒரு காலம் ...
தாமதமானால் அபராதம் தருவதும்,
ஆளில்லா நேரத்தில் கடனடைத்து கணக்கு நேர் செய்து கொள்வதும்
வட்டி கேட்டு வாதிடுவதும் ... ம்ம்ம்
*
அதெல்லாம் ஒரு காலம் ...
விரல்படாது வாயிலிருந்து வாய்க்கு பண்டமாற்று பரிவர்த்தனையும்,
நிராகரிக்கப்பட்டது திரும்பப் பெற்று நிலுவையில் வைக்கப்படுவதும் ...
*
அதெல்லாம் ஒரு காலம் ...
பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து, முகர்ந்து ரசித்து, சிரித்து,
படிப்பதாகக் கூறிவிட்டு அதை மட்டும் செய்யாது ஊர்க்கதை எல்லாம் ரகசியமாய்ப் பேசி ... ம்ம்ம்
*
இப்போது இணைந்தில்லாவிட்டால் என்ன? எப்படியிருக்கிறாய் என்று கூடவா கேட்கக்கூடாது, உன் தோழன் கேட்கிறேன் சொல்லிடு
எப்படியிருக்கிறாய் ...  *இணையே, என் உயிர்த் துணையே ...*


505. ஔவையார் கேட்டதோ பிறவாமை வேண்டும்
இல்லையேல் சிவமே உமை மறவாமை வேண்டும்.
கும்பகர்ணன் இராமனிடம் கேட்டுக் கொண்டது
தன் தலை கொய்து கடலில் வீசப்பட வேண்டும்.
தூதில் கண்ணன் துரியோதனிடம் கேட்டது
பாண்டவர்க்குப் பாதி அரசுரிமை வேண்டும்.
பெரியாழ்வார் பெருமாளை வாழ்த்திப் பாடியது
பல்லாண்டு பல்லாண்டு நீர் வாழ வேண்டும்.
ஆண்டாள் ப்ரார்த்தித்ததோ மழை பொழிய, மாடு கன்று நிறைய, வயல் விழைய வேண்டும்.
பாரதியார் பராசக்தியிடம் கேட்டது
தென்னை தென்றல் கேணியோடு காணி நிலம் வேண்டும்.
எல்லாரும் தமக்கு வேண்டியதை கேட்க ... ம்ம்ம், நானும் ... எனக்கு ...
*ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்*


504. காலை கண் விழிக்கும் போதே இன்று நல்ல நாள் என்று உணர்ந்தேன்.
பறவைகள் இரண்டு  கொஞ்சி விளையாடுவதை சாளரத்தின் வழியே கண்டேன்.
காய்ந்து போனச் செடியில் ஒரு ரோஜா மொட்டு விட்டிருப்பதை ரசித்தேன்.
மெல்லிய சாரல் மழையில் காடு வீடு எல்லாம் நனைய மனம் மகிழ்ந்தேன்.
அருகிலெங்கோ கோவில் மணி ஒலிக்க நல்ல சகுனம் என்பதை உணர்ந்தேன்.
கொஞ்ச தூரத்தில், மழலையரோடு மழலையாகிக் கொஞ்சிப் பேசும்  பெண்ணே உன்னை ...
நிஜத்தைச் சொல்லவா, *நிலத்தில் நடக்கும் நிலவைக் கண்டேன்*.


503. இப்பொழுதெல்லாம் ...
கண்ணாடி முன்னாடி நொம்ப நேரம் நிற்கிறேனாம்.
அழகாயிருக்கேனா என்று ஆயிரத் தெட்டு முறை கேட்கிறேனாம்.
பொறாமையில் என் அறைத்தோழி தினம் தினம் புலம்புகிறாள்.
கல்லூரியில் நுழைந்ததும் என் கண்கள் உனைத் தேடுவதை மறைக்க முடியாது தவிக்கிறேன்,
உனைப் பார்த்தவுடனேயே என்னுள் தோன்றும் அச்சம் மடம் நாணத்தை ரசிக்கிறேன்.
நீ அருகில் வந்து பேசமாட்டாயா என்று ஏங்குகிறேன், இறைவனை வேண்டுகிறேன்.
நீ சம்மந்தப்படாத எதையும் செய்ய என் மனம் விரும்புவதில்லை.
உன்னோடு சேர்த்து ஊர் சுற்ற நான் தயங்குவதில்லை.
ம்ம்ம், இப்போதெனக்குப் புரிகிறது
இந்தக் காதல் என்பது
*இதுதான் இதுதான் இதுதான்*


502. புத்தகம் படிக்கும் தோரணையில் ஒருநாள்  அமர்ந்திருந்தேன்.
பூவை அவள் புன்சிரிப்போடு எனை நோக்கி வந்தாள்.
கண் சிமிட்டி வரவேற்க, காற்றில் முத்தமிட்டபடி அருகிலமர்ந்தாள்.
என்ன புத்தகமெனக் கேட்டவளுக்கு அட்டையைக்^  காட்டினேன்.
'ஓ, வாலி எழுதியதா, சரி அவதாரம் ன்னா என்ன?' வினவினாள்.
'கடவுள், ஒரு பெரிய சக்தி, எல்லாம் அறிந்தவர்' விடையுரைத்தேன்.
'பொய், கப்சா, ரீலு' என்றவள் இடை கிள்ளினேன்.
விரல்கள் வழி மறிக்கப்படும் என எதிர்பார்த்து ஏமாந்தேன்.
'டேய் சின்ன வயசுல உங்கம்மா உன்னை அவதாரம்னு தானே திட்டுவாங்க' என்றவள் நக்கலடிக்க
நான் முறைக்க, அவள் ஓட,
நான் துரத்த, அவள் நழுவ
நான் விரட்டி மடக்க, அவள் எனைக் கட்டியணைத்து மித்தமிட ...
ம்ம்ம் ... இதெல்லாம் நடந்ததே
இன்று இந் நாளிலே
என் கனவிலே
*புலராத காலைதனிலே ...*


501. சேதி வந்ததும் கிளம்பிவிட்டேன், எனக்காக நீ காத்திருப்பதால்.
குங்குமச் சிவப்பு நிறப் புடவை, உனக்குப் பிடிக்குமதனால்.
கொலுசு தேடி எடுத்து அணிந்து கொண்டேன், நீ தந்ததென்பதால்.
மல்லிகை சந்தனத்தோடு எனைக் கண்டதும் நீ கவிதை சொல்லலாம். 
மருந்தால் சரியாகா விஷயங்கள் மறந்தால் சரியாகும் தானே.
அந்த சண்டையெல்லாம் மறந்து விட்டேன், நீயும் மன்னித்துவிடு.
பாவை என்னோடு பழையபடி பழகு. பேசிச் சிரித்துச் சிநேகி.
கூடலில் முடியுமெனில் ஊடல் கொள்.
இனி உயிருள்ள வரை ... நான்
*உனக்காக வாழ நினைக்கிறேன்*

No comments:

Post a Comment