Thursday, February 1, 2018

மேகா 1





1

ஒரு கவிதையோடு கதையை ஆரம்பிக்கக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. அப்படி இருந்தால்தான் என்ன, சட்டங்களை மாற்றுவோமே.

கனவு கலையும்
பொழுது விடியும்
பறவைகள் படபடவென்று சிறகடித்துப்
பறந்துத் திரியும்
அலுவலகம் வந்தபின்
'இன்றென்ன எழுத?' என்றெண்ணம் உதிக்கும்
எதைச்சொன்னால் நீ ரசித்துச் சிரிப்பாய்
என்று யோசிக்கத் தோன்றும்
கண்மூட, மேகம் நீர்வீழ்ச்சி மலர்ச்சோலை
இவையெல்லாம் வந்து போகும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
அவ்வமயம்
மனக்கண்ணுள் உன் முகம் தெரியும்

யாரவளோ, அந்த முகத்திற்காகக் காத்திருக்கும் நான், சுந்தர், 35 வயது ஆடவன். சிலபல காரணங்களுக்காக திருமணம் செய்துகொள்ளவில்லை. மும்பையில், சொந்த வீடு, நல்ல வேலை, சம்பளம், கார் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணம் என்னைத் தேடியபோது நான் விலகி விலகிச் சென்றேன். இப்பொழுது திருமணம் செய்து கொள்ளாததற்காக நான் ஒன்றும் வருத்தப்படவில்லை, ஏங்கவில்லை. கல்யாணம் செய்துகொண்டு கஷ்டப்படணும் என்பதொன்றும் கட்டாயமில்லையே. அப்போ கல்யாணம் செய்துகொண்டவர்களெல்லாம் கஷ்டப்படறாங்களா என்று கேட்கக்கூடாது. நான் செய்துகொள்ளவில்லை, ஓடும்வரை ஓடட்டும் என்று விட்டுவிட்டேன்; வாழ்க்கை அழைத்துச்செல்லும் வழியில் செல்கிறேன், எந்த எதிர்பார்ப்பும் இன்றி.

ஒரு சனிக்கிழமை, இரண்டு நாளாய் என் வீட்டில் தங்கியிருந்த நண்பனை விமானநிலையத்தில் இறக்கிவிட்டுக் கிளம்ப எத்தனிக்கையில் தூரத்தில் ஒரு இளம்பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளை நான் கவனிக்க இரண்டு காரணம்; ஒன்று திடீரென்று தலையில் தட்டிக் கொண்டாள், மொபைலில் எதையோ பார்த்து, வெறுத்து ' சே ' என்று சொல்லியிருக்கவேண்டும். இப்போ என்ன செய்வது என்று தெரியாது ஒரு குழப்பத்தில் அவள் இருப்பது எனக்குப் புரிந்தது. யாரிடமோ போனில் பேசத் தொடர்புகொண்டாள், அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கவேண்டும், கோபத்தில் தரையை உதைத்தாள். இரண்டாவது காரணம், அவள் நான் வேலை செய்யும் அதே கம்பெனியின் ஜெர்கின் அணிந்திருந்தாள்.

அழகாய்த்தான் இருந்தாள், சிற்றிடை, சுடிதார், சின்ன ட்ராலி; கூடவேயொரு ஹாண்ட் பேக். பூ சூடி இருந்தாள், தமிழ்ப்பெண்ணோ ? சென்னை விமானத்திற்குத் தான் என் நண்பனை இறக்கிவிடவந்தேன். சென்னையிலிருந்து வந்த  அந்த விமானத்திலிருந்து இறங்கியிருப்பாளோ ?

அவளைத் தாண்டி வண்டியை நிறுத்தி இறங்கி அவளை நோக்கி நடந்தேன். மறக்காமல் கம்பெனி பெயர் பதிந்த ஜெர்கினை அணிந்துகொண்டேன், காரிலிருந்த ஐடி கார்டை கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.

'ஹலோவ், தமிழா நீங்க ?' நெற்றியில் பொட்டு இருந்ததையும் பார்த்துத் தமிழிலேயே கேட்டேன்.
பேசத் தயங்கினாள்.
கம்பெனி ஐடி கார்டையும் ஜாக்கெட்டையும் காட்டினேன், மெல்லச் சிரித்தாள்.

