Tuesday, August 16, 2022

தமிழமுது 10

திருக்குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50)

 

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

----------------------------------------------------------------------------

நாலடியார்

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.      75

 

மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக.

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

8. சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே

 

என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்

--------------------------------------------------------------------------------

தேவாரம்

தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. (1.1.9)

 

திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன்
   
தீக்கதுவ
வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை
   
யார்நறவந்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந்
   
தம்முரல்வண்
டதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வார்யி
   
தடலரைசே (8.6.36)

 

மனம் நிறைந்த, தேன் ததும்புகின்ற மந்தார மலரில் தாரமாகிய வல்லிசையைப் பழகி, பின் மந்தமாகிய மெல்லிசையை ஒலிக்கின்ற, வண்டுகள் அழுந்தித் திளைக்கின்ற செழுமையாகிய தேனோடு கூடி விளங்குகின்ற சடையினையுடைய, பரமாகாயத்தி லுள்ள வலிமை மிக்க அரசனே! மரப்பொந்தினை அடைந்த நெருப்புப் போல, புகைந்து எரிகின்ற அந்தப் புலன்களாகிய நெருப்புப் பற்று தலால் வெப்பமுறுகின்ற என்னை விட்டு விடுவாயோ?
--------------------------------------------------------------------------------

திருமந்திரம்

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே  (10.5.25)

 

தோற்பை போன்றதாகிய இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவது தான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை நன்கு முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணப் பலரும் புகழ்ந்து போற்றினாலும் அதனால் பெறப்படு வதுதான் யாது

--------------------------------------------------------------------------------


( தொடரும் )

copy right to the respective web sites.


No comments:

Post a Comment