Monday, February 12, 2018

மேகா 6



recap: மும்பையில் வசிக்கும் சுந்தர் சென்னையிலிருந்த வந்த மேகாவை விமான நிலையத்தில் பார்த்து, தன்னோடு தங்கிக்கொள்ள அடைக்கலம் தந்தான். அவளின் ஒவ்வொரு செயலிலும் ஈர்க்கப்பட்டும், காதல் கல்யாணம் என்று வாழ்க்கையின் ஓட்டத்தில் சேர்ந்துக் கொள்ளத் தயங்கினான். மேகா மும்பையிலிருந்து திரும்பிச் சென்று ஒருமாதத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மும்பை வந்து சுந்தரோடு தங்கினாள். காதலை வெளியில் சொல்லமுடியாது தவிக்கும் சுந்தர், காதலைச் சொல்லுவான் என்று எதிர்பார்த்தாளோ மேகா ?  மும்பையில் வேலை முடித்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்பிச் செல்ல, குழப்பத்துடன் இருந்த சுந்தர் யோகியைச் சந்தித்து, வாழ்க்கை பற்றிக்கொஞ்சம் பேசி உணர்ந்துக் கொண்டான்.

x-x-x-x-x

யோகியின் கால்தொட்டு வணங்கி வீட்டிற்குள் நுழைந்தேன், வாழ்வென்றால் போராடும் போர்க்களமே என்று ப்ளேயர் பாடத்தொடங்கியது, மோதிப்பார்த்துவிடுவோம் என்று ஒரு வீரம் பிறக்க, ஒரு கவிதை எழுதி என் காதலை, காத்திருப்பதை கொஞ்சம் கோடிட்டுக் காட்டினால் என்ன என்றுத் தோன்றியது. வஞ்சியின் கொஞ்சு வதனத்தைக் கொஞ்சம் நினைத்தால் கொட்டுமே கோடிக் கவிதை என்ற நம்பிக்கையுடன் எழுத ஆரம்பித்தேன்.

இடை அளக்க வருவேனென்று
இமை மூடாது காத்திருக்காயோ !
விரலிணைத்து விளையாட வருவேனென்று
விழி மூடாது காத்திருக்காயோ !
காதல் கவிதைகள் சொல்லியுனை
பரவசப்படுத்துவேனென்று
கனவுகளோடு பலவோடு காத்திருக்காயோ !
கண்களால் அழைத்து, காதினுள் முத்தமிட்டு
கேட்டுத் தொட்டு, கேட்காது முட்டி ..... ம்ம்ம்
இன்னும் என்னெல்லாம் செய்வேனென்று எண்ணிக் காத்திருக்காயோ !
நானுந்தானடி காத்திருக்கேன்
நாளை வரும் நாளை எண்ணிக் காத்திருக்கேனடி
காத்திருந்து காத்திருந்துக் காலங்கள் போகுதடி

வாட்ஸாப்பில் அனுப்பிவிட்டேன். பதிலுக்காகக் காத்திருந்தேன். நெடிகள் யுகமாய்த் தோன்றும், வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை உருளும் என்றெல்லாம் படித்ததை அனுபவிக்க ஆரம்பித்தேன், சுகமாகத்தான் இருந்தது. போன் வேலைசெய்கிறதா என்று நொடிக்கொருமுறை சோதித்துப் பார்த்துக்கொண்டே, மொபைலின் டிங்க் ஒலிக்காகக் காத்திருந்தேன். கொஞ்சநேரத்திலெல்லாம் .... மனது திக் திக் என்று அடித்துக்கொண்டது. வந்த செய்தி மேகாவிடமிருந்தா ? படிப்போமா, காலம் தாழ்த்துவோமா ? என்ன எழுதியிருப்பாள் ? சம்மதமென்றா ? நான் அப்படியெல்லாம் உன்னை ... இருக்காது, இந்த பதில் இருக்காது, இருக்கக்கூடாது, இன்னும் என்னென்னவோ எண்ணங்கள் என்னுள்; யோகி சொல்லிய விசயங்களையெல்லாம் ஒருமுறை மனதுள் நினைத்துக்கொண்டு, மொபைலைத் திறந்தேன். மேகாவிடமிருந்துதான் பதில் வந்திருந்தது ... கவிதையில் ... கவிதையாக …ஒரு கவிதையே கவிதை எழுதியிருக்கிறதே ... அடடே ... என்றெண்ணிக்கொண்டே எழுதியதைப் படித்தேன்.

