Tuesday, August 2, 2022

தமிழமுது 8

திருக்குறள்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். (33)

 

இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

----------------------------------------------------------------------------

நாலடியார்

நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.     64

 

மேலோர், தமக்கு நிகரில்லாதவர் தம்மை எதிர்த்து நன்மையற்ற தீய சொற்களைச் சொன்னால், அதற்காக மனம் புழுங்கிச் சினம் கொள்ளார். ஆனால் கீழ்மக்களோ, பிறர் கூறும் இழி சொற்களையே மனத்தில் நினைத்து நினைத்து, பிறரிடம் சொல்லிச் சொல்லி, மேலும் மேலும் சினம் அடைந்து ஆற்றாது துள்ளிக் குதித்து தூணில் முட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வர்.

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

6. சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததி
யே.


செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!

--------------------------------------------------------------------------------

தேவாரம்

ஒட்டாத வாளவுணர் புரமூன்று மோரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை யாரூரி லம்மானை யார்வச்செற் றக்கு ரோதம்
தட்டானைச் சாராதே தவமிருக்க அவஞ்செய்து தருக்கி னேனே (4.5.9)

 

தன்னோடு நட்புறாத கொடிய அசுரர்களின் மும்மதில்களும் ஓரம்பினால் உருக்குலையுமாறு அழித்தவனாய், காமன் தன் கண்ணினாலும், காலன் தன் காலினாலும், அழியுமாறு அவர்களைத் துன்புறுத்தியவனாய், ஆரூரின் தலைவனாய், பற்று, பகைமை, கோபம், என்ற தீப்பண்புகள் தன்மாட்டு அணுகப் பெறானாய் உள்ள பெருமானை அணுகாமல், தவம், செய்தற்குரிய செயலாய் இருக்கவும், அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டு திரிந்தேனே.

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

வானாகி மண்ணாகி வளியாகி
   
ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்
   
இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக்
   
கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி
   
வாழ்த்துவனே
  (8.5.15)

 

ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்?
--------------------------------------------------------------------------------

திருமந்திரம்

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. (10.5.6)

 

உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர், சமைத்தாயின பின்பு அவ்வுணவை உண்டார்; பின் தம் இல்லக்கிழத்தியாரொடு தனிமையில் இருந்து மகிழ்ந்தார். அச்செயலுக்கிடையே, `உடம்பில் இடப் பக்கம் சிறிது நோகின்றது` என்று சொல்லி, அது நீங்குதற் பொருட்டு ஓய்வு கொள்ளுதற்குப் படுத்தார்; படுத்தவர் படுத்துவிட்டவரே யாயினார்; மீள எழுந்திருக்கவில்லை.

--------------------------------------------------------------------------------


( தொடரும் )

copy right to the respective web sites.


No comments:

Post a Comment