Tuesday, August 23, 2022

தமிழமுது 11

திருக்குறள்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (65)

 பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்

----------------------------------------------------------------------------

நாலடியார்

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்.    94

ஒரு சிறிய அரிசியின் அளவாவது - நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர்.

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

9. கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.


அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.

--------------------------------------------------------------------------------

தேவாரம்

முதிருஞ் சடைமுடிமேன் மூழ்கு மிளநாக மென்கின் றாளால்
அதுகண் டதனருகே தோன்று மிளமதிய மென்கின் றாளால்
சதுர்வெண் பளிக்குக் குழைகாதின் மின்னிடுமே யென்கின் றாளால்
கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
. (4.6.7)

 

நன்கு செறிந்து நிறைந்த சடைமுடிமேல் இளநாகம் மறைந்து கிடக்கிறது. அதனைக் கண்டு அஃது ஊறுதாராது என்ற கருத்தோடு அதன் அருகிலே பிறை காட்சி வழங்குகின்றது. வேலைப்பாடு அமைந்த வெண்ணிறத்ததாகிய பளிங்கினாலாகிய காதணி காதில் இருந்து கொண்டு ஒளி வீசுகின்றது என்று கூறுகின்ற என்பெண் ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கடல் அலை கரைக்கண் செலுத்தும் திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய் (8.7.10) 

 

இறைவன் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?
--------------------------------------------------------------------------------



( தொடரும் )

copy right to the respective web sites.


No comments:

Post a Comment