கண்ணா, இப்போது சொல்கிறாய்
காத்திருப்பதாய்க் கதறுகிறாய் 
கன்னியுன் அருகிலிருக்கும்போது
கல்மனதைத் திறக்க மறுத்தாய்
காளையின் மனசஞ்சலத்திற்குக் காரணம் தெரியாது,
காலத்தின் கையிலென்
காதலை ஒப்படைத்துவிட்டுக்
கனியும் வரை காத்திருப்பேன்
காதலா - உன் மேகா.

படித்தவுடன் கண்களில் ஈரம். மேகாவும் என்னைக் காதலிக்கிறாள் என்ற சந்தோசம், மனதினுள் விம்மத் தொடங்கினேன். இந்தக் கண்ணீர் என் நெஞ்சிலிருந்து பயத்தைக் கரைத்துவிடும் என்று தோன்றியது. எல்லாம் நடக்கவேண்டிய நேரத்தில் தானே நடந்தேறியது. மேகா போன்றொரு நல்லப்பெண் கிடைக்கும்வரை என்னுள் அந்த பயம் ஒளிந்திருந்ததோ என்று தோன்றல் எனக்கு, இல்லையென்றால் இந்த மும்பையில் நான் கெட்டுப்போயிருக்க பல வாய்ப்புகள் உண்டு. என் பயமே என்னை இத்தனை காலம் பாதுகாத்துவந்திருக்கிறது.

ஒருமுடிவோடு இரவோடு இரவாக சென்னை பறந்தேன். நான் சென்னை வரும் விஷயம் மேகாவிடம் சொல்லாது, திடுதிடுமென்று அவள் எதிரில் சென்று நிற்க திட்டமிட்டேன். நான் காதல் சொல்வேன் என்று எதிர்பார்த்து ஏமாந்தவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும், செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும், என்ன செய்யலாம் என்று யோசித்தப்படியே சென்னை வந்து சேர்ந்தேன்.

விமானநிலையத்திலிருந்தே நானே ஒட்டுச்செல்லும் கார் ஒன்று எடுத்துக்கொண்டு, ஹோட்டலில் அறையெடுத்து கொஞ்சநேரம் உறங்கி ... காலை ஒரு 11 மணிக்கு எங்கள் சென்னை அலுவலகம் வந்தடைந்தேன். கம்பெனியின் ஐடி கார்ட் இருந்ததால் உள்ளே நுழைவது ஒன்றும் சிரமமில்லை. நேராக இரண்டாவது தளம் வந்து, மேகாவின் இருப்பிடம் தேடினேன். நான் சென்னையில், அதே அலுவலகத்தில், அவள் இருப்பிடத்திற்கு அருகிலிருப்பதை அறியாமலேயே 'காலை வணக்கம், எப்படியிருக்கே ?' என்று எனக்கு வாட்ஸாப்பில் செய்தி அனுப்பியிருந்தாள். தமிழில் அலுவலகத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும் இடத்திலிருந்து ஒரு செல்பி எடுத்து லவ் யு என்றெழுதி பதிலனுப்பினேன். 'எங்கே இருக்கே, இந்த இடம் பார்த்தமாதிரி இருக்கே, வாவ், நானும் இன்று ப்ளூ நிறம்' பதிலனுப்பினாள்.

'ஓ அப்படியா ?' என்று சொல்லிக்கொண்டே அவள் எதிரில் வந்து நின்றேன்.

என்னை நேரில் பார்த்ததும் ஒரு சிலவிநாடி மலங்க மலங்க விழித்து, கண்ணில் நீர் நிறைய இருவரும் அந்த நிலையில்தான் இருந்தோம். கண்கள் பேச முடியாது கண்ணீர்த் துளி மறைக்க, கை விரல்கள் இறுக்கிக்கொண்டோம். மேகா என்னைக் கேண்டினுக்கு அழைத்துவந்தாள், ஒரு ஓரத்தில் அமர்ந்துக்கொண்டோம். அவள் என்னைப் பார்க்க, நான் அவளைப் பார்க்க .......