'சுந்தர்' கை நீட்டினேன்.
'மேகா' மெல்ல கை குலுக்கினாள்.
'சென்னை ஆபிஸ்ல ஒர்க் பண்றீங்களா ? யாரையோ தேடுற மாதிரி இருக்கு ?'
'இங்கே ஒரு சின்ன அசைன்மெண்ட், ப்ரெண்டு ரூம்ல தங்கிக்கலாம்னு வந்துட்டே, அவ போனை எடுக்கமாட்டேங்குறா, அட்ரஸ் தெரியாது'
இன்னும் கொஞ்சம் பேசினால் அழுதுவிடுவாள் போலிருந்தது.  என் காருக்கு அழைத்துச்சென்றேன்.

'நீங்க தங்கறதுக்கு பாதுகாப்பான இடம் வேண்டும், அவ்ளோதானே ?'
'யெஸ் பட் ' பேசிக்கொண்டே மீண்டும் தோழிக்கு போன் அடித்தாள், போன் எடுக்கப்படவில்லை. நல்லவேளை என்று மனதுள் நினைத்துக்கொண்டேன்.
'உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, என்னோட நீங்க தங்கலாம்'
'இல்லே, அது வந்து' புதியவர்களுக்கே உள்ள அதே தயக்கத்துடன் பேசினாள்.
கம்பெனியின் விசிட்டிங் கார்ட் 3 எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
'இதுல போட்டோ, காண்டாக்ட் நம்பர், ஈமெயில் எல்லாம் இருக்கு, பயப்பட வேண்டாம், தைரியமா வாங்க, இன்னிக்கு ஸ்டே பண்ணுங்க, நாளை பாத்தி நாளை பார்த்துப்போம், என்ன சொல்றீங்க .... மேகா' ஸ்வீட் நேம் என்று வாய்வரை வந்த வார்த்தையை விழுங்கிக்கொண்டேன்.

மேகா என் கார்டை தன் பையில் வைத்துக்கொண்டாள். அதையே நான் சம்மதத்திற்கு அறிகுறியென எடுத்துக்கொண்டு வண்டியைக் கிளப்ப, 'எனக்கெனவே ஏற்கனவே … பிறந்தவள் இவளோ' பாடல் காரில் ஒலிக்க எனக்கது நல்ல சகுனமாகவேத் தோன்றியபோதிலும், அவசரஅவசரமாய் அடுத்தப்பாடலை மாற்றினேன். அடுத்தது என்ன கந்தசஷ்டி கவசமா ஒலிக்கும், அதுவும் காதல் பாட்டுதான், 'வேறென்ன வேறென்ன வேண்டும்' ஒலித்தது. எப்படியும் ஒரு அரைமணி நேரம் ஆகும். பேசாதே பயணம் செய்தாள். அவள் ப்ராஜக்ட் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்துக்கொண்டேன். நான் வேலை செய்யும் அதே பில்டிங் தான், வேறு தளத்தில் இயங்கும் ப்ராஜக்ட்.

வீடு வந்து சேர்ந்தோம். மேகாவிற்கு அவள் அறையைக் காண்பித்தேன். புது போர்வை தலையணை உறை எடுத்துத்தந்தேன். சாப்பிட வாங்க என்று சொல்லிவிட்டு, ஒரு ஐந்து சப்பாத்தி தயார் செய்தேன். சமையலுக்கு என்று ஒரு பெண் தினம் வந்து எனக்கு சமைத்து வைத்துப்போவாள். எனக்கும் சுமாராக சமைக்கத்தெரியும், அவள் ஏற்கனவே செய்த சப்பாத்தியோடு நானும் செய்து தயாராய் வைத்தேன். அதற்குள் மேகா முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.

'சாரி உங்களுக்கு ரொம்ப கஷ்டம் என்னாலே'

சிரித்துக்கொண்டே தட்டில் சப்பாத்தி பன்னீர் வைத்துக்கொடுத்தேன். கூடவே பால். கொஞ்சம் ஊர்க்கதை பேசினோம். அறையில் எல்லாம் வசதியாய் இருக்கா என்று விசாரித்துவிட்டு, குட் நைட் சொல்லி, மேகா கதவை பூட்டிக்கொள்ள நான் என் அறைக்குத் திரும்பினேன்.

[ மேகா ... இன்னும் வருவாள்  ]

No comments:

Post a Comment