Wednesday, September 21, 2022

தமிழமுது 14

திருக்குறள்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். ( 76 )

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

----------------------------------------------------------------------------

நாலடியார்

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.             106

 பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

12. கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.


என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!

--------------------------------------------------------------------------------

தேவாரம்

மடங்கொள் வாளைகுதி கொள்ளு மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொண் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்துவெண் ணெய்ப்பெரு மானடி மேவியே
அடைந்து வாழும்மடி யாரவ ரல்ல லறுப்பரே. (2.8.2)

இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக்களிக்கும் மணம் பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும் மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான சிக்கலில் எழுந்தருளிய, விடம்தங்கிய கண்டத்தினை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய் அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய் (8.8.10)

 

தேவதேவனும், அரசர்க்கரசனும், திருப்பாண்டி நாட்டை உடையவனும், பெண்பாகனும், அடியேனை ஆட்கொண்ட வனும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம்
--------------------------------------------------------------------------------

திருமந்திரம்

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே ( 10.7.1 )

நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண் ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.

--------------------------------------------------------------------------------


( தொடரும் )

copy right to the respective web sites.


No comments:

Post a Comment