'சாரி மேகா ... காத்திருக்க வச்சிட்டேன்'

'அதான் வந்துட்டியே, அப்புறமென்ன ?' கண்ணைத் துடைத்துக்கொண்டே பதில் சொன்னாள்.

'சேம் பின்ச்' அவள் முழங்கையைக் கிள்ள, அழுத முகம் சிரித்தது.

'எப்படி கரெக்ட்டா ரெண்டு பேரும் இன்னிக்கு ப்ளூ கலர்?'

'இன்னிக்கு நீ என்ன கலர்ன்னு பார்க்க உன் வீட்டு வாசல்ல 8 மணியிலிருந்து காத்திருந்தேன்'

'அடப்பாவி' என் கையில் செல்லமாய்த் தட்டினாள்.

'ப்ளூ சுடி பார்த்ததும் கடைக்கு ஓடிப்போய் ப்ளூ சட்டை வாங்கிக்கிட்டு ஆபிசுக்கு வந்து ...'

'ரொமாண்டிக் ... எனக்காகவா ?'

'யெஸ்' அவள் கன்னத்தைத் தடவி தலை முடி கோதிவிட்டேன்.

'கல்யாணம் பண்ணிப்போமா ?' என் உள்ளங்கையில் முத்தமிட்டப்படியே கேட்டாள்.

'இங்கேயே தாலி கிடைக்குமா ? அதெல்லாமா உங்க கான்டின்ல விக்கறாங்க ?'

'சீ போய் அப்பாம்மா வை பார்த்து சம்மதம் வாங்குவோம் முதல்ல'

'நான் பார்த்து பேசிட்டேன்'

'அப்பாம்மாவை ? வீட்டுக்குப் போயிருந்தியா ?'

'யெஸ் ... சொன்னேன்ல'

'எப்போ சொன்னே ?'

'காலைல ... 8 மணிக்கு ... வீட்டு வாசல்ல காத்திருந்தே ... இப்போ சொன்னேனே'

'டிரஸ் கலர் பார்க்க காத்திருந்தேன்னு சொன்னே '

'காத்திருந்தேனா ...'

நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டே என் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்துக் கொண்டாள்.

'நீ கிஸ் அடிக்கிற மூடுல இருக்கேன்னு நினைக்கிறேன்'

மேலும் கீழும் தலையாட்டினாள்.

'வா எங்கேயாச்சும் வெளில போவோம்'

மேகா என் தோளில் சாய்ந்தபடியே வர ....... காருக்கு வந்து வெளியே கிளம்பினோம்.

'காத்திருந்தே ... ப்ளூ கலர் பார்த்துட்டே ... அப்புறம் என்னாச்சி ?' கேட்டுக்கொண்டே என் காதினுள் ஒரு முத்தம் தந்தாள்.

'நீ கிளம்பிப்போனதும் ... வீட்டுக்குள்ள போனேன் ... சுந்தர் மும்பாய் ன்னு சொன்னேன், அவங்களுக்கு ஏற்கனவே தெரியும் போலிருக்கு, நீ சொன்னியா ?'

'ஆமா ... ஏர்போர்ட்லேர்ந்து ஆரம்பிச்சி ... உன்னோட தங்கி ... என்னை நீ நல்லபடியா பார்த்துக்கிட்டது ... சூட்கேஸ் லாக் திறந்தது ... லஞ்ச் சாப்பிட்டது, டிரஸ் எடுத்துத்தந்தது … எல்லாம் எல்லாம்'

'நான் மேகாவை கல்யாணம் செய்துகொள்ள விரும்புறேன், உங்க சம்மதம் வேண்டும் ன்னு கேட்டேன்'

'என்ன சொன்னாங்க ?'

'உன்கிட்டே பேசிட்டு சொல்றேன்னாங்க'

ஒரு ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தோம். என் பையிலிருந்து ஒரு ப்ரஸ்லெட் எடுத்துத் தந்து, பல சினிமாக்களில் பார்த்திருப்பீர்களே, ஆண் ஒரு காலை முட்டி போட்டு மடக்கி 'வில் யு மாரி மீ ?' என்று பெண்ணைக் கேட்பானே, அந்தக் காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கண்ணில் நீர் வழிய என்னைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள், இதழில்.

சுபம்

No comments:

Post a Comment