Thursday, September 1, 2022

தமிழமுது 12

திருக்குறள்

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் (67)

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

----------------------------------------------------------------------------

நாலடியார்

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு         101

 

பல பசுக்களின் கூட்டத்தில் கொண்டு போய் விட்டாலும் இளைய பசுங்கன்று தன் தாயைத் தேடி அடைதலில் வல்லதாகும். அது போல முற்பிறப்பிற் செய்த பழவினையும், அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை யுடையதாகும். (கருமங்கள் அந்தந்தப் பிறப்பிலேயே கழியும் என நினையாமல் பல பிறப்பிலும் தொடரும் என உணர்ந்து நல்வினையே செய்ய வேண்டும்).

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

10. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.


அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.

--------------------------------------------------------------------------------

தேவாரம்

இடரினும் தளரினும் எனதுறுநோய்
   தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
   மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவ
   தொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. (3.4.1)

திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே, தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
    பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
     தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
     அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.(8.8.1)

 

திருமாலும் காண்பதற்கரிதாகிய திருவடி இந்தப் பூமியில் படும்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளி, எம்மையும் எம்மினத்தையும் ஆட்கொண்டு எமக்கு முத்தி நெறியையும் அருள் செய்தமையால் அந்த இறைவனது கருணையையும், திருவடியின் பெருமையையும் யாம் புகழ்ந்து பாடுவோம்.
-------------------------------------------------------------

திருமந்திரம்

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே  (10.6.3)

 தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவிலார், தமது செல்வம் தம் துன்பத்தைப் போக்கிக்கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப்பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டொழிகின்றது. (அங்ஙனமாக வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்!)

--------------------------------------------------------------------------------


( தொடரும் )

copy right to the respective web sites.


No comments:

Post a Comment